ஓகஸ்ட் 17, 2010 க்கான தொகுப்பு

தமிழகத்தின் பழம் பெருமை வாய்ந்த தஞ்சை பெரிய கோயிலின்  1000-ம் வயது பூர்த்தியடைகிறது. UNESCO வின் பாரம்பரிய மிக்க கலை பொக்கிஷ  பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்த சோழர்களின் கலைக்கோயில் உள்ள தஞ்சையில் இதன் பாரம்பரியத்தை பறை சாற்றும் விதமாக  வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி 2 நாட்களுக்கு பத்மா சுப்ரமணியம் உள்ளிட்ட பல நடன கலைஞர்கள்  பங்கு கொள்ளும் விதமாக  ஒரு நாட்டிய சங்கமத்தை நடத்தபோவதாக தகவல்.  மேலும் 100 ஓதுவார்கள் திருமுறை பாட போகிறார்கள். தமிழக அரசின் சார்பில் 25 கோடி ருபாய் உட்கட்டமைப்பை இன்னும் சிறப்பாய் செய்ய இந்த தருணத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜ ராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர் தஞ்சையை நாயக்கர்கள்  ஆண்டகாலத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.

இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது. இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது

கோயிலின் முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை – முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன. கோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது, இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மனிதர்களை மீறிய சக்தியை ஒத்துக்கொள்ள இயலாதவனாகிய, கோவில்களை வரலாற்று சின்னங்களாகவும், கலை பொக்கிஷமாகவும் பார்க்கும் கூட்டத்தினர்களில் ஒருவனாகிய நான்  இதுவரை இந்த கோவிலை பற்றி புத்தகங்களிலும், வளைதலங்களிலுமே கேள்வியுற்று இருக்கிறேன்,  சீக்கிரம் போய் பார்க்க வேண்டும்…