இவ்வுலகில் எல்லா விசயங்களும் காரணங்களுடன் தான் நடைபெறுகிறது. எல்லா பொருட்களும் காரணங்களுடன் தான் படைக்கப்பட்டிருக்கிறது, இது ஆத்திகர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு தத்துவம். சரி பெயர்களில் கூட காரணம் இருக்கவேண்டுமா? ஒரு அடையாளத்தை குறிக்கப் பயன்படும் ஒரு சாதாரண விஷயம் தானே, இவனே, அவனே, நன்பா, தோழி, மச்சான், மாமா…. இப்படி ஏதாவது பொதுவான அடையாளக் குறியீடாக வைத்து கூப்பிட்டிருக்கலாம், கூப்பிட்டும் இருப்பர், சமுதாயம் சிறு சிறு குழுக்களாக இருக்கும்போது ஆனால் நிலைமை இப்போது வேறு. 20 அல்லது 30 பேர் கொண்ட குழுவாக இருந்தால் இது சாத்தியம். இப்போது குழுக்கள் என்பதே  கோடிகளைத் தாண்டுகிறது. இப்போது பெயர் மிகவும் முக்கியமாகிப் போகிறது. பொதுவான குறியீட்டுச்சொல்லாக இருக்க இயலாது என்ற நிலை வரும்போது குடும்பத்தின் பெயர்களை தங்களின் குறியீட்டு சொல்லோடு ஓட்டவைத்தனர், ஜாதிகளை தங்கள் பெயர்களோடு இணைத்தனர்.

மொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம் என்பர். அது போல பெயர் என்பதும் ஒரு வம்சத்தின், ஒரு குலத்தின், ஒரு இனத்தின்,  அடையாளமாக கருதப்பட்டது. ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளத்தை அந்தப் பெயரை வைத்தே கண்டுபிடிக்கலாம். ஆனால் சிலருக்கு தங்கள் அடையாளத்தை மறக்க வேண்டியிருந்தது, மறைக்க வேண்டியிருந்தது, காரணம் சமூகத்தில் அவர்களுக்கிருந்த அவல நிலை. அடுத்த தலைமுறை புதிய அடையாளத்தோடு வளர வேண்டும் என ஆசை கொண்டனர்,  இதன் காரணமாக குப்புசாமி, ராமசாமி எல்லாம் ரமேஷ், சுரேஷ் ஆகிப் போனார்கள். மேலும் நம் மக்களுக்கு ஓசை மீது ஒரு ஈடுபாடு, “ஷ், யா” இப்படி முடியும் பெயர்கள் மீது பெரிய காதலே வந்துவிட்டது எனக் கூறலாம். இப்படி பெயர்கள் மருவி மருவி இப்போது ஒரு குறிப்பிட்ட இனத்தை குறிக்கும் பெயர் என்பது இல்லாமலே போய்விட்டது. அதுவும் கூட பரவாயில்லை. மொழியையே மறந்து ஆங்கிலப் பெயர்களை வைப்பவர்களும் உள்ளனர். என்னுடைய நண்பர் ஒருவர் அவரின்  மகளுக்கு ஷாரன் லோபஸ் (SHARONE LOPAZ) என்ற பெயர் வைத்துள்ளார், இன்னொருவர் ஜோதிகா, நான் இருவரிடமும் கேட்டேன் பெயர் காரணங்களை, கேட்க இனிமையாக இருக்கிறது அதனால் வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள்.

சமீபத்தில் நான் என் மனைவி, மகன் சகிதம் திருவள்ளூர் போய்விட்டு திரும்பி கொண்டிருந்தோம். ரயிலில் ஒரு பெரியவர் என் மகனின் பெயர் கேட்க அவன் ஆதித்தன் என்று கூற, அவர் உன் பெயரைப் பற்றி தெரியுமா? ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், பற்றி எல்லாம் சொல்லி அதித்தகரிகாலன் என்ற பெயரை பற்றியும் சொன்னார். உண்மையில் என் மகனுக்கு நான் முதலில் வைத்த பெயர் ஆதித்த கரிகாலன். என் மனைவி பள்ளியில் கரிகாலன்  என்ற பெயர் கேலிக்குள்ளாகும் என சொல்லி கரிகாலனை என்னுடன் சண்டையிட்டு நீக்கிவிட்டாள். அந்த ரயில் பயணத்தின் போது அந்த பெரியவர் ஆதித்தகரிகாலன் பெயருக்கு  கொடுத்த விளக்கத்தின் போது அவளுக்கு சங்கடமாகிப் போய்விட்டது. மதிய உணவிற்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள புஹாரி உணவகத்திற்கு வந்தோம் அங்கு மறுபடியும் இந்தப்  பெயரை முன்னுறுத்தி ஒரு நிகழ்வு. உணவுக்கு ஆர்டர் எடுத்தவர் என் மகனிடம் பேச்சு கொடுத்தார் அவர் என் மகனின் பெயர் கேட்க இவன் சொல்ல, அவர் உன் பெயர் யாருடையது தெரியுமா? என்று கேட்க இவன் ஒரு ராஜாவின் பெயர் என்று சொல்ல, அவர் சி. பா. ஆதித்தனார் பற்றி சொல்ல ஆரம்பித்துவிட்டார். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று சொன்ன மாமனிதர், அது போல அவரைப் போல நீ நல்லா வரணும்னு வாழ்த்திவிட்டு போனார். ஒரே நாளில் 2 சம்பவங்கள், என் மனைவிக்கு கொஞ்சம் குற்ற உணர்ச்சியாகவே  இருந்ததாக சொன்னாள் வீட்டுக்கு வரும்போது, ஆதித்தகரிகாலன் என்ற பெயர் உண்மையில் ஒரு ஆளுமையான பெயர் தான் என்று காலம் கடந்து ஒப்புக்கொண்டாள்.

சமீபத்தில், ஆதிவாசிகளை பற்றி எழுதும் ஒரு புகப் பெற்ற எழுத்தாளரின் வங்க மொழிக்கதையின் மொழிபெயர்ப்பை படித்தேன் அதில் அந்தப்பகுதி ஆதிவாசிகள் அவர்களின் குழந்தைகளுக்கு பிறந்த கிழமைகளின் அடிப்படையில் பெயர் வைப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது போல ஒவ்வொரு இடத்திற்கும் மக்களுக்கும் ஒரு வழக்காறு, நம் தமிழ் இனத்திலும் இது போல பல காரணங்களை கொண்ட பெயர்களும், மொழியை மையப்படுத்தி பெயர்களும் பல உண்டு. ஒரு நண்பர் சொன்னார் அவருக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் பெண்கள் வரிசையாக  பிறந்தனராம் அதனால் தனது 6 வது பெண்ணிற்கு “போதும்பொண்ணு” என்று பெயர் வைத்தாராம். ஒரு நாத்திகர் தன் மகனுக்கு “லேதுசாமி” என்று பெயர் வைத்து உள்ளதாக ஒரு உபரித் தகவலையும் சொன்னார் நண்பர். ஆளுமை குணத்தோடு விளங்க வேண்டும் என்பவர்கள் “ன்” என்ற எழுத்தில் பெயர் முடியுமாறு வைப்பர் என்று கேள்விப்பட்டதுண்டு. உண்மையில் ஆளுமை பெயரிலும் இருக்கிறது என்பதை பலரும் ஒப்புகொள்கின்றனர்.  

இப்போதிருக்கும் பெயர்கள் எல்லாமே பெரும்பாலும்  வடஇந்திய, வடமொழிப் பெயர்கள். இப்போது வைக்கும் தமிழ்ப்பெயர்கள் 20 வருடங்களில் எல்லாம் தனித்து, ஆங்கிலத்தில் சொன்னால் FANCY, UNIQUE ஆக  இருக்கும் என்று நண்பர் ஒருவர் கூறினார். ஆனால் எது எப்படியோ இன்றைய நிலையில் சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன மக்களின் மனோபாவம் சிறிது தெளிவடைந்து இருக்கிறது. என் நட்பு வட்டாரத்தில் எடுத்துக்கொண்டால், புகழ், கயல், இனியா, ஓவியா, இலக்யா, என்று நிறைய பேர் தமிழ் பெயர்களை வைத்திருக்கிறார்கள். எனக்கு கூடிய விரைவில்  பிறக்கப்போகும் இரண்டாவது குழந்தைக்கு யாழினி என்று பெயரை வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறேன் அவளை கொஞ்ச

பின்னூட்டங்கள்
 1. ஞாஞளஙலாழன் சொல்கிறார்:

  மெத்த சரி நண்பரே. நாம் தான் அந்நிய மோகம் பிடித்து ஆடுகிறோம். வட இந்தியாவில் தமிழ் பெயர்களைப் பார்க்க முடியுமா? ஆனால் இங்கே பெரும்பாலும் சம்ஸ்கிருத பெயர்கள் தானே. யாழினி அருமையான பெயர். விளிக்கவும் இனிமையாக இருக்கும். மாடர்ன் ஆகவும் இனிமையாகவும் இருக்கும் பெயர்கள் தமிழில் நிறையவே உண்டு..நமக்கு தான் ஏனோ புரியவில்லை.

 2. tamilvinai சொல்கிறார்:

  எப்படியோ தமிழில்லாமல் வைக்கவேண்டும் என்ற நம்பிக்கை பரவலாக் இருக்கிறது. முடிந்தவரையில் ‘ஹ’, ‘ஷ’, ‘ஸ’ எழுத்துக்கள் வரவேண்டும். யாரும் இதுவரை வைக்காத பேராக இருக்க வேண்டும். சமசுகிருத பெயரின் ஒலியமைப்பு நன்மை தரும், ஆளுமை தரும் என்ற நம்பிக்கை இந்த நிலைக்குக் காரணம். பிறகு மற்றவர் அனைவரும் செய்வதினாலேயே தாமும் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணமும் காரணம்.

  • adhithakarikalan சொல்கிறார்:

   \\ சமசுகிருத பெயரின் ஒலியமைப்பு நன்மை தரும், ஆளுமை தரும் என்ற நம்பிக்கை இந்த நிலைக்குக் காரணம் \\ இந்த கருத்து தான் பெரும்பான்மையோரின் மனப்போக்காக இருக்கிறது உண்மை தான் நண்பரே…

 3. பிரேம்நாத் சொல்கிறார்:

  நல்லதொரு பதிவு .
  என்னுடைய பெயர் பிரேம்நாத் ,ஆம் இது ஒரு வடமொழி பெயர் .
  என் பெயரை நல்ல தமிழ் பெயருக்கு மாற்ற முடிவுடுதுள்ளேன்.
  நல்ல தமிழ் பெயர்களை அதன் பொருளுடன் இங்கு பதிவு செய்யவும்

  • adhithakarikalan சொல்கிறார்:

   தமிழ் பெயர்களுக்கென்று நிறைய வலைத்தளங்கள் இருக்கின்றன நண்பரே… search engine சென்று Tamil baby names என்று தேடுங்கள், பொருளுடன் நிறைய தமிழ்ப பெயர்கள் கிடைக்கும், உங்கள் மனம்கவர்ந்த பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்

  • பழுவேட்டரையர் சொல்கிறார்:

   ஒரு பேருக்கு இவ்வளவு ஆர்பட்டமா?

   மஹா புருஷர்களின் பேர் குழைந்தைகளுக்கு வைப்பதே ஒரு பெரிய தப்பு. “நீ இவன் பேரை சுமக்கிறாய்” என்று ஒரு மூட்டையை பிறப்பிலிருந்தே முதுகேற்றி வைதுவிடுவதாகும். “என் பிள்ளை engineer ஆக வேண்டும்” என்பது போல்.

   உண்மையில், கூப்பிடுவதற்க்கு தான் பேர். ஒரு பேரின் அடையாளம், அந்த பேரை சுமப்பவரின் குணமே ஆகும். நீங்கள் கூறுவது அப்படியே opposite ஆக இருக்கிறது. ஆதலால், கூறுவதற்கு இனிமையாக இருப்பவை பேராக வைப்பது தான் rational.

   george c. hart. தமிழுக்கும் இவர் பெயருக்கும் என்ன சம்பந்தம்? திருவள்ளுவர் என்று பெயர் கொண்ட நிறைய பேரை விட விட தமிழுக்கு நிறைய செய்திருக்கிறார். asko parpola? 🙂

   விகடனில் ஒரு feature எப்போதோ படித்தேன். ஒரு reporter சென்னை மாநகரில் சர்வே எடுக்கிறார். தமிழ் இலக்கண ஞானம் பற்றி. சுத்த தமிழர் போல் தோற்றம் கொண்ட பலருக்கு “ஆகுபெயர்” என்றால் என்னவென்று தெரியவில்லை. இறுதியாக, நம்பிக்கையே இல்லாமல் spencer செல்கிறார். அங்கே ஜீன்ஸ் அணிந்த குமரிகள் கூட்டம் ஆகுபெயரிலிருந்து பகுபத உருபிலக்கணம் வரை வெளுக்கிரர்கள்.

   ஆதலால் மேலோட்டமான அடையாளங்களை ignore செய்து, உள்ளதை கவனியுங்கள். “நீ இதையெல்லாம் கொண்டால் தான் உண்மையான தமிழன்” என்பது அவரவர் விருப்பம்.

   • adhithakarikalan சொல்கிறார்:

    உங்கள் கருத்துக்கு நன்றி… george c. hart, asko parpola அவர்களின் தாய் மொழி தமிழ் இல்லையே… அவர்கள் தமிழில் பெயர் வைத்திருந்தால் நீங்கள் சொன்ன கருத்துக்கு ஏற்புடையதாக இருந்திருக்கும். தமிழின்பால் உள்ள ஆர்வத்தில், தமிழுக்கு தொண்டு செய்திருக்கிறார்கள். ஒரு மதத்தில் என் சாயலாகவே மனிதனை படைத்தேன் என்று கடவுள் கூறுகிறார். இன்னொரு மதத்தில் கடவுள் மனுஷ ரூபம் என்று கூறுகிறது. அப்புறம் என்ன எல்லாருமே மகாபுருஷர்கள் தானே. பெயர்கள் ஒரு இனத்தின் அடையாளம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை.

 4. படைப்பாளி சொல்கிறார்:

  நல்ல பதிவு..தமிழர்களுக்கு தற்போது தேவையான பதிவு…

 5. Gopi Ramamoorthy சொல்கிறார்:

  நல்ல பதிவு. வாழ்த்துக்கள். இந்தப் பதிவை சேமித்து வையுங்கள். யாழினிக்கு ஐந்தாறு வருடம் கழித்துப் படிக்கக் கொடுக்கலாம் !

 6. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  அதிகமான குழந்தைகளை பெற்றவர்கள் இதோடு நிறுத்திக்கொள்வோம் என்று முடிவெடுத்து, கல்யாணி, போதுமணி, சம்பூணம், மங்களம் என்றெல்லாம் பெயர் வைப்பார்கள். இந்த முறை என்னுடைய முந்தைய தலைமுறை இருந்திருக்கிறது,.

  போதும்பொண்ணு என்ற பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

  இப்போது தமிழ் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுவதில் மக்கள் விருப்பமாக இருக்கின்றார்கள். என்னுடைய ஊரில் ஒரு குழந்தைக்கு எழில் பாவை என்று பெயரிட்டிருக்கின்றார்கள். ஆனால் தோழிகள் எப்படி கூப்பிடுகின்றார்கள் தெரியுமா.

  எலி… எலி….

  நாம் செய்யும் தவறுகள் குழந்தைகளின் எதிர்காலம் முழுக்க பாதிக்கப்படுவதால், பெயரை கொஞ்சம் பார்த்துதான் வைக்க வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s