சத்யஜித்ரேவை நமக்கு பலரில் உலகப்புகழ் பெற்ற இயக்குனராக தெரியும். அதுவும் கலைப்பட இயக்குனர், யதார்த்த சினிமா என்கிற பேரில் மெதுவாக போகும் படங்கள் என்று வெகுஜன மக்களால் கூறப்படும் படங்களை தான் நாமறிவோம். ஆனால் அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வகையில், திருப்பங்களுடன் கூடிய துப்பறியும் கதைகளை எழுதுவார் என்பது சமிபத்தில் கைலாஷில் ஒரு கொலையாளி என்ற அவரது கதையை படித்தபின் தான் தெரிந்தது. கதையின் முன்னுரையில் சத்யஜித்ரே சிறு வயதில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் அதுவே அவருக்கு இந்த பெலுடா கதைகளை எழுத தூண்டியதாக சொல்லப்பட்டிருந்தது.
இந்த பெலுடா கதைகள் சத்யஜித்ரேவின் தாத்தா நடத்தி வந்த சந்தேஷ் என்ற சிறுவர் பத்திரிகையில் 1965 முதல் வெளியாயியன. இந்த பத்திரிகை சில காரணங்களால் இடையில் நிறுத்தப்பட்டு பின் சத்யஜித்ரேவால் தொடர்ந்து நடத்தப்பட்டது. மொத்தம் 35 கதைகள் இதில் அடக்கம். முதல் 34 கதைகள் சத்யஜித்ரே வாழ்நாளிலேயே வெளியாயியன 35 வது கதை அவர் இறந்த பிறகு 1995 இல் வெளியானதாக தகவல்.
கதைகள் யாவும் பெலுடா(கதாநாயகன்)வின் ஒன்று விட்ட சகோதரன் மாதேஷ் என்பவர் சொல்வது போல அமையும். பெலுடா, மாதேஷ், லால்மோகன் பாபு, சித்து, என்ற முக்கிய கதா பாத்திரங்கள் இதில் இடம்பெற்றிருக்கும். ஜெய் பாபா பெலுநாத், சோனார் கேளா என்ற 2 பெலுடா கதைகளை திரைப்படமாகவும் சத்யஜித் ரே எடுத்தார். சில பெலுடா கதைகள் காமிக்ஸ் புத்தக வடிவில் பின்னர் வெளியானது. ஒவ்வொரு வருடமும் சந்தேஷ் பத்திரிகையில் துர்கா பூஜை சமயத்தில் பெலுடாவின் புதிய கதை வெளியாகும். பின்னர் எல்லாம் தொகுக்கப்பட்டு ஒரு தலைப்பின் கீழ் வெளியானது.
கைலாஷில் ஒரு கொலையாளி சிலை திருட்டை மையமாக கொண்டு எழுதப்பட்ட ஒரு துப்பறியும் கதை. புவனேஷ்வரில் உள்ள ராஜா ராணி கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு யக்க்ஷி யின் தலை வெளிநாட்டவர் ஒருவரிடம் விற்கப்படுகிறது, அவர் போன விமானம் விபத்துக்குள்ளாகிறது, இந்த தகவல் பெலுடாவிற்கு எட்ட யக்க்ஷி தலையை மீட்க விபத்து நடந்த இடத்திற்கு செல்கிறார், அதற்க்கு முன்னே அதை விற்றவன் அதை கைப்பற்றி கொண்டு ஹௌரங்காபாத் செல்ல பின் தொடர்து மாதேஷ் மற்றும் ராம் பாபுவின் துணை கொண்டு குற்றவாளியை பிடிப்பதே கதையின் சுருக்கம்.
சத்யஜித்ரேவின் படங்களை பார்த்தவர்கள் இந்த பெலுடா கதைகளை படிப்பார்களேயானால் முற்றிலும் மாறுபட்ட ஒரு சத்யசித்ரேவை நாம் இந்த கதைகள் மூலம் அறியலாம். மேலும் துப்பறியும் கதைகளை நமது இலக்கியங்கள் ஒரு தரமான படைப்பிலக்கியமாக அங்கீகரிக்காத சூழ்நிலையில் சத்யஜித்ரேவின் இந்த பெலுடா கதைகள் வெகுஜன மக்களின் விருப்பத்தையும் அவர் பூர்த்தி செய்திருக்கிறார் என்பது புலனாகிறது.

சத்யஜித்ரேவின் எத்தனை பரிணாமங்கள்..அருமை..நல்ல தகவல்
ஃபெலுதா பற்றி தமிழில் ஒரு பதிவு வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!
அவர் பெயர் ஃபெலு, தா என்பது பெங்காலியில் மரியாதையை குறிக்கும் ஒரு விகுதி. ஹிந்தியில் ஜி மாதிரி, தமிழில் செட்டியார்வாள், முதலியார்வாள் என்று சொல்வது மாதிரி. ஃபெலுடா இல்லை.
ஆங்கிலத்தில் இருக்கும் பெயரை மொழி பெயர்க்கும் போது ஏற்பட்ட குறைபாடு…