ஓகஸ்ட், 2010 க்கான தொகுப்பு

உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும், எதிர்க்கட்சிகள் சொல்லும் முதன்மையான  குற்றச்சாட்டு மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியை பற்றியதாக இருக்கும். இதில் கள்ளஒட்டு போடமுடியாது என்று இதை வடிவமைத்தவர்களும், ஆளும் கட்சியும், தேர்தல் கமிசனும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தே சொல்லிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இந்தக் கருவியில் கள்ள ஒட்டுப் பதிவு செய்ய முடியுமா? இந்த கேள்வி எல்லோர்க்கும் இருக்கும் ஒன்றே. இதை பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளார் ஹைதராபாத்தை சேர்ந்த  ஹரி பிரசாத் மற்றும் J. Alex Halderman, Rop Gonggrijp.  இக்குழு கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த ஆய்வு பற்றிய கட்டுரையை வெளியிட்டுள்ளது, மேலும் செய்முறை விளக்கமாக ஒரு காணொளியும்  வெளியிட்டது. இதில் மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியின் சிப்புகளை மாற்றியும், அலைபேசியின் உதவி கொண்டும்  எப்படி கள்ள ஒட்டு பதிவு செய்ய முடியும் என்பதை தெளிவாக விளக்கி  உள்ளனர். இந்த காணொளி பலர் பார்த்திருப்பீர்கள், மேலும் இது சம்பந்தப்பட்ட செய்தியைக் கேள்விபட்டும் இருப்பீர்கள், பார்க்காதவர்கள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த இடுகை. 
 
 
ஹரி பிரசாத் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பது கூடுதல் தகவல், இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியை அவர் திருடினார் என்பதே குற்றச்சாட்டு.
 
மேலும் விவரங்களுக்கு  http://indiaevm.org/ வலைத்தளத்தில் சென்று பாருங்கள்.
 
இன்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள்.  ஏறத்தாழ 150 படங்களில் நடித்த கலைவாணர்  தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தவர் . யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக தன் கருத்துகளை பரப்பியவர்.
 
சமீபத்தில் அவருடைய வாழ்க்கை தொகுப்பை கலைஞர் தொலைக்காட்சியில்  மறக்க முடியுமா என்ற நிகழ்ச்சியில் பார்த்திருப்பீர்கள் அதிலிருந்து சில அறிய புகைப்படங்களை உங்களோடு அவரின் நினைவாக பகிர்ந்து கொள்கிறேன். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இது ஓர் தொடர் பதிவுநமக்கு சிறுவயதில் நேர்ந்த அனுபவங்களின் பகிர்வு 

சிறு வயதில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் இந்த தொடர்பதிவில்  நண்பர் படைப்பாளி என்னை இணைத்து கொண்டதற்கு முதலில் நன்றியை  தெரிவித்துகொள்கிறேன். நண்பர் தனது இடுகையின் முடிவில் என் களர்நிலத்தில் பயிர் செய்ய வேண்டும் என கூறி இருந்தார். அவரின் விருப்பத்திற்கிணங்க இதோ என் சிறு வயதின்  சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நான் பிறந்தது திருகழுக்குன்றம் என்ற சென்னையை ஒட்டிய பகுதி, வாழ்ந்தது, வளர்ந்தது எல்லாம் சிங்கார சென்னை. நகர வாழ்கை நரக வாழ்கை என்று சொல்வார்கள் நான் எப்போதும் அப்படி நினைத்ததே இல்லை. இந்த நகரம் என்னுள் பல நினைவுகளை சுமக்க வைத்திருக்கிறது. இன்றளவும் என்னால் இந்த நகரத்தை விட்டு அகல முடியாத படி என்னை கட்டுபடுத்தி வைத்திருக்கும் ஒரு முக்கிய விஷயம் மெரீனா கடற்கரை. இந்த கடற்கரை பல வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை தன்னுள் சுமந்து கொண்டு இருக்கிறது. அந்த வரலாற்று நிகழ்வுகளுக்கு மத்தியில் ஒரு கமா அல்லது ஒரு முற்றுபுள்ளி அளவுக்கேனும் என் நிகழ்வுகள் அங்கு  இருக்கின்றன. அந்த பரந்த கடலை சாலையின் ஓரத்தில் இருந்து பார்த்தாலே போதும் என் சுமைகள், மனக்கஷ்டங்கள் எல்லாம் பறந்து போகும். எனக்கு கிடைத்த முதல் நண்பன், இந்த நண்பனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எனது தாத்தா, சிறுவயதில் ஒவ்வொரு ஞாயிறும் என்ன வெயில் அடித்தாலும் 3 மணிக்கே கிளம்பிவிடுவோம். அவர் ஒரு உணவுப் பிரியர், எந்த ஹோட்டலில் என்ன சிறப்பாக இருக்கும் என்பது அவருக்கு அத்துப்படி, அவருடன் சேர்ந்து நானும் களமிறங்குவேன், அந்த கால கட்டத்தில் ராஜரத்தினம் என்பவர் டேப் (ராஜபாட் ரங்கதுரை படத்தில் சிவாஜி பாடுவாரே, தம்பி என்று நம்பி உன்னை வளர்த்தேன், அந்த இசைக்கருவி) அடித்து கொண்டு தனது கணீர் குரலில் பாடிக்கொண்டு  பல்பொடி விற்பார். பல்பொடி வாங்குவார்களோ இல்லையோ அவர் பாடலை கேட்க நிறைய கூட்டம் கூடும். கிளிஞ்சல்கள்  பொருக்கி, தண்ணீரில் விளையாடி அழுக்கு மூட்டையாய் வீடு வந்து சேர இரவு ஆகிவிடும். வாரம்தோறும் அம்மாவிடம் வசவு வாங்குவேன். 

 என் சிறுவயதில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் என குறிப்பிட்டு சொன்னால் நான் வீட்டை விட்டு ஓடிய நாள் தான் அந்த 8 மணி நேரத்தை என் வாழ்நாளில் அடிக்கடி நினைத்து கொள்வேன். பக்கத்து வீட்டு மாடியில் ஏறி அவர்கள் போட்டு வைத்த வடாம், வத்தல்களை  மிதித்து விளையாடியதால் கிடைத்த வசவு  காரணமாக ஓடிய ஓட்டம் அது. எங்கு போவது என்று தெரியாமல் ஏதோ வண்டியில் ஏறி சென்னை சென்ட்ரலில் இறங்கி அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டே கும்மிடிபூண்டி போகும் ஒரு ரயிலில் ஏறி எங்காவது சென்று விடவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அடுத்தது என்ன என்று தெரியாமல் அழுது, நான் அழுவதை பார்த்து பலர் கூடிவிட ரயிலில் மாறி மாறி உபதேசம். உண்மையில் எனக்கு அன்பு, பாசம் என்றால் என்ன என்பதை அங்கு தான் முதன் முதலில் உணர்ந்தேன். இனிமேல் என்னால் என் தாயை பார்க்க முடியாது என்ற ஒரு சிந்தனை வந்த உடனே என்னை மீறி அழுது விட்டேன். நல்லவேளையாக குழுமி இருந்தோர் எனக்கு அறிவுரை கூறி சிலர் தங்கள் கையில் இருந்த பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தது, என்னை தேடி என் குடும்பத்தார் அலைந்து திரிந்து கொண்டிருந்ததை  நேரில் பார்த்து நான் அழுதது, என் தாத்தா என்னை தேடி ஊர் ஊராய் சுற்றி மறுநாள் காலையில் வந்து என்னை கடிந்து கொண்டது, நினைத்து பார்க்கும் போது இன்னமும் என் அறியாமையை நினைத்து சிரித்து கொள்வேன். 

அப்போது வீடியோ வந்த புதிது, துபாயில் இருந்து கடத்தி வந்த VCR இல் படம் போட்டு பார்ப்பது என்பது ஒரு பெரிய விசேஷம் சென்னையை பொறுத்தவரை  கல்யாணத்திலிருந்து, துக்க நிகழ்ச்சிகள் வரை இந்த வீடியோ போடுவது விழாவை சிறப்பிக்க ஒரு வழி, பல சமயங்களில் கட்டாயம். சென்னையில் பல இடங்களில் திரை அரங்குகளை போல வீடியோ அரங்குகள் இருந்தது. முக்கியமாக திருவல்லிகேணியை ஒட்டிய பகுதிகளில் இது கூடுதல். திரை அரங்குகளில் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு படம் தான், வீடியோ அரங்குகளை பொறுத்த மட்டில் தினம் தினம் புது புது படங்கள், அதுவும் சில அரங்குகளில் விடலை பருவத்தினருக்கு என்றே சிறப்பான படங்களும் உண்டு.  இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம்  யாதெனில் அரங்கு வீடுகள் இருக்கும் பகுதியிலே இருப்பதால், அங்கு பக்கத்தில் இருக்கும் வீடுகளில் உள்ள பெண்கள் எல்லாம், ஸ்கூலுக்கு போக அனுப்பிச்சா இப்படி ஊர் சுத்ரிங்களானு திட்டி தீர்ப்பார்கள், அவர்களின் பாசம் நிறைந்த அதட்டல்கள் எரிச்சலைக் கொடுத்தாலும் அவர்களின் திட்டல்கள் என்னை  வெட்கி தலை குனியவே செய்யும். இதற்காகவே சீருடைக்கு மாற்றாக ஒரு சட்டை வைத்திருப்போம், அப்படியெல்லாம் படிப்பை சட்டை செய்யாமல் பின்னாளில் அவதிப்பட்டு இன்றைக்கு இருக்கும் நிலையை அடைய எத்துனை போராட்டங்கள்.

இப்படி அடுக்கிகொண்டே போகலாம் என் நினைவுகளை, முதன் முதலில் நண்பனுக்காக எழுதிய காதல் கடிதம், ஸ்டெபிகிராப் ஐ ஞாபகபடுத்தும் ஒரு பெண்ணின் பின்னால்  போனது, ஏழாம் வகுப்பில் படிக்கும் போது முதன் முதலில் பிடித்த சிகரேட், ஊருக்கு செல்லும் போது ஏற்படும் உற்சாகம், மூச்சிரைக்காமல் ஏறிய மலை, புளியமரத்தில் மேலே ஏறி  ஓடி பிடித்து விளையாடியது. மடுவில் நீராடிய நினைவுகள், முந்தரி பழத்தை சுவைத்து ஏற்பட்ட கீச்சுக்குரல், நுங்கு வண்டி ஒட்டி சைக்கிள் வண்டியில் மோதிக் கொண்டது, அன்பான தாத்தா இறந்த போது இரவில் தனியாக அவரின் நினைவால் அழுத நேரங்கள். இப்படி போய் கொண்டே இருக்கிறது என் நினைவுகள்.  

 நண்பர் படைப்பாளிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி, எப்பொழுதும் இறந்தகாலம், சொர்க்கலோகம்… என் சொர்கத்தை கொஞ்ச நேரம் சுற்றி பார்க்க வைத்ததற்கு.  

இந்தத் தொடரை சகோதரன் தொடர வேண்டுமென நான் விரும்புகிறேன். எனக்கு பதிவுலகில் கிடைத்த நல்ல நண்பர்களில் சகோதரன் ஜெகதீஸ்வரனும்  ஒருவர், இந்தத் தொடர்பதிவை  அவரின் வலைப்பூவில் பின்னுவார் என் எதிர்பார்க்கிறேன்.

நினைவுகளை தொடர்பவர்கள்:

 

1.படைப்பாளி கருப்பு,வெள்ளையில் கலர்புல் நினைவுகள்..

2.களர்நிலம் என் நினைவுகளின் நிர்வாணம்.

3.சகோதரன்  நானும் என் கிராமமும்

4.இதயம் பேத்துகிறது நெஞ்சில் இட்டக் கோலம் எல்லாம்……

பேசன் ஆப் க்ரைஸ்ட்  (PASSION OF CHRIST ) மெல் கிப்சன் இதுவரை இயக்கிய 4 திரைப்படங்களில் என் மனம்கவர்ந்த இரண்டாவது படம், முதல் படம் எல்லோருக்கும் பிடித்த அபகாலிப்டோ. இந்த இடுகை பேசன் ஆப் க்ரைஸ்ட்  பற்றியது. முதலில் இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பதற்கு கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. மதத்தை முன்னிறுத்தி எடுத்த படத்தில் என்ன பெரிதாக இருந்து விட போகிறது மேலும் இயேசுவின் கதை எத்தனையோ படங்களில் பார்த்தாகி விட்டது  இதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்றே நினைத்தேன், ஆனால் வெளியான குறிகிய காலத்தில், தரமான படம் என்ற விமர்சனம்,  வெகுவாக எல்லோராலும் கூறப்பட்டதால் படத்தை பார்க்க சென்றேன்.

இந்தப் படம் இயேசு கிறிஸ்துவின் கடைசி 12 மணி நேரத்தில் நடந்தவற்றை எடுத்துக் கூறும்   படம். முதலில் தி பேசன்(The Passion) என்ற பெயரிலியே இந்த படம் ஆரம்பமானது, ஆனால் இந்த தலைப்பை மிரமாக்ஸ்(Miramax ) நிறுவனம் பதிவு செய்து வைத்து இருந்தபடியால்  தி  பேசன் ஆப் தி  க்ரைஸ்ட் என்று பெயர் மாற்றப் பட்டது. படம் ஓர் தோட்டத்தில் ஆரம்பிக்கிறது. ஜூடாசின்  துரோகத்தால் இயேசுவை கைது செய்ய காவலர்கள்   வருகிறார்கள்   அந்த  சமயத்தில்   இயேசுவின் சீடரான  பீட்டர்  ஒரு  காவலாளியின்  காதை  தன்  வாளால்  வெட்டிவிடுகிறார். இயேசு சண்டை போடவேண்டமென பீட்டரை நிறுத்தி வெட்டப்பட்ட காதை ஒட்டவைக்கிறார். காவலர்கள் அவரை கைது செய்து அழைத்து செல்கின்றனர், பீட்டர் அவரை தூரத்தில் இருந்து  பின் தொடர்ந்து செல்கிறான். விசாரணை நடக்கிறது, இயேசுவை நீ கடவுளின் குழந்தை என்று சொல்லிக்கொள்வது உண்மையா என்று கேட்க, ஆம் என்று பதிலளிக்கிறார் இதனால் குற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. இதனிடையே பீட்டர் இயேசுவை யார் என்று தெரியாது என 3 முறை சொல்லி விட்டு ஓடுகிறான், ஜூடாஸ் காட்டிகொடுத்ததால் கிடைத்த பொருளைக் கொடுத்து இயேசுவை விட்டு விடுமாறு கேட்டு மறுக்கப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கு போட்டுக் கொள்கிறான். இயேசு கவர்னர் முன் குற்றவாளியாக நிறுத்தப்படுகிறான். இந்நிலையில் அவர் மேல் இறக்கம் கொண்டு அவரை விடுவிக்க எண்ணுகிறான் கவர்னர்  ஆனால் கூட்டத்தினர் அவரை மன்னிக்க கூடாது என்று சொல்லி அவருக்கு மரண தண்டனை விதிக்க நேரிடுகிறது. பின்பு சிலுவையை சுமந்து சென்று கல்வாரியில் சிலுவையில் ஏற்றப்படுகிறார்.

படத்தில் ஏசுவாக நடித்தவர் அற்புதமாக நடித்திருக்கிறார், இந்த படத்தை பொறுத்தவரை மதத்தின் அற்புதங்களை சொல்வது போல அமையாமல் ஒரு மனிதனின் துன்பம் மிகுந்த சில மணி நேரங்களையும் அதை அவர் எவ்வாறு மனம் உவந்து ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் அழகாக எடுத்துக்காட்டி இருக்கிறார் இயக்குனர். மெல்கிப்சன் படம் வெளியான போது கலந்துகொண்ட ஒரு பேட்டியில், இந்தப் படம் அன்பு, நம்பிக்கை, கீழ் படிதல், மன்னித்தல் இவற்றை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய உலகத்திற்கு  அன்பு, நம்பிக்கை, கீழ் படிதல், மன்னித்தல், இவையெல்லாம் எவ்வளவு அவசியம் என்பதை நீங்களே உணர்வீர்கள் என்று சொன்னார். உண்மை, தேவை தானே…

இந்தப் படத்தின் திரைக்கதை கிப்சனால்  ஆங்கிலத்தில் எழுதி இலத்தினிலும், ஹிப்ரூவிலும் மொழி பெயர்க்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்டதாக அறியப்படும் மொழியிலேயே படத்தை உருவாக்கியது இந்த படத்தின் சிறப்பம்சம். இதனால் கிடைத்த  வெற்றியே கிப்சனுக்கு அபகாலிப்டோ  படத்தில் மாயன் மொழியிலேயே படத்தை எடுக்கும் தைரியத்தை கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.

இந்தப் படத்தில் அளவுக்கு அதிகமாக வன்முறைக் காட்சிகள் உள்ளதாக ஒரு சாரார், ஏன் எனக்கும் கூட பட்டது ஆனால் அது படத்திற்கு இன்னும் வலு  சேர்த்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இயேசுவை வித விதமான கருவிகளை கொண்டு அடித்து அவருடைய தசை நார்களை கிழிக்கும் காட்சிகள் மற்றும் ஆணி அடிக்கும் போது உண்டாகும் உபாதையை நமக்கு உணர்த்தும் அளவிற்கு ஸ்பெஷல் எபக்ட்ஸ் காட்சிகள் பிரமாதப்படுத்தி இருக்கிறது.

நான் தலைப்பில் சொல்லியது போல இந்த படம் உலகின் அதிக வசூலான ஆங்கிலமல்லாத திரைப்படம், இது  $ 611,899,420 வசூலை பெற்றது.

127 நிமிடமுள்ள  இத்திரைப்படத்தின் தொகுக்கப்பட்ட 4 நிமிடக் காட்சி 

சில வருடங்களுக்கு முன் நான் பார்த்த இந்தக் காட்சி கோப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது சபாரி(safari ) எனப்படும், காடுகளின் ஊடே செல்லும் ஒரு சுற்றுலாவின் போது எடுக்கப்பட்ட படம். இதில் ஒரு சிங்கக் கூட்டத்தில் ஒரு காட்டெருமை மாட்டிக்கொள்கிறது, ஒரு முதலையும் இந்த வேட்டையில் அழையா விருந்தாளியாக வருகிறது. ஒரு கட்டத்தில் காட்டெருமை கூட்டம் திரளாக வந்து சிங்கக் கூட்டத்தை வீழ்த்தி காட்டெருமையை மீட்கிறது. 
 
இது ஒரு சின்ன ஓரங்க நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். இது 8  நிமிடம் 24  செகண்டுகள் ஓடக்கூடிய ஒரு காட்சி. இதை பார்த்து முடித்தபின், கண்டிப்பாக உங்களுக்கு இதை தொடர்புபடுத்தி நிறைய விடயங்கள் மனதில் ஓடும். உங்களுக்கு உண்டான உணர்வை தயவுசெய்து என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கிர்கீசியாவில் பிறந்த சிங்கிஸ் ஐத்மாத்தவ் படைப்புகள் அனைத்தும் உலகப் புகழ் பெற்றவை குல்சாரி என்ற நாவல் அதில் ஒன்று. இரண்டாம் உலகப் போரில் சோவியத் சமுதாயத்தில் நடைபெற்ற எல்லாவற்றிற்கும் ஸ்டாலின் தான் காரணம் என்ற பரப்புரையை இந்த குறு நாவல் தகர்க்கிறது. சமூகப் போராட்டத்தை மிக நேர்த்தியாக குதிரையை(குல்சாரி) மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இந்த கதை படிப்போர் நெஞ்சை கவர்கிறது. இந்த குறுநாவலில் இடம் பெற்றுள்ள குதிரையும் மக்களும் நம்மோடு வாழ்ந்து பிரிகின்றனர்.

தானாபாய் என்ற வயது முதிர்ந்த தொழிலாளியையும் அவன் வளர்த்த குல்சாரியையும் மையப் படுத்தி இந்த கதை உள்ளது. நாவலின் ஆரம்பத்தில், முதியவரான தானாபாய் தன் மருமகளின் சுடு சொற்களால் புண்ணாகிப் போன இதயத்துடன் தன் கிழட்டு குதிரை குல்சாருடன் தன் இருப்பிடத்தை நோக்கி போகும் போது பழைய நினைவுகளை நினைத்து வருந்தி கொண்டு போவது போல கதை ஆரம்பிக்கிறது.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து தொழிலாளர் வர்க்கம் புதிய அரசை ஏற்படுத்தி ஆண்டு வந்த ஆரம்ப காலம், கிராமத்தில் கூட்டுப் பண்ணைகள் தீவிரமடைந்து வர்க்க பேதமற்று சமுதாய முன்னேற்றத்திற்காக போராடி கொண்டிருந்த காலம். கூட்டுப் பண்ணைகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெறுகின்றன. முக்கிய பொறுப்புகளில் எதிர் புரட்சியாளர்கள் உள்நுழைந்து அவற்றை சீரழிக்கிறார்கள். அரசு அதிகாரிகளில் சிலர் தான்தோன்றிதனமாகவும், பொறுப்பற்றவர்களாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் மாறி  மக்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் ஆகி விடுகின்றனர்.  இத்தகைய போக்கு தானாபாயை சீரழிக்கிறது. பட்டறையில் வேலை செய்து வந்த தானாபாய் முதலில் குதிரைகளை பராமரிக்கும் தொழிலாளியாய் தன் கட்சிக்காக உழைக்க முன் வருகிறான்.  அந்த சமயத்தில்தான் இளம்பிராயத்து குல்சாரி அவனுக்கு அறிமுகமாகிறது. குல்சாரி குலுங்கா நடையன் என்ற சிறப்பு பெயருடன் பலரை கவரும் வகையில் உள்ள குதிரை, தன் எஜமானிடம் அதிக விசுவாசம் கொண்டது. பந்தயங்களில் பல வெற்றியை தானா பாய்க்கு ஈட்டி தருகிறது. ஒரு நாள் அதை அரசு அதிகாரிகளுக்கு ஏவல் செய்ய அது அழைத்து செல்லப்படுகிறது. அடிக்கடி அது கிராமத்திலிருந்து மலையில் எஜமானின் இருப்பிடத்திற்கு தன் மந்தையை சேர்ந்த குதிரைகளை பார்க்க ஓடிவருகிறது. தானாபாயின் நண்பர் சோரோ குதிரை வளர்ப்பிலிருந்து அவனை ஆட்டு கிடைகளை பராமரிக்க நியமிக்கிறார், போதிய உணவோ உறைவிடமோ இல்லாமல் அவரும் அவரது ஆடுகளும் பல இன்னல்களை அனுபவிக்க நேரிடுகிறது. அரசு தரப்பில் எந்த உதவியும் செய்யாமல் ஆடுகளை சரியாக பராமரிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறான்.

அதனால் அரச அதிகாரிகளை அடிக்க போய் விடுகிறான் தானாபாய். இதனால் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இதனால் மனமுடைந்து தன் சேவைகளும், உழைப்பும் வீணாய்  போனதை எண்ணி வருந்துகிறான். இந்த துயரம் தாளாமல் அவரது நண்பர் சோரோ இறக்க நேரிடுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு அவனை மீண்டும் கட்சியில் சேர அழைப்பு  விடுக்கின்றனர், ஆனால் தன் பழைய கசப்பான  நினைவுகளால்  மனமொடிந்திருந்த  தானாபாய் சேராமலே இருக்கிறார். இந்நிலையில் அவனது நண்பனாக விளங்கும் குல்சாரி இறந்து அந்த மனசுமையோடு வீடு நோக்கி போவது போலவும், விரைவில் கட்சியில் சேர்ந்து சமுதாயப் பனி ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடும் தானாபாய் என்ற தொழிலாளி தன் கம்யூனிச சித்தாந்தத்தின் மேல் அளவற்ற மதிப்பும் அதுவே உலகை நிலை நிறுத்தவல்ல சக்தி எனவும் நமக்கு சொல்லாமல் சொல்கிறது இந்த நாவல்.

ஆரம்பத்தில் தொழிலாளிகளின் கூட்டுப் பண்ணைகள் எவ்வாறு நடைபெற்றன. அது எத்தகைய இன்னல்களை சந்தித்தன எவ்வளவு தூரம் தங்கள் உயிரை கொடுத்து வேலை செய்தார்கள். அதன் பலனை கூட அவர்களால் அனுபவிக்க முடியாமல் போன சோகம், மேலும் கட்சிகள் மேல் அவர்களுக்கு இருந்த மதிப்பு, வர்க்க பேதமற்ற அரசிலும் அதிகாரிகள் என்ற பெயரில் ஒரு மேலாண்மை கொண்ட பிரிவு உருவான விதம், அது நாளடைவில் சரி செய்யப்பட்ட தகவல் எல்லாம் இந்த நாவலை படிக்கும் போது நமக்கு புலனாகிறது. அந்த கஷ்டங்கள் தான் மக்களை கம்யூனிச சித்தாந்தத்தை பயந்து நோக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய சொகுசு வாழ்க்கைக்காக போட்டு உடைத்த உண்மையும் நமக்கு புலனாகிறது. 

எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ்  பற்றி மேலும் நீங்கள் அறிந்து கொள்ள விக்கிப்பீடியாவின் கீழ்கண்ட வலைதளத்திற்கு சென்று பாருங்கள்.

http://en.wikipedia.org/wiki/Chinghiz_Aitmatov

போதுமா இந்த ஊதிய உயர்வு? என்ற தலைப்பின் கீழ் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய  உயர்வை பற்றிய ஒரு இடுகையை  உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கு மறுமொழியாக  தோழர் ஞானி தனது கருத்தை வெளியிட்டு இருந்தார்.

பிற நாட்டு மக்கள் பிரதிநிதிகளின் ஊதியங்களுடன் ஒப்பிடுவது தவறு. அதுவும் டாலரை 47 ரூபாய் என்று கணக்கிட்டு மாற்றிப் பார்ப்பது தவறு. ஒரு காபி விலை இங்கே 10 ரூபாய் என்றால் அங்கே ஒரு டாலர். எனவே டாலரின் அந்த ஊர் மதிப்பு 10 ரூபாய்தான். பிற நாடுகளில் தனியார் துறையின் கடை நிலை ஊழியரின் ஊதியத்தையும் நம் நாட்டு கடை நிலை ஊழியரின் ஊதியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்காமல், எம்.பி,கள் ஊதியத்தை மட்டும் ஒப்பிடுவது முறையானது அல்ல. தோழரின் கருத்துகளுக்கு நன்றி. அவரின் கருத்துகளில் ஓரளவுக்கு எனக்கு உடன்பாடு இருக்கிறது. மேற்படி என் இடுகையிலேயே இந்த ஊதிய உயர்வு நியாமானது, அதே சமயம் மற்றொரு கோணத்தில் பார்க்கும் போது தேவை அற்றது என்று எனது கருத்தையும் வெளியிட்டு இருந்தேன்.

முதலில் ஒரு விசயத்தை பெரும்பான்மையோரின் கருத்து என்றே ஆதரிக்க முடியாது. நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில்  எல்லோரும் ஊழல் செய்பவர்கள் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை, 10 சதவிகிதம் பேர் நேர்மையாக இருப்பார்கள் என்று வைத்துகொள்வோம். 90 சதவிகிதம் பேர் செய்யும் தவறுக்கு நாம் இந்த 10 சதவிகிதம் பேரை குறை சொல்வதோ அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான சலுகைகளையோ அல்லது ஊதியத்தையோ  சர்சைக்குள்ளாக்குவதோ தவறு. நாம் கேள்விபட்டிருக்கிறோம் ஒரு மாநிலத்தின் முதல்வர் மிதிவண்டியை பயன்படுத்தியே  சட்டமன்றத்திற்கு வருகிறார், சொந்த வீடு கூட சில கம்யூனிச  பிரதிநிதிகளுக்கு இல்லை என்றெல்லாம், நாம் கேட்கலாம் பொது சேவை என்று சொல்லி தானே வருகிறார்கள், இவர்களுக்கு எதற்கு நாம் சலுகைகள், ஊதியங்கள் கொடுக்கவேண்டும் என்று. ஆனால் அவர்களுக்கும் வீடு, குடும்பம் என்று உள்ளதே. மேலும் இன்றைய நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் VP அல்லது CEO,COO என்ற பதவிகளில் உள்ளவர்கள் குறைந்தது 2 லட்சம் ஊதியமாக பெறுகிறார்கள், நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின்  பதவி அவர்களின் பதவிகளை  விட தாழ்வானது என சொல்லிவிட முடியாது, இருக்க ஏன் ஊதியம் மட்டும் அவர்களுக்கு ஈடாக கொடுக்க கூடாது. ஒரு துறையின் செயலாளர்கள்  வாங்கும் ஊதியம் கூட அந்த துறையின் தலைவரான  மந்திரிகள் வாங்குவதில்லை. மந்திரிகள் மட்டுமா  ஊழல் செய்கிறார்கள் அதிகாரிகள் செய்வதில்லையா.

 ஒருவர் தனது ஊதியத்தை மீறி தவறான முறையில் பணம் பெறுகிறார் என்ற காரணத்திற்காக ஊதியம் சரிவர கொடுக்கமுடியாது என்பதில் இருந்து தவறான முறையில் பணம் பெறுவதை நாம் ஆதறிக்கிறோமா? சமிபத்தில் நான் நண்பர் ஒருவர் மூலம் கேள்வி பட்டேன். காவல் துறை வண்டிகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இலவசமாக பெட்ரோல் போட்டு கொள்கிறார்கள் என்று, இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, இது மேலிடத்திற்கும் தெரியும் என்றும், அவர்களே அதை செய்ய சொல்கிறார்கள் என்ற தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. காவல் துறை ஊழியர்களுக்கு சரியான முறையில் போதுமான அளவுக்கு ஊதியம் கொடுக்காமல் சந்துக்கு சந்து நின்று பிச்சை எடுக்க யார் சூழலை உருவாக்கி கொடுத்தது. இதற்கெல்லாம் பதிலே கிடையாது. 

ஞானியின் மறுமொழிக்கு வருவோம், அவர் அமெரிக்காவின் ஊதியத்தை நம் ஊதியத்தோடு ஒப்பிட கூடாது என்கிறார். அவரே சொல்லி இருக்கிறார்  ஒரு காபி விலை இங்கே 10 ரூபாய் என்றால் அங்கே ஒரு டாலர்,  இந்த கணக்கின் மூலம் 10:1 என்ற விகிதம் சொல்கிறார், அப்படி பார்த்தால் கூட அமெரிக்க செனட்டரின் ஊதியம்  மாதத்திற்கு 14,500 டாலர், இன்று வரை 16000 ரூபாய் தானே ஊதியமாக நம் உறுப்பினர்கள் பெறுகிறார்கள் ஏறக்குறைய 1:1 என்ற கணக்கே வருகிறது நிற்க இந்த ஊதிய உயர்வின் மூலம் 3:1 என்ற நிலை வரும் அதாவது நமது உறுப்பினர்களுக்கு  மட்டும் 3 ரூபாயில் காபி கிடைக்கும். ஊதியங்கள் தொழிலுக்கு தொழில் மாறுபாடு உடையது தான். நமது நாட்டு கடைநிலை ஊழியன், நல்ல திறமையுள்ள கட்டுமான பணியில் உள்ளவரோ, தச்சு பணியில் உள்ளவரோ குறைந்தது 300 ருபாய் முதல் 500 ரூபாய் வரை ஊதியம் பெறுகிறார். விவசாய கூலிகளின் நிலை 100 ரூபாய் வரை இருக்கலாம். 100 ரூபாய் என்ற கணக்கை வைத்து பார்த்தல் 3000 ரூபாய் மாதத்திற்கு, நகரத்தில் அவனால் 3000 வைத்துக்கொண்டு பிழைக்கமுடியாது உண்மை தான் அதே நிலை தான் அமெரிக்க கவுன்டியில் வாழ்பவருக்கும், 500 லிருந்து 1000 டாலர் சம்பாதிப்பான் என்று வைத்துகொண்டால் 3:1 கணக்கு நேராகிறது. மேலும் ஒப்பீடு என்பதே தவறு என்று சொல்லிவிட முடியாது, எல்லா  துறைகளிலும் ஒப்பிடு என்பது தவிர்க்கமுடியாதது, இலக்கியத்தில் கூட ஓப்பீட்டு இலக்கியம் என்று கேள்விபட்டிருக்கிறேன். இல்லையெனில் உலகத்தரம் என்ற வார்த்தையே இல்லமால் இருந்திருக்கும். தரம் என்பதே ஒப்பீட்டின் வாயிலாக வந்த சொல். ஆங்கிலத்தில் COMPARITIVE STUDIES என்பார்கள் இந்த ஓப்பீட்டு ஆய்வுகளை. 

மேலும் நமது கண்ணோட்டத்தை கொஞ்சம் மாற்றி கொள்வது நல்லது, லஞ்சம் வாங்குவதையோ கொடுப்பதையோ  நாம் கவுரவ குறைச்சலாகவோ அல்லது தவறாகவோ நினைப்பதே இல்லை. அதை ஒரு சம்பிரதாயமாகவே நினைக்கிறோம். இதை அகழ்வாராய்ச்சி செய்து பார்த்தல் கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற தர்க்கம் தான் இதற்கும் பொருந்தும். கொடுப்பதால் வாங்குகிறோம் என்று அவர்களும் , கேட்பதால் கொடுக்கிறோம் என்று நாமும் இந்த தர்கத்தை வழி நடத்தி போய் கொண்டு தான் இருக்கிறோம். வேடிக்கையாக ஒரு நண்பர் சொன்னார் எனக்கு, அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதி ஒப்பில்லாத, ஒழுக்கமுடையவனாக, உதாரண புருசனாக இருக்க வேண்டும் ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் என்ன தவறு செய்தாலும், ஒழுக்க கேடாக நடந்தாலும் அது அவனது தனிப்பட்ட வாழ்கை அதை கேள்வி கேட்க மாட்டார்கள். இந்தியாவை பொறுத்தவரை பக்கத்து வீட்டுக்காரன் ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும். பொது வாழ்கையில் இருப்பவன், அதிகாரம் இருப்பவன் எப்படி இருந்தாலும் இவர்கள் கவலை கொள்வதில்லை. ஆனால் இவர்களுக்கு தெரிவதில்லை முன்னேறு போகும் பாதையில் தான் பின்னேறு போகும் என்று. தேசத்தின் முதல் மகன் தவறு செய்யாதவனாக இருப்பதின்  அவசியம் நமக்கு புரிவதே இல்லை, புரிந்து கொள்ள விருப்பமும் இல்லை.  ஆகையால் தவறை சுட்டி காட்டுவதற்கு முன் தவற்றை நாம் திருத்தி கொள்வோமானால் எல்லாம் சரியாகும். ஆகவே திரைப்படங்களில் வரும் வசனம் போல, 100 குற்றவாளிகள் தப்பித்தால் கூட 1 நிரபராதியை தண்டித்து விட கூடாது என்ற கூற்றின் படி 90 சதவிகிதம் தவறு செய்கின்ற உருப்பினர்களுக்காக 10 சதவிகிதம் நல்லவர்களை நாம் ஏன் தண்டிக்க வேண்டும்.

நேற்று நான் பகிர்ந்த இடுகையை இந்த இடுகையின் பின் இணைப்பாக இணைத்திருக்கிறேன்.

http://wp.me/pYvWG-81

 

ஏப்ரல் மாதம் வந்தாலே சம்பள உயர்வை பற்றி பேசாத ஊழியர்களே இருக்கமுடியாது… எனக்கு 30 சதவிகிதம் எனக்கு 20 என ஒவ்வொருத்தரும் மற்றவரின் வயிற்றெரிச்சலை கொட்டி கொள்வது இயல்பான விஷயம். ஆனால் இங்கே ஆகஸ்ட் மாதம் ஊதிய உயர்வு கொடுக்கிறார்கள். யாருக்கு? நமது மேன்மை தங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு. சென்ற வாரம் இந்த செய்தியை எல்லா இதழ்களும் வெளியிட்டிருக்கும் நீங்களும் படித்திருப்பீர்கள். 300 சதவிகித சம்பள உயர்வு, இப்போது ஏறக்குறைய 16,000 வாங்கி கொண்டிருந்த உருப்பினர்களுக்கு தற்போது 50,000 வழங்க தீர்மானித்து இருக்கிறார்கள், ஆனால் 80,000 வரை உயர்வை எதிர்பார்த்து இருந்தார்களாம். இது தவிர அலுவலக செலவுக்காக வழங்கப்பட்ட 20,000 , 40,000 மாக உயர்த்தப்பட்டது மேலும் வாகனங்கள் வாங்க வட்டி இல்லாத கடனாக ஒரு லட்சம் பெற இருந்தது 4 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பயணம் செய்யும் போது ஒரு கிலோமீட்டருக்கு 13 ரூபாயாக இருந்தது 16 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உறுப்பினரின் மனைவியோ அல்லது கணவரோ இலவசமாக முதல் வகுப்பில் எத்தனை தடவை வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம், முன்பு இந்த வசதி உறுப்பினருக்கு மட்டுமே இருந்தது. ஓய்வூதிய தொகை 8,000 ரூபாயாக இருந்தது 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஒரு சாதாரண மனிதரை கேட்டால் இத்தனை சலுகைகள் மிகவும் அதிகம் இவர்களுக்கு இதெல்லம் ரொம்ப ஓவர் என்றே சொல்வார்கள், உறுப்பினர்களுக்கும் இந்த சலுகைகள், ஊதிய உயர்வு ஏற்புடையதாக இல்லை. புலம்பலாகத்  தான் இருக்கிறது. அரசியல், ஊழல், லஞ்சம், அது இது என்று நிறைய விஷயங்கள் இருப்பினும் இன்றைய கால கட்டத்தில் சட்டம் இயற்றும் திறனுள்ள இந்த உறுப்பினர்களுக்கு இப்போது கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கும் ஊதியம் குறைவே, மற்ற நாடுகளின் நாடாளுமன்ற அல்லது அதற்கு சமமான பதவியில் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியங்களை ஒப்பிட்டு பார்க்கையில்.

உதரனத்திற்க்கு அமெரிக்க செனட்டரின் ஊதியம் வருடத்திற்கு 1,74,000 அமெரிக்க டாலர் அதாவது மாதத்திற்கு 14,500 டாலர். இந்திய மதிப்பில் பார்க்கையில் ஏறத்தாழ  6,75,000 ருபாய்(13 மடங்கு அதிகம்) கனடாவின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 11 மடங்கு(12,611 USD) அதிகம் பெறுகிறார்கள். இங்கிலாந்து உறுப்பினர்கள் 8 மடங்கு அதிகம் அதாவது கிட்டத்தட்ட 4 லட்சம் பிரதி மாதம். ஆஸ்திரேலியாவில் 9,833 USD, ஜப்பானில் 15,200 USD, சிங்கப்பூரில் 4,71,364 ரூபாய், பிரான்சில் 7,002 யூரோ, இத்தாலியில் 5,487 யூரோ, ஜெர்மணியில் 7,688 யூரோ  ஸ்பெயினில் 3,126 யூரோ. மொத்தத்தில் எல்லா நாடுகளை விட நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெகு குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள்.

எது எப்படியோ, பொது மக்களை கருத்து கேட்கும் போது, இவங்களுக்கு எல்லாம் எதுக்கு சம்பளம், சம்பள உயர்வு. சம்பளத்தை நம்பி வாழற மனிதர்களா அவர்கள்  என்று சிரிக்கிறார்கள் அது என்னவோ உண்மை தானே…

இக்கட்டுரையை நக்கீரன் வலைதளத்தில் வெளியிட்டமைக்கு நன்றி

http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=57

 
இந்த காட்சிக்கு எந்த முன்னுரையும் தேவை இல்லை என்றே நினைக்கிறன். நம்மில் பலரும் உபயோகிக்கும் வார்த்தை F *** இந்த வார்த்தையை மையப்படுத்தி  ஓஷோ ஒரு சொற்பொழிவின் போது நகைச்சுவையாக சொல்லும் காட்சிக் கோப்பை உங்களோடு சேர்ந்து  நானும் பகிர்ந்து கொள்கிறேன். இதை பலர் பார்த்திருக்க கூடும், இருந்தாலும் ஒரு முறை பாருங்கள்… உங்களை மறந்து சிரிப்பீர்கள்.

சென்னையில் ஐஸ் ஹவுஸ் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இல்லையா அப்போ விவேகானந்தர் இல்லம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்… மெரினா கடற்கரையில், திருவல்லிகேணியில் உள்ளதே இந்த கட்டிடம். சரி  அது என்ன ஐஸ் ஹவுஸ், நான் சிறுவயதில் நினைத்து இருந்தேன் அந்த பகுதியில் நிறைய ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தது என்று.  ஐஸ் ஹவுஸ் என்பது இப்போதிருக்கும் விவேகானந்தர் இல்லம் தான், உண்மையில் அங்கு ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை எதுவும் இல்லை ஆனால் ஐஸ் சேமித்து வைக்கும் இடமாக இருந்தது. இந்த கட்டிடம் 1842 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. விக்டோரிய கட்டடக் கலையைப் பின்பற்றி இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இப்போது இது தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு சுற்றுலாத்தளமாக விளங்குகின்றது.

அன்றைய கால கட்டத்தில் ஐஸ் தயாரிக்க தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத சமயத்தில் கப்பல் மூலம் ஐஸ் வரவழைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. பிரெடெரிக் டுடோர் என்ற ஆங்கிலேயரால் இது நிர்மானிக்கபட்டது தொழில் நலிவடைந்ததால் 1880 ஆம் ஆண்டு பிலிகிரி அய்யங்காரிடம் இந்த கட்டிடம் கை மாறியது. அவர் இதை புனரமைப்பு  செய்து கேமன்  கோட்டை (keman  castle) என்று பெயர் வைத்தார். இந்த சமயத்தில் தான் விவேகானந்தர் சென்னைக்கு வருகை புரிந்தார் அய்யங்கார் விவேகானந்தரின் பால் உள்ள பற்றின் காரணமாக அவரை தனது இல்லத்தில் தங்குமாறு கோற, விவேகானந்தர் 9 நாட்கள்(6 பிப்ரவரி 1897 லிருந்து 14  பிப்ரவரி)  அங்கு தங்கி சென்றதாக தகவல். இங்கு அவர் சில சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் என்று சொல்லப்படுகிறது,  விவேகானந்தர்  சென்ற பிறகு அவரின் நினைவாக ஒரு நிரந்தர மையத்தை விவேகானந்தரை பின்பற்றுபவர்களுக்காக  உருவாக்கினார் அய்யங்கார்.

1906 வரை இந்த மையம் செயல்பட்டு கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது பின்னர் இந்த இடம் ஒரு ஜமிந்தாரின் வசம் சென்றது. பின்னர் இந்த இடம் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு மகளீர்க்கான விடுதியுடன் கூடிய  பயிற்சி பள்ளி ஒன்றை நிறுவியது. 1963 இல் இந்த இடத்தின்  பெயர் விவேகானந்தர் இல்லம் என்று தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டது. விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி 1997 இல்   இந்த இடம் ராமகிருஷ்ண மடத்திற்கு குத்தகையாக விடப்பட்டு இருக்கிறது. இப்போது இந்த இடத்தை நிர்வகிக்கும் ராமகிருஷ்ண  மடத்தவர் அங்கு நிரந்தர புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களுடன் கூடிய கண்காட்சியை வைத்திருக்கின்றனர். மேலும் இதனுள்ளே ஒரு தியான   மண்டபம் ஒன்று உள்ளது இங்கு தான் விவேகானந்தர் தியானம் செய்ததாக அறிகிறோம். சிலர் இந்த இடம் ராமகிருஷ்ண மடத்தவர் என்ற பெயரில்  RSS வசமாகி விட்டதாக சொல்கின்றனர். அது என்னமோ உண்மை தானே தியானதில்  ஆரம்பித்தால்  ஆன்மீகத்தில் நுழைந்து இந்துயசத்தில் தானே அது போய் முடியும். எது எப்படியோ கடற்கரையின் ஓரத்தில் அழகான அந்த கட்டிடம் உண்மையில் மெரினாவின் மகுடத்தில் பொதித்த ஒரு விலை மதிப்பற்ற மாணிக்கம்.