பிப்ரவரி, 2011 க்கான தொகுப்பு

சத்யஜித் ரே அவர்களின் சாருலதா, பதேர் பாஞ்சாலி போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு கூபி கெயின் பாகா பெயின் திரைப்படம் ஆச்சர்யத்தை கொடுக்கும், உண்மையில் இது சத்யஜித் ரே படமா? என்று கேட்கும் அளவிற்கு இந்த படத்தின் கதையமைப்பு அமைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் fairytale  என்று சொல்வார்களே அந்த வகையின்  கீழ் வரும் இந்த படம் குழந்தைகள் திரைப்படமாக சினிமா ஆர்வலர்களால்  வரையறுக்கபடுகிறது.

கூபி ஒரு குடியானவனின் மகன், அவனுக்கு பாடுவதில் வெகு ஆசை ஆனால் அதற்குரிய திறன் இல்லாதவன் ஒரு நாள் அரண்மனைக்கு அருகில் உள்ள கோவிலில் அவன் பாடும் போது அரசன் அவனை கழுதை மேல் ஏற்றி ஊருக்கு வெளியே கொண்டு விடுமாறு ஆணையிடுகிறான். இதற்கிடையில் டோல் இசைப்பதில் ஆர்வம் உள்ள பாகா என்பவனும் இதுபோல ஒரு அவமானத்திற்கு உள்ளாகி காட்டில் கூபியை சந்திக்க நேர்கிறது. இந்நிலையில் காட்டில் பூதங்களின் தலைவன் மூலமாக இவர்களுக்கு மூன்று வரம் கிடைகிறது. முதல் வரமாக நல்ல உணவும் உடையும் கேட்கிறார்கள், இரண்டாவதாக நினைத்த இடத்திற்கு செல்ல உதவும் ஒரு காலனி கிடைக்கிறது, மூன்றாவதாக மற்றவர்கள் விரும்பும் அளவிற்கு தங்களுக்கு விருப்பமான சங்கீத ஞானத்தையும் வரமாக பெறுகின்றார்கள். இந்த வரங்கள் இருவரும் ஒவ்வொரு முறையும்  ஒரு சேர கை தட்டும் போதும் கிடைக்கப் பெறுகின்றன.

இதற்கிடையில் சுண்டி என்ற ராஜ்யத்தில் இசை  மேதைகளின் போட்டி நடைபெறுவதை அறிந்து அங்கு சென்று தங்களின் இசை ஞானத்தின் மூலமாக வெற்றி பெறுகின்றார்கள் கூபியும், பாகாவும். அரண்மனையில் தங்கி இருக்கும் போது சுண்டி நாட்டின் மீது ஹல்லா  அரசன் படை எடுத்து வருவது அறிந்து இந்த போரை தாங்கள் நிறுத்தி அமைதிக்கு வழி வகுக்கிறோம் என்று கூற, அது மட்டும் நடந்தால் தனது மகளை கூபி, பாகா இருவருள் ஒருவர்க்கு மணமுடித்து தருவதாகவும் வாக்குறுதி தருகிறார் சுண்டி தேசத்தின் ராஜா. இருவரும் தங்கள் இசையால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் வரா வண்ணம் தடுத்து ராஜ குமாரிகளை மனம் முடிப்பதே கதை.

இந்த படம் வங்கத்தில் 51  வாரம் ஓடி சாதனை படைத்தது. சத்யஜித் ரே படங்களில் அதிகமான நாட்கள் திரையரங்கில் ஓடிய படம் இது.  இந்த படத்தில் கூபி கதாபாத்திரத்தில் நடித்த தபன் சட்டர்ஜி ஒரு புதுமுகம் பாகா கதாபாத்திரத்தில் நடித்தவர் ரபி கோஸ். இருவரின் நடிப்பும் படத்திற்கு சிறப்பு, இப்படத்தின் இயக்கத்துடன் கூட  சத்யஜித் ரே அவர்களே பாடல்களை இயற்றி இசை அமைத்திருக்கிறார் மேலும் உடை வடிவமைப்பும் இவரே செய்திருக்கிறார்.  பைசைக்கிள் தீவ்ஸ் படத்தை பார்த்து நியோ ரியலிசம் படங்களை எடுக்க ஆர்வம் கொண்ட சத்யஜித்ரே இது போன்ற படம் எடுத்திருப்பது அவரது பன்முகத்தன்மையை வெளிக்காட்டுகிறது.

சந்தேஷ் என்ற குழந்தைகளுக்கான பத்திரிகை ஒன்றை சத்யஜித் ரே நடத்தி வந்தது நம்மில் பலருக்கு தெரியும்  அதனால் அவர்  குழந்தைகளுக்கான படம் எடுத்தது அந்த பத்திரிகை அனுபவப் பின்னணி என்பது நன்கு விளங்கும் .