உலகின் மிகவும் அறியப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான சைக்கோ திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் ரசிகர்களை உலுக்கும் ஒரு திரைப்படம். ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கிய இந்தப் படம் நியூயார்க் திரையரங்குகளில் முதல் முறையாக திரையிடப்பட்ட போது ரசிகர்களை பீதியடையச் செய்ததாக அறிகிறோம். 

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் கதாநாயகி வசிக்கிறாள், தனது அலுவலகப் பணம் 40,000 டாலர்களை திருடிவிட்டு ஊரைவிட்டு காதலனை சந்திக்க ஓடிவிடுகிறார். போகும் வழியில் ஒரு விடுதியில் இரவு நேரத்தை கழிக்க வேண்டியதாகிறது. அது ஒரு தனித்து விடப்பட்ட ஆளரவம் இல்லாத  பகுதி. இரவு உணவுக்கு அழைப்பு விடுக்கிறார் விடுதியின் காப்பாளர், அவரின் தாயார் ஊர் பேர் தெரியாதவரோடு சேர்ந்து உணவருந்த மறுக்கிறார், இந்த உரையாடலை கதாநாயகி கேட்க நேரிடுகிறது. இரவு விருந்தில் கதாநாயகியும் விடுதி காப்பாளரும் கலந்து கொள்கிறார்கள், தன் தாயின் பேச்சுக்காக மன்னிப்பு கோருகிறார் காப்பாளர். பின்பு தன் அறைக்கு திரும்புகிறார் கதாநாயகி, அவளின் நடவடிக்கையை அறையில் உள்ள துளை வழியாக காப்பாளர் நோட்டமிடுகிறார். அவள் தான் திருடி வந்த பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு குளிக்கச் செல்கிறாள். ஷவரில் குளித்துக் கொண்டிருக்கும்போது அவள் கொல்லப்படுகிறாள். காட்சியின் இறுதியில் விடுதியின் பின்புறம், ஐயோ அம்மா, ரத்தம் ரத்தம் என விடுதி காப்பாளன் கத்துகிறான். விடுதிக்குள் ஓடி வருகிறான் அங்கு கதாநாயகியின் சடலத்தை காண்கிறான், சிந்தியிருந்த ரத்தத்தை துடைத்து அவளுடைய எல்லா பொருட்களையும் எடுத்து அவள் வந்த காரிலேயே நிரப்பி காரை பக்கத்திலுள்ள  ஒரு ஓடையில் மூழ்க செய்கிறான்.

அலுவலகப்பனத்தை கைப்பற்ற துப்பறியும் நிபுணர் ஒருவர் கதாநாயகியை பற்றி விசாரித்துக்கொண்டு விடுதிக்கு வருகிறார், அவரும் அவளை போலவே கொல்லப்படுகிறார். பின்பு கதாநாயகியின் காதலனும் அவளுடைய தங்கையும் உள்ளூர் காவல் அதிகாரி மூலம் விடுதியின் காப்பாளனின் தாய் 10 வருடங்களுக்கு முன்னதாகவே இறந்த செய்தி அறிகிறார்கள், மேலும் நேரடியாக  விடுதிக்கு சென்று கதாநாயகிக்கு என்ன நேர்ந்தது என அறிய திட்டமிடுகிறார்கள். அங்கு விடுதியின் காப்பாளன் தன் தாயின் சடலத்தை 10 வருடங்களாக  பாதுகாத்து வருவதும், அவளைப் போலவே இவன் உடை அணிந்து, தன் தாயாகவே மாறி கொலை செய்வதும் தெரிய வருகிறது. ஒரு பெரிய போராட்டதிற்கு பிறகு விடுதி காப்பாளன் கைது செய்யப்படுகிறான்.

விடுதிகாப்பாளன் தந்தை இறந்த பிறகு, அவனும் அவனுடைய தாயும் தனியாக வாழ்கிறார்கள், தாயின் மேல் மிகுந்த பாசத்தோடு வளர்கிறான் இதற்கிடையில் அவளுடைய தாய் ஒரு நபரிடம் காதலில் விழ, தன் பாசத்தையும் அன்பையும் பங்கு போட ஒருவன் வந்ததை பொறுக்க முடியாமல் தாயையும் அவளின் காதலனையும் கொன்றுவிடுகிறான். அவள் இறந்ததை மறைத்து அவளின் உடலை பாதுகாத்து அவளுடனே வாழ்ந்து வருகிறான், சில சமயங்களில் அவனே அவனின் தாய் போல உடை அணிந்து தனக்கு தானே பேசிக்கொள்வான். இவ்விதம் மருத்துவர் அவனின் மனநோயினை பற்றி ஆய்ந்தரிகிறார். சிறையில் விடுதிக் காப்பாளன் தன் தாயினைப் பற்றிய சிந்தனையில் இருப்பது போல கதை முடிகிறது.

சைக்கோ திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் ஹிட்ச்காக் தனது நகைச்சுவை மற்றும் திகிலூட்டும் திரைப்படங்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார். ஆனால் சைக்கோ திரைப்படம் அவரை மற்றொரு பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றது. சினிமா ரசிகர்களை உலுக்கிக் கலக்கிய ஒரு உலகுக்கு அழைத்து சென்றவர் ஹிட்ச்காக்.

சைக்கோ திரைப்படம் இன்றளவும் பேசப்பட்டு ரசிகர்களை ஆட்டிப்படைத்து அச்சுறுத்தி வருகிறது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள். சைக்கோ திரைப்படம் வெளியான 1960 ஆம் ஆண்டு ஹிட்ச்காக்குக்கு வயது 60. ஹாலிவுட்டின் புகழ் உச்சியில் அவர் இருந்த காலகட்டம்.

அந்தப் படம் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் வித்தியாசமாக இருந்தது. இவ்வளவுக்கும் அந்தப் படம் ஒரு சாதாரண கதையை அடிப்படையாக வைத்து கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருந்தது. படத்தின் கதாநாயகி ஜேனட் லே குளியல் அறையில் கொலை செய்யப்படும் சம்பவம் ரசிகர்களை உறையவைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பேசாப் படங்களில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய ஹிட்ச்காக். அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சத்தில் இருக்கும் ரசிகர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் நிபுணராக இருந்தார். அந்த சமயத்தில் அவர்களின் உணர்வலைகளுடன் எப்படி சிறப்பாக விளையாடுவது என்பதில் அவர் வல்லவராக இருந்தார். இந்தப் படம் 1998 இல் மறுபடியும் அதே திரைக்கதையில் ரீ மேக்  செய்யப்பட்டது.

இந்தப் படத்தின் மிகப் பிரபலமான, கதாநாயகியின் குளியலறை கொலைக்காட்சியின் காணொளி உங்கள் பார்வைக்கு… 

பின்னூட்டங்கள்
 1. படைப்பாளி சொல்கிறார்:

  உலக சினிமா ரசிகர்களின் உன்னத நாயகன் ஹிட்ச்காக.அதனால் தான் காலம் கடந்தும் அவரும் அவர் படைப்புகளும் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன..உங்கள் எழுத்துகளிலும்..
  தெளிவான விமர்சனம்..அருமை..

 2. mahi சொல்கிறார்:

  I like this blog,I like to read more.

 3. kanagaraju சொல்கிறார்:

  இந்தக்குளியல் காட்சியைக் பார்த்த பெண்களில் மூன்றில் இரண்டு பேர் அதன்பிறகு குளியளறையில் நுழையவே பயந்தார்களாம். இந்தக் குளியல் காட்சி உண்மையில் தனித்தனியாக பிரித்து படமாக்கப்பட்டது. நாயகி மிகவும் பிஸி என்பதால் முதலில் நாயகி குளிக்கும் காட்சி, அவள் பயத்தில் அலறுவது, ரத்த வெள்ளத்தில் கீழே விழுவது போன்ற காட்சிகளை எடுத்து விட்டு அனுப்பி விட்டாராம் ஹிட்ச்சாக். அதன்பிறகு கொலைகாரன் வரும் காட்சி, குத்தும்காட்சி போன்றவற்றை தனியே எடுத்தாராம். எடிட்டிங்கில் இரண்டு காட்சிகளையும் இணைத்து இப்படி ஒரு மிரட்டலான output-ஐ கொடுத்திருக்கிறார். காட்சிகளை ஒருமுறை ஓடவிட்டு பார்த்தால் நான் சொன்னது உண்மையென புரியும், ஒரு திரைப்படம் உருவாவது படத்தொகுப்பாளரின் மேஜையில்தான் என்பதை இந்தக் காட்சி மூலம் அறியலாம்.

  கொலையை நேரடியாக காட்டாமல் துணைக்காட்சிகளின் மூலம் அதன் கொடூரத்தைக் காட்டுவது என்பதுதான் ஹிட்ச்காக் பாணி. சினிமா மொழியை அவர் எவ்வளவு லாவகமாக கையாண்டார் என்பதற்கு இந்தக் காட்சி ஒரு எடுத்துக் காட்டு. நமது தமிழ்படங்களில் வருவது போல் கத்தியைச் சொருகியதால் வயிறு கிழிந்த கோரத்தைக் காட்டாமல், நீருடன் வழிந்தோடும் ரத்தம், பயத்தில் வெறித்த அந்தப்பெண்ணின் முகம் போன்றவற்றைக் காட்டி கொடூரத்தை விளங்க செய்தார்.
  அடுத்து காட்சிகளை பின்னணி இசையோடு எப்படி கையாள்வது? என்பதற்கும் இந்தக் காட்சி ஒரு எடுத்துக் காட்டு. ஷவரிலிருந்து தண்ணீர் ஊற்றும் காட்சியை முதலில் காட்டும்போது நமக்கு ஏற்படும் உணர்வு வேறு. அந்தப்பெண் குத்துப்பட்டு விழுந்தவுடன் அதேக்காட்சி வருகிறது அப்போது ஏற்படும் பாதிப்பு வேறு. (பின்னணியில் தண்ணீர் விழும் சப்தம் கூட). குளியலரையில் உள்ள திரைச்சீலையை அந்தப்பெண் பிடித்துக் கொண்டே விழும் காட்சியும் இப்படித்தான். பின்னணி இசையையும் காட்சிகளையும் எங்கு எப்படி பயன்படுத்துவது என்பதற்கு இந்தக் காட்சி ஒரு உதாரணம்.
  இந்தக் கதையில் வரும் காப்பாளனது மனநோயைக் குறிக்கும் சரியான வார்த்தை split personality. தமிழில் வந்த அந்நியன் போன்ற படங்களுக்கு இந்தப்படம்தான் முன்னுதாரம்.
  ஹிட்ச்காக்கைப் பற்றிய தங்களின் பதிவு சிறப்பானது. இதுபோன்ற கூடுதல் தகவல்களையும் இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • adhithakarikalan சொல்கிறார்:

   உங்கள் கூற்று முற்றிலும் உண்மை, பேசாப் படங்களில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய ஹிட்ச்காக் நல்ல இசையை ஆராதிக்கும் குணம் கொண்டவர். இந்தப் படத்திற்கு இசை அமைப்பாளரான பெர்ணாண்ட் ஹெர்மான் கூடதல் பலம். உங்களது மறுமொழி இந்த இடுகைக்கு கூடுதல் தகவல்கள்… நன்றி நண்பரே…

 4. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  நவீன வடிவத்தை யூடியூபில் பார்த்தேன். எங்கே கத்தி பாய்ச்சப்படுகிறது என்பதைக் காட்டவே இல்லை. அதைவிட அந்தக் கத்தியில் ரத்தம் படவே இல்லை. என்னதான் படம் எடுக்கின்றார்களோ. பழைய படமே தேவலை.

  • adhithakarikalan சொல்கிறார்:

   நண்பரே… புதிய படம் பழைய படத்தை ஒட்டியே எடுக்கப்பட்டது. எந்த வித மாறுதலும் இல்லாமல் அதே காட்சிகளை புதிதாக எடுத்திருக்கிறார்கள். பழைய படத்திலும் கூட ரத்தக்கறை இருக்காது… நண்பர் கனகராஜின் மறுமொழியை படித்தால் உங்களுக்கு அந்தக் காட்சியின் தன்மை புரியும்.

 5. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  அந்த கேனத்தனமான காட்சி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s