சோகத்தில் எல்லாம் பெரிய சோகம் புத்திரசோகம் என்று நமக்கு ராமாயணம் முதற்கொண்டு பல நூல்கள் எடுத்து இயம்பி இருக்கின்றன, அதை மூலக்கருவாக வைத்து எடுத்த படமே தெய்வத் திருமகள். படம் வருவதற்கு முன்னமே படத்தின் தலைப்பினால்   சர்ச்சை,  படத்தின் கதைதிருடப்பட்டது என்று மற்றொரு சாரார், படத்தை பார்த்து வீடு திரும்புபவர்கள் அழுது  வடிந்து திரும்புகின்றனர் என்ற அளவிற்கு உணர்சிகளை தூண்டும் படியாக உள்ளது படம் என்று  நண்பர்களின்  விமர்சனம்,  சரி அப்படி என்னதான் இருக்கிறது இந்த படத்தில்….

படத்தின் கதை ஒரு தந்தையிடம் இருந்து  பிரிக்கப்பட்ட குழந்தையை  சட்ட பூர்வமாக  அவர் மீட்டு எடுப்பதே. திரைக்கதையில்  பெரிய  திருப்பங்களோ, வீர தீர செயல்களோ,  புது தொழில் நுட்ப யுத்திகளோ   துளியும் இல்லை. அப்புறம் எதற்கு இந்த திரைப்படத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு. ஆங்கிலத்தில் HUMAN VALUES என்று சொல்வார்கள் அந்த விஷயம் மட்டுமே இந்த படத்தின் மூலக்கருவாக வைத்து இயக்குனர் களம் இறங்கி இருக்கிறார். ஒரு தந்தை, அவர் குழந்தை, அவர்களின் பாசம், பிரிவின் துயரம், அந்த இருவரை இந்த சமூகமும் அவரது சுற்றாரும் பார்க்கும் பார்வைகளின் கோர்வை மட்டுமே இந்த படம்.

 வழக்கமாக தமிழ் திரைப்படங்களில் செண்டிமெண்ட் காட்சிகள் நீளமான வசனங்களையும், அழுகை காட்சிகளையும், கொண்டதாக இருக்கும். இந்த படத்தில் நடித்தவர்கள் அழுதோ, இல்லை நீளமான வசங்களை பேசியோ நமது பொறுமையை சோதிக்கவே இல்லை, நமக்கு சிவாஜிகளையும், மனோரமாக்களையும் இந்த படம் ஞாபகப்படுத்தவே இல்லை இருந்தும் நல்லதொரு செண்டிமெண்ட் படம் என்றே கூற வேண்டும். 

விக்ரமின் நடிப்பை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், இருப்பினும் இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகளையும் விளம்பர காட்சிகளையும் பார்த்தபோது விக்ரம் கொடுத்த காசுக்கு மேல நடிச்சு நம்மை கொல்லப்போகிறார் என்று நினைத்து போனால் நம்மை ரொம்பவே வியக்க வைத்து விட்டார், அநியாயத்திற்கு அடக்கி வாசித்திருக்கிறார், அளவான நடிப்பு. வழக்கமாக இது வரை தமிழ் திரைபடத்தில்  மன வளர்ச்சி குன்றியவர்களாக நடித்தவர்கள் யாரையும் ஞாபகப்படுத்தவில்லை, பிரமாதம். அவரை விட அவரின் குழந்தையாக வரும் சிறுமி அசத்தி இருக்கிறார். அனுஷ்காவும், சந்தானமும் வியாபாரத்திற்காக இணைத்தவர்கள் என்று நன்றாகவே தெரிகிறது இருப்பினும் நன்றாகவே நடித்து இருக்கிறார்கள். இடைச் சொருகலான அனுஷ்காவிற்கு கொடுக்கப் பட்ட பாடலை தவிர்த்து பார்த்தால் பாடல்களும் பின்னணி இசையும்  அருமை. படத்திற்கு தேவை இல்லை என்பதை தவிர்த்து பார்த்தால், இந்தப் பாடலும் அருமையாகவே படமாக்கப்பட்டுள்ளது,

 தெய்வத் திருமகளை பார்ப்பதற்கு முன் 2  ஆஸ்கார் விருதை  வென்றிருக்கும்  SEAN PENNன் நடிப்பில் ஆங்கிலத்தில் வந்த I AM SAM  படத்தையும் பார்க்க சொனார்கள் சில நண்பர்கள். I AM SAM  படத்தின் சில காட்சிகளை இணையத்தில் பார்த்தேன், அப்பட்டமான திருட்டு என்று குற்றம் சாட்டுபவர்களின் கூற்று உண்மை போல தான் தெரிகிறது. ஆனால் நல்ல இலக்கியங்களை மற்ற மொழிகளில் இருந்து மொழி மாற்றம் செய்வதை தொன்று தொட்டே செய்து  இருகின்றார்கள் ஏன் திரை படங்களில் மட்டும் மற்ற மொழிப் படங்களை தமிழில் எடுக்கும் போது திருட்டு என்ற குற்றச்சாட்டுகிறார்கள்.   வெளிப்படையாக இயக்குனர்களோ நடிகர்களோ தழுவி எடுக்கப் பட்ட கதை என்பதை  ஒத்துக்கொள்ளாததற்கு இது ஒரு காரணமாக இருக்குமோ? சில வருடங்களுக்கு  முன்பு ராம்கோபால்வர்மாவின் சர்கார் படம் பார்த்தபோது படத்தின் ஆரம்பத்திலேயே அவர் காட்பாதர் கதை தான் இந்த படம் எடுக்க  தூண்டியதாக  முன்னுரை செய்து இருப்பார் இதுபோன்ற துணிச்சல் தமிழ் இயக்குனர்களுக்கு இல்லாதது தான் இதற்க்கு காரணம் என்று நினைக்க தோன்றுகிறது.

இந்தப் படத்தின் கதையை இயக்குனர் விஜய், விக்ரமிற்கு  எப்படி விளக்கி இருப்பார்,   ஏன் என்றால் இது ஒரு THIN LINE STORY,  SEAN  PENN நடித்த IAMSAM  திரைப்படத்தை  போட்டு காண்பித்து  இருப்பாரோ? அப்படியானால் இது விஜயின் படம் என்று சொல்வதை விட
SEANPENN ன் தெய்வத் திருமகள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

சிவத்த செங்குத்துப்பாறை அல்லது ரெட்கிளிப் திரைப்படம், ஒரு சீன வரலாற்றுக் காப்பியப் போர்த் திரைப்படம். இது சீனாவில் கிபி 208-209 காலப் பகுதியில் நிகழ்ந்த சிவத்தப் செங்குத்துப்பாறைப் போரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டது. மூன்று இராட்சியங்கள் அதன் காலப் பகுதியில் நிக்ழ்ந்த அந்தப் பெரும் போர்களையும், அவற்றை ஒட்டிய நிகழ்வுகளையும் இப் படம் சித்தரிக்கிறது.

கி மு 208 இல் ஹான் பேரரசு தனது இறுதி காலத்தில் இருக்கும் போது நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பே இந்த திரைபடம்.  ஹான் பேரரசின் பிரதம மந்திரி கோ கோ (Cao  Cao)  ஒருங்கிணைந்த சீனத்தை உருவாக்க கிழக்கு பகுதியின் மீதும் தெற்கு பகுதியின்  மீதும் படையெடுக்க ஹான் பேரரசின் அரசரிடம் இசைவை பெற்று ஒரு பெரும் படையுடன் கிழக்கு நோக்கி பயனப்படுகிறார், போரில் Liu Bei அரசான Xu வம்ச அரசு வீழ்த்தப்படுகிறது, அகதிகளாய் போன தன மக்களுடனும், சொற்ப வீரர்களுடன் Liu  Bei, தெற்கு பகுதியை ஆளும் Wu வம்சத்தின்  Sun  Quan உதவியை கோருகிறார். அவருடன் இனைந்து Cao  Cao வின் கப்பற்படையை இறுதிப் போரில் வெல்வதே கதையின்  மீதம். 

சிவத்த செங்குத்துப்பாறை திரைப்படம் ஆசியாவில் இரண்டு பாகங்களாய் வெளியானது, மொத்தத்தில் 4  மணி நேரத்திற்கும் மேலான கதையமைப்பு கொண்டது. முதல் பாகம் ஜூலை  2008லும் இரண்டாம் பாகம் ஜனவரி 2009லும் வெளியானது. ஆசியாவை தவிர்த்து மேற்கத்திய திரை ஆர்வலர்களுக்காக இரண்டரை மணி நேர படமாக சுருக்கி 2009  இல் வெளியானது. 80 மில்லியன் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இதுவரை ஆசியாவில் தயாரிக்கப்பட்ட  செலவுகூடிய திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படமே ஆசியாவில் அதிக வருமானம் ஈட்டிய திரைப்படமும் ஆகும். முதல் பாகம் ஆசியாவில் 124 மில்லியன் டாலர் வசூலையும், சீனாவில்  டைட்டானிக் வசூலை முறியடித்ததாக தகவல்.

இப்படத்தை இயக்கியவர்  MISSION IMPOSIBLE II,  FACE  OFF , BROKENARROW  முதலிய ஹாலிவுட்  திரைப்படங்களை இயக்கிய  ஜான் வூ அவர்கள்.

 மகாபாரதத்தில் சக்கர  வியுகம் பற்றியும் அபிமன்யு அதில் சிக்குண்டு இறந்ததை பற்றியும் நாம் படித்திருக்கிறோம். அது போல இந்த திரைப்படத்தில் வியுக முறைகள் நன்கு விளக்கப்பட்டு இருக்கிறது. பெரிய ராஜ்யம் ஒன்றின் பலம் வாய்ந்த போர் வீரர்களை சக்கர வியுகம் போன்ற ஒரு முறை மூலம் சிறிய படையை கொண்டு எப்படி வெல்கிறார்கள் என்பதை வெகு அருமையாக படமாக்கியுள்ளார் ஜான் வூ. அதே போல இரண்டாம் பாகத்தில் கப்பற்படை கொண்டு நடத்தும் போர் காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பற்படை போர் கட்சிகளை படமாக்கும் போது படத்தில்  கப்பல்களை    எரித்து நாசப்படுத்துவது போன்ற காட்சிகள் எடுக்கப் பட்டது, அப்போது நடந்த விபத்தின் போது ஒருவர் இறக்க நேரிட்டது மேலும் 6 தொழில் நுட்பக்கலைஞர்கள் கடுமையான விபத்துக்கு ஆளானார்கள்.

சீனத்தின்  அந்த கால போர்முறைகளையும், ராஜ தந்திரங்களையும் இந்த படம்  நன்கு விளக்குகிறது. period படம் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இது ஓர் அருமையான படம், மேலும் நல்ல தொழில்நுட்பத்தோடு எடுக்கப்பட்ட படம்.

ஜான் வூ ஒரு ஸ்டைல் ஆன இயக்குனர் அவருடைய படங்களில் கதா நாயகர்களுக்கும் வில்லன்களுக்கும் நல்ல பரிணாமங்களை எதிர்பார்க்கலாம், அதை இந்த படத்திலும் நன்கு செவ்வனே செய்து இருக்கிறார்.  எனக்கு நீண்ட நாள் ஆசை ஜான் வூ ஒரு இந்திய படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று, அதிலும் ரஜினி,  சாருக்கான், நாகர்ஜுனா போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும்…

மார்ச் 14 , நேற்றைய நாளில் தான் முதல் இந்திய பேசும் படம் ஆலம் ஆரா மும்பையில் உள்ள மெஜஸ்டிக் திரையரங்கில் 80 வருடங்களுக்கு முன் திரை இடப்பட்டது.  இந்தப் படம் தான் இந்திய திரை இசையின் முன்னோடி எனக் கூறலாம். ஆலம் ஆரா அர்தேசர் இராணி என்பவரால் இயக்கப்பட்டது, இது ஜோசப் டேவிட் என்பவர் எழுதிய ஒரு பார்சி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். 2  மணி நேரமும் 4  நிமிடங்களும்  ஓடக் கூடிய இந்த படத்தில் வித்தல், ஜுபைதா, L .V . பிரசாத் மற்றும் பிரித்திவி ராஜ் கபூர் நடித்துள்ளனர். 
 
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்ப்பை பெற்றது, மேலும் வாசிர் முஹம்மது கான் பாடிய தே தே குதா கே நாம் பர் என்ற பாடல் இந்தியாவின் முதல் சூப்பர் ஹிட் பாடல் என்ற அந்தஸ்தையும் பெற்றது. ஒலிப்பதிவில் இரைச்சலை தவிர்ப்பதற்காக  இந்தப் படம் பெரும்பாலும் இரவிலேயே படமாக்கப்பட்டது, மைக்ரோ போன்களை காமெரா கோணத்தில் அமையாதபடி வைத்து ஒலிப்பதிவு செய்தனர்.  
 
இந்தப் படத்தின் பிரதி இப்போது இல்லை. கடைசி பிரதி 2003 புனேயின் திரைப்பட ஆவணக் காப்பகத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்தின் போது அழிந்துவிட்டது. மூன்று வருடங்களுக்கு முன் தகவல்   தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் ஆலம் ஆரா படத்தின் எந்தப் பிரதியும் தேசிய ஆவணக் காப்பகத்தில் இல்லை என்பதை தெரிவித்தது. இந்தியா முழுவதும் தேடும் பனி தொடங்கியது இருப்பினும் இதுவரை இந்தியாவின் முதல் பேசும் படத்தின் ஒரு பிரதியும் கிடைக்கப் பெறவில்லை.
 
இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா இந்திய வரலாற்றில் பேசாமல் தன் இருத்தலை நமக்கு உணர்த்துகிறது…

சத்யஜித் ரே அவர்களின் சாருலதா, பதேர் பாஞ்சாலி போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு கூபி கெயின் பாகா பெயின் திரைப்படம் ஆச்சர்யத்தை கொடுக்கும், உண்மையில் இது சத்யஜித் ரே படமா? என்று கேட்கும் அளவிற்கு இந்த படத்தின் கதையமைப்பு அமைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் fairytale  என்று சொல்வார்களே அந்த வகையின்  கீழ் வரும் இந்த படம் குழந்தைகள் திரைப்படமாக சினிமா ஆர்வலர்களால்  வரையறுக்கபடுகிறது.

கூபி ஒரு குடியானவனின் மகன், அவனுக்கு பாடுவதில் வெகு ஆசை ஆனால் அதற்குரிய திறன் இல்லாதவன் ஒரு நாள் அரண்மனைக்கு அருகில் உள்ள கோவிலில் அவன் பாடும் போது அரசன் அவனை கழுதை மேல் ஏற்றி ஊருக்கு வெளியே கொண்டு விடுமாறு ஆணையிடுகிறான். இதற்கிடையில் டோல் இசைப்பதில் ஆர்வம் உள்ள பாகா என்பவனும் இதுபோல ஒரு அவமானத்திற்கு உள்ளாகி காட்டில் கூபியை சந்திக்க நேர்கிறது. இந்நிலையில் காட்டில் பூதங்களின் தலைவன் மூலமாக இவர்களுக்கு மூன்று வரம் கிடைகிறது. முதல் வரமாக நல்ல உணவும் உடையும் கேட்கிறார்கள், இரண்டாவதாக நினைத்த இடத்திற்கு செல்ல உதவும் ஒரு காலனி கிடைக்கிறது, மூன்றாவதாக மற்றவர்கள் விரும்பும் அளவிற்கு தங்களுக்கு விருப்பமான சங்கீத ஞானத்தையும் வரமாக பெறுகின்றார்கள். இந்த வரங்கள் இருவரும் ஒவ்வொரு முறையும்  ஒரு சேர கை தட்டும் போதும் கிடைக்கப் பெறுகின்றன.

இதற்கிடையில் சுண்டி என்ற ராஜ்யத்தில் இசை  மேதைகளின் போட்டி நடைபெறுவதை அறிந்து அங்கு சென்று தங்களின் இசை ஞானத்தின் மூலமாக வெற்றி பெறுகின்றார்கள் கூபியும், பாகாவும். அரண்மனையில் தங்கி இருக்கும் போது சுண்டி நாட்டின் மீது ஹல்லா  அரசன் படை எடுத்து வருவது அறிந்து இந்த போரை தாங்கள் நிறுத்தி அமைதிக்கு வழி வகுக்கிறோம் என்று கூற, அது மட்டும் நடந்தால் தனது மகளை கூபி, பாகா இருவருள் ஒருவர்க்கு மணமுடித்து தருவதாகவும் வாக்குறுதி தருகிறார் சுண்டி தேசத்தின் ராஜா. இருவரும் தங்கள் இசையால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் வரா வண்ணம் தடுத்து ராஜ குமாரிகளை மனம் முடிப்பதே கதை.

இந்த படம் வங்கத்தில் 51  வாரம் ஓடி சாதனை படைத்தது. சத்யஜித் ரே படங்களில் அதிகமான நாட்கள் திரையரங்கில் ஓடிய படம் இது.  இந்த படத்தில் கூபி கதாபாத்திரத்தில் நடித்த தபன் சட்டர்ஜி ஒரு புதுமுகம் பாகா கதாபாத்திரத்தில் நடித்தவர் ரபி கோஸ். இருவரின் நடிப்பும் படத்திற்கு சிறப்பு, இப்படத்தின் இயக்கத்துடன் கூட  சத்யஜித் ரே அவர்களே பாடல்களை இயற்றி இசை அமைத்திருக்கிறார் மேலும் உடை வடிவமைப்பும் இவரே செய்திருக்கிறார்.  பைசைக்கிள் தீவ்ஸ் படத்தை பார்த்து நியோ ரியலிசம் படங்களை எடுக்க ஆர்வம் கொண்ட சத்யஜித்ரே இது போன்ற படம் எடுத்திருப்பது அவரது பன்முகத்தன்மையை வெளிக்காட்டுகிறது.

சந்தேஷ் என்ற குழந்தைகளுக்கான பத்திரிகை ஒன்றை சத்யஜித் ரே நடத்தி வந்தது நம்மில் பலருக்கு தெரியும்  அதனால் அவர்  குழந்தைகளுக்கான படம் எடுத்தது அந்த பத்திரிகை அனுபவப் பின்னணி என்பது நன்கு விளங்கும் .

படத்தின் தலைப்பை பார்த்து இதை ஒரு முழு நீள காதல் திரைப்படம் என்று நினைத்து திரையரங்கில் நுழைந்தால், இது ஒரு சாதாரண குடும்ப சித்திரம். நம்ம தமிழ் திரைப்படங்களில் குடும்ப சித்திரம் என்பது, உணர்ச்சி வயப்படும் வசனங்களும், செண்டிமெண்ட் காட்சிகளும் கொண்டதாகவே இதுவரை நமக்கு தரப்பட்டிருகிறது அதனால் இதை குடும்ப சித்திரம் என்ற வரையரைக்குள்ளும் எடுத்து வரமுடியாது. அப்போ கமலின் வழக்கமான நகைச்சுவை படம் என்று சொல்லலாமா? அதுவும் சொல்ல முடியாது நமக்கு நாமே கக்கத்தில் விரல் விட்டு சிரிப்பு மூட்டிக் கொண்டால்தான் உண்டு. இது ஆங்கிலத்தனமான குடும்ப திரைப்படம் (family drama) என்று வேண்டுமானால் சொல்லலாம்.

சரி  கதைக்கு வருவோம். மதன் என்கிற ஒரு தொழிலதிபர் அம்புஜா (நிஷா) என்ற நடிகையை காதலித்து  மனம் முடிக்க இருக்கிறார், இதற்கிடையில் அம்புவின் நடத்தை மீது சந்தேகம். அதற்காக துப்பறிய, மன்னார் என்ற கதாபாத்திரத்தை  உளவு பார்க்க அம்பு விடுமுறைக்கு செல்லும்போது உடன் அனுப்புகிறார், மின்சார கனவு பாணியில் மன்னாரே அம்புவைக் கரம் பிடிக்கிறார். இதுதான் படத்தின் ஒரு வரிக்கதை.

ரங் தே பசந்தி, மும்பை மேரி  ஜான், 3  இடியட்ஸ், அன்பே சிவம் போன்ற நல்ல திரைப்படங்களில் நடித்த அனுபவங்களை மாதவனின் நடிப்பில் பார்க்க முடிகிறது. சங்கீதாவின் நடிப்பும் சொல்லும்படியாக இருக்கிறது ஆனால் அது அந்த கதாபாத்திர வடிவமைப்பின் அழகு. சங்கீதாவின் மகனாக வரும் சிறுவனும் சொல்லும் படியாக நடித்திருக்கிறார். மொத்தத்தில் நடிப்பை பொறுத்தவரை எல்லோருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.

கதை ஏற்கனவே சொல்லிவிட்டேன், திரைக்கதைக்கு வருவோம்… நண்பர்கள் சிலர் முதல் பாதி நன்றாக உள்ளது இரண்டாம் பாதி அறுவை என்று கூறினர். என்னை பொறுத்தவரை ஒரு திரைப்படத்தை பாதி பாதியாக பார்க்க  சின்னத்திரை நாடகம் இல்லை. முதல் பாதி பாத்திரங்களை இடம் சுட்டி பொருள் விளக்கவே நேரம் சரியாக உள்ளது. கதையை கொஞ்சம் கூட நகர்த்தியதாக தெரியவில்லை. இரண்டாம் பாதி அவசர அவசரமாக படத்தை முடித்தது போல இருந்தது, இறுதிக் காட்சிக்கு ஆயத்தமாகும் காட்சிகள் நன்றாகவே இருந்தது ஆனால் இது கமலின் பழைய நகைச்சுவை படங்களின் பாதிப்பை அதிகம் உணர வைக்கிறது.

லைவ் ஆடியோ இந்த படத்திற்கு ஒரு நெகடிவ், சில இடங்களில் வசனங்கள் என்னவென்று புரியவே இல்லை. காட்சிமைப்பு அருமை, ஒளிப்பதிவாளருக்கு முதல் படம் என்றால் நம்பவே முடியாது. பாடல் காட்சிகள் சொல்லும்படியாக இல்லை.  காட்சியை திருப்பி போடும் reverse footage பாடல் நிறையபேருக்கு lipsync reverse இல்லாமல் இருப்பதை உணரவே முடியவில்லை. மெனக்கெட்டு செய்திருக்கிறார்கள் ஆனால் அதன் முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்வதிற்கில்லை. டைட்டானிக் கப்பல் போல ஒரு கப்பலில் படமாக்கப்பட்டிருக்கிறது படத்தின் பெரும் பகுதி. கண்ணுக்கு குளிர்ச்சி.

நிறைய நண்பர்கள், படத்தில் காட்சிகள் இணைப்பு வசனங்கள் அல்லது இணைப்பு காட்சிகள் இல்லாமல் இருப்பதை சுட்டிக் காட்டினார்கள். சிலர் இதை நான் லீனியர் வகையான திரைப்படத்திற்குண்டான பாணியில் படத்தின் காட்சிகளை  படத்தொகுப்பு செய்திருப்பதாகவும் கூறுகின்றார்கள், ஆனால் இதை ஒரு குறையாக கூற முடியாது. எல்லாவற்றையும் கூற திரைப்படம் எதற்கு கதாகாலட்சபம் போதுமே.

சரி இந்த படத்தில் கமலையும், இயக்குனர் ரவி குமாரையும் தேடி தேடி அலுத்தேவிட்டது எனக்கு. எந்த ஒரு காட்சியிலும் அவர்களின் முத்திரை தெரியவே இல்லை. பார்த்த களங்களோ, கேட்ட கதைகளோ, இல்லாமல் வெகு நேர்த்தியாக இளம் இயக்குனர்கள் கதைகளை தேர்வு செய்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இது வெறும் சாதாரண ஒரு திரைப்படம். மொத்தத்தில் அம்பு துளைத்தது நமக்கு தான், மேலும் அது அம்பு இல்லை ஆப்பு என்பதை கமல் படம்,  கே.எஸ். ரவிகுமார் படம்  என்ற எதிர்பார்ப்பில் போனவர்கள் நன்கு உணர்வார்கள்… 

இந்து மதத்தை கேவலப்படுத்தி ஒரு பாடல் வந்ததாக அதை கத்தரித்து விட்டார்களாம். ஆனால் தமிழ் தெரு பொறுக்கும்னு ஒரு வசனம். மொழியை கேவலப்படுத்துவதை கூட பொறுத்துக்கொள்வோம், மதத்தை கேவலப்படுத்துவதை விட்டு விட மாட்டோம்.,  ஏனென்றால் நாங்கள் எல்லோரும் கமல் போல பகுத்தறிவு வாதி… ஹி… ஹி….

தெரியுமா? பாகிஸ்தானியால் எழுதப்பட்டது “சாரே ஜகான் சே அச்சா”

Posted: December 22, 2010 in தெரியுமா ?
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

சர் அலாமா முகமது இக்பால்,  உருது, அரபு, மற்றும் பாரசீக மொழிகளில் இவர் எழுதிய கவிதைகள் தற்காலத்தின் பெருமைமிக்க இலக்கியப் படைப்புகள் என்று சொன்னால் மிகையாகாது.

ஆங்கிலேயர் ஆண்ட பிரிவினைக்கு உட்படாத இந்தியாவில், தற்போதைய பாகிஸ்தானில்  பிறந்தவர் இவர். மாணவப் பருவத்திலேயே மிகவும் திறமையாகத் திகழ்ந்த இக்பால் இங்கிலாந்தில் சட்டம் பயிலும் மாணவராக இருந்தபோதும் கூட தனது எழுத்துப்பணியினைத் தொடர்ந்தார்.  இக்பால் சட்டத்துறையில் தொழிலை ஆரம்பித்தார். ஆனாலும் அரசியல், பொருளாதாரம், வரலாறு, மெய்யியல், மற்றும் சமயம் ஆகிய துறைகளிலேயே அவர் நிறைய எழுதினார்.

நம்மில் நிறைய பேருக்கு முகமது அலி ஜின்னா தான் பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முதலில் கோரியவர் என்று அறிந்திருப்போம். ஆனால்  அது உண்மை இல்லை 1930 இல் அலஹாபாத்தில் ஒரு கூட்டத்தில் இக்பால் அவர்களே இரு நாடு கோரிக்கையை வைத்து இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற தனது அவாவை வெளிப்படுத்தியவர். இந்த சிறு பொறியே பின்னாளில் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாக காரணம் ஆனது.

இவரைப் பற்றிய மற்றுமொரு முக்கிய தகவல், பிரசித்தி பெற்ற சாரே ஜகான் சே அச்சா  பாடலை இயற்றியவர் இவரே. ஜவஹர்லால் நேருவுக்கு மிகவும் பிடித்த இப்பாடல் அதிகம் அவரால் கையாளப் பட்டதை நாம் அறிவோம். இந்தப் பாடல் சுதந்திர இந்தியாவின் முதல்  நாடாளுமன்றக் கூட்டத்தில் பாடப்பட்டது.  அதிகார பூர்வமற்ற தேசியகீதம் என்று சொல்லும் அளவிற்கு எழுச்சி மிக்கப் பாடல். இந்திய  ராணுவ அணிவகுப்பின் போது பாடப்பெரும் அளவிற்கு புகழ் வாய்ந்தது. ராகேஷ் ஷர்மா விண்வெளியிலிருந்து அன்றைய பிரதமர் இந்திராகாந்தியுடன் உரையாடும் போது இப்பாடலைப் பாடி இந்தியர் என்பதில் பெருமிதம் கொண்டார். தற்போதைய இந்தியப் பிரதமரான மன்மோகன்  சிங்  அவர்களும் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்தப் பாடலை ஒரு கேள்விக்கு மேற்கோளாகக் கூறினார்.

அந்நியன் படத்தில் பார்த்திருப்பீர்கள் விக்ரம் ரயிலில் பயணம் செய்யும் போது தரமற்ற உணவு வழங்கப்படுவதையும், தான் கொடுத்த பணத்திற்கு ஏற்ற உணவு பரிமாறவில்லை என்றும் பயணச்சீட்டு பரிசோதகரிடம் வாதிடும் காட்சியும் அதைத் தொடர்ந்து ரயில்வே உணவு தயாரிக்கும் குத்தகைகாரரை கொலை செய்வதையும். நம்மில் பலருக்கும்  பல தருணங்களில் இது நடந்திருக்கும் நாமும் இதை யாரிடம் சொல்லி அழுவது என்று வேண்டா வெறுப்பாக  கிடைத்ததை கொறித்து விட்டு அன்றோடு அதை மறந்து போய் இருப்போம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் அதன் கிளை நிறுவனமான CRIS  ( CENTRE FOR RAILWAY INFORMATION SYSTEM )வுடன் இனைந்து  வாடிக்கையாளர்களுக்கு ஒரு 24மணி நேர   சேவையை ஆரம்பிக்க உள்ளது. இதன் மூலம் உங்கள் உணவு உங்களுக்கு சரியாக இல்லை என்ற பட்சத்தில் இவர்கள் கொடுத்திருக்கும் 57886  என்ற  எண்ணில் குறுஞ்செய்தி (SMS) செய்தாலே போதும் இதன் பேரில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். உங்கள் குறை சீக்கிரம் களையப்படும்  என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.  இந்த சேவை டிசம்பர் மாதம் முதல் அமுலுக்கு வருகிறது. இந்த சேவை எந்த அளவுக்கு மக்களுக்கு நன்மையை பயக்கும் என்பது தெரியாது… நல்லதையே நினைப்போம்… நன்மையே நடக்கும்…

திருவையாறு P ராஜலக்ஷ்மி  , இவர் தான் தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இவர் தான் முதல் பெண் இயக்குனர் என்று கூறுகிறார்கள்.

ராஜலக்ஷ்மி 1911 இல் திருவையாறில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர், இவரது தந்தை ஒரு குருக்கள். இவருக்கு 11 வயது இருக்கும் போது திருமணம் ஆனது, துரதிர்ஷ்டவசமாக இவரது மன வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னமே முடிந்து விட்டது. வரதட்சனை கொடுக்க முடியாத காரணத்தினால் இவரது கணவர் இவரை விட்டு பிரிந்தார்.  இதனால் மனமுடைந்த இவரது தகப்பனார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்பு ராஜலக்ஷ்மி அவரது தாயாருடன் திருவையாறை விட்டு வெளியேறினார். நாடக கம்பெனி ஒன்றில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்

படத்தில் TP ராஜலக்ஷ்மி அவர்களுடன் சிறுவயது TR மகாலிங்கம்

புகழ்பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள் குழுவில் இனைந்து நாட்டியம், சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றார்.  1931 இல் காளிதாஸ் என்ற படத்தில் கதாநாயகியாய் நடித்த பிறகு இவர் புகழின் உச்சிக்கு சென்றார். இந்த திரைப்படம் தமிழின் முதல் பேசும் படம் என்று அறியப்படுகிறது. முன்னதாக இவர் 1929 லேயே திரையுலகில் காலெடுத்து வைத்தவர், கோவலன் என்ற பேசாத படத்தில் நடித்திருக்கிறார். காளிதாஸ் திரைப்படத்திற்கு பிறகு இவர் அந்நாளைய சூப்பர் ஸ்டார்களாகிய கிட்டப்பா, தியாகராஜ பாகவதர் போன்றவர்களுடன் இனைந்து நடிக்கும் அளவிற்கு பெரிய நடிகையானார். 

 
காந்தியவாதியான இவர் இந்தியத் தாய் என்ற ஒரு திரைப்படத்தை தயாரித்தார், அங்கிலேயர் ஆட்சியில்  தணிக்கையில் சிக்கிய இத்திரைப்படம்  வெளிவராமலே போனதாக தகவல். இருப்பினும் தன்னாலான அளவில் சுதந்திர போராட்டத்தில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். மிஸ். கமலா என்ற திரைப்படம் மூலம் இவர் 1936 இல் இயக்குனர் ஆனார். 1929 முதல் 1950 வரை இவர் 23 திரைப்படங்களில் நடித்திருக்கிறார், இவற்றில் மிஸ் கமலா, மதுரை வீரன் ஆகிய படங்களில் இவர் நடித்தும் இயக்கியும் இருக்கிறார்.
 
 
இவர் நடித்த திரைப்படங்கள்:
 
01 கோவலன் 1929
02 ராஜேஸ்வரி 1930
03 உஷா சுந்தரி 1930
04 காளிதாஸ் 1931
05 சாவித்திரி சத்யவான் 1933
06 பூர்ண சந்திரா 1935
07 லலிதாங்கி 1935
08 பக்த குசேலா 1935
09 குலே பகாவலி 1935
10 பாமா பரிணயம் 1936
11 சீமந்தினி 1936
12 மிஸ் கமலா 1936
13 கவுசல்யா  பரிணயம் 1937
14 அனாதை பெண் 1938
15 மதுரை வீரன் 1938
16 நந்தா குமார் 1938
17 தமிழ் தாய் 1939
18 சுகுணா சரஸா 1939
19 பக்த குமரன் 1939
20 உத்தமி 1943
21 பரஞ்சோதி 1945
22 ஜீவஜோதி 1947
23 இதய கீதம் 1950
 

சமீபத்தில் நான் பார்த்த இந்த காணொளி ஒரு நாத்திகனுக்கும் ஆத்திகனுக்கும் உள்ள வேறுபாடுகளையும், வாழ்கையை அணுகும் முறையையும் விளக்கமாகவே கூறுகிறது. இன்று இந்த காணொளியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், பார்த்து உங்களது கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டம் செய்யுங்கள்.

 

இன்றைய சினிமாவில் கவர்ச்சி அதிகம் வன்முறை அதிகம் என்றெல்லாம் சமூக நல ஆர்வலர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை புலம்புவதை நாம் பார்த்திருக்கிறோம். முதன் முதலில் நம் நாட்டில் இந்த கவர்ச்சி அல்லது ஆபாசமான உடையனிந்தது யார் தெரியுமா? அது தான் இன்றைய ஹிந்தி திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சாயப் அலி கான் பட்டோடியின் அம்மா சர்மிலா தாகூர்.

போன தலைமுறை மக்களுக்கு மறக்கமுடியாத ஹிந்தி படங்களான பாபி, குருபானி போன்ற பட வரிசைகளில் ஆராதனாவை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சென்னையில் உள்ள ஆனந்த் திரை அரங்கில் வெள்ளிவிழா கண்ட படம். ஹிந்தி அதிகம் பரிட்சயம் இல்லாத அந்த காலகட்டத்திலேயே பெரும் வரவேற்ப்பை பெற்ற அந்தபடத்தின் வரவேற்ப்புக்கு படத்தின் பாடல்கள், மற்றும் ராஜேஷ் கண்ணாவின் நடிப்பு அதை விட சர்மிலா தாகூரும் ஒரு முக்கிய காரணம் என்றால் யாரும் மறுக்கமாட்டார்கள். அவர் புகழின் உச்சியில் இருந்த கால கட்டம். இவர் தான் இந்திய நடிகைகளுக்கெல்லாம் கவர்ச்சியில் முன்னோடி. AN EVENING IN PARIS என்ற படத்தின் மூலம் முதன்முதலில் பிக்கினி என்று சொல்லப்படும் நீச்சல் உடையில் திரைப்படத்தில் தோன்றினார். இதனைத் தொடர்ந்து FILMFARE பத்திரிகைக்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்தார். படத்தின் கவர்ச்சியைக் காட்டிலும் பத்திரிகையில் வெளியான புகைப்படம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த புகைப்பட ஒளிப்பதிவின் போது, ஒருங்கிணைப்பாளர் சர்மிலா தாகூர் அரங்கில் நுழைந்த போது எங்கே உங்கள் புகைப்படத்திற்க்கான உடை என்று கேட்கும் போது தனது கைப்பையை காண்பித்தாராம்.

பல பேர் தங்களது தலையணைக்கு அடியில் வைத்து கொண்ட 1966ல் வெளியான FILMFARE ஆகஸ்ட் இதழின்   அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…