செப்ரெம்பர், 2010 க்கான தொகுப்பு

ஆகஸ்ட் 30 அன்று கலைவாணரின் பிறந்த நாளை ஒட்டி அவரின் நினைவாக அவரின் சில புகைப்படங்களை இன்று கலைவாணரின் பிறந்தநாள் என்ற இடுகையின் மூலம் உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்த இடுகையை கண்ட கலைவாணரின் பேத்திகள் தனது மகிழ்ச்சியை தெரிவித்து பின்னூட்டம் செய்திருந்தார்கள், மேலும் அவர்கள் கலைவாணரை பற்றிய ஒரு வலைதளத்தை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தனர். என்னுடைய முந்தைய கலைவாணரின் இடுகையில், நேரமில்லாத காரணத்தினால் அவரை பற்றி எந்த செய்தியையும் பெரிதாக குறிப்பிடவில்லை. பின்பொரு நாளில் அவரைப் பற்றிய விரிவான இடுகையை எழுத நினைத்திருந்தேன். ஆனால் நேற்று கலைவாணரின் பேத்தி மதிப்பிற்குரிய ஷண்முகப்ரியா அவர்கள் குறிப்பிட்டிருந்த வலைதளத்திற்கு சென்று பார்த்தபின், இந்த வலைதளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என்று இந்த இடுகையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

 http://www.kalaivanar.com என்ற இந்த வலைதளம் ஆங்கிலத்திலும் தமிழுலும் படிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் ஆங்கிலத்தில் மட்டுமே இப்போதைக்கு படிக்க இயலும். தமிழ்த்தளம் விரைவில் தயாராகிவிடும் என்று நம்புகிறேன். கலைவாணரின் சுருக்கமான வரலாறு, ரெஸ்யூம் போல எளிமையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய இளமைக் காலங்கள், நாடக நாட்கள், கலைவானரும் சினிமாவும், அவருடைய பொன்மொழிகள் என்று பல வகைகளின் கீழ் கலைவாணரைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அவருடைய அறிய புகைப்படங்களும் நிறைய இடம் பெற்றிருக்கின்றன. நான் ரசித்த விஷயம் இந்த வலைதளத்தில் interesting incidents வகையின் கீழ் உள்ள பக்கம் அதில் ஒரு நாடக சம்பவத்தில், “சக நடிகரை பார்த்து உன்னுடைய 32 பற்களையும் பேர்த்து விடுவேன் என்று சொல்லவேண்டிய வசனத்தை உன்னுடைய 31 பற்களையும் பேர்த்து விடுவேன் என்று சொன்னாராம், நடிகர் என்ன ஒரு பல்லை விட்டுடீங்களே என்று கேட்டதற்கு, அந்த ஒரு பல்லால் நீ பல்வலி வந்தே செத்து மடி என்று தனக்கே உரிய பாணியில் நகைக்க வைத்தாராம்”. 

கலைஞர் தொலைக்காட்சியில் கலைவாணரின் நினைவாக மறக்க முடியுமா? என்ற ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினர், நண்பர் கௌரிசங்கர் தான் அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர், அவர் என்னிடம் கலைவாணரை பற்றிய பல இனிய சம்பவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார், அதில் ஒன்று இந்த நிகழ்ச்சியின் போது பேட்டி எடுக்க கலைவாணரின் உறவினர்களை சந்தித்திருக்கிறார், அந்தப் பேட்டியின் போது அவர்கள் கூறுகையில், “கலைவாணரின் நினைவாக அவர் பேரில் ஒரு சாலை திறக்கப்பட்டிருந்த புதிதில் அவருடைய உறவினர்கள் எல்லாம் சேர்ந்து அந்த வீதியின் பெயர்பலகை இருக்கும் இடத்தில நின்று ஒரு புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்களாம். வழிப்போக்கன் ஒருவன் என்ன இப்படி சாலையை மறித்துக்கொண்டு புகைப்படம் எடுக்குறீங்க இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடானு கேட்டாராம்” இந்த வார்த்தையை கேட்டு அவர்கள் அவ்வளவு மகிழ்ந்தார்களாம் கலைவாணரின் உறவுகள். மேலும் கலைவாணரின் கொடைத்தன்மையை பற்றிய பல சம்பவங்களை நண்பர் மூலம் கேட்டு பிரம்மித்தேன்.

கலைவாணருக்கு, கலைவாணர் என்ற பட்டத்தை 1947ம் வருடம் சென்னை திருவல்லிகேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டது. இந்த கழகம் என் வீட்டினை அடுத்து உள்ளது என்பதில் ஒரு சின்ன பெருமிதம் கூட இருக்கிறது எனக்கு, இப்போது இந்த கழகத்தின் சார்பில் ஒரு நூலகமும், சமுதாயக்கூடம் ஒன்றும் உள்ளது. அந்த கழகத்தின் சார்பில் சில நலத்திட்டங்களை இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கலைவாணரை பற்றிய தகவல்களை எல்லாம் திரட்டி “சமூக விஞ்ஞானி கலைவாணர்” என்று அவரது மகள் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறராம். அன்னாரைப் பற்றிய தகவல்களை வலைதளம் மூலம் அறிய விரும்புபவர்கள் http://www.kalaivanar.comஎன்ற இந்த வலைதளத்திற்கு சென்று பாருங்கள்.

டைட்டானிக் கதாநாயகி என்றவுடன் கேட்வின்சலேட்  என்று நினைத்துக்கொள்ளதீர்கள், கேட் வின்சலேட்டின்  வயதான கதாபாத்திரத்தில் நடித்த  குலோரியா ஸ்டீவர்ட் தான் உயிர் நீத்தவர். டைட்டானிக் நம் வாழ்நாளில் பார்த்த மிக சிறந்த படங்களில் ஒன்று, கதையை ஒரு பாட்டியின் கண்ணோட்டத்தில் இருந்து சொல்வார்கள். அந்த பழம் பெரும் நடிகை குலோரியா ஸ்டீவர்ட், தனது நூறாவது வயதில் கடந்த ஞாயிறு காலமானார். 20 வருடங்களுக்கு முன்பே அவருக்கு மார்பக புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்திருந்தார், மூப்பின் காரணமாக 5 வருடங்களுக்கு முன்பு  நுரையீரலில் புற்றுநோய் உண்டானது மரணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த இவர் ஞாயிறன்று இறந்தார், ஹாலிவுட் வட்டாரங்கள் அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதிக வயது ஆனபின்பு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்(nominee) என்ற புகழுக்கு சொந்தக்காரர். 1940 களிலேயே தன்னுடைய நடிப்புக்கு முழுக்குபோட்ட அவர்  1970க்கு பின்பு  தொலைக்காட்சிகளிலும், சில படங்களிலும்  நடிக்க ஆரம்பித்தார்.

டைட்டானிக் புகழுக்கு பிறகு அவர் எழுதிய சுயசரிதை எல்லோரின் புருவங்களையும் உயர்த்துவதாக அமைந்தது, காரணம் அவரின் அந்தரங்கங்களை வெளிப்படையாக எழுதியதே, முக்கியமாக செக்ஸ் சம்பந்தப்பட்ட அவருடைய மறுமுகம்.

அவர் நடித்த சில புகழ்பெற்ற படங்கள்

The Invisible Man”

“Gold Diggers of 1935”

“Poor Little Rich Girl”

“Rebecca of Sunnybrook Farm”

 துணுக்கு செய்தி: ஒரு படத்தில் ஒரே கதாபாத்திரத்தில் நடித்த 2 பேருக்கு ஆஸ்கார் விருது பரிந்துரைக்கப்பட்டது(nomination) ஆஸ்கார் வரலாற்றிலேயே டைட்டானிக்  ரோஸ் கதாபாத்திரத்திற்கு  மட்டும் தான், ஆனால் இருவருக்குமே விருது கிடைக்கவில்லை.

அமீர் கானின் பீப்ளி லைவ் இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருகிறது.   இது அமீர்கானின் மூன்றாவது முயற்சி, ஏற்கனவே அவரின் லகான், தாரே ஜமீன் பர் என்ற இரண்டு படங்கள் இந்தியா சார்பில்  பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் அமீர்கானால் தயாரிக்கப்பட்டு UTV சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முறை 5 தமிழ்த் திரைப்படங்கள் போட்டியில் இருந்தன, அவை சிங்கம், மதராசப் பட்டினம், ராவணன், விண்ணைத்தாண்டி வருவாயா, அங்காடித்தெரு. இதில் அங்காடித்தெரு பீப்ளி லைவ்க்கு கடுமையான போட்டியை கொடுத்திருக்கிறது என்பதில் பெருமிதம் தான்.  இந்திய விவசாயிகளின் ஏழ்மையையும், அதன் கொடூரத்தினால் ஏற்படும் இன்னல்களையும் விளக்குவதாகவும், இந்திய கலாச்சாரத்தை எடுத்தியம்புவதாகவும் உள்ளதால் அங்காடித்தெருவை தாண்டி ஒரு அடி முன்னெடுத்து வைத்து ஆஸ்காருக்கான இந்தியப்  பரிந்துரையில் இடம் பிடித்திருக்கிறது பீப்ளி லைவ். மேலும் பா, ராஜ்நீதி, மை நேம் இஸ் கான் முதலான 27 திரைப்படங்களை ஓரங்கட்டி  இருக்கிறது இந்தப் படம். 15 பேர் கொண்ட FILM FEDERATION OF INDIA  குழு இந்த பரிந்துரையை வெளியிட்டு இருக்கிறது.

அங்காடித்தெரு உண்மையில் நல்லதொரு திரைப்படம், பீப்ளி லைவ் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை, அதனால் ஒப்பிட்டு கருத்து சொல்ல முடியவில்லை. இருப்பினும் பீப்ளி லைவ் படத்தின் காட்சிகளை தொலைகாட்சியின் வாயிலாகவும் சில வலைதளங்களிலும் பார்த்தேன்.  படம் நன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன்,  நம் வசந்தபாலனுக்கு போட்டி கொடுத்த படம் என்ற வகையில் ஒப்பிட்டு பார்க்கவாயினும் படத்தை பார்க்க வேண்டும்.

சரி அதெல்லாம் போகட்டும், இந்த பரிந்துரையில் 27 படங்கள் போட்டியில் இருந்தன என்பதை ஏற்கனவே சொல்லி இருந்தேன். மதராசப்பட்டினத்தை விடுங்கள் அது ஓரளவிற்கு ஒரு திரைப்பட விழாவில் இடம் பெறத்தக்கவகையில் உள்ள படமே, சிங்கம், இராவணன், விண்ணைத் தாண்டி வருவாயா இதெல்லாம் எப்படி இந்த 27 க்குள் அடங்கியது என்பது தான் புரியாதபுதிர். சிறந்த அந்நிய மொழிப்படம், அதாவது ஆங்கிலமல்லாத சிறந்த திரைப்படம். ஆங்கிலம் பேசுபவர்களுக்கு உலக சினிமா என்ற வட்டத்திற்குள் வரும் படம். நாமும் நிறைய நியோரியலிசம் படங்களை இந்த வகையின் கீழ் பார்த்திருக்கிறோம், இந்தப் படங்களை அந்த வகையின் கீழ் கொண்டு வரமுடியுமா?

இந்தியாவைப் பொருத்தமட்டில் கடந்த வருடம் 24 மொழிகளில் 1288 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன, அல்லது தணிக்கை செய்யப்பட்டு இருக்கின்றன. இதிலிருந்து 1 படம் மட்டும் எப்படி இந்தியா சார்பில் போகமுடியும். ஏன் மொழிகளின் அடிப்படையில் பரிந்துரைகள் இருக்கக் கூடாது ஏனெனில் இது சிறந்த அந்நிய மொழித்திரைப்படம் தானே தவிர, சிறந்த அந்நிய நாட்டு படம் என்ற வகை இல்லையே, இருந்திருந்தால் அங்காடித் தெருவையும் சேர்த்து 24 படங்களை அனுப்பி இருக்கலாமே. சரி அதுவும் வேண்டாம் அதிக அளவில் சிறந்த படங்களை எடுக்கும் ஹிந்தி, தெலுங்கு, தமிழ்,மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, போன்ற குறிப்பிட்ட மொழிகளில் இருந்தாவது தனித் தனியாக அனுப்பலாமே, இதில் என்ன நடைமுறை சிக்கல் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது.  எல்லா போட்டிகளுக்கும் ஒரு வரைமுறை இருக்கும், கண்டிப்பாக ஆஸ்காருக்கும் அதே வகையில் சில கட்டுபாடுகளும் விதிகளும் இருக்கலாம், ஆனால் சினிமா ஆர்வலர்கள் மொழிகளை அடிப்படையாக வைத்து இந்த பரிந்துரை அமைய ஏதேனும் ஒரு சிறிய அளவில் முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும் என்ற எனது அவாவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

 நன்றி: http://filmfed.org/IFF2009.html

ஆங்கிலத்தில் பாய்காட் என்று ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஒத்துழைக்காமல் தவிர்ப்பது, ஒன்றாய் இனைந்து புறக்கணிப்பது என்பது இதன் பொருள். இந்த சொல் எப்படி வந்தது ? தெரியுமா?

ஐயர்லாந்தில் காடுகளிலும், தோட்டங்களிலும் வேலை செய்ய காப்டன் சார்லஸ் பாய்காட் என்ற ஐரிஸ் கான்ட்ராக்டர்  கூலியாட்களை நியமித்து வேலை வாங்கி வந்தார். கூலியாட்களும் ஐரிஸ்காரர்கள். இவர்களிடம் மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் நடந்து கொண்டார் பாய்காட்.  பல நாட்கள் பொறுத்திருந்தும் விடிவு எதுவும் ஏற்படாததால் அந்த கூலியாட்கள் அனைவரும் ஒன்றாய் இனைந்து பாய்காட்டின் காண்ட்ராக்ட் வேலையை செய்ய மறுத்து அவரை புறக்கணித்தனர். அந்தப் பகுதியில் அவர் தனித்து விடப்பட்டார். அவரின் வேலையாட்கள் அவரின் நிலத்தில், வீட்டில் வேலை செய்ய மறுத்து விட்டனர், அவ்வூரில் உள்ள வியாபாரிகளும் இவருடன் வணிகம் செய்ய மறுத்துவிட்டனர். தபால் கொடுப்பவர் கூட தபாலை கொடுக்க மறுத்துவிட்டாராம். அந்த பகுதி மக்கள் யாருமே அவருக்கு ஒத்துழைக்கவில்லையாம்.

அவருடைய நிலத்தில் அறுவடைக்கு ஆள் கிடைக்காமல் வேறு இடங்களில் இருந்து சொற்ப ஆட்களை கொண்டு அறுவடை செய்தாராம், 50௦ தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஆயிரத்திற்கும் மேற்ப்பட காவலர்களை நியமிக்க வேண்டியதாகிவிட்டது . வேடிக்கையான விஷயம் என்னவென்றால்  அறுவடையால் கிடைத்த  லாபத்தை விட காவலர்களுக்கும் விவசாயக் கூலிகளுக்கும் கொடுத்த பணம் அதிகம் ஆகிவிட்டது.  

இந்த நிகழ்வுக்கு பின்னர்தான் இத்தகைய ஒத்துழையாமையை பாய்காட் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். முதன் முதலில் 1880 இல் பாய்காட் என்ற பதத்தை டைம்ஸ் பத்திரிகை ஒரு ஒத்துழையாமை போராட்டத்தை பற்றிய செய்தியில் உபயோகப்படுத்தியது.

இவ்வுலகில் எல்லா விசயங்களும் காரணங்களுடன் தான் நடைபெறுகிறது. எல்லா பொருட்களும் காரணங்களுடன் தான் படைக்கப்பட்டிருக்கிறது, இது ஆத்திகர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு தத்துவம். சரி பெயர்களில் கூட காரணம் இருக்கவேண்டுமா? ஒரு அடையாளத்தை குறிக்கப் பயன்படும் ஒரு சாதாரண விஷயம் தானே, இவனே, அவனே, நன்பா, தோழி, மச்சான், மாமா…. இப்படி ஏதாவது பொதுவான அடையாளக் குறியீடாக வைத்து கூப்பிட்டிருக்கலாம், கூப்பிட்டும் இருப்பர், சமுதாயம் சிறு சிறு குழுக்களாக இருக்கும்போது ஆனால் நிலைமை இப்போது வேறு. 20 அல்லது 30 பேர் கொண்ட குழுவாக இருந்தால் இது சாத்தியம். இப்போது குழுக்கள் என்பதே  கோடிகளைத் தாண்டுகிறது. இப்போது பெயர் மிகவும் முக்கியமாகிப் போகிறது. பொதுவான குறியீட்டுச்சொல்லாக இருக்க இயலாது என்ற நிலை வரும்போது குடும்பத்தின் பெயர்களை தங்களின் குறியீட்டு சொல்லோடு ஓட்டவைத்தனர், ஜாதிகளை தங்கள் பெயர்களோடு இணைத்தனர்.

மொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம் என்பர். அது போல பெயர் என்பதும் ஒரு வம்சத்தின், ஒரு குலத்தின், ஒரு இனத்தின்,  அடையாளமாக கருதப்பட்டது. ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளத்தை அந்தப் பெயரை வைத்தே கண்டுபிடிக்கலாம். ஆனால் சிலருக்கு தங்கள் அடையாளத்தை மறக்க வேண்டியிருந்தது, மறைக்க வேண்டியிருந்தது, காரணம் சமூகத்தில் அவர்களுக்கிருந்த அவல நிலை. அடுத்த தலைமுறை புதிய அடையாளத்தோடு வளர வேண்டும் என ஆசை கொண்டனர்,  இதன் காரணமாக குப்புசாமி, ராமசாமி எல்லாம் ரமேஷ், சுரேஷ் ஆகிப் போனார்கள். மேலும் நம் மக்களுக்கு ஓசை மீது ஒரு ஈடுபாடு, “ஷ், யா” இப்படி முடியும் பெயர்கள் மீது பெரிய காதலே வந்துவிட்டது எனக் கூறலாம். இப்படி பெயர்கள் மருவி மருவி இப்போது ஒரு குறிப்பிட்ட இனத்தை குறிக்கும் பெயர் என்பது இல்லாமலே போய்விட்டது. அதுவும் கூட பரவாயில்லை. மொழியையே மறந்து ஆங்கிலப் பெயர்களை வைப்பவர்களும் உள்ளனர். என்னுடைய நண்பர் ஒருவர் அவரின்  மகளுக்கு ஷாரன் லோபஸ் (SHARONE LOPAZ) என்ற பெயர் வைத்துள்ளார், இன்னொருவர் ஜோதிகா, நான் இருவரிடமும் கேட்டேன் பெயர் காரணங்களை, கேட்க இனிமையாக இருக்கிறது அதனால் வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள்.

சமீபத்தில் நான் என் மனைவி, மகன் சகிதம் திருவள்ளூர் போய்விட்டு திரும்பி கொண்டிருந்தோம். ரயிலில் ஒரு பெரியவர் என் மகனின் பெயர் கேட்க அவன் ஆதித்தன் என்று கூற, அவர் உன் பெயரைப் பற்றி தெரியுமா? ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், பற்றி எல்லாம் சொல்லி அதித்தகரிகாலன் என்ற பெயரை பற்றியும் சொன்னார். உண்மையில் என் மகனுக்கு நான் முதலில் வைத்த பெயர் ஆதித்த கரிகாலன். என் மனைவி பள்ளியில் கரிகாலன்  என்ற பெயர் கேலிக்குள்ளாகும் என சொல்லி கரிகாலனை என்னுடன் சண்டையிட்டு நீக்கிவிட்டாள். அந்த ரயில் பயணத்தின் போது அந்த பெரியவர் ஆதித்தகரிகாலன் பெயருக்கு  கொடுத்த விளக்கத்தின் போது அவளுக்கு சங்கடமாகிப் போய்விட்டது. மதிய உணவிற்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள புஹாரி உணவகத்திற்கு வந்தோம் அங்கு மறுபடியும் இந்தப்  பெயரை முன்னுறுத்தி ஒரு நிகழ்வு. உணவுக்கு ஆர்டர் எடுத்தவர் என் மகனிடம் பேச்சு கொடுத்தார் அவர் என் மகனின் பெயர் கேட்க இவன் சொல்ல, அவர் உன் பெயர் யாருடையது தெரியுமா? என்று கேட்க இவன் ஒரு ராஜாவின் பெயர் என்று சொல்ல, அவர் சி. பா. ஆதித்தனார் பற்றி சொல்ல ஆரம்பித்துவிட்டார். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று சொன்ன மாமனிதர், அது போல அவரைப் போல நீ நல்லா வரணும்னு வாழ்த்திவிட்டு போனார். ஒரே நாளில் 2 சம்பவங்கள், என் மனைவிக்கு கொஞ்சம் குற்ற உணர்ச்சியாகவே  இருந்ததாக சொன்னாள் வீட்டுக்கு வரும்போது, ஆதித்தகரிகாலன் என்ற பெயர் உண்மையில் ஒரு ஆளுமையான பெயர் தான் என்று காலம் கடந்து ஒப்புக்கொண்டாள்.

சமீபத்தில், ஆதிவாசிகளை பற்றி எழுதும் ஒரு புகப் பெற்ற எழுத்தாளரின் வங்க மொழிக்கதையின் மொழிபெயர்ப்பை படித்தேன் அதில் அந்தப்பகுதி ஆதிவாசிகள் அவர்களின் குழந்தைகளுக்கு பிறந்த கிழமைகளின் அடிப்படையில் பெயர் வைப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது போல ஒவ்வொரு இடத்திற்கும் மக்களுக்கும் ஒரு வழக்காறு, நம் தமிழ் இனத்திலும் இது போல பல காரணங்களை கொண்ட பெயர்களும், மொழியை மையப்படுத்தி பெயர்களும் பல உண்டு. ஒரு நண்பர் சொன்னார் அவருக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் பெண்கள் வரிசையாக  பிறந்தனராம் அதனால் தனது 6 வது பெண்ணிற்கு “போதும்பொண்ணு” என்று பெயர் வைத்தாராம். ஒரு நாத்திகர் தன் மகனுக்கு “லேதுசாமி” என்று பெயர் வைத்து உள்ளதாக ஒரு உபரித் தகவலையும் சொன்னார் நண்பர். ஆளுமை குணத்தோடு விளங்க வேண்டும் என்பவர்கள் “ன்” என்ற எழுத்தில் பெயர் முடியுமாறு வைப்பர் என்று கேள்விப்பட்டதுண்டு. உண்மையில் ஆளுமை பெயரிலும் இருக்கிறது என்பதை பலரும் ஒப்புகொள்கின்றனர்.  

இப்போதிருக்கும் பெயர்கள் எல்லாமே பெரும்பாலும்  வடஇந்திய, வடமொழிப் பெயர்கள். இப்போது வைக்கும் தமிழ்ப்பெயர்கள் 20 வருடங்களில் எல்லாம் தனித்து, ஆங்கிலத்தில் சொன்னால் FANCY, UNIQUE ஆக  இருக்கும் என்று நண்பர் ஒருவர் கூறினார். ஆனால் எது எப்படியோ இன்றைய நிலையில் சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன மக்களின் மனோபாவம் சிறிது தெளிவடைந்து இருக்கிறது. என் நட்பு வட்டாரத்தில் எடுத்துக்கொண்டால், புகழ், கயல், இனியா, ஓவியா, இலக்யா, என்று நிறைய பேர் தமிழ் பெயர்களை வைத்திருக்கிறார்கள். எனக்கு கூடிய விரைவில்  பிறக்கப்போகும் இரண்டாவது குழந்தைக்கு யாழினி என்று பெயரை வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறேன் அவளை கொஞ்ச

 
 
சென்ற வாரம் எனக்கு உடலில் அங்கங்கே சிறு சிறு புடைப்புகள் தோன்றியது கூடவே கொஞ்சம் நமைச்சல், நானும் அது சாதாரண கொசுக்கடி என்றே இருந்துவிட்டேன், ஏனெனில் பகல் பொழுதில் என்னால் புடைப்புகளையோ நமைச்சலையோ உணரமுடிய வில்லை, மாலை வீடு சென்ற பிறகே இப்படி ஆகிக்கொண்டிருந்தது. ஆனால் என் வீட்டிலோ அந்த அளவிற்கு கொசுத்தொல்லையும்  இல்லை. 2 நாட்கள் கழித்த பின் தான் உணர்ந்தேன் இது ஏதோ அலர்ஜி போல இருக்குமோ என்று. நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்கும் போது அவர் அவருடைய குழந்தைக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருந்ததாகவும், இது ஒரு வகை  அலர்ஜி தான் எனவும் அலர்ஜி மாத்திரை ஒன்றை வாங்கி போடுங்கள் சரியாகிவிடும் என்றார்.

அவர் சொன்னது போல ஒரு மாத்திரையை விழுங்கிய பின் ஒரே நாளில் சரியானது. அந்த சமயத்தில் நான் அலர்ஜி பற்றி வலை தளங்கள் மூலமாகவும் ஒரு புத்தகத்தின் மூலம் படித்த விசயத்தை உங்களோடு இன்று பகிர்ந்து கொள்கிறேன்.
 
நாம் உண்ணும் உணவால் சில சமயம்  உடலுக்கு சில உபத்திரவங்கள் உண்டாகும் ஆனால் அவை எதனால் ஏற்படுகின்றது என்ற விவரம் புரியாது. இத்தகைய ஒரு நிலைக்கு பெயரே அலர்ஜி. உடலுக்கு ஒவ்வாத ஒரு பொருள் உடலுக்குள் நுழையும் போது எதிர்ப்பு கிளம்புகிறது, அங்கு ஒரு ஒத்துழையாமை இயக்கம் நடைபெறுகிறது. மருத்துவ மொழியில் சொல்ல வேண்டுமானால் ஆண்டிஜென்னுக்கும், ஆண்டிபாடிக்கும் நடக்கும் சண்டை. இந்த விஷப்பொருளை( உடலுக்கு தேவை இல்லாத எல்லாப் பொருள்களும் விசப்பொருட்கள் தான்)  ஹிஸ்டாமின் சீரோடோனின் என்று மருத்துவத்துறையில் சொல்வர். உடலில் எந்தப் பகுதியில் இந்த விஷப் பொருள் தாக்குகிறதோ அந்தப் பகுதியில் அலர்ஜி ஏற்படுகிறது. இந்த விஷப்பொருள் ரத்தத்துடன் உடல் முழுவதற்கும் செல்கிறது. இதனால் ரத்த நாளங்கள் விரிவடையும். ரத்தம் அதிகமாகி அந்த இடம் சிவந்து விடுகிறது. உடலில் தடிப்பாக அங்கங்கு துருத்தும். சில உணர்வு நரம்புகளை தூண்டி நமைச்சலை ஏற்படுத்துகிறது. சுவாசக் குழாய்களை தாக்க ஆஸ்துமாவையும் உண்டாக்கும் சிலவகை அலர்ஜிக்கள். 
 
 
கடந்த சில நாட்களாகவே நாடெங்கிலும்  இதைப்பற்றியே பேச்சு, பாபர் மசூதி தீர்ப்பு, பாபருக்கு சாதகமாக இருக்குமா? ராமருக்கு சாதகமாக இருக்குமா? போகிற போக்கை பார்த்தால் கிரிக்கெட் சூதாட்டம் போல தீர்ப்பை முன்னிறுத்தி ஜெயிக்கப்போவது யாரு என்று சூதில் ஈடுபட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை, அவ்வளவு ஆர்வத்தில் இருக்கிறார்கள் மக்கள்.
 
உண்மையில் இது அவ்வளவு ஆர்வத்தை கவர்கிற விசயமா? சாதாரண நிலத்தகராறு ஒரு நாட்டின் அமைதி, இறையான்மையையே  கேள்விக்குறியாக்கும் விசயமாக மாறிப்போனதற்கு காரணம் என்ன? ரிஷிமூலம் நதிமூலம் எல்லாம் பார்த்தால் தலையே சுற்றுகிறது. இரண்டு தரப்பும் தனக்கென்று ஒரு ஞாயத்தை வைத்து போராடிக்கொண்டிருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும், ஆட்சியில் உள்ளவர்களே இந்த தீர்ப்பு அவசியாமா? இதை இப்படியே ஆறப் போடக்கூடாதா என்று என்னுமளவிற்கு நிலைமை மோசமாகித்தான் போய் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இன்றிலுருந்தே  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாகிவிட்டது. உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து சில மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக அனுப்பும் BULK SMS தடை செய்யப்பட்டிருக்கிறது. உள்துறை அமைச்சர் ஊடகங்களையும்  பொது மக்களையும், உங்கள் கருத்துகளை உங்களோடு வைத்துருங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மத விசயங்களில் பெரிதும் ஆர்வம் காட்டுபவர்களும் பாபர் மசூதி பிரச்னையை கையில் எடுத்தவர்களுமான பா.ஜா.க. கூட இந்த விசயத்தில் பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நரேந்திர மோடி, காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகின்ற இந்த சமயத்தில் மானத்தை வாங்கி விடாதீர்கள் என்ற  கதியில் அமைதி காக்கும்படி அறிவிப்பு விடுகிறார்.
 
இதெல்லாம் பார்க்கும் போது, கடவுளை மற மனிதனை நினை என்று கூறிய தீர்க்கதரிசியை  நினைக்காமல் இருக்க முடியவில்லை. அமைதிப்படை என்ற படத்தில் ஒரு வசனம் வரும் “டேய் மணியா கடவுள் இல்லைன்னு சொன்னவன் கூட கோயில இடிச்சதா சரித்திரம் இல்லை, கடவுள் இருக்குதுன்னு சொல்றவன் தான் அடிச்சுக்கிட்டு சாகிறான்”, சத்யராஜ் தனக்கே உரிய பாணியில பேசுவார். எவ்வளவு உண்மையான விஷயம்.
 
வெள்ளிகிழமை தீர்ப்பு, சனி ஞாயிறு விடுமுறை, திங்கட்கிழமை எப்படியும் மேல்முறையீட்டுக்கு  போய் நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கி விடுவார்கள்  தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே சனி ஞாயிறு அமைதியாகப் போனால் போதும், திங்கட்கிழமை நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் என்று சில சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 
தீர்ப்பு எப்படி இருந்தாலும் நாம் அமைதி காப்போம், அறவழியில் நடப்போம். 
 
 
 
முதல்வன் படத்தில் பார்த்திருப்பீர்கள் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக பொறுப்பேற்று பணியாற்றுகிற மாதிரி, உண்மையில் அது போல ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது தெரியுமா? ஆனால் இங்கு எந்த சவாலின் அடிப்படையிலும் பொறுப்பு கொடுக்கப்படவில்லை. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜேம்ஸ்  கே.போக் என்பவரின் பதவிக்காலம் 3.3.1849 அன்று முடிவடைந்து மறுநாள் 4.3.1849 புதிய ஜனாதிபதியாக ஜகேரி டைலர் என்பவர் பொறுப்பேற்கவேண்டும் ஆனால் அது ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அன்று பொறுப்பேற்க அவர் மறுத்துவிட்டார். அமெரிக்காவை பொருத்தமட்டில் ஒரு நாள் கூட ஜனாதிபதி இல்லாமல் இருக்கக்கூடாது, மேலும் பதவிகாலம் முடிந்தும் ஒரு நாள் கூட பழைய ஜனாதிபதி பொறுப்பில் நீடிக்கக் கூடாது. இந்நிலையில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் செனட்டர் சபையின் தலைவர் பொறுப்பை ஏற்கலாம் என்பதை கருத்தில் கொண்டு டேவிட் ரைஸ் அட்சிசன் ஒரு நாள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
 
 
 24 மணி நேரமே ஜனாதிபதியாக இருந்த இவருக்கு அவரின் சொந்த ஊரான பிளாட்ஸ்பர்கில் சிலை வைக்கப்பட்டு, சிலையின் அடியில் அமெரிக்காவின் ஒரு நாள் ஜனாதிபதி என்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது. வழக்குரைஞராக வாழ்கையை தொடங்கிய இவர் பின்பு அரசியலில் ஈடுபட்டார். அடிமை ஒழிப்பு முறையின் போது நிகழ்ந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
 
 

 

உலகின் மிகவும் அறியப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான சைக்கோ திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் ரசிகர்களை உலுக்கும் ஒரு திரைப்படம். ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கிய இந்தப் படம் நியூயார்க் திரையரங்குகளில் முதல் முறையாக திரையிடப்பட்ட போது ரசிகர்களை பீதியடையச் செய்ததாக அறிகிறோம். 

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் கதாநாயகி வசிக்கிறாள், தனது அலுவலகப் பணம் 40,000 டாலர்களை திருடிவிட்டு ஊரைவிட்டு காதலனை சந்திக்க ஓடிவிடுகிறார். போகும் வழியில் ஒரு விடுதியில் இரவு நேரத்தை கழிக்க வேண்டியதாகிறது. அது ஒரு தனித்து விடப்பட்ட ஆளரவம் இல்லாத  பகுதி. இரவு உணவுக்கு அழைப்பு விடுக்கிறார் விடுதியின் காப்பாளர், அவரின் தாயார் ஊர் பேர் தெரியாதவரோடு சேர்ந்து உணவருந்த மறுக்கிறார், இந்த உரையாடலை கதாநாயகி கேட்க நேரிடுகிறது. இரவு விருந்தில் கதாநாயகியும் விடுதி காப்பாளரும் கலந்து கொள்கிறார்கள், தன் தாயின் பேச்சுக்காக மன்னிப்பு கோருகிறார் காப்பாளர். பின்பு தன் அறைக்கு திரும்புகிறார் கதாநாயகி, அவளின் நடவடிக்கையை அறையில் உள்ள துளை வழியாக காப்பாளர் நோட்டமிடுகிறார். அவள் தான் திருடி வந்த பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு குளிக்கச் செல்கிறாள். ஷவரில் குளித்துக் கொண்டிருக்கும்போது அவள் கொல்லப்படுகிறாள். காட்சியின் இறுதியில் விடுதியின் பின்புறம், ஐயோ அம்மா, ரத்தம் ரத்தம் என விடுதி காப்பாளன் கத்துகிறான். விடுதிக்குள் ஓடி வருகிறான் அங்கு கதாநாயகியின் சடலத்தை காண்கிறான், சிந்தியிருந்த ரத்தத்தை துடைத்து அவளுடைய எல்லா பொருட்களையும் எடுத்து அவள் வந்த காரிலேயே நிரப்பி காரை பக்கத்திலுள்ள  ஒரு ஓடையில் மூழ்க செய்கிறான்.

அலுவலகப்பனத்தை கைப்பற்ற துப்பறியும் நிபுணர் ஒருவர் கதாநாயகியை பற்றி விசாரித்துக்கொண்டு விடுதிக்கு வருகிறார், அவரும் அவளை போலவே கொல்லப்படுகிறார். பின்பு கதாநாயகியின் காதலனும் அவளுடைய தங்கையும் உள்ளூர் காவல் அதிகாரி மூலம் விடுதியின் காப்பாளனின் தாய் 10 வருடங்களுக்கு முன்னதாகவே இறந்த செய்தி அறிகிறார்கள், மேலும் நேரடியாக  விடுதிக்கு சென்று கதாநாயகிக்கு என்ன நேர்ந்தது என அறிய திட்டமிடுகிறார்கள். அங்கு விடுதியின் காப்பாளன் தன் தாயின் சடலத்தை 10 வருடங்களாக  பாதுகாத்து வருவதும், அவளைப் போலவே இவன் உடை அணிந்து, தன் தாயாகவே மாறி கொலை செய்வதும் தெரிய வருகிறது. ஒரு பெரிய போராட்டதிற்கு பிறகு விடுதி காப்பாளன் கைது செய்யப்படுகிறான்.

விடுதிகாப்பாளன் தந்தை இறந்த பிறகு, அவனும் அவனுடைய தாயும் தனியாக வாழ்கிறார்கள், தாயின் மேல் மிகுந்த பாசத்தோடு வளர்கிறான் இதற்கிடையில் அவளுடைய தாய் ஒரு நபரிடம் காதலில் விழ, தன் பாசத்தையும் அன்பையும் பங்கு போட ஒருவன் வந்ததை பொறுக்க முடியாமல் தாயையும் அவளின் காதலனையும் கொன்றுவிடுகிறான். அவள் இறந்ததை மறைத்து அவளின் உடலை பாதுகாத்து அவளுடனே வாழ்ந்து வருகிறான், சில சமயங்களில் அவனே அவனின் தாய் போல உடை அணிந்து தனக்கு தானே பேசிக்கொள்வான். இவ்விதம் மருத்துவர் அவனின் மனநோயினை பற்றி ஆய்ந்தரிகிறார். சிறையில் விடுதிக் காப்பாளன் தன் தாயினைப் பற்றிய சிந்தனையில் இருப்பது போல கதை முடிகிறது.

சைக்கோ திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் ஹிட்ச்காக் தனது நகைச்சுவை மற்றும் திகிலூட்டும் திரைப்படங்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார். ஆனால் சைக்கோ திரைப்படம் அவரை மற்றொரு பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றது. சினிமா ரசிகர்களை உலுக்கிக் கலக்கிய ஒரு உலகுக்கு அழைத்து சென்றவர் ஹிட்ச்காக்.

சைக்கோ திரைப்படம் இன்றளவும் பேசப்பட்டு ரசிகர்களை ஆட்டிப்படைத்து அச்சுறுத்தி வருகிறது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள். சைக்கோ திரைப்படம் வெளியான 1960 ஆம் ஆண்டு ஹிட்ச்காக்குக்கு வயது 60. ஹாலிவுட்டின் புகழ் உச்சியில் அவர் இருந்த காலகட்டம்.

அந்தப் படம் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் வித்தியாசமாக இருந்தது. இவ்வளவுக்கும் அந்தப் படம் ஒரு சாதாரண கதையை அடிப்படையாக வைத்து கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருந்தது. படத்தின் கதாநாயகி ஜேனட் லே குளியல் அறையில் கொலை செய்யப்படும் சம்பவம் ரசிகர்களை உறையவைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பேசாப் படங்களில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய ஹிட்ச்காக். அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சத்தில் இருக்கும் ரசிகர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் நிபுணராக இருந்தார். அந்த சமயத்தில் அவர்களின் உணர்வலைகளுடன் எப்படி சிறப்பாக விளையாடுவது என்பதில் அவர் வல்லவராக இருந்தார். இந்தப் படம் 1998 இல் மறுபடியும் அதே திரைக்கதையில் ரீ மேக்  செய்யப்பட்டது.

இந்தப் படத்தின் மிகப் பிரபலமான, கதாநாயகியின் குளியலறை கொலைக்காட்சியின் காணொளி உங்கள் பார்வைக்கு… 

 

தெரியுமா  என்ற இந்த வகையின் கீழ் நமக்கு தெரிந்த விசயங்களில் உள்ள தெரியாத  விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இதை ஒரு தொடர்பதிவாக தொடர இருக்கிறேன்.

உடலில் எங்காவது காயம் ஏற்படும் போது சரியாக கவனிக்கவில்லை என்றால் சில நாட்களிலேயே சீழ் பிடிக்க ஆரம்பித்து விடும். சரி இந்த சீழ் என்பது என்ன… தெரியுமா? அநேகமாக உங்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் தசை நார்கள் கிழிந்து வடிந்தோடிய ரத்தம் கெட்டுப்போய் இருக்கும் என நினைப்பீர்கள். ஒரளவுக்கு நீங்கள் நினைப்பது சரி… அதாவது கெட்டுபோன ரத்தம் தான் அது, ஆனால் முழுமையான காரணம் வேறு. உடலில் காயம் ஏற்படும் போது அதன் வழியாக கிருமிகள் உள் நுழைகிறது, கிருமிகளை எதிர்க்கவே நம் உடலில் காவலர்கள் இருக்கிறார்கள், அவர்கள்  தான் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், இந்த வெள்ளை அணுக்களின் கடமையே நோய் பரப்பும் கிருமிகளுடன் சண்டை இடுவது தான். காயத்தின் காரணமாக உட்புகும் கிருமிகளை, வெள்ளை அணுக்கள் எதிர்த்து சண்டையிடுகின்றன, சண்டையில் உயிர் நீத்த போராளி வெள்ளை அணுக்கள் தான் இந்த சீழ். உடலுக்கு தேவை இல்லாத கழிவு என்பதால் உடலை விட்டு அது தானாக வெளியேறுகிறது.

மேற்கொண்டு ரத்தம் பற்றிய சில தகவல்கள்:

ரத்தம் செயற்கை முறையில் தயாரிக்க முடியாத ஒன்று, இது எலும்புகளின் ஊடே உள்ள மஜ்ஜையிலிருந்து உருவாகிறது.

வில்லியம் ஹார்வி என்பவர் தான் முதன் முதலில் ரத்தம் உடலை சுற்றி வருகிறது என்ற தகவலை வெளியிட்டார்.

ரத்தத்துடன் சோடியம் சிட்ரேட் என்ற வேதிப் பொருளை சேர்க்கும் போது ரத்தம் திடநிலைக்கு  மாறுவதை தவிர்க்கலாம், இந்த ஆய்வே ரத்தத்தை சேமித்து வைக்கும் ரத்தவங்கி உருவாகக் காரணமானது.

பின்னிணைப்பாக ரத்த தானத்தை பற்றிய என்னுடைய இடுகையை கீழே இணைத்துள்ளேன்.

 அலைபேசியில் SMS செய்தாலே கிடைக்கும் ரத்தம்…