Archive for the ‘உலக சினிமா’ Category

காதல் ஒருவரிடம் மட்டும் தான் வருமா?

அன்பை பலருக்கு பகிர்ந்தளிக்க முடியுமா?

முடியும் என்றால் அது ஆன்பாலருக்கு மட்டுமா?

இல்லை பெண்களுக்கும் அது பொருந்துமா?

ஒருவனுக்கு ஒருத்தி, அப்போ ஒருத்திக்கு?

அது பற்றி யாருமே சொல்லவே இல்லையே …

இந்தக் கேள்விகளுகெல்லாம் விளக்கமே  மை வைப் காட் மேரிட் என்ற கொரிய மொழித் திரைப்படம்.

ஒரு பெண் ஒருவனிடம் காதல் கொள்கிறாள், பின் அவனை மணக்கிறாள். சிறிது காலத்திற்கு பிறகு இன்னொருவனை மணக்க கணவனிடம் சம்மதம் கேட்கிறாள், விந்தை என்னவெனில் தான் இன்னும் கணவனை காதலிப்பதாகவும் அவனை விவாகரத்து செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவிக்கிறாள்.

ஒரு பெண் இரு கணவர்கள், இடையில் குழந்தை வேறு, குழந்தை தன்னுடயதா இல்லை இடையில் வந்தவனுடயதா என்று போகிறது கதை. ஒரு கட்டத்தில் மூன்று பேரும் பிரிகிற சூழல், இறுதியில் அப்பெண்ணின் நிலை என்ன என்பதுதான் கதை…

இந்தப் படத்தை பற்றிய வேறெந்த விளக்கமோ, விமர்சனமோ சொல்லப்போவதில்லை, நீங்களே பார்த்து விமர்சித்துக் கொள்ளுங்கள்.

முழு படத்தையும் பார்த்து ரசிக்க

.

உலக திரைப்படங்களில் கொரிய மொழித் திரைப்படங்களுக்கென்று  ஒரு தனி இடம் இருக்கிறது, அந்த வரிசையில் ஓல்ட் பாய் தவிர்க்க முடியாத ஒரு கொரிய மொழித் திரைப்படம். மேலுழுந்தவாரியாக பார்த்தால் இது பழிவாங்குவதை கருவாக கொண்ட சாதாரண திரைப்படம் போல தோன்றும்.  ஆனால் அதையும் மீறி கதையை முழுவதுமாக பார்த்து முடிக்கும் போது, நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குரூரமான பழிவாங்கல் கதை என்பதை புரிந்து கொள்ள முடியும்.

2003ல் வெளியான இந்த திரைப்படத்தை பார்க் சான் வூக் என்பவர் இயக்கி இருக்கிறார், இந்த திரைப்படத்தின் மூலம் ஜப்பானிய மங்கா வடிவமானது, புகழ் பெற்ற மங்கா ஓவியர் நோபௌகி மிநேகிஷி அவரால் எழுதப்பட்டது.

15 வருட தனிமைச் சிறை, அதுவும் ஒரு விடுதியின் அறை ஒன்றில் எதற்காகாக? யாரால்? சிறை வைக்கப்பட்டிருக்கின்றோம் என்று தெரியாமல் ஏறக்குறைய பைத்தியம் பிடிக்கும் நிலையில் விடுவிக்கப் படுகின்றான் கதாநாயகன். தன்னை சிறைப் படுத்தியவன் யார் என்பதை அறிந்து அவனை பழி தீர்க்க முற்படுவதே கதை.

கதையின் இறுதியில் வில்லனாக உருவகப்படுத்தியவன் கதாநாயகனால் பாதிக்கப்பட்டு அதற்கு பழி தீர்த்துக் கொள்ளவே கதாநாயகனின் 15 வருட சிறை என்பது எதிர்பார்க்காத திருப்பம். அதை விட பெரிய திருப்பம், கதாநாயகனால் காதலிக்கப்படும் பெண் அவனின் சொந்த மகள் என்பதும் அதுவும் வில்லனின் பழி வாங்கும் செயலில் ஒன்று என்பதும்.

கொரிய மொழிப்படங்களை பார்த்தவர்கள் மத்தியில் கேட்டரிந்தால் நூற்றில் தொண்ணூறு பேர் இப்படத்தை பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள், கொரியவின் சிறந்த 10 படங்கள் என்று வரிசைப் படுத்தப்பட்டால் இப்படம் கண்டிப்பாக அதில் இடம் பெரும் என்பதில் ஐயமில்லை.

முழுப் படத்தையும் ஆங்கிலத்தில கண்டுகளிக்க…

DETERMINATION என்றால் என்ன என்று முடியும் இந்தப்படம், உண்மையில் மனஉறுதி என்றால் என்ன? விடா முயற்சி என்றால் என்ன? என்பதை ஒரு பள்ளி செல்லும் சிறுமியின் வாயிலாக உணர்த்தியுள்ளார் இயக்குனர்.

ஹயாத் திரைப்படம் ஒரு பள்ளி செல்லும் சிறுமியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு அதிகாலை நேரம், இரானின் ஒரு கிராமத்தில் தொடங்குகிறது கதை.

மூன்று குழந்தைகள் கொண்ட ஒரு சிறு குடும்பம், அக்குடும்பத் தலைவர் மோசமான உடல்நலககுறைவு காரணமாக மருத்துவமனைக்கு ஊராரின் உதவியோடு அவரின் மனைவி அழைத்துச் செல்கிறார். கைக்குழந்தையான தங்கையையும், பள்ளி சிறுவனான தன் தம்பியையும் குடும்பத்தின் மூத்த மகளான ஹயாத் கவனிக்கும்படியாகிறது. பள்ளி  தேர்வுக்கு போகத் துடிக்கும் ஹயாத் வீட்டுக் கடமைகளை முடித்து குழந்தையை தன் அண்டை வீட்டுக்காரர்களிடம் ஒரு மணி நேரம் பார்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு வீடாக சென்று யாரும் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை ஏற்க மறுத்த நிலையில், ஹயாத் பள்ளி சென்றாளா? தேர்வு எழுதினாளா? என்பது தான் கதை…

கிழக்கித்திய நாடுகளில் ஒரு  பெண் குழந்தை  கல்வி கற்பதற்கு இருக்கும் இடையூருகளைச் சொல்லும் விதமாக எடுக்கப்பட்ட சாதாரண ஒரு வரிக்கதை போல இருந்தாலும், அருமையான திரைக்கதை மற்றும் ஹயாத்தாக வரும் சிறுமியின் நடிப்பு வாயிலாக நம்மை கதையோடு ஒன்றிப்போக செய்கிறார் இயக்குனர்.

முழுத் திரைப்படம் உங்கள் பார்வைக்கு 

நன்றி: யூ ட்யூப்

பஹ்ராம் பைசாய் இயக்கத்தில் 1989ல் வெளியான ஈரானியத் திரைப்படம் பாசு  தி லிட்டில் ஸ்ட்ரேஞசர்.   1999  நவம்பரில் பிக்சர் வேர்ல்ட் என்ற இரானிய பத்திரிகை நடத்திய வாக்கெடுப்பில் BEST IRANIAN FILM OF ALL TIME என்று  திரைப்பட விமர்சகர்களாலும், திரை வல்லுனர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டது இத்திரைப்படம்.

ஒரு இளம் சிறுவனை பிரதானமாக சுற்றிப் பின்னப்பட்டதே பாசு தி லிட்டில் ஸ்ட்ரேஞசர் திரைப்படம். தெற்கு இரானின் குசெஸ்தான் பகுதியில் இரான்-ஈராக் போரின் போது குண்டு மழை பொழிகிறது, அதில் சிக்குண்டு ஒரு குடும்பம் அழிவதில் தொடங்குகிறது படம்.  தாக்குதலில் தப்பித்து சிறுவன் பாசு ஒரு ராணுவ வண்டியில் ஏறி வடக்கு இரானுக்கு செல்ல நேரிடுகிறது. பாசு அரபிக் மொழி பேசுபவன், ஆனால் கிலாக்கி பேசும் நாயி என்ற ஒரு பெண்மணியின் வயல்வெளியில் தஞ்சமடைகிறான் சிறுவன். பாசுவின் கருமை நிறமும் அவனின் மொழியும் புரியாத நிலையில் நாயி அவளின் 2 குழந்தைகளோடு சேர்த்து பாசுவையும் தன் குழந்தையாய் கிராமத்தினர் மற்றும் உறவினர்களின் எதிர்ப்புகளை மீறி வளர்க்கிறாள். பாசு, நாயியின் அன்றாட வேலையை பகிர்ந்து கொள்கிறான், அவளுக்கு உடல் நலக குறைவு வரும்போது குழந்தைகளையும், தன் தாயாக நினைக்கும் நாயியையும் கவனித்துக் கொள்கிறான். வெளி யூருக்கு வேலை தேடி சென்ற நாயியின் கணவன் வீடு வந்து சேரும் போது, அவர்களின் மோசமான பொருளாதர நிலைமையில் பாசுவை வீட்டில் சேர்த்து வைத்திருப்பதை கண்டு கடிந்து கொள்கிறான், ஆனால் அவன் மனைவியின் தாயுள்ளத்திற்கு தலை சாய்கிறான்.

மிகவும் எளிமையாக, குழந்தைகள் கதை போல தோன்றும் இத்திரைப்படம் முழுக்க முழுக்க தாய்மையையும், ஒரு தாயின் பரிவையும் மையமாகக் கொண்டு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்தினர் அடிக்கடி வந்து நாய்யிடம் பாசுவைப் பற்றி அவதூறு பேசுவதும், அவனை துரத்தும்படி அறிவுறுத்தும் போதும் வெகுண்டு பேசும் காட்சி, வயல்வெளியில் காட்டுப் பன்றி மற்றும் பறவைகளைத் கத்தித் துரத்தும் காட்சிகள், பாசு உடல்நலக் குறைவால் அவதிப்படும் போது தாயற்ற ஒரு குழந்தையை காப்பாற்றும்படி  மருத்துவரிடம் கதறும் காட்சி என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ஒவ்வொரு காட்சியையும்.  நாயி பாத்திரத்தில் வரும் (கரீனா கபூரை ஞாபகப் படுத்தும்) நடிகையின் நடிப்பு அற்புதம்.

முழுப் படத்தையும் YOUTUBEல் ஆன்லைனில் பார்த்து மகிழ,

 

 

 

 

 

 

 

 

சத்யஜித் ரே அவர்களின் சாருலதா, பதேர் பாஞ்சாலி போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு கூபி கெயின் பாகா பெயின் திரைப்படம் ஆச்சர்யத்தை கொடுக்கும், உண்மையில் இது சத்யஜித் ரே படமா? என்று கேட்கும் அளவிற்கு இந்த படத்தின் கதையமைப்பு அமைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் fairytale  என்று சொல்வார்களே அந்த வகையின்  கீழ் வரும் இந்த படம் குழந்தைகள் திரைப்படமாக சினிமா ஆர்வலர்களால்  வரையறுக்கபடுகிறது.

கூபி ஒரு குடியானவனின் மகன், அவனுக்கு பாடுவதில் வெகு ஆசை ஆனால் அதற்குரிய திறன் இல்லாதவன் ஒரு நாள் அரண்மனைக்கு அருகில் உள்ள கோவிலில் அவன் பாடும் போது அரசன் அவனை கழுதை மேல் ஏற்றி ஊருக்கு வெளியே கொண்டு விடுமாறு ஆணையிடுகிறான். இதற்கிடையில் டோல் இசைப்பதில் ஆர்வம் உள்ள பாகா என்பவனும் இதுபோல ஒரு அவமானத்திற்கு உள்ளாகி காட்டில் கூபியை சந்திக்க நேர்கிறது. இந்நிலையில் காட்டில் பூதங்களின் தலைவன் மூலமாக இவர்களுக்கு மூன்று வரம் கிடைகிறது. முதல் வரமாக நல்ல உணவும் உடையும் கேட்கிறார்கள், இரண்டாவதாக நினைத்த இடத்திற்கு செல்ல உதவும் ஒரு காலனி கிடைக்கிறது, மூன்றாவதாக மற்றவர்கள் விரும்பும் அளவிற்கு தங்களுக்கு விருப்பமான சங்கீத ஞானத்தையும் வரமாக பெறுகின்றார்கள். இந்த வரங்கள் இருவரும் ஒவ்வொரு முறையும்  ஒரு சேர கை தட்டும் போதும் கிடைக்கப் பெறுகின்றன.

இதற்கிடையில் சுண்டி என்ற ராஜ்யத்தில் இசை  மேதைகளின் போட்டி நடைபெறுவதை அறிந்து அங்கு சென்று தங்களின் இசை ஞானத்தின் மூலமாக வெற்றி பெறுகின்றார்கள் கூபியும், பாகாவும். அரண்மனையில் தங்கி இருக்கும் போது சுண்டி நாட்டின் மீது ஹல்லா  அரசன் படை எடுத்து வருவது அறிந்து இந்த போரை தாங்கள் நிறுத்தி அமைதிக்கு வழி வகுக்கிறோம் என்று கூற, அது மட்டும் நடந்தால் தனது மகளை கூபி, பாகா இருவருள் ஒருவர்க்கு மணமுடித்து தருவதாகவும் வாக்குறுதி தருகிறார் சுண்டி தேசத்தின் ராஜா. இருவரும் தங்கள் இசையால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் வரா வண்ணம் தடுத்து ராஜ குமாரிகளை மனம் முடிப்பதே கதை.

இந்த படம் வங்கத்தில் 51  வாரம் ஓடி சாதனை படைத்தது. சத்யஜித் ரே படங்களில் அதிகமான நாட்கள் திரையரங்கில் ஓடிய படம் இது.  இந்த படத்தில் கூபி கதாபாத்திரத்தில் நடித்த தபன் சட்டர்ஜி ஒரு புதுமுகம் பாகா கதாபாத்திரத்தில் நடித்தவர் ரபி கோஸ். இருவரின் நடிப்பும் படத்திற்கு சிறப்பு, இப்படத்தின் இயக்கத்துடன் கூட  சத்யஜித் ரே அவர்களே பாடல்களை இயற்றி இசை அமைத்திருக்கிறார் மேலும் உடை வடிவமைப்பும் இவரே செய்திருக்கிறார்.  பைசைக்கிள் தீவ்ஸ் படத்தை பார்த்து நியோ ரியலிசம் படங்களை எடுக்க ஆர்வம் கொண்ட சத்யஜித்ரே இது போன்ற படம் எடுத்திருப்பது அவரது பன்முகத்தன்மையை வெளிக்காட்டுகிறது.

சந்தேஷ் என்ற குழந்தைகளுக்கான பத்திரிகை ஒன்றை சத்யஜித் ரே நடத்தி வந்தது நம்மில் பலருக்கு தெரியும்  அதனால் அவர்  குழந்தைகளுக்கான படம் எடுத்தது அந்த பத்திரிகை அனுபவப் பின்னணி என்பது நன்கு விளங்கும் .

 

உலகின் மிகவும் அறியப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான சைக்கோ திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் ரசிகர்களை உலுக்கும் ஒரு திரைப்படம். ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கிய இந்தப் படம் நியூயார்க் திரையரங்குகளில் முதல் முறையாக திரையிடப்பட்ட போது ரசிகர்களை பீதியடையச் செய்ததாக அறிகிறோம். 

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் கதாநாயகி வசிக்கிறாள், தனது அலுவலகப் பணம் 40,000 டாலர்களை திருடிவிட்டு ஊரைவிட்டு காதலனை சந்திக்க ஓடிவிடுகிறார். போகும் வழியில் ஒரு விடுதியில் இரவு நேரத்தை கழிக்க வேண்டியதாகிறது. அது ஒரு தனித்து விடப்பட்ட ஆளரவம் இல்லாத  பகுதி. இரவு உணவுக்கு அழைப்பு விடுக்கிறார் விடுதியின் காப்பாளர், அவரின் தாயார் ஊர் பேர் தெரியாதவரோடு சேர்ந்து உணவருந்த மறுக்கிறார், இந்த உரையாடலை கதாநாயகி கேட்க நேரிடுகிறது. இரவு விருந்தில் கதாநாயகியும் விடுதி காப்பாளரும் கலந்து கொள்கிறார்கள், தன் தாயின் பேச்சுக்காக மன்னிப்பு கோருகிறார் காப்பாளர். பின்பு தன் அறைக்கு திரும்புகிறார் கதாநாயகி, அவளின் நடவடிக்கையை அறையில் உள்ள துளை வழியாக காப்பாளர் நோட்டமிடுகிறார். அவள் தான் திருடி வந்த பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு குளிக்கச் செல்கிறாள். ஷவரில் குளித்துக் கொண்டிருக்கும்போது அவள் கொல்லப்படுகிறாள். காட்சியின் இறுதியில் விடுதியின் பின்புறம், ஐயோ அம்மா, ரத்தம் ரத்தம் என விடுதி காப்பாளன் கத்துகிறான். விடுதிக்குள் ஓடி வருகிறான் அங்கு கதாநாயகியின் சடலத்தை காண்கிறான், சிந்தியிருந்த ரத்தத்தை துடைத்து அவளுடைய எல்லா பொருட்களையும் எடுத்து அவள் வந்த காரிலேயே நிரப்பி காரை பக்கத்திலுள்ள  ஒரு ஓடையில் மூழ்க செய்கிறான்.

அலுவலகப்பனத்தை கைப்பற்ற துப்பறியும் நிபுணர் ஒருவர் கதாநாயகியை பற்றி விசாரித்துக்கொண்டு விடுதிக்கு வருகிறார், அவரும் அவளை போலவே கொல்லப்படுகிறார். பின்பு கதாநாயகியின் காதலனும் அவளுடைய தங்கையும் உள்ளூர் காவல் அதிகாரி மூலம் விடுதியின் காப்பாளனின் தாய் 10 வருடங்களுக்கு முன்னதாகவே இறந்த செய்தி அறிகிறார்கள், மேலும் நேரடியாக  விடுதிக்கு சென்று கதாநாயகிக்கு என்ன நேர்ந்தது என அறிய திட்டமிடுகிறார்கள். அங்கு விடுதியின் காப்பாளன் தன் தாயின் சடலத்தை 10 வருடங்களாக  பாதுகாத்து வருவதும், அவளைப் போலவே இவன் உடை அணிந்து, தன் தாயாகவே மாறி கொலை செய்வதும் தெரிய வருகிறது. ஒரு பெரிய போராட்டதிற்கு பிறகு விடுதி காப்பாளன் கைது செய்யப்படுகிறான்.

விடுதிகாப்பாளன் தந்தை இறந்த பிறகு, அவனும் அவனுடைய தாயும் தனியாக வாழ்கிறார்கள், தாயின் மேல் மிகுந்த பாசத்தோடு வளர்கிறான் இதற்கிடையில் அவளுடைய தாய் ஒரு நபரிடம் காதலில் விழ, தன் பாசத்தையும் அன்பையும் பங்கு போட ஒருவன் வந்ததை பொறுக்க முடியாமல் தாயையும் அவளின் காதலனையும் கொன்றுவிடுகிறான். அவள் இறந்ததை மறைத்து அவளின் உடலை பாதுகாத்து அவளுடனே வாழ்ந்து வருகிறான், சில சமயங்களில் அவனே அவனின் தாய் போல உடை அணிந்து தனக்கு தானே பேசிக்கொள்வான். இவ்விதம் மருத்துவர் அவனின் மனநோயினை பற்றி ஆய்ந்தரிகிறார். சிறையில் விடுதிக் காப்பாளன் தன் தாயினைப் பற்றிய சிந்தனையில் இருப்பது போல கதை முடிகிறது.

சைக்கோ திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் ஹிட்ச்காக் தனது நகைச்சுவை மற்றும் திகிலூட்டும் திரைப்படங்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார். ஆனால் சைக்கோ திரைப்படம் அவரை மற்றொரு பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றது. சினிமா ரசிகர்களை உலுக்கிக் கலக்கிய ஒரு உலகுக்கு அழைத்து சென்றவர் ஹிட்ச்காக்.

சைக்கோ திரைப்படம் இன்றளவும் பேசப்பட்டு ரசிகர்களை ஆட்டிப்படைத்து அச்சுறுத்தி வருகிறது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள். சைக்கோ திரைப்படம் வெளியான 1960 ஆம் ஆண்டு ஹிட்ச்காக்குக்கு வயது 60. ஹாலிவுட்டின் புகழ் உச்சியில் அவர் இருந்த காலகட்டம்.

அந்தப் படம் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் வித்தியாசமாக இருந்தது. இவ்வளவுக்கும் அந்தப் படம் ஒரு சாதாரண கதையை அடிப்படையாக வைத்து கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருந்தது. படத்தின் கதாநாயகி ஜேனட் லே குளியல் அறையில் கொலை செய்யப்படும் சம்பவம் ரசிகர்களை உறையவைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பேசாப் படங்களில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய ஹிட்ச்காக். அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சத்தில் இருக்கும் ரசிகர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் நிபுணராக இருந்தார். அந்த சமயத்தில் அவர்களின் உணர்வலைகளுடன் எப்படி சிறப்பாக விளையாடுவது என்பதில் அவர் வல்லவராக இருந்தார். இந்தப் படம் 1998 இல் மறுபடியும் அதே திரைக்கதையில் ரீ மேக்  செய்யப்பட்டது.

இந்தப் படத்தின் மிகப் பிரபலமான, கதாநாயகியின் குளியலறை கொலைக்காட்சியின் காணொளி உங்கள் பார்வைக்கு… 

பேசன் ஆப் க்ரைஸ்ட்  (PASSION OF CHRIST ) மெல் கிப்சன் இதுவரை இயக்கிய 4 திரைப்படங்களில் என் மனம்கவர்ந்த இரண்டாவது படம், முதல் படம் எல்லோருக்கும் பிடித்த அபகாலிப்டோ. இந்த இடுகை பேசன் ஆப் க்ரைஸ்ட்  பற்றியது. முதலில் இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பதற்கு கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. மதத்தை முன்னிறுத்தி எடுத்த படத்தில் என்ன பெரிதாக இருந்து விட போகிறது மேலும் இயேசுவின் கதை எத்தனையோ படங்களில் பார்த்தாகி விட்டது  இதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்றே நினைத்தேன், ஆனால் வெளியான குறிகிய காலத்தில், தரமான படம் என்ற விமர்சனம்,  வெகுவாக எல்லோராலும் கூறப்பட்டதால் படத்தை பார்க்க சென்றேன்.

இந்தப் படம் இயேசு கிறிஸ்துவின் கடைசி 12 மணி நேரத்தில் நடந்தவற்றை எடுத்துக் கூறும்   படம். முதலில் தி பேசன்(The Passion) என்ற பெயரிலியே இந்த படம் ஆரம்பமானது, ஆனால் இந்த தலைப்பை மிரமாக்ஸ்(Miramax ) நிறுவனம் பதிவு செய்து வைத்து இருந்தபடியால்  தி  பேசன் ஆப் தி  க்ரைஸ்ட் என்று பெயர் மாற்றப் பட்டது. படம் ஓர் தோட்டத்தில் ஆரம்பிக்கிறது. ஜூடாசின்  துரோகத்தால் இயேசுவை கைது செய்ய காவலர்கள்   வருகிறார்கள்   அந்த  சமயத்தில்   இயேசுவின் சீடரான  பீட்டர்  ஒரு  காவலாளியின்  காதை  தன்  வாளால்  வெட்டிவிடுகிறார். இயேசு சண்டை போடவேண்டமென பீட்டரை நிறுத்தி வெட்டப்பட்ட காதை ஒட்டவைக்கிறார். காவலர்கள் அவரை கைது செய்து அழைத்து செல்கின்றனர், பீட்டர் அவரை தூரத்தில் இருந்து  பின் தொடர்ந்து செல்கிறான். விசாரணை நடக்கிறது, இயேசுவை நீ கடவுளின் குழந்தை என்று சொல்லிக்கொள்வது உண்மையா என்று கேட்க, ஆம் என்று பதிலளிக்கிறார் இதனால் குற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. இதனிடையே பீட்டர் இயேசுவை யார் என்று தெரியாது என 3 முறை சொல்லி விட்டு ஓடுகிறான், ஜூடாஸ் காட்டிகொடுத்ததால் கிடைத்த பொருளைக் கொடுத்து இயேசுவை விட்டு விடுமாறு கேட்டு மறுக்கப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கு போட்டுக் கொள்கிறான். இயேசு கவர்னர் முன் குற்றவாளியாக நிறுத்தப்படுகிறான். இந்நிலையில் அவர் மேல் இறக்கம் கொண்டு அவரை விடுவிக்க எண்ணுகிறான் கவர்னர்  ஆனால் கூட்டத்தினர் அவரை மன்னிக்க கூடாது என்று சொல்லி அவருக்கு மரண தண்டனை விதிக்க நேரிடுகிறது. பின்பு சிலுவையை சுமந்து சென்று கல்வாரியில் சிலுவையில் ஏற்றப்படுகிறார்.

படத்தில் ஏசுவாக நடித்தவர் அற்புதமாக நடித்திருக்கிறார், இந்த படத்தை பொறுத்தவரை மதத்தின் அற்புதங்களை சொல்வது போல அமையாமல் ஒரு மனிதனின் துன்பம் மிகுந்த சில மணி நேரங்களையும் அதை அவர் எவ்வாறு மனம் உவந்து ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் அழகாக எடுத்துக்காட்டி இருக்கிறார் இயக்குனர். மெல்கிப்சன் படம் வெளியான போது கலந்துகொண்ட ஒரு பேட்டியில், இந்தப் படம் அன்பு, நம்பிக்கை, கீழ் படிதல், மன்னித்தல் இவற்றை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய உலகத்திற்கு  அன்பு, நம்பிக்கை, கீழ் படிதல், மன்னித்தல், இவையெல்லாம் எவ்வளவு அவசியம் என்பதை நீங்களே உணர்வீர்கள் என்று சொன்னார். உண்மை, தேவை தானே…

இந்தப் படத்தின் திரைக்கதை கிப்சனால்  ஆங்கிலத்தில் எழுதி இலத்தினிலும், ஹிப்ரூவிலும் மொழி பெயர்க்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்டதாக அறியப்படும் மொழியிலேயே படத்தை உருவாக்கியது இந்த படத்தின் சிறப்பம்சம். இதனால் கிடைத்த  வெற்றியே கிப்சனுக்கு அபகாலிப்டோ  படத்தில் மாயன் மொழியிலேயே படத்தை எடுக்கும் தைரியத்தை கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.

இந்தப் படத்தில் அளவுக்கு அதிகமாக வன்முறைக் காட்சிகள் உள்ளதாக ஒரு சாரார், ஏன் எனக்கும் கூட பட்டது ஆனால் அது படத்திற்கு இன்னும் வலு  சேர்த்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இயேசுவை வித விதமான கருவிகளை கொண்டு அடித்து அவருடைய தசை நார்களை கிழிக்கும் காட்சிகள் மற்றும் ஆணி அடிக்கும் போது உண்டாகும் உபாதையை நமக்கு உணர்த்தும் அளவிற்கு ஸ்பெஷல் எபக்ட்ஸ் காட்சிகள் பிரமாதப்படுத்தி இருக்கிறது.

நான் தலைப்பில் சொல்லியது போல இந்த படம் உலகின் அதிக வசூலான ஆங்கிலமல்லாத திரைப்படம், இது  $ 611,899,420 வசூலை பெற்றது.

127 நிமிடமுள்ள  இத்திரைப்படத்தின் தொகுக்கப்பட்ட 4 நிமிடக் காட்சி 

 

டாய் ஸ்டோரி 1995 இல் வெளியான முதல் முப்பரிமான(3D) உயிரோவிய திரைப்படம். இதனை டிஸ்னி/ பிக்ஸார் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. ஜான் லாச்சட்டர் (john lasseter) என்பவரால் இயக்கப்பட்டது. இந்தப்படத்தின் பெயரை வைத்தே புரிந்துகொண்டு இருப்பீர்கள் இது பொம்மைகளை  மையமாக வைத்து பின்னப்பட்ட ஒரு கதை. மனிதர்கள் இல்லாத சமயங்களில் பொம்மைகள் உயிர்பெற்று செய்யும் சாகசங்களை சொல்லும் கதை இது. பொம்மை கூட்டத்தின் தலைவரான  கௌ பாய் கதாபாத்திரம் woody க்கு Tom Hanks குரல் கொடுத்திருக்கிறார். ஆன்டி(andy) என்ற சிறுவனின் விளையாட்டு பொம்மைகளான woody யும் அதன் சகாக்களும் அவனின் பிறந்தநாள் பரிசான புது பொம்மை விண்வெளி வீரன்  பஸ்ஸை வரவேற்கிறார்கள். woody க்கு பஸ்சின் வருகை உண்மையில் பிடிக்கவில்லை இதனால் தனது முக்கியத்துவம் குறைந்துவிடும் என கருதுகிறான். பஸ்சுக்கு தான் ஒரு பொம்மை என்ற உணர்வே இல்லாமல் உண்மையில் தன்னை  ஒரு விண்வெளி வீரனாகவே நினைத்து woody தனக்கு எதிரானவன் என முதலில் கருதுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் woody யால் பஸ் வீட்டிலிருந்து வெளியேற வேண்டியதாகிறது. மற்ற பொம்மைகள் woody யை தவறாக நினைக்க, தன்மேல் உள்ள கறையை போக்க பஸ்ஸை திரும்ப வீட்டுக்கு அழைத்து வர  woody செய்யும் சாகசங்களே கதையின் மிச்சம்.

 முழுக்க முழுக்க ஒரு குழந்தைகள் திரைப்படமாக எடுத்த இப்படம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திரைப்படம், 1995க்கு முன் வரை உயிரோவிய துறை மூலம் வெளிவந்த படங்கள் 2 பரிமாணங்கள் அதாவது கார்ட்டூன் படங்களாகவே இருந்தன. டாய் ஸ்டோரி தான் முதல் முப்பரிமான படமாக வெளியானது. அதாவது முழுக்க முழுக்க முப்பரிமான கதாபாத்திரங்கள் கொண்டே எடுக்கப்பட்ட படம் (உயிர் உள்ள எந்த ஜீவனும் நடிக்காத படம்), 15 வருடங்கள் கழித்து இன்று பார்க்கும் போது முப்பரிமான உயிரோவிய திரைப்படங்கள் பெரிய நட்சத்திர நடிகர்கள் நடித்து வெளியான படங்களுக்கும் மேலாக வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் வந்த டாய் ஸ்டோரியின் மூன்றாவது பாகம் இதுவரை அதிக வசூலான படங்களில் 9 வது இடத்தை பிடித்திருக்கிறது. ஷெரேக்(shrek) படத்தின் இரண்டாம் பாகம் 14 வது இடத்திலும் ஐஸ் ஏஜ் (ice age: dawn of the dinasaur)ன் மூன்றாவது பாகம் 18 வது இடத்திலும், பைன்டிங் நிமோ(finding nemo) 21 வது இடத்திலும் இருப்பதை பார்த்தாலே தெரியும் முப்பரிமான திரைப்படங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு. 

டாய் ஸ்டோரி திரைப்படம் 30 மில்லியன் டாலர் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம், 20 மில்லியன் டாலர் விளம்பரத்திற்கு தனியாக பட்ஜெட், மொத்தம் 110 உயிரோவிய கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. முதலில் 27 உயிரோவிய கலைஞர்களை கொண்டு 400 வெவ்வேறான முப்பரிமான கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன, அதிலிருந்து படத்திற்கு  தேவையான கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. முப்பரிமான கதாப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்ட பிறகு இயக்கங்கள் (motion control ) கொடுக்கப்பட்டன, அதாவது நடக்க, பேச, குதிக்க, இதுபோன்ற இயக்கங்களை தயார் செய்தனர். woody கதாபாத்திரத்திற்கு  723 இயக்கங்களை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. அதன் முகத்திற்கு மட்டுமே 212 ம் வாய்க்கு 58 தனித்தனி இயக்கங்களும் தயார் செய்தனர். குரல் கொடுப்பவரின்  குறளுக்கேற்ப உதட்டு அசைவுக்கான இயக்கங்களை கொடுக்கும் போது, ஒரு வரைகலை கலைஞர் 8 செகண்டுக்கான பிரேம்(frame) முடிக்க ஒரு வாரம் எடுத்துக்கொண்டதாக அறியப்படுகிறது. கதாபாத்திரங்களும் அதற்கு தேவையான இயக்கங்களும் தயாரான பிறகு ஸ்டோரி போர்டு தயாரிக்கப்பட்டு வண்ணம் கொடுக்கப்பட்டு, ஒளி, ஸ்பெஷல் எபக்ட்ஸ் எல்லாம் சேர்த்து படம் ஒரு சராசரி நடிகர்களை வைத்து எடுத்தால் எப்படி எடுக்க வேண்டுமோ அப்படி முடிக்கப்பட்டது.

இந்த படத்திற்கு பின் 3D தொழில் நுட்பத்திற்கு இருக்கும் வரவேற்ப்பை  பார்த்த பிறகு, கணினிகளில் வரைகலைக்கு ஏற்றவாறு பல கிராபிகல் சிப்புகள் வெளிவந்தன. மேலும் வீடியோ  விளையாட்டு தொழிலில் 3D தொழில் நுட்பம் செல்வாக்கு பெற்றது. இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் கணினிகளிலும் நல்ல தரமான கிராபிகல் ஆக்சிலேட்டர் கார்ட் வசதியோடு வர ஆரம்பித்து விட்டது. டிஸ்னியின் புகழ் பெற்ற கதா பாத்திரங்களின் வரிசையில் woody யும் பஸ்சும் இனைந்து  விட்டன, டிஸ்னி லேன்ட்டில் இந்த 2 கதாபாத்திரங்களை கொண்ட பல நிகழ்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

மொத்தத்தில் டாய் ஸ்டோரி, திரைப்படங்களில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு வரலாற்று நிகழ்வு.    

(உலகின் அதிக வசூலான படங்களின் பட்டியலை இந்தக்கட்டுரையின் பின் இணைப்பாக கிழ் கண்ட வலைத்தளத்தில் காணலாம்)

http://en.wikipedia.org/wiki/List_of_highest-grossing_films

பிபூதிபூசன் பண்டோபாத்யாய் என்பவர் எழுதிய நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. 

வங்காளத்தின் ஒரு கிராமிய சூழலில் இந்த படத்தின் களம் அமைந்திருக்கிறது. ஹரிஹர் என்பவர் ஒரு ஏழை பிராமணன், அவருக்கு வேதம் ஓதுதலை விட எழுத ரொம்ப பிடிக்கும், தனது எழுத்தாற்றல் அவருடைய வறுமையை போக்கும் என்ற நினைப்பில் நிறைய எழுதுகிறார் துருதிஷ்டவசமாக அவருடைய படைப்புகள் எதுவும் அவர் வறுமையை போக்கவில்லை. ஹரிஹரின் மனைவி சர்பஜெயா,  கிடைக்கும் வருமானத்தில்  தன் குடும்பத்தை ஒருவாறு நிர்வகித்து கொண்டிருக்கிறாள். ஹரிஹர் சர்பஜெயா தம்பதிக்கு துர்கா என்ற பெண் ஒருத்தி இருக்கிறாள், கதையின் போக்கில் அப்பு என்கிற ஒரு மகனும் பிறக்கிறான். குடும்பத்தில் இன்னொரு உறுப்பினராக ஹரிஹரின் மூத்த சகோதரி ஒருவளும் இருக்கிறாள், வயதான மூதாட்டியான அவள்  அடிக்கடி சர்பஜெயாவிடம் சண்டை போட்டுகொண்டு தனது உறவினர்களின் வீட்டில் போய் தங்கிவிட்டு மீண்டும் ஹரிஹர் வீட்டுக்கே திரும்பி விடுவாள். துர்கா துடுக்கான ஒரு பெண், தன் வீட்டிற்க்கு அருகில் உள்ள வீட்டின் மரங்களில் இருந்து பழங்களை திருடிவிட்டதாகவும்  ஒரு சமயம் சிருமனியால் ஆன ஒரு கழுத்து சங்கிலியை திருடி விட்டாள் என்றும் புகார்கள் வந்தவன்னம் இருக்கும் இதனால் சர்பஜெயா மிகுந்த வேதனைபட்டாள், மேற்கொண்டு வாங்கிய கடனை திரும்பி கொடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தாள்.  ஹரிஹர் தன் குடும்ப வறுமையை போக்க அருகிலுருக்கும் நகரம் ஒன்றிற்கு வேலைக்கு செல்கிறார், சென்றவர் வெகு நாட்கள் ஆகியும்  வீடு திரும்பவே இல்லை, கடிதம் ஒன்றின் மூலமாக சென்ற காரியம் ஈடேறவில்லை ஆதலால் போதுமான பணம் சம்பாதித்து வர சிறிது காலம் ஆகும் என தகவல் கூறி இருந்தார். இந்நிலையில் துர்கா தனது தம்பி அப்புவின் ஆசையை நிவர்த்தி செய்யும் பொருட்டு ரயில் போவதை பார்க்க  செல்கின்றனர் ஆனால் மழைகாலம் ஆதலால் துர்கா மழையில் நனைய வேண்டியதாகிறது, இதனால் காய்ச்சல் வருகிறது, வறுமையின் பிடியில் இருப்பதால்  சரியான  சிகிச்சை கொடுக்க முடியவில்லை. காய்ச்சல் மோசமாகி துர்கா இறக்க நேரிடுகிறது. பலத்த மழையின்  காரணமாக வீடு மிகுந்த சேதாரத்திற்கு உள்ளாகிறது இந்நிலையில் ஹரிஹர் வீடு திரும்புகிறார் துர்கா இறந்த செய்தி கேள்விப்பட்டு மனமுடைந்து  அழுகிறார். கடைசியில் தனது மூதாதையரின் வீட்டையும் அந்த கிராமத்தையும்  விட்டு விட்டு குடும்பத்தோடு ஹரிஹர் ஒரு வண்டியில் ஏறி கிளம்புவதாக படம் முடிகிறது.  

படத்தில் துர்கா கதாபாத்திரம் வெகு அருமையாக வடிவமைக்கப்பட்டிருகிறது, சிறுமியின் நடிப்பு படத்திற்கு முதுகெலும்பாக அமைகிறது. துர்கா இறந்த பின் களவு போன சிருமனியால் ஆன கழுத்து சங்கிலி அப்புவிற்கு கிடைப்பதும் தனது இறந்த அக்காவின் மேல் பழி வரகூடாது என்று அதை ஒரு குட்டையில் எறிவதும் நெஞ்சை நெகிழ செய்கிறது. ஹரிஹரின் சகோதரியாக வரும் மூதாட்டியின் நடிப்பும் வெகு பிரமாதம், காட்டுப்பகுதியில் மூதாட்டி அனாதையாக இறந்து கிடக்கும் காட்சி மனதை நெருடுகிறது. இந்தப்படம் சத்யஜித்ரேவின்  முதல்படம், வறுமை கொடியது,  கொடிதான வறுமையை கொஞ்சம் கூட குறையாமல் நம்மை உணர செய்கிறார் இயக்குனர்.

இந்தப்படம் போரால் என்ற வங்காள கிராமத்தில் படமாக்கப்பட்டது. இந்தப்படம் சத்யஜித் ரே விற்கும் அவருடைய ஒளிப்பதிவாளருக்குமன்றி, தொழில்நுட்ப கலைஞர்கள் பலருக்கு முதல் படம். இந்த படத்தை முதலில் ரே அவர்களே தயாரித்தார். போதுமான பணம் இல்லாத காரணத்தால் தயாரிப்பு தடைபட்டு, தடைபட்டு தொடர்ந்தது, வரைகலை நிபுணராக பணியாற்றி அதன் மூலம் வந்த வருவாயிலும், தன் மனைவியின் நகைகளை விற்றும் படம் முடியவில்லை, கடைசியில் வங்காள அரசு உதவியுடன் இந்த படம் முடிக்கப்பட்டு திரையிடப்பட்டது.  சத்யஜித்ரே படம் தாமதமாக முடிந்தபிறகு  3 காரணங்களால் இந்த படம் காப்பாற்றப்பட்டது, அப்புவின் மழலைதனமான குரல் உடையவில்லை, துர்கா அதிகம் வளரவில்லை, மூதாட்டி இந்த்ரால் இறக்கவில்லை என்று வேடிக்கையாக  சொன்னார்.

1956 ஆம் ஆண்டின் சிறந்த இந்திய படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 1956  ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த மனித ஆவணம்(best human document) என்ற விருதும், இதை தொடர்ந்து இந்த படத்திற்கு சர்வதேச அளவில் நிறைய விருதுகள் கிடைத்தது.

ரபிந்திரநாத் தாகூர்  எழுதிய Nastanirh ( The broken Nest ) என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.  இது 1964 ம் ஆண்டு சத்யஜித்ரே அவர்களால் இயக்கப்பட்டது. 15 வது பெர்லின் திரைப்பட விழாவில்  இந்த படத்திற்கு  வெள்ளி கரடி  பரிசு 2 வது முறையாக சத்யஜித்ரே அவர்களுக்கு கிடைத்தது. 1965 ஆம் ஆண்டு சிறந்த படத்துக்கான   மத்திய அரசின் தங்கத் தாமரை விருது இந்த படத்திற்கு கிடைத்தது.

ஆங்கிலேயர் ஆண்ட இந்தியாவில்(கொல்கத்தா) கதைக்களம், சாருலதா ஒரு படித்த அறிவுஜீவியான பூபதி என்பவரின் மனைவி. சாரு பெரும்பாலும் தனிமையிலேயே தன் வாழ்கையை கழித்துக் கொண்டிருந்தாள் காரணம் அவளின் கணவன் தன் மொத்த நேரத்தையும்  தி செண்டிநெல் என்ற ஒரு ஆங்கில பத்திரிகையை நடத்துவதிலேயே செலவிட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது மைத்துனரும் மைத்துனரது  மனைவியும் அவர் இல்லத்திற்கு விருந்தாளியாக வருகிறார்கள். இவர்களுடன் பூபதியின் சகோதரனும்(cousin  brother) வருகிறார். பூபதி தனது மனைவியின் தனிமையை  போக்க தனது சகோதரனை சாருவின் எழுத்தாற்றலை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறார். இதன் மூலம் சாருவும் பூபதியின் சகோதரரும்  சற்று நெருக்கம்  ஆகிறார்கள். சாருவிற்கு நாள் ஆக ஆக அவர் மேல் ஈர்ப்பு அதிகம் ஆகிறது. இந்நிலையில் விருந்தாளியாக வந்த பூபதியின் மைத்துனர் அவருடைய பணத்தை களவாடிக் கொண்டு போய்விடுகிறார். தன் நம்பிக்கையை இப்படி வீணாக்கிவிட்டு போய்விட்டானே  என் மைத்துனன் என்று தனது சகோதரனுடன் புலம்பும்போது அதை தன் நிலையுடன் (சாருவிற்கு தன் மேல் உள்ள  ஈர்ப்பை)  ஒப்பிட்டு பார்த்து வீட்டை விட்டு வெளியேறுகிறார் பூபதியின் சகோதரன். சில நாட்கள் கழித்து சகோதரனிடம் இருந்து வந்த கடிதத்தை சாரு படித்து விட்டு, அழுது புலம்பும் போது அதை பார்த்து பூபதி அதிர்ந்து போகிறார்…. இப்படியாக படம் முடிகிறது. 

இந்த படத்தில் கதாநாயகி சாருலதா ஊஞ்சலில் ஆடிக்கொண்டே ரபிந்திர நாத் தாகூரின்  பாடலை பாடும் காட்சி சினிமா ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட காட்சி. தான் எடுத்த படங்களிலேயே மிக குறைவாக தவறு செய்தது இந்த படத்தில் தான் என சத்யஜித் ரே கூறுவார், மேலும் இந்தபடத்தை மறுபடியும் எடுக்க சொன்னால் அதை இப்போதிருப்பதை போலவே எடுப்பேன் எனவும் கூறுவார்.