ஓகஸ்ட் 24, 2010 க்கான தொகுப்பு

போதுமா இந்த ஊதிய உயர்வு? என்ற தலைப்பின் கீழ் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய  உயர்வை பற்றிய ஒரு இடுகையை  உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கு மறுமொழியாக  தோழர் ஞானி தனது கருத்தை வெளியிட்டு இருந்தார்.

பிற நாட்டு மக்கள் பிரதிநிதிகளின் ஊதியங்களுடன் ஒப்பிடுவது தவறு. அதுவும் டாலரை 47 ரூபாய் என்று கணக்கிட்டு மாற்றிப் பார்ப்பது தவறு. ஒரு காபி விலை இங்கே 10 ரூபாய் என்றால் அங்கே ஒரு டாலர். எனவே டாலரின் அந்த ஊர் மதிப்பு 10 ரூபாய்தான். பிற நாடுகளில் தனியார் துறையின் கடை நிலை ஊழியரின் ஊதியத்தையும் நம் நாட்டு கடை நிலை ஊழியரின் ஊதியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்காமல், எம்.பி,கள் ஊதியத்தை மட்டும் ஒப்பிடுவது முறையானது அல்ல. தோழரின் கருத்துகளுக்கு நன்றி. அவரின் கருத்துகளில் ஓரளவுக்கு எனக்கு உடன்பாடு இருக்கிறது. மேற்படி என் இடுகையிலேயே இந்த ஊதிய உயர்வு நியாமானது, அதே சமயம் மற்றொரு கோணத்தில் பார்க்கும் போது தேவை அற்றது என்று எனது கருத்தையும் வெளியிட்டு இருந்தேன்.

முதலில் ஒரு விசயத்தை பெரும்பான்மையோரின் கருத்து என்றே ஆதரிக்க முடியாது. நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில்  எல்லோரும் ஊழல் செய்பவர்கள் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை, 10 சதவிகிதம் பேர் நேர்மையாக இருப்பார்கள் என்று வைத்துகொள்வோம். 90 சதவிகிதம் பேர் செய்யும் தவறுக்கு நாம் இந்த 10 சதவிகிதம் பேரை குறை சொல்வதோ அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான சலுகைகளையோ அல்லது ஊதியத்தையோ  சர்சைக்குள்ளாக்குவதோ தவறு. நாம் கேள்விபட்டிருக்கிறோம் ஒரு மாநிலத்தின் முதல்வர் மிதிவண்டியை பயன்படுத்தியே  சட்டமன்றத்திற்கு வருகிறார், சொந்த வீடு கூட சில கம்யூனிச  பிரதிநிதிகளுக்கு இல்லை என்றெல்லாம், நாம் கேட்கலாம் பொது சேவை என்று சொல்லி தானே வருகிறார்கள், இவர்களுக்கு எதற்கு நாம் சலுகைகள், ஊதியங்கள் கொடுக்கவேண்டும் என்று. ஆனால் அவர்களுக்கும் வீடு, குடும்பம் என்று உள்ளதே. மேலும் இன்றைய நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் VP அல்லது CEO,COO என்ற பதவிகளில் உள்ளவர்கள் குறைந்தது 2 லட்சம் ஊதியமாக பெறுகிறார்கள், நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின்  பதவி அவர்களின் பதவிகளை  விட தாழ்வானது என சொல்லிவிட முடியாது, இருக்க ஏன் ஊதியம் மட்டும் அவர்களுக்கு ஈடாக கொடுக்க கூடாது. ஒரு துறையின் செயலாளர்கள்  வாங்கும் ஊதியம் கூட அந்த துறையின் தலைவரான  மந்திரிகள் வாங்குவதில்லை. மந்திரிகள் மட்டுமா  ஊழல் செய்கிறார்கள் அதிகாரிகள் செய்வதில்லையா.

 ஒருவர் தனது ஊதியத்தை மீறி தவறான முறையில் பணம் பெறுகிறார் என்ற காரணத்திற்காக ஊதியம் சரிவர கொடுக்கமுடியாது என்பதில் இருந்து தவறான முறையில் பணம் பெறுவதை நாம் ஆதறிக்கிறோமா? சமிபத்தில் நான் நண்பர் ஒருவர் மூலம் கேள்வி பட்டேன். காவல் துறை வண்டிகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இலவசமாக பெட்ரோல் போட்டு கொள்கிறார்கள் என்று, இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, இது மேலிடத்திற்கும் தெரியும் என்றும், அவர்களே அதை செய்ய சொல்கிறார்கள் என்ற தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. காவல் துறை ஊழியர்களுக்கு சரியான முறையில் போதுமான அளவுக்கு ஊதியம் கொடுக்காமல் சந்துக்கு சந்து நின்று பிச்சை எடுக்க யார் சூழலை உருவாக்கி கொடுத்தது. இதற்கெல்லாம் பதிலே கிடையாது. 

ஞானியின் மறுமொழிக்கு வருவோம், அவர் அமெரிக்காவின் ஊதியத்தை நம் ஊதியத்தோடு ஒப்பிட கூடாது என்கிறார். அவரே சொல்லி இருக்கிறார்  ஒரு காபி விலை இங்கே 10 ரூபாய் என்றால் அங்கே ஒரு டாலர்,  இந்த கணக்கின் மூலம் 10:1 என்ற விகிதம் சொல்கிறார், அப்படி பார்த்தால் கூட அமெரிக்க செனட்டரின் ஊதியம்  மாதத்திற்கு 14,500 டாலர், இன்று வரை 16000 ரூபாய் தானே ஊதியமாக நம் உறுப்பினர்கள் பெறுகிறார்கள் ஏறக்குறைய 1:1 என்ற கணக்கே வருகிறது நிற்க இந்த ஊதிய உயர்வின் மூலம் 3:1 என்ற நிலை வரும் அதாவது நமது உறுப்பினர்களுக்கு  மட்டும் 3 ரூபாயில் காபி கிடைக்கும். ஊதியங்கள் தொழிலுக்கு தொழில் மாறுபாடு உடையது தான். நமது நாட்டு கடைநிலை ஊழியன், நல்ல திறமையுள்ள கட்டுமான பணியில் உள்ளவரோ, தச்சு பணியில் உள்ளவரோ குறைந்தது 300 ருபாய் முதல் 500 ரூபாய் வரை ஊதியம் பெறுகிறார். விவசாய கூலிகளின் நிலை 100 ரூபாய் வரை இருக்கலாம். 100 ரூபாய் என்ற கணக்கை வைத்து பார்த்தல் 3000 ரூபாய் மாதத்திற்கு, நகரத்தில் அவனால் 3000 வைத்துக்கொண்டு பிழைக்கமுடியாது உண்மை தான் அதே நிலை தான் அமெரிக்க கவுன்டியில் வாழ்பவருக்கும், 500 லிருந்து 1000 டாலர் சம்பாதிப்பான் என்று வைத்துகொண்டால் 3:1 கணக்கு நேராகிறது. மேலும் ஒப்பீடு என்பதே தவறு என்று சொல்லிவிட முடியாது, எல்லா  துறைகளிலும் ஒப்பிடு என்பது தவிர்க்கமுடியாதது, இலக்கியத்தில் கூட ஓப்பீட்டு இலக்கியம் என்று கேள்விபட்டிருக்கிறேன். இல்லையெனில் உலகத்தரம் என்ற வார்த்தையே இல்லமால் இருந்திருக்கும். தரம் என்பதே ஒப்பீட்டின் வாயிலாக வந்த சொல். ஆங்கிலத்தில் COMPARITIVE STUDIES என்பார்கள் இந்த ஓப்பீட்டு ஆய்வுகளை. 

மேலும் நமது கண்ணோட்டத்தை கொஞ்சம் மாற்றி கொள்வது நல்லது, லஞ்சம் வாங்குவதையோ கொடுப்பதையோ  நாம் கவுரவ குறைச்சலாகவோ அல்லது தவறாகவோ நினைப்பதே இல்லை. அதை ஒரு சம்பிரதாயமாகவே நினைக்கிறோம். இதை அகழ்வாராய்ச்சி செய்து பார்த்தல் கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற தர்க்கம் தான் இதற்கும் பொருந்தும். கொடுப்பதால் வாங்குகிறோம் என்று அவர்களும் , கேட்பதால் கொடுக்கிறோம் என்று நாமும் இந்த தர்கத்தை வழி நடத்தி போய் கொண்டு தான் இருக்கிறோம். வேடிக்கையாக ஒரு நண்பர் சொன்னார் எனக்கு, அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதி ஒப்பில்லாத, ஒழுக்கமுடையவனாக, உதாரண புருசனாக இருக்க வேண்டும் ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் என்ன தவறு செய்தாலும், ஒழுக்க கேடாக நடந்தாலும் அது அவனது தனிப்பட்ட வாழ்கை அதை கேள்வி கேட்க மாட்டார்கள். இந்தியாவை பொறுத்தவரை பக்கத்து வீட்டுக்காரன் ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும். பொது வாழ்கையில் இருப்பவன், அதிகாரம் இருப்பவன் எப்படி இருந்தாலும் இவர்கள் கவலை கொள்வதில்லை. ஆனால் இவர்களுக்கு தெரிவதில்லை முன்னேறு போகும் பாதையில் தான் பின்னேறு போகும் என்று. தேசத்தின் முதல் மகன் தவறு செய்யாதவனாக இருப்பதின்  அவசியம் நமக்கு புரிவதே இல்லை, புரிந்து கொள்ள விருப்பமும் இல்லை.  ஆகையால் தவறை சுட்டி காட்டுவதற்கு முன் தவற்றை நாம் திருத்தி கொள்வோமானால் எல்லாம் சரியாகும். ஆகவே திரைப்படங்களில் வரும் வசனம் போல, 100 குற்றவாளிகள் தப்பித்தால் கூட 1 நிரபராதியை தண்டித்து விட கூடாது என்ற கூற்றின் படி 90 சதவிகிதம் தவறு செய்கின்ற உருப்பினர்களுக்காக 10 சதவிகிதம் நல்லவர்களை நாம் ஏன் தண்டிக்க வேண்டும்.

நேற்று நான் பகிர்ந்த இடுகையை இந்த இடுகையின் பின் இணைப்பாக இணைத்திருக்கிறேன்.

http://wp.me/pYvWG-81