Archive for the ‘அங்கலாய்ப்பு’ Category

இனவெறி என்பது எல்லா காலங்களிலும், எல்லா நாடுகளிலும் இருந்துகொண்டிருந்த, இருந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை. இனத்தை அடிப்படையாக வைத்து ஒரு நபரையோ அல்லது அந்த இனத்தையோ துவேஷிப்பது அருவருக்கத்தக்க ஒரு விஷயம். சட்டரீதியாக எல்லா நாடுகளிலும் இதற்கு தடையும், கடுமையான தண்டனைகளும் உள்ளன. ஆனால் இப்போது இனத்துவேஷத்தின் உடல்ரீதியான(physical) கொடுமைகள் குறைக்கப்பட்டுவிட்ட நிலையிலும் பேச்சாலும்(verbal) செயலாலும் இனத்துவேஷம் செய்வதை சில இனவெறியர்கள் இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு தற்போது இலக்காகி இருப்பவர் நமது டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்.
 
காமன்வெல்த் விளையாட்டுகளின் மூலம் சுரேஷ் கல்மாடியும், ஷீலா தீட்சித்தும்  களங்கப்பட்டது எல்லோருக்கும் தெரிந்ததே, இந்த விளையாட்டுப் போட்டியை பற்றிய ஒரு நிகழ்ச்சித்தொகுப்பின் ஒளிபரப்பின் போது நியூசிலாந்தில்  தொலைக்காட்சி தொகுப்பாளர் பால் ஹென்றி மூலம் ஷீலா தீட்சித் மேலும் களங்கப்பட்டிருக்கிறார். இம்முறைஅவருடைய பெயரின் உச்சரிப்பை வைத்து அவரை களங்கப்படுத்தி இருக்கிறார்கள்.
 
வழக்கமாகவே தொலைக்காட்சிகள் பெயரின் உச்சரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, அதற்கு நம் இந்திய தொலைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல, வட இந்திய தொலைக்காட்சிகள் தென்னிந்திய பெயர்களை கடித்து துப்புவதை பலமுறை பார்த்திருப்பீர்கள். தென்னிந்தியாவை பொறுத்தவரை  வட இந்திய பெயர்களின் உச்சரிப்பை அவ்வளவு கொலை செய்வதில்லை. அதற்கு முக்கிய காரணம் பிற மொழிகள் மேலோ, பிற இனத்தின் மேலோ பெரிய அளவில் காழ்ப்புணர்ச்சி என்பது நமக்கு கிடையாது, அதனால் மற்றவர் மனதை புண்படுத்தும்படி அல்லது விளங்காத வகையில் உச்சரிக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் உச்சரிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் என்றும் சொல்லலாம். 
 
இந்த பால் ஹென்றி விசயத்தில் உச்சரிப்பு தவறு என்பது மட்டுமல்ல, அவர் அதை வைத்து நிமிடக் கணக்கில் வேடிக்கை செய்தும் இருக்கிறார். ஆங்கிலத்தில் D**K, SHIT என்பது எந்த மாதிரியான வார்த்தைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். கீழ்காணும் காணொளியை பார்த்தால் உங்களுக்கே புரியும் அந்த இரண்டு வார்த்தைகளை வைத்து தீட்சித் என்ற பெயரை எப்படி களங்கப்படுத்தி பேசி இருக்கிறார் என்று. இதனால் கடும்  கண்டனத்திற்கு ஆளான ஹென்றி தற்போது பணியிடைநீக்கம்  செய்யப்பட்டிருப்பதாக தகவல்.  இந்திய அரசின் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   
 
 
 

அமீர் கானின் பீப்ளி லைவ் இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருகிறது.   இது அமீர்கானின் மூன்றாவது முயற்சி, ஏற்கனவே அவரின் லகான், தாரே ஜமீன் பர் என்ற இரண்டு படங்கள் இந்தியா சார்பில்  பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் அமீர்கானால் தயாரிக்கப்பட்டு UTV சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முறை 5 தமிழ்த் திரைப்படங்கள் போட்டியில் இருந்தன, அவை சிங்கம், மதராசப் பட்டினம், ராவணன், விண்ணைத்தாண்டி வருவாயா, அங்காடித்தெரு. இதில் அங்காடித்தெரு பீப்ளி லைவ்க்கு கடுமையான போட்டியை கொடுத்திருக்கிறது என்பதில் பெருமிதம் தான்.  இந்திய விவசாயிகளின் ஏழ்மையையும், அதன் கொடூரத்தினால் ஏற்படும் இன்னல்களையும் விளக்குவதாகவும், இந்திய கலாச்சாரத்தை எடுத்தியம்புவதாகவும் உள்ளதால் அங்காடித்தெருவை தாண்டி ஒரு அடி முன்னெடுத்து வைத்து ஆஸ்காருக்கான இந்தியப்  பரிந்துரையில் இடம் பிடித்திருக்கிறது பீப்ளி லைவ். மேலும் பா, ராஜ்நீதி, மை நேம் இஸ் கான் முதலான 27 திரைப்படங்களை ஓரங்கட்டி  இருக்கிறது இந்தப் படம். 15 பேர் கொண்ட FILM FEDERATION OF INDIA  குழு இந்த பரிந்துரையை வெளியிட்டு இருக்கிறது.

அங்காடித்தெரு உண்மையில் நல்லதொரு திரைப்படம், பீப்ளி லைவ் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை, அதனால் ஒப்பிட்டு கருத்து சொல்ல முடியவில்லை. இருப்பினும் பீப்ளி லைவ் படத்தின் காட்சிகளை தொலைகாட்சியின் வாயிலாகவும் சில வலைதளங்களிலும் பார்த்தேன்.  படம் நன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன்,  நம் வசந்தபாலனுக்கு போட்டி கொடுத்த படம் என்ற வகையில் ஒப்பிட்டு பார்க்கவாயினும் படத்தை பார்க்க வேண்டும்.

சரி அதெல்லாம் போகட்டும், இந்த பரிந்துரையில் 27 படங்கள் போட்டியில் இருந்தன என்பதை ஏற்கனவே சொல்லி இருந்தேன். மதராசப்பட்டினத்தை விடுங்கள் அது ஓரளவிற்கு ஒரு திரைப்பட விழாவில் இடம் பெறத்தக்கவகையில் உள்ள படமே, சிங்கம், இராவணன், விண்ணைத் தாண்டி வருவாயா இதெல்லாம் எப்படி இந்த 27 க்குள் அடங்கியது என்பது தான் புரியாதபுதிர். சிறந்த அந்நிய மொழிப்படம், அதாவது ஆங்கிலமல்லாத சிறந்த திரைப்படம். ஆங்கிலம் பேசுபவர்களுக்கு உலக சினிமா என்ற வட்டத்திற்குள் வரும் படம். நாமும் நிறைய நியோரியலிசம் படங்களை இந்த வகையின் கீழ் பார்த்திருக்கிறோம், இந்தப் படங்களை அந்த வகையின் கீழ் கொண்டு வரமுடியுமா?

இந்தியாவைப் பொருத்தமட்டில் கடந்த வருடம் 24 மொழிகளில் 1288 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன, அல்லது தணிக்கை செய்யப்பட்டு இருக்கின்றன. இதிலிருந்து 1 படம் மட்டும் எப்படி இந்தியா சார்பில் போகமுடியும். ஏன் மொழிகளின் அடிப்படையில் பரிந்துரைகள் இருக்கக் கூடாது ஏனெனில் இது சிறந்த அந்நிய மொழித்திரைப்படம் தானே தவிர, சிறந்த அந்நிய நாட்டு படம் என்ற வகை இல்லையே, இருந்திருந்தால் அங்காடித் தெருவையும் சேர்த்து 24 படங்களை அனுப்பி இருக்கலாமே. சரி அதுவும் வேண்டாம் அதிக அளவில் சிறந்த படங்களை எடுக்கும் ஹிந்தி, தெலுங்கு, தமிழ்,மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, போன்ற குறிப்பிட்ட மொழிகளில் இருந்தாவது தனித் தனியாக அனுப்பலாமே, இதில் என்ன நடைமுறை சிக்கல் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது.  எல்லா போட்டிகளுக்கும் ஒரு வரைமுறை இருக்கும், கண்டிப்பாக ஆஸ்காருக்கும் அதே வகையில் சில கட்டுபாடுகளும் விதிகளும் இருக்கலாம், ஆனால் சினிமா ஆர்வலர்கள் மொழிகளை அடிப்படையாக வைத்து இந்த பரிந்துரை அமைய ஏதேனும் ஒரு சிறிய அளவில் முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும் என்ற எனது அவாவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

 நன்றி: http://filmfed.org/IFF2009.html

இவ்வுலகில் எல்லா விசயங்களும் காரணங்களுடன் தான் நடைபெறுகிறது. எல்லா பொருட்களும் காரணங்களுடன் தான் படைக்கப்பட்டிருக்கிறது, இது ஆத்திகர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு தத்துவம். சரி பெயர்களில் கூட காரணம் இருக்கவேண்டுமா? ஒரு அடையாளத்தை குறிக்கப் பயன்படும் ஒரு சாதாரண விஷயம் தானே, இவனே, அவனே, நன்பா, தோழி, மச்சான், மாமா…. இப்படி ஏதாவது பொதுவான அடையாளக் குறியீடாக வைத்து கூப்பிட்டிருக்கலாம், கூப்பிட்டும் இருப்பர், சமுதாயம் சிறு சிறு குழுக்களாக இருக்கும்போது ஆனால் நிலைமை இப்போது வேறு. 20 அல்லது 30 பேர் கொண்ட குழுவாக இருந்தால் இது சாத்தியம். இப்போது குழுக்கள் என்பதே  கோடிகளைத் தாண்டுகிறது. இப்போது பெயர் மிகவும் முக்கியமாகிப் போகிறது. பொதுவான குறியீட்டுச்சொல்லாக இருக்க இயலாது என்ற நிலை வரும்போது குடும்பத்தின் பெயர்களை தங்களின் குறியீட்டு சொல்லோடு ஓட்டவைத்தனர், ஜாதிகளை தங்கள் பெயர்களோடு இணைத்தனர்.

மொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம் என்பர். அது போல பெயர் என்பதும் ஒரு வம்சத்தின், ஒரு குலத்தின், ஒரு இனத்தின்,  அடையாளமாக கருதப்பட்டது. ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளத்தை அந்தப் பெயரை வைத்தே கண்டுபிடிக்கலாம். ஆனால் சிலருக்கு தங்கள் அடையாளத்தை மறக்க வேண்டியிருந்தது, மறைக்க வேண்டியிருந்தது, காரணம் சமூகத்தில் அவர்களுக்கிருந்த அவல நிலை. அடுத்த தலைமுறை புதிய அடையாளத்தோடு வளர வேண்டும் என ஆசை கொண்டனர்,  இதன் காரணமாக குப்புசாமி, ராமசாமி எல்லாம் ரமேஷ், சுரேஷ் ஆகிப் போனார்கள். மேலும் நம் மக்களுக்கு ஓசை மீது ஒரு ஈடுபாடு, “ஷ், யா” இப்படி முடியும் பெயர்கள் மீது பெரிய காதலே வந்துவிட்டது எனக் கூறலாம். இப்படி பெயர்கள் மருவி மருவி இப்போது ஒரு குறிப்பிட்ட இனத்தை குறிக்கும் பெயர் என்பது இல்லாமலே போய்விட்டது. அதுவும் கூட பரவாயில்லை. மொழியையே மறந்து ஆங்கிலப் பெயர்களை வைப்பவர்களும் உள்ளனர். என்னுடைய நண்பர் ஒருவர் அவரின்  மகளுக்கு ஷாரன் லோபஸ் (SHARONE LOPAZ) என்ற பெயர் வைத்துள்ளார், இன்னொருவர் ஜோதிகா, நான் இருவரிடமும் கேட்டேன் பெயர் காரணங்களை, கேட்க இனிமையாக இருக்கிறது அதனால் வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள்.

சமீபத்தில் நான் என் மனைவி, மகன் சகிதம் திருவள்ளூர் போய்விட்டு திரும்பி கொண்டிருந்தோம். ரயிலில் ஒரு பெரியவர் என் மகனின் பெயர் கேட்க அவன் ஆதித்தன் என்று கூற, அவர் உன் பெயரைப் பற்றி தெரியுமா? ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், பற்றி எல்லாம் சொல்லி அதித்தகரிகாலன் என்ற பெயரை பற்றியும் சொன்னார். உண்மையில் என் மகனுக்கு நான் முதலில் வைத்த பெயர் ஆதித்த கரிகாலன். என் மனைவி பள்ளியில் கரிகாலன்  என்ற பெயர் கேலிக்குள்ளாகும் என சொல்லி கரிகாலனை என்னுடன் சண்டையிட்டு நீக்கிவிட்டாள். அந்த ரயில் பயணத்தின் போது அந்த பெரியவர் ஆதித்தகரிகாலன் பெயருக்கு  கொடுத்த விளக்கத்தின் போது அவளுக்கு சங்கடமாகிப் போய்விட்டது. மதிய உணவிற்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள புஹாரி உணவகத்திற்கு வந்தோம் அங்கு மறுபடியும் இந்தப்  பெயரை முன்னுறுத்தி ஒரு நிகழ்வு. உணவுக்கு ஆர்டர் எடுத்தவர் என் மகனிடம் பேச்சு கொடுத்தார் அவர் என் மகனின் பெயர் கேட்க இவன் சொல்ல, அவர் உன் பெயர் யாருடையது தெரியுமா? என்று கேட்க இவன் ஒரு ராஜாவின் பெயர் என்று சொல்ல, அவர் சி. பா. ஆதித்தனார் பற்றி சொல்ல ஆரம்பித்துவிட்டார். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று சொன்ன மாமனிதர், அது போல அவரைப் போல நீ நல்லா வரணும்னு வாழ்த்திவிட்டு போனார். ஒரே நாளில் 2 சம்பவங்கள், என் மனைவிக்கு கொஞ்சம் குற்ற உணர்ச்சியாகவே  இருந்ததாக சொன்னாள் வீட்டுக்கு வரும்போது, ஆதித்தகரிகாலன் என்ற பெயர் உண்மையில் ஒரு ஆளுமையான பெயர் தான் என்று காலம் கடந்து ஒப்புக்கொண்டாள்.

சமீபத்தில், ஆதிவாசிகளை பற்றி எழுதும் ஒரு புகப் பெற்ற எழுத்தாளரின் வங்க மொழிக்கதையின் மொழிபெயர்ப்பை படித்தேன் அதில் அந்தப்பகுதி ஆதிவாசிகள் அவர்களின் குழந்தைகளுக்கு பிறந்த கிழமைகளின் அடிப்படையில் பெயர் வைப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது போல ஒவ்வொரு இடத்திற்கும் மக்களுக்கும் ஒரு வழக்காறு, நம் தமிழ் இனத்திலும் இது போல பல காரணங்களை கொண்ட பெயர்களும், மொழியை மையப்படுத்தி பெயர்களும் பல உண்டு. ஒரு நண்பர் சொன்னார் அவருக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் பெண்கள் வரிசையாக  பிறந்தனராம் அதனால் தனது 6 வது பெண்ணிற்கு “போதும்பொண்ணு” என்று பெயர் வைத்தாராம். ஒரு நாத்திகர் தன் மகனுக்கு “லேதுசாமி” என்று பெயர் வைத்து உள்ளதாக ஒரு உபரித் தகவலையும் சொன்னார் நண்பர். ஆளுமை குணத்தோடு விளங்க வேண்டும் என்பவர்கள் “ன்” என்ற எழுத்தில் பெயர் முடியுமாறு வைப்பர் என்று கேள்விப்பட்டதுண்டு. உண்மையில் ஆளுமை பெயரிலும் இருக்கிறது என்பதை பலரும் ஒப்புகொள்கின்றனர்.  

இப்போதிருக்கும் பெயர்கள் எல்லாமே பெரும்பாலும்  வடஇந்திய, வடமொழிப் பெயர்கள். இப்போது வைக்கும் தமிழ்ப்பெயர்கள் 20 வருடங்களில் எல்லாம் தனித்து, ஆங்கிலத்தில் சொன்னால் FANCY, UNIQUE ஆக  இருக்கும் என்று நண்பர் ஒருவர் கூறினார். ஆனால் எது எப்படியோ இன்றைய நிலையில் சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன மக்களின் மனோபாவம் சிறிது தெளிவடைந்து இருக்கிறது. என் நட்பு வட்டாரத்தில் எடுத்துக்கொண்டால், புகழ், கயல், இனியா, ஓவியா, இலக்யா, என்று நிறைய பேர் தமிழ் பெயர்களை வைத்திருக்கிறார்கள். எனக்கு கூடிய விரைவில்  பிறக்கப்போகும் இரண்டாவது குழந்தைக்கு யாழினி என்று பெயரை வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறேன் அவளை கொஞ்ச

 
கடந்த சில நாட்களாகவே நாடெங்கிலும்  இதைப்பற்றியே பேச்சு, பாபர் மசூதி தீர்ப்பு, பாபருக்கு சாதகமாக இருக்குமா? ராமருக்கு சாதகமாக இருக்குமா? போகிற போக்கை பார்த்தால் கிரிக்கெட் சூதாட்டம் போல தீர்ப்பை முன்னிறுத்தி ஜெயிக்கப்போவது யாரு என்று சூதில் ஈடுபட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை, அவ்வளவு ஆர்வத்தில் இருக்கிறார்கள் மக்கள்.
 
உண்மையில் இது அவ்வளவு ஆர்வத்தை கவர்கிற விசயமா? சாதாரண நிலத்தகராறு ஒரு நாட்டின் அமைதி, இறையான்மையையே  கேள்விக்குறியாக்கும் விசயமாக மாறிப்போனதற்கு காரணம் என்ன? ரிஷிமூலம் நதிமூலம் எல்லாம் பார்த்தால் தலையே சுற்றுகிறது. இரண்டு தரப்பும் தனக்கென்று ஒரு ஞாயத்தை வைத்து போராடிக்கொண்டிருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும், ஆட்சியில் உள்ளவர்களே இந்த தீர்ப்பு அவசியாமா? இதை இப்படியே ஆறப் போடக்கூடாதா என்று என்னுமளவிற்கு நிலைமை மோசமாகித்தான் போய் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இன்றிலுருந்தே  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாகிவிட்டது. உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து சில மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக அனுப்பும் BULK SMS தடை செய்யப்பட்டிருக்கிறது. உள்துறை அமைச்சர் ஊடகங்களையும்  பொது மக்களையும், உங்கள் கருத்துகளை உங்களோடு வைத்துருங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மத விசயங்களில் பெரிதும் ஆர்வம் காட்டுபவர்களும் பாபர் மசூதி பிரச்னையை கையில் எடுத்தவர்களுமான பா.ஜா.க. கூட இந்த விசயத்தில் பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நரேந்திர மோடி, காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகின்ற இந்த சமயத்தில் மானத்தை வாங்கி விடாதீர்கள் என்ற  கதியில் அமைதி காக்கும்படி அறிவிப்பு விடுகிறார்.
 
இதெல்லாம் பார்க்கும் போது, கடவுளை மற மனிதனை நினை என்று கூறிய தீர்க்கதரிசியை  நினைக்காமல் இருக்க முடியவில்லை. அமைதிப்படை என்ற படத்தில் ஒரு வசனம் வரும் “டேய் மணியா கடவுள் இல்லைன்னு சொன்னவன் கூட கோயில இடிச்சதா சரித்திரம் இல்லை, கடவுள் இருக்குதுன்னு சொல்றவன் தான் அடிச்சுக்கிட்டு சாகிறான்”, சத்யராஜ் தனக்கே உரிய பாணியில பேசுவார். எவ்வளவு உண்மையான விஷயம்.
 
வெள்ளிகிழமை தீர்ப்பு, சனி ஞாயிறு விடுமுறை, திங்கட்கிழமை எப்படியும் மேல்முறையீட்டுக்கு  போய் நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கி விடுவார்கள்  தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே சனி ஞாயிறு அமைதியாகப் போனால் போதும், திங்கட்கிழமை நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் என்று சில சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 
தீர்ப்பு எப்படி இருந்தாலும் நாம் அமைதி காப்போம், அறவழியில் நடப்போம். 
 

கொஞ்ச நாட்களுக்கு முன் சில நாளேடுகளில் இந்தியா 2050 இல் சீனாவை மக்கள் தொகையில் முந்திவிடும் என்று அனுமானமாக செய்தி வந்தது, அது எந்த அளவுக்கு உண்மையோ பொய்யோ நமக்கு தெரியாது  ஆனால் சீனா மனிதவளத்தை சுருக்கி கொள்ளத் தயாராக இல்லை, அதன் ஒரு குடும்பம்  ஒரு குழந்தை கொள்கையை மாற்றம் செய்ய உள்ளது, இதன் மூலம் சீனாவில் 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி அடுத்த ஆண்டுக்குள் கிடைத்து விடும் என்று நம்பலாம். சில நாட்களுக்கு முன் செய்திக்கோவை ஒன்றில் சீன தம்பதியர்கள்  தமது இரண்டாவது குழந்தைகளை அரசுக்கு தெரியாமல் வளர்க்கின்றனர் என்ற செய்தியை அறிய நேர்ந்தது. நகைச்சுவையாக இருந்த இந்த செய்தி, உண்மையில் சீனர்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட குழந்தைகளை வளர்க்க பிரியப்படுவது குறித்த அவர்களது அவாவை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இது சீன அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டி இருக்கும் எனத் தோன்றுகிறது.சீன டெமோக்ராபர்கள் இந்த வருட மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு ஒரு குழந்தை கொள்கை தேவைப்படாது என உறுதியாக நம்புகின்றனர். சீனாவில் 119  ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற விகிதத்தில் பாலியல் விகிதாச்சாரம்  உள்ளது. இது ஆண்டுகள் போகப் போக பெரும் ஆபத்தாய் முடியும். மேலும் வயது முதிர்ந்தவர்கள் எண்ணிக்கை கடும் உயர்வை சந்தித்திருக்கிறது, 60க்கு  மேற்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 கோடியை எட்டி இருக்கிறதாம், கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும் போது இது அதிகம், மேலும் இது வருடா வருடம் உயருமே தவிர குறையாது காரணம் இந்த ஒரு குழந்தை கொள்கைதானாம். இதன் காரணமாக உழைக்கும் மக்களின் எண்ணிக்கை தடாலடியாக குறைய வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக நிறைய இடர்ப்பாடுகளை சீன அரசு சந்திக்க நேரும், உற்பத்தி குறையும், விலைவாசி உயரும், பொருட்களுக்கு தட்டுப்பாடு வரலாம், ஏற்றுமதியாகும் பொருட்களின் அளவு குறையும், இப்படி அடுக்கடுக்காக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், இதற்கெல்லாம் ஒரே வழி சீன அரசு அதன் மனித வளத்தை மேம்படுத்துவது தான். 

அதெல்லாம் இருக்கட்டும், என் நண்பர் ஒருவர் சொன்னார் இன்றைய நிலையில் சீனா தனது ராணுவத்திற்கு அமெரிக்கர்களை விட அதிகம் செலவிடுகிறது. வெகு விரைவில் அது தனது எல்லையை விரிவுபடுத்தும் அதனால் மக்கள்தொகை சீனாவிற்கு ஒரு பிரச்சனையாகவே இருக்காது. ஆங்கிலேயர்களை போல சீனாவும் தன் காலணிகளை ஆசியாவின் சில பகுதிகளிலும், ஆப்ரிக்காவிலும் ஏற்படுத்தும் என்று கூறினார். சீனா இலங்கையில் நடந்த போருக்கு உதவியதையும், இலங்கையின் போருக்கு பின் புனரமைப்பு என்ற பேரில் அதிகப்படியான பொருளை குவிப்பதும், தனது சந்தையையும், மேலாண்மையையும் திணிப்பது போலவே உள்ளது. நண்பர் கூறியது உண்மையாக கூட இருக்கலாம். ஏற்கனவே காஷ்மீர்  விவகாரத்தில் நன்றாகவே மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறது, ஆப்ரிக்காவில் சில போண்டியாய் போன அரசுகளை காப்பாற்றும்  முகமாக நிறைய பொருளுதவி கொடுத்து தனது சந்தையை நிறுவி வருவதாகவும் கேள்வியுறுகிறோம். மொத்தத்தில் சீனா இனி மக்கள்தொகை பிரச்னையை  வேறு விதமாக பார்க்க ஆரம்பிக்கிறது  என்பதற்கு இதெல்லாம் ஒரு அடையாளமாக கூட இருக்கலாம்.

 
 
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முதல்வர் கலைஞர், நரேந்திர மோடிக்கு மனிதவள மற்றும் தொல்லியல் அமைச்சர் தங்கம் தென்னரசு  தலைமையில் ஒரு குழுவை அனுப்பியதாக  ஒரு தகவல். நானும் ஏதாவது அரசியல் சார்ந்த விசயமாத் தான் இருக்கும் என்று பார்த்தால் தஞ்சை பெரிய கோயிலின் 1000 வயது பூர்த்தியாவதை ஒட்டிய விழாவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்க இந்த குழு போயிருக்கிறது  என்று கேட்டவுடன் சப்புன்னு போய்டுச்சு. இருந்தாலும் ஒரு குழு போய் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கிறது கொஞ்சம் நெருடலாத் தான் இருக்கு, எதாவது உள்குத்து இருக்கும்னு தான் நினைக்கத் தோணுது. ராகுல் காந்தி விஜயகாந்த்தோட கூட்டணி பற்றி பேசறார், அம்மாவின் ஆட்களோடு ரகசிய பேச்சு இப்படி எல்லாம் கொஞ்ச நாளா அரசியல் வட்டாரத்துல காங்கிரஸ்காரங்க புழிதிய கிளப்பிக்கிட்டு  இருக்கிற   சூழல்ல முதல்வரும் தன் பங்குக்கு விளையாட்டு காட்டுகிறாரோனு ஒரு சந்தேகம் எல்லோருக்கும்  வருவது சகஜம் தானே.
 
ஆனால் விஷயம் அது இல்லையாம், விழாவுக்கு அழைப்பு விடுத்த கையோடு அகமதாபாத்ல இருக்கிற காலிகோ அருங்காட்சியகத்தில் இருக்கும் சோழர்  கால சிலைகளை  மீட்டெடுக்க  தான் இந்த பயணமும், சிறப்பு அழைப்பும்னு தகவல். உண்மையா இருக்குமோ?…  11 ம் நூற்றாண்டை சேர்ந்த அந்த சிலையில் சோழ அரசி  லோகமாதேவியின் சிலையும் ஒன்றாம். அரசன் மற்றும் அரசியின் சிலை தஞ்சை பெரிய கோயிலின் ஒருங்கிணைந்த பகுதியில் ஒன்று என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றனவாம். தென்னவன் மூவேந்த வேலன் என்பவரை இந்த சிலைகளை நிர்மாணிக்கும் பொறுப்பில் ராஜ ராஜ சோழன் அமர்த்தியதற்கு சாட்சி கோயிலின் மேற்கு மண்டபம் ஒன்றில் கல்வெட்டாக இருக்கிறதாம். தற்போது இந்த சிலைகள் சாராபாய் பவுண்டேசன் நடத்தி வரும் காலிகோ  அருங்காட்சியகத்தில் இருக்கிறதாம் ஏற்கனவே இது தொடர்பாக  முதல்வர், நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறுகிறார்கள்.  
 
ஆக ராஜ ராஜ சோழன் தலைமையில கூட்டணி பேச்சு இல்லை என்று நம்பப்படுகிறது, அரசியல்ல எது வேணாலும் நடக்கும்னு ஒரு கோட்பாடு இருக்காமே, ஆனால் பி.ஜே.பி வசம் மத்தியில் ஆட்சி இல்லையே அதனால உண்மையான காரணம் சிலை மீட்டெடுப்புதான்னு முழுமையா நம்பலாம்.
 
 
 

ஆசிரியர் தினம் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.  இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான நாளை, செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் தினமாகக்  கொண்டாடப்படுகிறது.  

ஒரு சமுதாயத்திற்கு ஆசிரியர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை, எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற சொல்லின் மூலம் நாம் உணரலாம். நமது முன்னோர்கள், ஆசிரியர்களுக்கு என்று சிறப்பானதொரு இடத்தை சமூகத்தில் கொடுத்திருக்கின்றனர். உண்மையில் தற்போது ஆசிரியர்கள் அந்த சிறப்பான இடத்திற்கு தகுதி உடையவர்களாக இருக்கிறார்களா? முன்பெல்லாம் ஆசிரியர்கள் பாடங்கள் மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை, வாழ்கையை நமக்கு வாழ கற்றுக்கொடுத்தார்கள், ஒழுக்கம், அன்பு, நெறி, மற்றும் பல விசயங்களை ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தனர். இன்றைய அவசர காலத்தில் இதை சொல்லித்தர அவர்களுக்கு நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை. மேலும் அவர்களுக்கே ஒழுக்கத்தையும் நெறியையும் நாம் கற்றுத்தர வேண்டியிருக்கிறது. நீங்கள் கேட்கக்கூடும் எல்லாத் துறையிலும் தான் இப்படி இருக்கிறது இவர்களை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும் என்று, உண்மை தான், ஆனால் ஆசிரியர்கள் ஒரு சமுதாயத்தின் தூண்கள், அவர்கள் நமக்குள் விதைப்பதை தான் நாம் அறுவடை செய்கிறோம். 

இன்றைய கால கட்டத்தில் மதிப்பெண்களை முன்னிறுத்தியே பாடங்கள் போதிக்கப்படுகின்றன. ஒரு மாணவனுக்கு சுயமாக சிந்திக்க, கற்பனா சக்தியையும், அவனுடைய சிந்தனா சக்தியை தூண்டவும் இன்றைய பாடத்திட்டங்களோ, ஆசிரியர்களோ உதவியாக இல்லை என்றே சொல்லவேண்டும். நிறைய பேர் சொல்லக் கேள்வி பட்டு இருக்கிறேன். ஆங்கிலேயர்கள் நமக்கு குமாஸ்தா வேலை செய்ய ஏற்ப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை(மெக்காலே) நாம் இன்னும் பின்பற்றிகொண்டிருக்கிறோம் என்று, உண்மை தான் இன்றைய நிலையில் ஆராய்ச்சிப் படிப்புகளில் யாரும் அக்கறைக்  காட்டாமல் இருப்பதே  இதற்கு சான்று. மந்தையில் ஒரு ஆடு போகும் போது பின்பற்றி செல்லும் ஆடுகள் போல போய்க் கொண்டிருக்கிறார்கள் இன்றைய மாணவர்கள். பணம் மட்டுமே வாழ்கையின் குறிக்கோளாகிப் போன இந்த காலத்தில் பெற்றோர்களும் இதற்கு உடந்தை. எப்போதும் படிப்பு படிப்பு, நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும், உயர் படிப்பை முடித்து அமெரிக்காவிற்கு போக வேண்டும் இதான்  இன்றைய பெற்றோர்களின் மற்றும் மாணவர்களின் குறிக்கோள்.

 ஒரு கால கட்டத்தில் தமிழகத்தில் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாகவே ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தார்கள், தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும், மொழி ஒரு சமூகத்தின் அடையாளம் என்பதையும், அந்த அடையாளத்தை நாம் அடைய பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ், தமிழில் பள்ளிகளில்  பேசினால் குழந்தைகள் தண்டிக்கப்படுகிறார்கள், குழந்தைகளுக்கு நம் மொழியினை பேசுவதையே சிறுமை என மறைமுகமாக போதிக்கின்றனர். 

என் ஆசிரியர்கள் பற்றிய பசுமையான நினைவுகள் எனக்கு நிறைய இருக்கின்றன, என்னுடைய முதல் பள்ளி ஆசிரியை மரகதவல்லி, அவர்கள் எங்கள் குடும்ப உறவாகவே மதிக்கப்படும் ஒரு நபர். எங்கள் வீட்டு விசேஷங்கள் எல்லாவற்றிலும் கலந்து கொள்வார்கள். நான் மதிக்கும் மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர். எனது தமிழாசிரியர்கள் எல்லோருமே அருமையான வழிகாட்டிகள், விலங்கியல் பாடம் எடுத்த திருமலை  ஆசிரயரை மறக்கவே முடியாது ஒரு விரிவுரையாளர் கூட அவ்வளவு நுட்பமாக பாடம் எடுக்க முடியாது, அற்புதமான மனிதர், மேல்நிலை வகுப்பு ஆசிரியர்கள் யாவரும் என் மனதில்  நீங்கா இடம் பெற்றவர்கள். கல்லூரியில் எனக்கு கிடைத்த ஆசிரியர்கள், நண்பர்களை போல நடத்துவார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பிருந்தா ஆசிரியர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ்  விரிவுரையாளர். 

மாதா, பிதா, குரு அப்புறம் தான் தெய்வம், அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு சிறப்பளிக்கும் ஆசிரியர் தினத்தின் மேன்மையை நம் குழந்தைகளுக்கு எடுத்து கூறுவோம். வருங்கால சமுதாயத்தை ஆசிரியர்கள் நன்முறையில் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த இடுகையின் மூலம் ஆசிரிய பெருந்தகைகளுக்கு என் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி: ஓவியர் பாலாஜி

கச்சத்தீவு உண்மையில் தமிழர்களின் சொத்தா?

Posted: செப்ரெம்பர் 1, 2010 in அங்கலாய்ப்பு
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்று மக்களவையில் மறுபடியும் கச்சதீவு பற்றிய விவாதங்களும் அதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர்  கிருஷ்ணா அவர்களின் விளக்கமும் வெகுஜனங்களுக்கு வெறுப்பை ஊட்டுவதாகவே அமைகிறது, 1974 இல் ஆரம்பித்து 2010 வரை தொடரும் இந்த பிரச்சனையின் மூலம் தான் என்ன? உண்மையில் நமக்கு கச்சதீவில் உரிமை இருக்கிறதா? அதற்கு என்ன சாட்சி? வரலாற்றின் பக்கங்களில் கச்சதீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா? இது எல்லாவற்றிற்கும் விளக்கம் தரும் வகையில் இந்த இடுகையை சமர்பிக்கிறேன். எல்லோர்க்கும் தெரிந்த விஷயம் தான், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1480 ம் ஆண்டில் ஏற்ப்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்ப்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம்  தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின.

01 ராமேஸ்வரம்

02 குந்துகால் 

03 புனவாசல்

04 முயல் தீவு 

05 பூமரிசான் தீவு

06 முல்லைத் தீவு

07 மணல் தீவு 

08 வாலித் தீவு (கச்சத் தீவு)

09 அப்பா தீவு

10 நல்ல தண்ணீர் தீவு

11 உப்பு தண்ணீர் தீவு

12 குடுசடி தீவு

ராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்று குறிப்பு 11891ம் பக்கம் 14ல்  இதற்கான ஆதாரம் உள்ளது. 1480 ம் ஆண்டு தோன்றிய இத் தீவுகள்  யாவும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தன.

1802ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஜமிந்தாரி நில உரிமைச் சட்டப்படி கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவிற்கு அரசுடமையாக்கப்பட்டது. அதற்கு பிறகு ராமநாதபுரம் ராஜா அவர்கள் அந்த இடத்தை தனி நபர்களுக்கு குத்தகையாக கொடுத்து அவர்கள் மூலமாக பயன் பெற்று இருகின்றனர்.

1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.

1947 ம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் கொண்டு வரும் வரையில் கச்சதீவு சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்தது.

இதற்கு 1822 ம் ஆண்டிலிருந்து நிறைய சான்றுகள் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி 1822ல் இஸ்திமிரர் சனட் என்ற ஒப்பந்தத்தில் ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை பயன்படுத்தி கொள்ளும் உரிமை பெற்றது. 69 கடற்கரை ஊர்களும் 8 தீவுகளும் சேதுபதிக்கு உரியது. இந்த 8 தீவுகளில் ஒன்று தான் கச்சத்தீவு. கிழக்கிந்திய கம்பனி இவை யாவற்றையும் பயன்படுத்தி கொள்ள ராஜாவிடம் இருந்து இசைவு பெற்று இருந்தது.

இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கை பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லையை பற்றி குறிப்பிடும் போது கச்சத்தீவை குறிக்காமலும், ராமநாதபுரம் அரசை பற்றி குறிப்பிடுகையில் கச்சத்தீவு அவருக்கு உரியதென்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை முந்நாளைய இலங்கை அமைச்சரவை செயலாளர் பி. ஈ. பியரிஸ் உறுதிபடுத்தி உள்ளார்.

1947 டிசம்பர் திங்களில் சண்முக ராஜேந்திர சேதுபதியிடமிருந்து வீ. பொன்னுசாமி பிள்ளை, கே.எஸ். மொகம்மது மீர்சா மரைக்காயர் ஆகிய இருவரும் கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்துள்ளனர். இலங்கையின் பழைய வரலாற்று அவணங்களிலோ, நூல்களிலோ எதிலும் கச்சத் தீவு பற்றிய எந்த விவரமும் இல்லை. இதுவரையில் கச்சத் தீவில் எங்களுக்கு உரிமை உண்டு என்பதற்கான ஆதாரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவும் இல்லை.

டச்சுக்காரர்கள், போர்சுகீசியர்கள் என்று யார் தயாரித்த இலங்கை தேசப்படங்களிலும் கச்சத்தீவு இல்லை.  17 ம் நூற்றாண்டில் பர்நோப் எனும் வரலாற்று ஆய்வாளர் இலங்கைக்கு வந்தார் அவர் இலங்கை தேசப்படம் ஒன்றை உருவாக்கினார். அதிலும் கச்சத்தீவு இல்லை.

1857 – 61 ம் ஆண்டுகளில் இலங்கை தேசப்படங்களை வெளியிட்ட ஜே.ஆரோஷ்மிக்  மற்றும் டெண்னன்ட் ஆகியோரும் இலங்கை தேசப்படத்தில் கச்சத்தீவை சேர்த்து வெளியிடவில்லை.

1920 ம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற  இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.

1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.

1976ம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது) கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லகூடாது என்று முற்று புள்ளி வைத்தே விட்டது.

1974ம் ஆண்டு ஆகஸ்ட் 21லிருந்து இன்றுவரை நாம் தீர்மானம் நிறைவேற்றி கொண்டே இருக்கிறோம். சிங்களவன் நம் மீனவர்களை சுட்டுக் கொண்டே இருக்கிறான்.

நன்றி:  அ. பெரியார் எழுதிய தமிழ்நாட்டு  எல்லைப் போராட்டமும், பெயர் மாற்றமும்

இது ஓர் தொடர் பதிவுநமக்கு சிறுவயதில் நேர்ந்த அனுபவங்களின் பகிர்வு 

சிறு வயதில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் இந்த தொடர்பதிவில்  நண்பர் படைப்பாளி என்னை இணைத்து கொண்டதற்கு முதலில் நன்றியை  தெரிவித்துகொள்கிறேன். நண்பர் தனது இடுகையின் முடிவில் என் களர்நிலத்தில் பயிர் செய்ய வேண்டும் என கூறி இருந்தார். அவரின் விருப்பத்திற்கிணங்க இதோ என் சிறு வயதின்  சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நான் பிறந்தது திருகழுக்குன்றம் என்ற சென்னையை ஒட்டிய பகுதி, வாழ்ந்தது, வளர்ந்தது எல்லாம் சிங்கார சென்னை. நகர வாழ்கை நரக வாழ்கை என்று சொல்வார்கள் நான் எப்போதும் அப்படி நினைத்ததே இல்லை. இந்த நகரம் என்னுள் பல நினைவுகளை சுமக்க வைத்திருக்கிறது. இன்றளவும் என்னால் இந்த நகரத்தை விட்டு அகல முடியாத படி என்னை கட்டுபடுத்தி வைத்திருக்கும் ஒரு முக்கிய விஷயம் மெரீனா கடற்கரை. இந்த கடற்கரை பல வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை தன்னுள் சுமந்து கொண்டு இருக்கிறது. அந்த வரலாற்று நிகழ்வுகளுக்கு மத்தியில் ஒரு கமா அல்லது ஒரு முற்றுபுள்ளி அளவுக்கேனும் என் நிகழ்வுகள் அங்கு  இருக்கின்றன. அந்த பரந்த கடலை சாலையின் ஓரத்தில் இருந்து பார்த்தாலே போதும் என் சுமைகள், மனக்கஷ்டங்கள் எல்லாம் பறந்து போகும். எனக்கு கிடைத்த முதல் நண்பன், இந்த நண்பனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எனது தாத்தா, சிறுவயதில் ஒவ்வொரு ஞாயிறும் என்ன வெயில் அடித்தாலும் 3 மணிக்கே கிளம்பிவிடுவோம். அவர் ஒரு உணவுப் பிரியர், எந்த ஹோட்டலில் என்ன சிறப்பாக இருக்கும் என்பது அவருக்கு அத்துப்படி, அவருடன் சேர்ந்து நானும் களமிறங்குவேன், அந்த கால கட்டத்தில் ராஜரத்தினம் என்பவர் டேப் (ராஜபாட் ரங்கதுரை படத்தில் சிவாஜி பாடுவாரே, தம்பி என்று நம்பி உன்னை வளர்த்தேன், அந்த இசைக்கருவி) அடித்து கொண்டு தனது கணீர் குரலில் பாடிக்கொண்டு  பல்பொடி விற்பார். பல்பொடி வாங்குவார்களோ இல்லையோ அவர் பாடலை கேட்க நிறைய கூட்டம் கூடும். கிளிஞ்சல்கள்  பொருக்கி, தண்ணீரில் விளையாடி அழுக்கு மூட்டையாய் வீடு வந்து சேர இரவு ஆகிவிடும். வாரம்தோறும் அம்மாவிடம் வசவு வாங்குவேன். 

 என் சிறுவயதில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் என குறிப்பிட்டு சொன்னால் நான் வீட்டை விட்டு ஓடிய நாள் தான் அந்த 8 மணி நேரத்தை என் வாழ்நாளில் அடிக்கடி நினைத்து கொள்வேன். பக்கத்து வீட்டு மாடியில் ஏறி அவர்கள் போட்டு வைத்த வடாம், வத்தல்களை  மிதித்து விளையாடியதால் கிடைத்த வசவு  காரணமாக ஓடிய ஓட்டம் அது. எங்கு போவது என்று தெரியாமல் ஏதோ வண்டியில் ஏறி சென்னை சென்ட்ரலில் இறங்கி அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டே கும்மிடிபூண்டி போகும் ஒரு ரயிலில் ஏறி எங்காவது சென்று விடவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அடுத்தது என்ன என்று தெரியாமல் அழுது, நான் அழுவதை பார்த்து பலர் கூடிவிட ரயிலில் மாறி மாறி உபதேசம். உண்மையில் எனக்கு அன்பு, பாசம் என்றால் என்ன என்பதை அங்கு தான் முதன் முதலில் உணர்ந்தேன். இனிமேல் என்னால் என் தாயை பார்க்க முடியாது என்ற ஒரு சிந்தனை வந்த உடனே என்னை மீறி அழுது விட்டேன். நல்லவேளையாக குழுமி இருந்தோர் எனக்கு அறிவுரை கூறி சிலர் தங்கள் கையில் இருந்த பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தது, என்னை தேடி என் குடும்பத்தார் அலைந்து திரிந்து கொண்டிருந்ததை  நேரில் பார்த்து நான் அழுதது, என் தாத்தா என்னை தேடி ஊர் ஊராய் சுற்றி மறுநாள் காலையில் வந்து என்னை கடிந்து கொண்டது, நினைத்து பார்க்கும் போது இன்னமும் என் அறியாமையை நினைத்து சிரித்து கொள்வேன். 

அப்போது வீடியோ வந்த புதிது, துபாயில் இருந்து கடத்தி வந்த VCR இல் படம் போட்டு பார்ப்பது என்பது ஒரு பெரிய விசேஷம் சென்னையை பொறுத்தவரை  கல்யாணத்திலிருந்து, துக்க நிகழ்ச்சிகள் வரை இந்த வீடியோ போடுவது விழாவை சிறப்பிக்க ஒரு வழி, பல சமயங்களில் கட்டாயம். சென்னையில் பல இடங்களில் திரை அரங்குகளை போல வீடியோ அரங்குகள் இருந்தது. முக்கியமாக திருவல்லிகேணியை ஒட்டிய பகுதிகளில் இது கூடுதல். திரை அரங்குகளில் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு படம் தான், வீடியோ அரங்குகளை பொறுத்த மட்டில் தினம் தினம் புது புது படங்கள், அதுவும் சில அரங்குகளில் விடலை பருவத்தினருக்கு என்றே சிறப்பான படங்களும் உண்டு.  இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம்  யாதெனில் அரங்கு வீடுகள் இருக்கும் பகுதியிலே இருப்பதால், அங்கு பக்கத்தில் இருக்கும் வீடுகளில் உள்ள பெண்கள் எல்லாம், ஸ்கூலுக்கு போக அனுப்பிச்சா இப்படி ஊர் சுத்ரிங்களானு திட்டி தீர்ப்பார்கள், அவர்களின் பாசம் நிறைந்த அதட்டல்கள் எரிச்சலைக் கொடுத்தாலும் அவர்களின் திட்டல்கள் என்னை  வெட்கி தலை குனியவே செய்யும். இதற்காகவே சீருடைக்கு மாற்றாக ஒரு சட்டை வைத்திருப்போம், அப்படியெல்லாம் படிப்பை சட்டை செய்யாமல் பின்னாளில் அவதிப்பட்டு இன்றைக்கு இருக்கும் நிலையை அடைய எத்துனை போராட்டங்கள்.

இப்படி அடுக்கிகொண்டே போகலாம் என் நினைவுகளை, முதன் முதலில் நண்பனுக்காக எழுதிய காதல் கடிதம், ஸ்டெபிகிராப் ஐ ஞாபகபடுத்தும் ஒரு பெண்ணின் பின்னால்  போனது, ஏழாம் வகுப்பில் படிக்கும் போது முதன் முதலில் பிடித்த சிகரேட், ஊருக்கு செல்லும் போது ஏற்படும் உற்சாகம், மூச்சிரைக்காமல் ஏறிய மலை, புளியமரத்தில் மேலே ஏறி  ஓடி பிடித்து விளையாடியது. மடுவில் நீராடிய நினைவுகள், முந்தரி பழத்தை சுவைத்து ஏற்பட்ட கீச்சுக்குரல், நுங்கு வண்டி ஒட்டி சைக்கிள் வண்டியில் மோதிக் கொண்டது, அன்பான தாத்தா இறந்த போது இரவில் தனியாக அவரின் நினைவால் அழுத நேரங்கள். இப்படி போய் கொண்டே இருக்கிறது என் நினைவுகள்.  

 நண்பர் படைப்பாளிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி, எப்பொழுதும் இறந்தகாலம், சொர்க்கலோகம்… என் சொர்கத்தை கொஞ்ச நேரம் சுற்றி பார்க்க வைத்ததற்கு.  

இந்தத் தொடரை சகோதரன் தொடர வேண்டுமென நான் விரும்புகிறேன். எனக்கு பதிவுலகில் கிடைத்த நல்ல நண்பர்களில் சகோதரன் ஜெகதீஸ்வரனும்  ஒருவர், இந்தத் தொடர்பதிவை  அவரின் வலைப்பூவில் பின்னுவார் என் எதிர்பார்க்கிறேன்.

நினைவுகளை தொடர்பவர்கள்:

 

1.படைப்பாளி கருப்பு,வெள்ளையில் கலர்புல் நினைவுகள்..

2.களர்நிலம் என் நினைவுகளின் நிர்வாணம்.

3.சகோதரன்  நானும் என் கிராமமும்

4.இதயம் பேத்துகிறது நெஞ்சில் இட்டக் கோலம் எல்லாம்……

போதுமா இந்த ஊதிய உயர்வு? என்ற தலைப்பின் கீழ் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய  உயர்வை பற்றிய ஒரு இடுகையை  உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கு மறுமொழியாக  தோழர் ஞானி தனது கருத்தை வெளியிட்டு இருந்தார்.

பிற நாட்டு மக்கள் பிரதிநிதிகளின் ஊதியங்களுடன் ஒப்பிடுவது தவறு. அதுவும் டாலரை 47 ரூபாய் என்று கணக்கிட்டு மாற்றிப் பார்ப்பது தவறு. ஒரு காபி விலை இங்கே 10 ரூபாய் என்றால் அங்கே ஒரு டாலர். எனவே டாலரின் அந்த ஊர் மதிப்பு 10 ரூபாய்தான். பிற நாடுகளில் தனியார் துறையின் கடை நிலை ஊழியரின் ஊதியத்தையும் நம் நாட்டு கடை நிலை ஊழியரின் ஊதியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்காமல், எம்.பி,கள் ஊதியத்தை மட்டும் ஒப்பிடுவது முறையானது அல்ல. தோழரின் கருத்துகளுக்கு நன்றி. அவரின் கருத்துகளில் ஓரளவுக்கு எனக்கு உடன்பாடு இருக்கிறது. மேற்படி என் இடுகையிலேயே இந்த ஊதிய உயர்வு நியாமானது, அதே சமயம் மற்றொரு கோணத்தில் பார்க்கும் போது தேவை அற்றது என்று எனது கருத்தையும் வெளியிட்டு இருந்தேன்.

முதலில் ஒரு விசயத்தை பெரும்பான்மையோரின் கருத்து என்றே ஆதரிக்க முடியாது. நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில்  எல்லோரும் ஊழல் செய்பவர்கள் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை, 10 சதவிகிதம் பேர் நேர்மையாக இருப்பார்கள் என்று வைத்துகொள்வோம். 90 சதவிகிதம் பேர் செய்யும் தவறுக்கு நாம் இந்த 10 சதவிகிதம் பேரை குறை சொல்வதோ அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான சலுகைகளையோ அல்லது ஊதியத்தையோ  சர்சைக்குள்ளாக்குவதோ தவறு. நாம் கேள்விபட்டிருக்கிறோம் ஒரு மாநிலத்தின் முதல்வர் மிதிவண்டியை பயன்படுத்தியே  சட்டமன்றத்திற்கு வருகிறார், சொந்த வீடு கூட சில கம்யூனிச  பிரதிநிதிகளுக்கு இல்லை என்றெல்லாம், நாம் கேட்கலாம் பொது சேவை என்று சொல்லி தானே வருகிறார்கள், இவர்களுக்கு எதற்கு நாம் சலுகைகள், ஊதியங்கள் கொடுக்கவேண்டும் என்று. ஆனால் அவர்களுக்கும் வீடு, குடும்பம் என்று உள்ளதே. மேலும் இன்றைய நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் VP அல்லது CEO,COO என்ற பதவிகளில் உள்ளவர்கள் குறைந்தது 2 லட்சம் ஊதியமாக பெறுகிறார்கள், நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின்  பதவி அவர்களின் பதவிகளை  விட தாழ்வானது என சொல்லிவிட முடியாது, இருக்க ஏன் ஊதியம் மட்டும் அவர்களுக்கு ஈடாக கொடுக்க கூடாது. ஒரு துறையின் செயலாளர்கள்  வாங்கும் ஊதியம் கூட அந்த துறையின் தலைவரான  மந்திரிகள் வாங்குவதில்லை. மந்திரிகள் மட்டுமா  ஊழல் செய்கிறார்கள் அதிகாரிகள் செய்வதில்லையா.

 ஒருவர் தனது ஊதியத்தை மீறி தவறான முறையில் பணம் பெறுகிறார் என்ற காரணத்திற்காக ஊதியம் சரிவர கொடுக்கமுடியாது என்பதில் இருந்து தவறான முறையில் பணம் பெறுவதை நாம் ஆதறிக்கிறோமா? சமிபத்தில் நான் நண்பர் ஒருவர் மூலம் கேள்வி பட்டேன். காவல் துறை வண்டிகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இலவசமாக பெட்ரோல் போட்டு கொள்கிறார்கள் என்று, இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, இது மேலிடத்திற்கும் தெரியும் என்றும், அவர்களே அதை செய்ய சொல்கிறார்கள் என்ற தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. காவல் துறை ஊழியர்களுக்கு சரியான முறையில் போதுமான அளவுக்கு ஊதியம் கொடுக்காமல் சந்துக்கு சந்து நின்று பிச்சை எடுக்க யார் சூழலை உருவாக்கி கொடுத்தது. இதற்கெல்லாம் பதிலே கிடையாது. 

ஞானியின் மறுமொழிக்கு வருவோம், அவர் அமெரிக்காவின் ஊதியத்தை நம் ஊதியத்தோடு ஒப்பிட கூடாது என்கிறார். அவரே சொல்லி இருக்கிறார்  ஒரு காபி விலை இங்கே 10 ரூபாய் என்றால் அங்கே ஒரு டாலர்,  இந்த கணக்கின் மூலம் 10:1 என்ற விகிதம் சொல்கிறார், அப்படி பார்த்தால் கூட அமெரிக்க செனட்டரின் ஊதியம்  மாதத்திற்கு 14,500 டாலர், இன்று வரை 16000 ரூபாய் தானே ஊதியமாக நம் உறுப்பினர்கள் பெறுகிறார்கள் ஏறக்குறைய 1:1 என்ற கணக்கே வருகிறது நிற்க இந்த ஊதிய உயர்வின் மூலம் 3:1 என்ற நிலை வரும் அதாவது நமது உறுப்பினர்களுக்கு  மட்டும் 3 ரூபாயில் காபி கிடைக்கும். ஊதியங்கள் தொழிலுக்கு தொழில் மாறுபாடு உடையது தான். நமது நாட்டு கடைநிலை ஊழியன், நல்ல திறமையுள்ள கட்டுமான பணியில் உள்ளவரோ, தச்சு பணியில் உள்ளவரோ குறைந்தது 300 ருபாய் முதல் 500 ரூபாய் வரை ஊதியம் பெறுகிறார். விவசாய கூலிகளின் நிலை 100 ரூபாய் வரை இருக்கலாம். 100 ரூபாய் என்ற கணக்கை வைத்து பார்த்தல் 3000 ரூபாய் மாதத்திற்கு, நகரத்தில் அவனால் 3000 வைத்துக்கொண்டு பிழைக்கமுடியாது உண்மை தான் அதே நிலை தான் அமெரிக்க கவுன்டியில் வாழ்பவருக்கும், 500 லிருந்து 1000 டாலர் சம்பாதிப்பான் என்று வைத்துகொண்டால் 3:1 கணக்கு நேராகிறது. மேலும் ஒப்பீடு என்பதே தவறு என்று சொல்லிவிட முடியாது, எல்லா  துறைகளிலும் ஒப்பிடு என்பது தவிர்க்கமுடியாதது, இலக்கியத்தில் கூட ஓப்பீட்டு இலக்கியம் என்று கேள்விபட்டிருக்கிறேன். இல்லையெனில் உலகத்தரம் என்ற வார்த்தையே இல்லமால் இருந்திருக்கும். தரம் என்பதே ஒப்பீட்டின் வாயிலாக வந்த சொல். ஆங்கிலத்தில் COMPARITIVE STUDIES என்பார்கள் இந்த ஓப்பீட்டு ஆய்வுகளை. 

மேலும் நமது கண்ணோட்டத்தை கொஞ்சம் மாற்றி கொள்வது நல்லது, லஞ்சம் வாங்குவதையோ கொடுப்பதையோ  நாம் கவுரவ குறைச்சலாகவோ அல்லது தவறாகவோ நினைப்பதே இல்லை. அதை ஒரு சம்பிரதாயமாகவே நினைக்கிறோம். இதை அகழ்வாராய்ச்சி செய்து பார்த்தல் கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற தர்க்கம் தான் இதற்கும் பொருந்தும். கொடுப்பதால் வாங்குகிறோம் என்று அவர்களும் , கேட்பதால் கொடுக்கிறோம் என்று நாமும் இந்த தர்கத்தை வழி நடத்தி போய் கொண்டு தான் இருக்கிறோம். வேடிக்கையாக ஒரு நண்பர் சொன்னார் எனக்கு, அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதி ஒப்பில்லாத, ஒழுக்கமுடையவனாக, உதாரண புருசனாக இருக்க வேண்டும் ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் என்ன தவறு செய்தாலும், ஒழுக்க கேடாக நடந்தாலும் அது அவனது தனிப்பட்ட வாழ்கை அதை கேள்வி கேட்க மாட்டார்கள். இந்தியாவை பொறுத்தவரை பக்கத்து வீட்டுக்காரன் ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும். பொது வாழ்கையில் இருப்பவன், அதிகாரம் இருப்பவன் எப்படி இருந்தாலும் இவர்கள் கவலை கொள்வதில்லை. ஆனால் இவர்களுக்கு தெரிவதில்லை முன்னேறு போகும் பாதையில் தான் பின்னேறு போகும் என்று. தேசத்தின் முதல் மகன் தவறு செய்யாதவனாக இருப்பதின்  அவசியம் நமக்கு புரிவதே இல்லை, புரிந்து கொள்ள விருப்பமும் இல்லை.  ஆகையால் தவறை சுட்டி காட்டுவதற்கு முன் தவற்றை நாம் திருத்தி கொள்வோமானால் எல்லாம் சரியாகும். ஆகவே திரைப்படங்களில் வரும் வசனம் போல, 100 குற்றவாளிகள் தப்பித்தால் கூட 1 நிரபராதியை தண்டித்து விட கூடாது என்ற கூற்றின் படி 90 சதவிகிதம் தவறு செய்கின்ற உருப்பினர்களுக்காக 10 சதவிகிதம் நல்லவர்களை நாம் ஏன் தண்டிக்க வேண்டும்.

நேற்று நான் பகிர்ந்த இடுகையை இந்த இடுகையின் பின் இணைப்பாக இணைத்திருக்கிறேன்.

http://wp.me/pYvWG-81