ஜூலை 9, 2010 க்கான தொகுப்பு

கேரள மாநிலத்தை சேர்ந்த நவீன எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எம். முகுந்தன், இவர் 1942ல் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த மைய்யழியில் பிறந்தவர். இவரது முதல் கதை 1961 ல் வெளியானது. ஈலோகம் அதிலொரு மனுஷ்யன் எனும் நாவலுக்கு கேரள சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தைவத்தின்ற விக்ருதிகள் எனும் இவரது நாவல் தேசிய அகாடமி பரிசை வென்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளியானது. முகுந்தன் எழுதிய மைய்யழி புழையோடே தீரங்களில்  நாவல் ஆன் தி பேங்க் ஆப் மைய்யழி  எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு 1996 ம் ஆண்டுக்கான கிராஸ் வோர்ட் பரிசு வென்றது. இவரது பல வருட இலக்கியப் பணியை சிறப்பிக்கும் பொருட்டு பிரெஞ்சு அரசாங்கம் இவருக்கு செவாலியே விருது கொடுத்து கௌரவித்தது     

மோகத்தீ,  இவர் எழுதிய நாவலின் தமிழாக்கம், இதை தமிழில் மொழிபெயர்த்தவர் சுரா. கதை கேரளாவில் இருக்கும் ஒரு கிராமப்புறத்தில் வசிக்கும் 50 வயதை தாண்டிய மீத்தலேடத்து ராமுண்ணி என்பவரைச் சுற்றி அமைகிறது. மதிப்பும், பாரம்பரியமும் வாய்ந்த மீத்தலேடத்து குடும்பத்தை சேர்ந்தவரான  இவருக்கு சரோஜினி என்ற ஒரு மனைவியும் 4 குழந்தைகளும் இருக்கின்றன. தனது குடும்பத் தொழிலான எண்ணெய் எடுக்கும் ஆலையும் வைத்திருக்கிறார். ஆலைக்கு தேவையான தேங்காய் அவருடைய தோப்பில் இருந்தே பெறப்படுகின்றன, அது அவருடைய தேவைக்கு போக வெளியில் விற்கும் அளவுக்கு பெரிய தென்னந்தோப்பும் இருந்தது அவருக்கு.  இவருடைய அன்றாட வேலை எண்ணெய் ஆலைக்கு சென்று வருவதும் அவருக்கு சொந்தமான நிலங்களை கவனித்து வருவதுமாகும்.  இவரின் நெருங்கிய நன்பர் அச்சு வாத்தியார், வாத்தியார் இவருடன் சிறுவயதில் படித்தவர். தன்னுடைய எல்லா விசயங்களையும் இவருடன் பகிர்ந்து கொள்வார் பெரியவர்.

ஒரு நாள் நீலகண்டன் என்பவன் ராமுண்ணியை பார்க்கவருகிறான் அவன் எப்போது இவரை பார்க்க வந்தாலும் கடன் கேட்டுத்தான் வருவான். அன்றும் அவ்வாறே வந்து 500 ரூபாய் கேட்க ராமுண்ணி கடன் கொடுக்க மறுத்ததோடு தன்னுடைய நிலைமை சரி  இல்லை  இனிமேல் கடன் கேட்டு வரவேண்டாம் என்றும் சொல்ல, எதிர்பாராத நேரத்தில் நீலகண்டன் ராமுண்ணி காலில் விழுந்து இந்தமுறை மட்டும் எப்படியாகினும் உதவி செய்யவேண்டும் என வேண்டினான் அதோடு நிற்காமல் தன் பையில் இருந்து ஒரு தங்கத்திலான இடுப்பு கொடியை கொடுத்து இதை வைத்து கொண்டு பணம் தருமாறு வேண்டினான் இதனால் கோபமடைந்த ராமுண்ணி தான் அடகு கடை வைத்து இருக்கவில்லை. இதெல்லாம் வேண்டாம் என மறுத்தும், நீலகண்டன் அழுது வேண்டிகேட்கவே  அவனின் நிலைமையை பார்த்து பணம் கொடுத்து அனுப்பினார் இடுப்புக்கொடியையும் திருப்பி கொடுக்க அதை நீலகண்டன் வாங்கி கொள்ள மறுத்துவிட்டு செல்கிறான்.  பெரியவர் மாலை அவன் வீட்டுக்கு சென்று அவனது மனைவியிடம் கொடுத்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டு தனது இடுப்பில் மடித்து வைத்துக் கொண்டார். 

மாலை நீலகண்டனின் வீட்டுக்கு சென்ற அவர், நீலகண்டனின் மனைவி சாவித்ரியை சந்திக்கிறார் அவளின் வனப்பை கண்டு மெய்மறக்கிறார், இடுப்புக்கொடியை கொடுக்காமல் வந்துவிடுகிறார். நாட்கள் நகர்கின்றன, ராமுண்ணி நீலகண்டனை தன்னிடம் வேலைக்கு அமர்த்தி கொள்கிறார் மேலும் அவனிடம் இடுப்புகொடியை கேட்க வேண்டாம் எனவும் அதற்க்கு பதிலாக இன்னும் ஒரு 500 ரூபாய் தருவதாகவும் கூறுகிறார். பெரியவர்க்கு சாவித்ரியின் பால் உள்ள ஈர்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது தன்னிடம் உள்ள அவளின் இடுப்பு கொடியை தனியாக இருக்கும் சமயங்களில் நெஞ்சோடு அனைத்துக் கொள்வதும் தடவிப் பார்ப்பதுமாக மோகம் தலைக்கு ஏறியவராக தன்னை மறந்து பித்து பிடித்தவர் போல இருக்கிறார். இதனால் இவருடைய நன்பர் அச்சு வாத்தியாரும், மனைவி சரோஜினியும் கலக்கமடைகின்றனர், ஒரு நாள் ராமுண்ணி மாடியில் உள்ள தனியறையில் இடுப்புக்கொடியுடன் கையும் களவுமாக மனைவியிடம் பிடிபடுகிறார், சரோஜினி இந்த விஷயத்தை அச்சு வாத்தியாரிடம் சொல்ல நீலகண்டனின் மனைவியின் இடுப்புக்கொடி தான் அது எனத் தெரிந்து அச்சு வாத்தியார் சாவித்திரியிடம் சென்று 500 ருபாய் கொடுத்து உன் இடுப்புக்கொடியை ராமுண்ணியிடம் இருந்து மீட்டு  வா என்று சொல்கிறார். ஆனால் பெரியவர் இடுப்புக்கொடியை கேட்க வேண்டாம் எனவும் அதற்க்கு பதிலாக பணம் கொடுத்து விட்டார் எனவும் அவள் கூற அச்சு வாத்தியார் செய்வதறியாது விழிக்கிறார். சிறிது நேரம் கழித்து ராமுண்ணியின் நிலைமையை விவரித்துக் கூற சாவித்திரி அதிர்ச்சி அடைகிறாள்.  கடைசியில் ஒரு நாள் சாவித்திரி அவளது வீட்டிற்கு அருகில் உள்ள ஓடையில் குளிக்கும் போது பட்டாம்பூச்சி  ஒன்றை துரத்தி கொண்டே நீந்தி செல்லும் போது புதரின் மறைவில் இருந்து ஒரு கை அவளின் இடுப்பில் அவளது இடுப்புக்கொடியை கட்ட செய்வதறியாது அதிர்ச்சியுடன் விழிப்பதாக கதை முடிகிறது.

ஒரு வயது முதிர்ந்த ஒருவரின் மோகம் அவரை எப்படி பாடாய் படுத்துகிறது என்பதை முகுந்தன் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார். ராமுண்ணிக்கு தான் செய்வது எவ்வளவு பெரிய தவறு என்பதும் அவருடைய குடும்ப மரியாதையும், பாரம்பரியமும் இதால் எவ்வளவு கெட்டுவிடும் என்பது தெரிந்தும் தன்னிலை மறந்து இருப்பதை ஆசிரியர் நன்கு விளக்கி இருக்கிறார்.  நாவலை படிக்கும் போது கிராமத்திலேயே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மொழியாக்கம் செய்து வெளியிட்டவர்களுக்கு நன்றி.