ஜப்பானிய சமுதாயம், வீரர்கள் எனப்படும் சாமுராய், விவசாயிகள், கைத்தொழில் செய்பவர்கள், வணிகர்கள், சுத்தமே இல்லாதவர்கள் என சொல்லப்படும் எதா(ETA ) அல்லது புராகுமின், மனிதரே இல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டிருந்தது. இதில் எதா என்பவர்களை புராகுமின், கெதோ மக்கள், சோரி, புதுமகன், தள்ளிவைக்கப்படவர்கள் என்றும் கூறுகின்றனர். இவர்கள் செய்யும் தொழில் மாமிசம் விற்பது, விலங்குகளின் தோல்களை பிரித்து விற்பனை செய்வது, வைக்கோலைக்  கொண்டு காலணிகள் செய்வது. இவர்கள் தங்கள் பிறப்பை மறைப்பதோ, இடம் விட்டு இடம் போய் மறைந்து இருப்பது குற்றமாக கருதப்பட்டது.  இந்த நாவல் ஒரு எதா வகுப்பை சார்ந்தவன், தன்னுடைய பிறப்பால் தான் படும் துன்பத்தையும், சமூகம் எதா வகுப்பு மக்களை எப்படி நடத்தினார்கள் என்பதையும் விளக்கமாக எடுத்தியம்புகிறது.
 
THE BROKEN COMMANDMENT என்ற இந்த ஜப்பானிய நாவல் தோசான் ஷிமாசகி என்பவரால்  படைக்கப்பட்டது, தமிழில் நான் தலித் இல்லை என்ற  தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் தீண்டாமை போன்ற குற்றங்களை வெகுவாக நாம் பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம், மேலும் இங்கு சிலர் தீண்டாமையின் கோரத்தில் இருந்து விடுபடும் பொருட்டு புத்த மதத்தை ஏற்றுக் கொண்டதாக கூட அறிகிறோம். ஆனால் பௌத்தத்தை மதமாக கொண்ட ஜப்பானில் இந்த தீண்டாமை கொடுமை எந்த அளவிற்கு வேருன்றி இருந்தது என்பதற்கு இந்த நாவல் ஒரு சாட்சி.
 
உறவுகளை விட்டு விலகி மலைப்பகுதியில் வாழும் தகப்பன், சித்தப்பா, தங்களின் அடுத்த தலைமுறையாவது எதா என்று வழங்கப்படக்கூடாது என்ற ஆவலில் இறக்கும் தருவாயில் கூட தன் மகனை எதா பிரிவினன் என்று எங்கேயும் சொல்லிவிடாதே என்று கட்டளையிட்டு போகிறார். கதையின் நாயகன் செகாவா உஷிமாத்ஷோ, ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சாதூர்யமாக ஆசிரியப்பயிற்சி பள்ளியிலும் தற்போது வேலை செய்யும் பள்ளியிலும் தனது இனத்தை மறைத்து வாழ்கிறார், காரணம் தனது தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி. ஜப்பானிய சமூகத்தில் எதா பிரிவினன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் அவன் எதா பிறப்பினனாக இருந்தால் அவனை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். இந்நிலையில் அவனின் பிறப்பு பற்றி செய்தி தெரிந்தால் அவனது வேலையை இழக்க நேரிடும், அவன் மனதார விரும்பும் பெண்ணே கூட அவனை

விட்டுப் பிரியலாம், வாடகைக்கு இருக்கும் இடத்தில் இருந்து துரத்தப்படுவான். இவை எல்லாவற்றையும் மனதில் வைத்து புழுங்கி கொண்டு வாழ்கிறான், இந்த நிலையில் அவனுக்கு ஒரே துணை அவனுடைய மானசீக குரு இனாகோ ரெந்தாரோவின் எழுத்துக்கள் தான்.
 
செகாவின் தந்தை இறந்த நிலையில் அவரை காண ஊருக்கு செல்லும் போது ரெந்தாராவை ரயிலில் சந்திக்கிறார், அவருடன் மனம்விட்டு பேசுகிறார், அவருடன் ஜப்பானிய டயட் சபைக்கு தேர்தலில் போட்டியிடயிருக்கும்  அவரது வக்கீல் நண்பரையும் சந்திக்கிறார், ரெந்தாரோ தான் எதா என்று வெளிப்படையாக பேசுவதும், எழுதுவதும் செகாவிற்க்கு ஒரு உந்துதலையும், கிளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது அவரிடம் தானும் ஒரு எதா என்று சொல்ல பல முறை எண்ணி சொல்ல முடியாமல் தவிக்கிறான். சில நாட்களுக்கு பிறகு அவர் தேர்தல் கூட்டத்தில் பங்கேற்ற்று விட்டு வரும் போது கொலை செய்யப்படுகிறார். தேர்தலில் வக்கீலுக்கு எதிராக இருப்பவர் இந்த கொலையை செய்கிறார், அவர் ஏற்கனவே செகாவா ஒரு எதா என்பதை பலரிடம் சொல்லிவிடுகிறார், காரணம் அவர் ஒரு பணக்கார எதா பெண்ணை மனம் முடித்துகொள்கிறார் அந்த பெண் செகாவாவிற்கு தெரிந்தவள் என்பதால் இந்த விசயத்தை செகாவா மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி விடுவான் என்ற பயத்தில் இவர் முந்திக் கொள்கிறார். மனமுடைந்து போன செகாவா பள்ளியில் சென்று தான் ஒரு எதா என்று வகுப்பறையில்  சொல்லி, தனது ராஜினாமாவை கொடுத்துவிட்டு, தன் காதலியின் வீட்டுக்கு சென்று உண்மையை கூறுகிறார்.  
 
இந்த நாவலைப் பொறுத்தவரை, ஜப்பானின் சமூகச்சூழலை அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கிறது.  வதந்தி, வம்புபேச்சு ஒரு மனிதனை எவ்வளவு மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் என்பதையும் விளக்குகிறது. நம் பெற்றோர்களை நாம் தேர்ந்தெடுக்கவில்லை, அதனால் நாம் நம் இனத்தையும் தேர்ந்தெடுப்பதில்லை, அப்படியிருக்க நாம் பிறப்பால் உதாசினப்படுத்தப்படுவது, ஒதுக்கி வைக்கப்படுவது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை இந்நாவல் நன்கு விளக்குகிறது. 1906ல் வெளியிடப்பட்ட இந்த படைப்பு  ஆசிரியர்க்கு முதல் நாவல் என்றால் யாராலும் நம்ப முடியாது… அற்புதமான இந்த கலைப்படைப்பை உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தவறாமல் படியுங்கள்.   
 
பின்னூட்டங்கள்
  1. kanagaraju சொல்கிறார்:

    இப்படி ஒரு நாவலையும், ஜப்பானில் தீண்டாமை நிலவியதையும் பற்றி நான் படித்ததே இல்லை. மிகவும் புதிய தகவல். இதுப்போன்ற புதிய தகவல்களை நீங்கள் அளிக்கும்போது, உங்களின் வழியாக நாங்களும் அந்த உலகத்திற்கு செல்கிறோம். அந்த நாவலில் இருக்கும் மனிதர்களின் துன்பத்தை உணர்கிறோம். ஒரு நூற்றாண்டிற்கு பிறகும், அந்த நாவல் நம்மை வருத்தமுற வைக்கிறது.
    ஒரு படைப்பின் உண்மையான அர்த்தம் இப்படிப்பட்ட உணர்தலில்தான் இருக்கிறது. இதைப்போன்ற பலருக்கும் அறிமுகமில்லாத புத்தகங்கள், திரைப்படங்கள் பற்றிய உங்களின் பதிவுகள் வரவேற்கப்பட வேண்டியவை.

    • adhithakarikalan சொல்கிறார்:

      நன்றி நண்பரே… தீண்டாமை என்பது உலகளாவிய பிரச்சனை. இந்த நூற்றாண்டில் தான் இதன் கொடுரம் குறைந்திருக்கிறது, கவனிக்கவேண்டிய விஷயம் இன்னும் முற்றிலுமாக ஒழியவில்லை, குறைந்து தான் இருக்கின்றது. இந்த புத்தகம் சென்னை கன்னிமாரா நூலகத்தில் கிடைக்கும், வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள். ஜப்பானின் தீண்டாமை மட்டுமன்றி அவர்களது வாழ்கை முறை, உணவு பழக்க வழக்கம் இன்னும் பல விசயங்களை அறிந்து கொள்ளலாம்.

  2. படைப்பாளி சொல்கிறார்:

    தங்களின் எழுத்துக்களிலிருந்தே அந்த நாவலின் வீரியத்தைப் புரிந்து கொள்ள இயல்கிறது…சமுதாயத்தின் கரைப் படிந்த இடங்களின் துவாரத்தை அலசும் இந்த நாவலை படித்தே தீர வேண்டுமென்ற ஆவலை தூண்டிவிடீர்கள்..நல்ல நாவலை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.

  3. nalavirumbi சொல்கிறார்:

    நல்ல நாவல் … வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் படிக்கிறேன்.. நன்றி.

  4. வானவன்யோகி சொல்கிறார்:

    இது வரை பெரும்பான்மையோர் அறிந்திடாத ஒரு இருண்ட சரித்திரம் உங்களின் மூலமாக தமிழில் வெளிச்சத்திற்கு வந்தது.உலகெங்கும் ஏதோ ஒரு வகையில் மற்றொருவனை தாழ்த்தும் நடைமுறை இருந்து வந்திருக்கிறது………இருக்கிறது……இருக்கும்…..

    எல்லோரும் ஓர் நிறை என்று எப்போது வரும்???????!!!!!!!!!

    வாழ்த்துக்கள்……….நன்றிகளுடன்…..

  5. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    ஆங்கில நாவல்களை படிக்கும் பழக்கம் சிலருக்குதான் இருக்கிறது. அதிலும் சிறந்த நாவல்களை படித்து பகிரந்தமைக்கு மிக்க நன்றி. இந்த நாவல் இணையத்தில் கிடைக்கிறதா நண்பா@.

  6. nanmaran சொல்கிறார்:

    தாழ்த்த பட்டோரின் அடையாளமான நாடார் சமூகம் பஞ்சமருக்கு ( பச்சை தமிழருக்கு ) சமூக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவர்களை நாடார் உறவின் முறையாக அறிவிக்க வேண்டும். இதுவே பெருவாரியான நாடார் மக்களின் விருப்பம்.

    நாடார் சமூகம் உடனடியாக பள்ளர், பாராயர், நாவிதர், வண்ணார், சக்கிலியாறை நாடாராக அறிவிக்க வேண்டும்.

  7. யோவ் சொல்கிறார்:

    தமிழ் மணம் முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்…

பின்னூட்டமொன்றை இடுக