ஜூலை 12, 2010 க்கான தொகுப்பு

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்,  ஆனால் செந்தமிழை சித்திரம் தான் முதலில் கற்றுக்கொடுக்கிறது. குழந்தை ஒலியை அடிப்படையாக வைத்தே மொழியை புரிந்து கொள்கிறது. ஒலி வடிவமானதே மொழி. ஆனால் எழுத்து சித்திர வடிவமானது. பல நாகரீகங்கள் சித்திர எழுத்து முறையை கொண்டே மொழியின் வடிவத்தை உருவாக்கியது என்பதை நாமறிவோம்.  

அகரத்தை கற்றுக் கொடுக்கும் போது, வார்த்தையை சொல்லித்தான் கற்று தருகிறோம். அ-அம்மா ஆ-ஆடு எனும் வார்த்தைகள் மட்டுமல்ல, அம்மாவின் படமும் ஆட்டின் படமும் இல்லையென்றால் குழந்தைக்கு எழுத்து வடிவத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஆக சித்திரங்கள் மொழியை நமக்கு கற்றுத்தரும் முதன்மையான கருவி என்றால் அது மிகையில்லை.

எனக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டியதே சித்திரங்கள் தான், முதல் முதலில் வாசிக்க ஆரம்பித்ததே காமிக்ஸ் புத்தகங்களை தான், என்னை போல பலர் இப்படி தான் படிக்கும் ஆர்வத்திற்கு வந்திருப்பார்கள் என நான் நினைக்கிறன். காமிக்ஸ் கதைகள் தான் முதலில் நமக்கு கதை சொல்லிகள் (நமது பாட்டிகளை தவிர்த்து பார்த்தால்) 20௦ வருடங்களுக்கு முன் தமிழில் நிறைய காமிக்ஸ் புத்தகங்கள்  வந்தன. அதை தரம் மிக்க நூல்கள் என்ற வரையறைக்குள் கொண்டு வரவில்லை, ஆனால் படிக்கும் ஆர்வத்தை சிறுவயதில் உண்டாக்கியது என்பதில் ஐயமில்லை. 

இன்றைய காலகட்டத்தில் கேமரா கோணங்களுக்காகவும், பாத்திரங்களின் பார்வை கோணங்களுக்கான குறிப்புகளுக்காக (reference) காமிக்ஸ் சித்திரங்கள் பயன்படுகின்றன என்றால் ஆச்சர்யமாக இல்லை? அனால் உண்மை. இன்றைய இளைய தலைமுறை இயக்குனர்கள் பலர் stroyboard தயாரித்து கொண்டே படம் எடுக்க களத்திற்கு செல்கிறார்கள். Storyboard என்பது ஒன்றுமில்லை ஒரு காட்சியின் உத்தேச சித்திரம், அது காமிக்ஸ்களில் இருக்கும் சித்திரங்களை போலவே அமைந்திருக்கும். ஹாலிவுட்டில் இது கட்டாயம் என சொல்லப்படுகிறது. தயாரிப்புக்கு முந்தைய Pre-Productionல் Storyboard மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு அடுத்த கட்டமாக தற்போது அதை வீடியோவில் படமாக்கி ஒத்திகை பார்க்குமளவுக்கு முன்னேறி உள்ளது. ஆக சித்திரம் என்பது கதையின் அடிப்படையாக இன்றும் உள்ளது.

 மிக பிரபலமான காமிக்சுகள் திரைப்படங்களாக வந்திருக்கின்றன, Spiderman, Superman, Batman, Hulk, Iron man இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவை நிறைய வருமானம் ஈட்டி தந்தும் இருக்கின்றன. இவை பெரும்பாலும் Marvel காமிக்சுகள், ஆக குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் காமிக்ஸ் கதாநாயகர்களை பிடிக்கத்தான் செய்கின்றன. தமிழில் எடுத்துகொண்டால் மாயாவி, சிந்துபாத் போன்ற கதாநாயகர்கள் குறிபிடத்தக்கவர்கள்

இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட காமிக்ஸ் தற்போது அநேகமாக தமிழில் அழிந்தே விட்டது. என் மகனின் பிறந்த நாள் பரிசாக காமிக்ஸ் புத்தகங்களை பரிசாக கொடுக்க நினைத்து கடை கடையாக ஏறி இறங்கி தேடிய போது தமிழில் எந்த காமிக்சும் என் கண்ணில் படவில்லை. ஆங்கிலத்தில் இருக்கும் காமிக்சுகளோ ஆங்கில குழந்தை இலக்கியம் சார்ந்தவையாக இருக்கிறது. சில வடநாட்டு பதிப்பகங்கள் இதிகாசங்களையும், அவர்களின் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட காமிக்சுகளை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் தேடி அலைந்து முடிவில் ஒரு ஆங்கில காமிக்ஸ் புத்தகத்தை தான் பிறந்த நாள் பரிசாக கொடுத்தேன், மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டான் என் மகன். தமிழில் புத்தகத்தை கொடுக்க முடியவில்லையே என சிறிது வேதனையாகத்தான் இருந்தது. எனது இளம் பிராயத்து நினைவுகளில் மூழ்கியபடியே மனசுக்குள் சொல்லிக்கொண்டேன் நாம் நமது கதை சொல்லிகளை இழந்துவிட்டோம்.