Archive for the ‘உள்ளூர் சினிமா’ Category

விந்துதானம் பற்றிய விக்கி டோனர் திரைப்படம்

Posted: ஜூன் 28, 2012 in உள்ளூர் சினிமா
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

விக்கி டோனர் என்ற இந்த ஹிந்திப்படம் ஹிந்திப்பட முன்னணி நடிகர் ஜான் ஆபிரகாமால் தயாரிக்கப்பட்டு ஷூஜீத் சர்க்கார் என்பவரால் இயக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் ஈரோஸ் நிறுவனத்தால் 750 திரைகளில் திரையிடப்பட்டு வெற்றிப்படமாக பேசப்பட்டது.

டாக்டர் பல்தேவ் சத்தா, குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு உதவிபுரியும் பெர்டிலிட்டி எக்ஸ்பெர்ட்(FERTILITY EXPERT). உயர் வகையான, சிறப்புத்தன்மை வாய்ந்த தரமான விந்துவை தருவோம் என்ற உத்திரவாதத்துடன், விந்து வங்கியுடன் கூடிய ஒரு சிறிய மருத்துவமனையை டெல்லியில் நடத்திவருகிறார். துர்ரதிஷ்டவசமாக அந்த உத்திரவாதத்தை அவரால் சரிவர நிறைவேற்றமுடியாமல் போகிறது, சரியான விந்து கொடையாளி கிடைக்காததே இதற்க்கு காரணம். அதன் காரணமாக டாக்டர் சத்தா தனது தேடுதல் வேட்டையை ஆரம்பிக்க விக்கி அரோரா என்ற நமது கதாநாயகனை கண்டறிகிறார். விக்கி ஒரு விதவை பஞ்சாபி தாய் டாலி என்பவளின் மகன். விக்கி, வேலை தேடும் ஒரு இளைஞன், வீட்டின் வருமானம் அவன் தாய் நடத்தும் ஒரு சிறிய அழகு நிலையத்தை நம்பியே இருக்கிறது.

இந்நிலையில் டாக்டர் படாத பாடுபட்டு விக்கியை விந்துதானம் செய்ய சம்மதிக்க வைக்கிறார். டாக்டர் சத்தாவின் நம்பிக்கை வீண் போகவில்லை, விக்கி நல்ல தரமான, சக்தி வாய்ந்த விந்து கொண்டவன் என்பது ஆய்வில் தெரியவருகிறது. பின் என்ன டாக்டரின் வாடிக்கையாளர்கள் திருப்தி படுத்தப்படுகிறார்கள், விக்கியின வருமானம் பெருக, அவனின் பொருளாதாரத் தேவைகள் பூர்தியடைகின்றன. இதற்க்கிடையில் விக்கி வங்கியில் பணிபுரியும் ஆஷிமா என்ற ஒரு பெங்காலி பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறான், பல இடையூறுகளுக்கு அப்பால் இருவரும் மனம் புரிகின்றனர்.

திருமணத்திற்கப்பால் டாக்டர் சத்தா, விக்கியால் புறக்கணிக்கப்படுகிறான். அப்படியும் சில சமயம் மனைவிக்கு தெரியாமல் விக்கி தானம் செய்கிறான் ஒரு கட்டத்தில் டாக்டரிடம் இருந்து விக்கி முழுமையாக விலகி விடுகிறான். இதற்கிடையில் ஆஷிமாவல் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று டாக்டர்கள் கூற தம்பதிகள் உடைந்து போகிறார்கள், அதே கால கட்டத்தில் ஆஷிமவிற்க்கு விக்கி ஒரு  விந்து கொடையளி என்று தெரியவந்து அதன் காரணமாக பிரிகிறார்கள். குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டு விக்கி தனிமைப்படுத்தப்படுகிறான்.

இந்நிலையில் டாக்டர் சத்தா, பிரிந்த தம்பதிகளை இணைக்க விக்கியால் கொடயளிக்கபட்டு குழந்தைப்பேறு பெற்ற தம்பதிகள் அனைவரையும் அவர்களின் குழந்தைகள் சகிதம் மருத்துவமனையின் வெள்ளி விழாவிற்கு அழைக்கிறார், அதே நாளில் ஆஷிமாவையும், விக்கியையும் அங்கு வரவழைக்கிறார். ஆஷிமா குழந்தைப்பேறு இல்லாத நிலையில்தான் அங்கு வந்திருக்கும் எல்லா தம்பதிகளும் முன்பிருந்தனர் அவர்கள் வாழ்வில் விக்கியால் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு சந்தோசமாக இருப்பதை ஆஷிமாவால் உணரச் செய்கிறார் டாக்டர். 53 குழந்தைகள் அவனால் கொடயளிக்கப்பட்டதையும் அந்தக் குடும்பங்களின் மகிழ்ச்சியையும் கண்டு மனமாற்றமடைகிறாள் ஆஷிமா. மேலும் விக்கியால் கொடையளிகப்பட்டு பிறந்த ஒரு குழந்தை அதன் பெற்றோரை இழந்து அனாதைக்காப்பகத்தில் இருப்பதை கண்டறிந்து அக்குழந்தையை விக்கி, ஆஷிமா தம்பதிகளுக்கு தத்து எடுக்க உதவுகிறார் டாக்டர். பின்பு என்ன சுபம் தான்.

விக்கி டோனர் விந்துதானம் மற்றும் குழந்தைப்பேரின்மையையும் அடிப்படையாகக் கொண்டது என்றாலும் கூட அடிப்படையில் இது ஒரு நகைச்சுவைக் காதல்கதை என்றே சொல்லலாம்.  இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜான் ஆபிரகாம், இப்படம் நல்ல கதையமைப்பை கொண்டிருப்பினும் நான் இப்படத்திற்கு ஏற்றவனாக இருக்கமாட்டேன் அதனால் தான் வீடியோஜாக்கியும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான குரானா இயக்குனரால் தேர்ந்தெடுக்கப்பட அதை வழிமொழிந்ததாக கூறி இருக்கிறார். விக்கி கதாபாத்திரத்தில் குரானா அருமையான நடிப்பை வெளிப்படுத்தியது படம் பார்த்தவர்களுக்கு நன்கு விளங்கும், ஆசிமா கதாபாத்திரத்தில் நடித்த யாமி கௌதம் மற்றும் டாக்டராக வரும் அன்னு கபூரும் அருமையாக நடித்திருகின்றனர்.

இன்றைய கால கட்டத்தில் திருமணமாகும் 100ல் 50 பேருக்கு உடனே குழந்தைப்பேறு என்பது சாத்தியமற்றுப்போகிறது. மருத்துவர்கள் பல காரணங்களை ஆய்வு ரீதியாக கூறும் நிலையில் இப்படத்தை விந்துதானம் பற்றிய விழிப்புணர்வு படமாகவோ, இல்லை அடல்ட் காமெடி வகையாகவோ எடுத்துக் கொண்டாலும் முகம் சுழிக்கும் அளவிற்கு அருவெறுக்கத்தக்க வகையில் ஒரு காட்சியும் இல்லை.

படத்தின் சில முக்கியக் காட்சிகளின் தொகுப்பு 

பெங்காலி Vs பஞ்சாபி காட்சி 

சமீபத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி? படத்தை பார்த்து நண்பர்களிடம் அந்த படத்தை பற்றி விவாதித்து கொண்டிருக்கையில் ஒரு நண்பர் சொன்னார்  இதே  GENEREல  ஹிந்தியில் PYAR KA PANCHNAMAனு படம்  வந்திருக்கு பார்த்தீங்கலான்னு கேட்க உடனே பார்க்கணும்னு பிரியப்பட்டு பார்த்தேன்.

இந்த படத்தின் தலைப்பே வித்தியாசமானது பஞ்சநாமா-ங்கற வார்த்தைக்கு    ஹிந்தியில் POST MORTEM REPORTனு அர்த்தமாம், PYAR KA PUNCHNAMA னா POST MORTEM OF LOVE, வித்யசமா தானே இருக்கு… காதலில் சொதப்புவது எப்படி டாக்குமெண்டரி ஸ்டைல்ல எடுக்கப்பட்ட ஒரு காதல் கதை என்பது படம் பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும், இந்தப்படம் ரொமாண்டிக் காமெடி வகை.  IT நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று இளம் வாலிபர்கள் காதல் வலையில் சிக்குண்டு எப்படி தத்தளிக்கிறார்கள் என்பதே கதை. 

ரஜத், நிஷாந்த(லிக்கியுட்), சௌத்ரி என்ற மூன்று நண்பர்கள் ஒரே வீட்டில் தங்கி பணிபுரிகிறார்கள். ரஜத், நேஹா என்ற பெண்ணுடன் காதல் கொள்கிறான், அவளுடன் LIVING TOGETHER முறையில் குடும்பம் நடத்துகிறான், நாள் போகப்போக அந்த உறவுமுறை ரஜத்தை துன்பத்தில் தள்ளுகிறது. நிஷாந்த தன்னுடன் பணிபுரியும் சாரு என்ற பெண்ணுடன் காதல் கொள்கிறான், அவளுக்காக அவளுடைய பணியை இவனே பலமுறை செய்து தருகிறான், ஏறக்குறைய அவளுடைய காலிலேயே விழுந்து கிடக்கிறான் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவளுக்கு ஏற்கனவே ஒரு BOY FREIND இருப்பது தெரிந்தும் இவனுடைய காதலை அவள் ஏற்காத பிறகும் நட்பு என்ற போர்வையில் அவளை காதல் கொள்கிறான், இந்த விஷயம் தெரிந்தும் அவள் இவனை பயன்படுத்திக் கொள்கிறாள். அவளுடைய வேலைகளை செய்வது, இரவில் துணையாக வீடு வரை செல்வது, அவளுக்கு BEAUTY PARLOUR செலவு உட்பட இவனே செய்கிறான். சௌத்ரி, ரியா என்ற பெண்ணை காதல் கொள்கிறான் அவள் ஏற்கனவே LIVING TOGETHER RELATIONSHIPல் ஒருவனோடு 5 வருடம் இருந்தவள் அவர்களுக்குள் உள்ள இடைவெளியில் இவன்பால் மையல் கொள்கிறாள். சௌத்ரி, ரியா பழைய காதலனை மறந்துவிட்டாள் என்று நினைத்து அவளுடன் பழகுகிறான் ஆனால் நாட்பட நாட்பட ரியா இன்னும் பழைய காதலனோடு நாட்களை கழிப்பது தெரிய வருகிறது. இப்படி மூன்று பேர்களும் காதலின் பிடியில் சிக்கி பின் போதும்டா சாமின்னு அந்த பெண்களை விட்டு வருவதே மீதி கதை.

இந்தப் படத்தை பொறுத்த வரையில் காதல் என்பதே ஆண்களை கையகப்படுத்த பெண்கள் கையாளும் ஒரு ஆயுதமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள(செக்ஸ் உட்பட), தனக்கு துணையாய் ஒரு செக்யூரிட்டி வேலை பார்க்க, இப்படி நீண்டு கொண்டே போகிறது லிஸ்ட்.

படத்தின் ஒரு காட்சியில் மூன்று வாலிபர்களில் ஒருவன், இந்த பெண்கள் ஒரு காதல் தோல்விக்குப் பின் வெகு எளிதாக இன்னொருவனை கவிழ்த்து விடுகிறார்கள். நம்ம பசங்களுக்குள்ள ஒரு ஒற்றுமையே இல்லை, இப்படி பட்ட பெண்களை 2 வருடங்களுக்கு எந்த ஆணும் காதலிக்க கூடாது என்ற சட்டம் வரவேண்டும் என்ற வசனம் நகைச்சுவையாக இருந்தாலும் ஆண்களின் இயலாமையை நினைத்தால் கஷ்டமாகத் தான் இருக்கிறது. (பொதுவாக எதிர்பாலர் மேல் ஒரு மோகம் எல்லோருக்கும் இருக்கும், இது பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே அதிகமாக இருக்கிறது; காரணம், பெண்கள் சுலபமாக தனக்கு துணையை தேர்ந்து எடுக்க முடிகிறது. ஆனால் ஆண்கள் நிறைய போராட்டத்திற்கு பின்னே ஒரு பெண்ணின் மனதில் இடம் பெற முடிகிறது).

பெண்களை காதலிக்க ஆரம்பிக்கும் போது அவளுக்காக காத்திருப்பதும், ஏவல் பணி புரிவதும் சுகமாக இருக்க… நாள் போகப்போக காதலியை தவிர்ப்பதும் அவளை விட்டு தனியாக பிக்னிக் போக நினைத்து பின் அவரவர் தத்தம் காதலிகளோடு  கோவா சென்று அங்கே அவதிப்படுவதும் நல்ல காட்சி அமைப்பு. நல்ல திரைக்கதை, அருமையான கதாபாத்திரங்கள், விழுந்து விழுந்து சிரிப்பீர்கள் சில காட்சிகளில், பாடல்களும் நன்றாகவே உள்ளது.

மொத்தத்தில் இந்தக் கதை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது காரணம் பெண்கள் ஆண்களை அவ்வளவு துன்புறுத்துவது போல கதை உள்ளது. அரக்க குணம் கொண்டவள் பெண் என்பது போல சித்தரிக்கப்பட்டிருகிறது ஆண்களுக்கும் இந்தப் படம் பிடிக்க வாய்ப்பு இல்லை காரணம் இந்தப் படத்தில் வரும் நாயகர்கள் பெண்களின் காலடியில் விழுந்து கிடப்பது போலவே படம் முழுதும் உள்ளது. ஆண்மைத்தனம் என்று சொல்லக்கூடிய ஒரு விசயமும் இல்லை படத்தில்.

படத்தில் எனக்கு பிடித்த மிக முக்கியமான காட்சி உங்கள் பார்வைக்கு

சோகத்தில் எல்லாம் பெரிய சோகம் புத்திரசோகம் என்று நமக்கு ராமாயணம் முதற்கொண்டு பல நூல்கள் எடுத்து இயம்பி இருக்கின்றன, அதை மூலக்கருவாக வைத்து எடுத்த படமே தெய்வத் திருமகள். படம் வருவதற்கு முன்னமே படத்தின் தலைப்பினால்   சர்ச்சை,  படத்தின் கதைதிருடப்பட்டது என்று மற்றொரு சாரார், படத்தை பார்த்து வீடு திரும்புபவர்கள் அழுது  வடிந்து திரும்புகின்றனர் என்ற அளவிற்கு உணர்சிகளை தூண்டும் படியாக உள்ளது படம் என்று  நண்பர்களின்  விமர்சனம்,  சரி அப்படி என்னதான் இருக்கிறது இந்த படத்தில்….

படத்தின் கதை ஒரு தந்தையிடம் இருந்து  பிரிக்கப்பட்ட குழந்தையை  சட்ட பூர்வமாக  அவர் மீட்டு எடுப்பதே. திரைக்கதையில்  பெரிய  திருப்பங்களோ, வீர தீர செயல்களோ,  புது தொழில் நுட்ப யுத்திகளோ   துளியும் இல்லை. அப்புறம் எதற்கு இந்த திரைப்படத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு. ஆங்கிலத்தில் HUMAN VALUES என்று சொல்வார்கள் அந்த விஷயம் மட்டுமே இந்த படத்தின் மூலக்கருவாக வைத்து இயக்குனர் களம் இறங்கி இருக்கிறார். ஒரு தந்தை, அவர் குழந்தை, அவர்களின் பாசம், பிரிவின் துயரம், அந்த இருவரை இந்த சமூகமும் அவரது சுற்றாரும் பார்க்கும் பார்வைகளின் கோர்வை மட்டுமே இந்த படம்.

 வழக்கமாக தமிழ் திரைப்படங்களில் செண்டிமெண்ட் காட்சிகள் நீளமான வசனங்களையும், அழுகை காட்சிகளையும், கொண்டதாக இருக்கும். இந்த படத்தில் நடித்தவர்கள் அழுதோ, இல்லை நீளமான வசங்களை பேசியோ நமது பொறுமையை சோதிக்கவே இல்லை, நமக்கு சிவாஜிகளையும், மனோரமாக்களையும் இந்த படம் ஞாபகப்படுத்தவே இல்லை இருந்தும் நல்லதொரு செண்டிமெண்ட் படம் என்றே கூற வேண்டும். 

விக்ரமின் நடிப்பை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், இருப்பினும் இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகளையும் விளம்பர காட்சிகளையும் பார்த்தபோது விக்ரம் கொடுத்த காசுக்கு மேல நடிச்சு நம்மை கொல்லப்போகிறார் என்று நினைத்து போனால் நம்மை ரொம்பவே வியக்க வைத்து விட்டார், அநியாயத்திற்கு அடக்கி வாசித்திருக்கிறார், அளவான நடிப்பு. வழக்கமாக இது வரை தமிழ் திரைபடத்தில்  மன வளர்ச்சி குன்றியவர்களாக நடித்தவர்கள் யாரையும் ஞாபகப்படுத்தவில்லை, பிரமாதம். அவரை விட அவரின் குழந்தையாக வரும் சிறுமி அசத்தி இருக்கிறார். அனுஷ்காவும், சந்தானமும் வியாபாரத்திற்காக இணைத்தவர்கள் என்று நன்றாகவே தெரிகிறது இருப்பினும் நன்றாகவே நடித்து இருக்கிறார்கள். இடைச் சொருகலான அனுஷ்காவிற்கு கொடுக்கப் பட்ட பாடலை தவிர்த்து பார்த்தால் பாடல்களும் பின்னணி இசையும்  அருமை. படத்திற்கு தேவை இல்லை என்பதை தவிர்த்து பார்த்தால், இந்தப் பாடலும் அருமையாகவே படமாக்கப்பட்டுள்ளது,

 தெய்வத் திருமகளை பார்ப்பதற்கு முன் 2  ஆஸ்கார் விருதை  வென்றிருக்கும்  SEAN PENNன் நடிப்பில் ஆங்கிலத்தில் வந்த I AM SAM  படத்தையும் பார்க்க சொனார்கள் சில நண்பர்கள். I AM SAM  படத்தின் சில காட்சிகளை இணையத்தில் பார்த்தேன், அப்பட்டமான திருட்டு என்று குற்றம் சாட்டுபவர்களின் கூற்று உண்மை போல தான் தெரிகிறது. ஆனால் நல்ல இலக்கியங்களை மற்ற மொழிகளில் இருந்து மொழி மாற்றம் செய்வதை தொன்று தொட்டே செய்து  இருகின்றார்கள் ஏன் திரை படங்களில் மட்டும் மற்ற மொழிப் படங்களை தமிழில் எடுக்கும் போது திருட்டு என்ற குற்றச்சாட்டுகிறார்கள்.   வெளிப்படையாக இயக்குனர்களோ நடிகர்களோ தழுவி எடுக்கப் பட்ட கதை என்பதை  ஒத்துக்கொள்ளாததற்கு இது ஒரு காரணமாக இருக்குமோ? சில வருடங்களுக்கு  முன்பு ராம்கோபால்வர்மாவின் சர்கார் படம் பார்த்தபோது படத்தின் ஆரம்பத்திலேயே அவர் காட்பாதர் கதை தான் இந்த படம் எடுக்க  தூண்டியதாக  முன்னுரை செய்து இருப்பார் இதுபோன்ற துணிச்சல் தமிழ் இயக்குனர்களுக்கு இல்லாதது தான் இதற்க்கு காரணம் என்று நினைக்க தோன்றுகிறது.

இந்தப் படத்தின் கதையை இயக்குனர் விஜய், விக்ரமிற்கு  எப்படி விளக்கி இருப்பார்,   ஏன் என்றால் இது ஒரு THIN LINE STORY,  SEAN  PENN நடித்த IAMSAM  திரைப்படத்தை  போட்டு காண்பித்து  இருப்பாரோ? அப்படியானால் இது விஜயின் படம் என்று சொல்வதை விட
SEANPENN ன் தெய்வத் திருமகள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

சிவத்த செங்குத்துப்பாறை அல்லது ரெட்கிளிப் திரைப்படம், ஒரு சீன வரலாற்றுக் காப்பியப் போர்த் திரைப்படம். இது சீனாவில் கிபி 208-209 காலப் பகுதியில் நிகழ்ந்த சிவத்தப் செங்குத்துப்பாறைப் போரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டது. மூன்று இராட்சியங்கள் அதன் காலப் பகுதியில் நிக்ழ்ந்த அந்தப் பெரும் போர்களையும், அவற்றை ஒட்டிய நிகழ்வுகளையும் இப் படம் சித்தரிக்கிறது.

கி மு 208 இல் ஹான் பேரரசு தனது இறுதி காலத்தில் இருக்கும் போது நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பே இந்த திரைபடம்.  ஹான் பேரரசின் பிரதம மந்திரி கோ கோ (Cao  Cao)  ஒருங்கிணைந்த சீனத்தை உருவாக்க கிழக்கு பகுதியின் மீதும் தெற்கு பகுதியின்  மீதும் படையெடுக்க ஹான் பேரரசின் அரசரிடம் இசைவை பெற்று ஒரு பெரும் படையுடன் கிழக்கு நோக்கி பயனப்படுகிறார், போரில் Liu Bei அரசான Xu வம்ச அரசு வீழ்த்தப்படுகிறது, அகதிகளாய் போன தன மக்களுடனும், சொற்ப வீரர்களுடன் Liu  Bei, தெற்கு பகுதியை ஆளும் Wu வம்சத்தின்  Sun  Quan உதவியை கோருகிறார். அவருடன் இனைந்து Cao  Cao வின் கப்பற்படையை இறுதிப் போரில் வெல்வதே கதையின்  மீதம். 

சிவத்த செங்குத்துப்பாறை திரைப்படம் ஆசியாவில் இரண்டு பாகங்களாய் வெளியானது, மொத்தத்தில் 4  மணி நேரத்திற்கும் மேலான கதையமைப்பு கொண்டது. முதல் பாகம் ஜூலை  2008லும் இரண்டாம் பாகம் ஜனவரி 2009லும் வெளியானது. ஆசியாவை தவிர்த்து மேற்கத்திய திரை ஆர்வலர்களுக்காக இரண்டரை மணி நேர படமாக சுருக்கி 2009  இல் வெளியானது. 80 மில்லியன் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இதுவரை ஆசியாவில் தயாரிக்கப்பட்ட  செலவுகூடிய திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படமே ஆசியாவில் அதிக வருமானம் ஈட்டிய திரைப்படமும் ஆகும். முதல் பாகம் ஆசியாவில் 124 மில்லியன் டாலர் வசூலையும், சீனாவில்  டைட்டானிக் வசூலை முறியடித்ததாக தகவல்.

இப்படத்தை இயக்கியவர்  MISSION IMPOSIBLE II,  FACE  OFF , BROKENARROW  முதலிய ஹாலிவுட்  திரைப்படங்களை இயக்கிய  ஜான் வூ அவர்கள்.

 மகாபாரதத்தில் சக்கர  வியுகம் பற்றியும் அபிமன்யு அதில் சிக்குண்டு இறந்ததை பற்றியும் நாம் படித்திருக்கிறோம். அது போல இந்த திரைப்படத்தில் வியுக முறைகள் நன்கு விளக்கப்பட்டு இருக்கிறது. பெரிய ராஜ்யம் ஒன்றின் பலம் வாய்ந்த போர் வீரர்களை சக்கர வியுகம் போன்ற ஒரு முறை மூலம் சிறிய படையை கொண்டு எப்படி வெல்கிறார்கள் என்பதை வெகு அருமையாக படமாக்கியுள்ளார் ஜான் வூ. அதே போல இரண்டாம் பாகத்தில் கப்பற்படை கொண்டு நடத்தும் போர் காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பற்படை போர் கட்சிகளை படமாக்கும் போது படத்தில்  கப்பல்களை    எரித்து நாசப்படுத்துவது போன்ற காட்சிகள் எடுக்கப் பட்டது, அப்போது நடந்த விபத்தின் போது ஒருவர் இறக்க நேரிட்டது மேலும் 6 தொழில் நுட்பக்கலைஞர்கள் கடுமையான விபத்துக்கு ஆளானார்கள்.

சீனத்தின்  அந்த கால போர்முறைகளையும், ராஜ தந்திரங்களையும் இந்த படம்  நன்கு விளக்குகிறது. period படம் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இது ஓர் அருமையான படம், மேலும் நல்ல தொழில்நுட்பத்தோடு எடுக்கப்பட்ட படம்.

ஜான் வூ ஒரு ஸ்டைல் ஆன இயக்குனர் அவருடைய படங்களில் கதா நாயகர்களுக்கும் வில்லன்களுக்கும் நல்ல பரிணாமங்களை எதிர்பார்க்கலாம், அதை இந்த படத்திலும் நன்கு செவ்வனே செய்து இருக்கிறார்.  எனக்கு நீண்ட நாள் ஆசை ஜான் வூ ஒரு இந்திய படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று, அதிலும் ரஜினி,  சாருக்கான், நாகர்ஜுனா போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும்…

மார்ச் 14 , நேற்றைய நாளில் தான் முதல் இந்திய பேசும் படம் ஆலம் ஆரா மும்பையில் உள்ள மெஜஸ்டிக் திரையரங்கில் 80 வருடங்களுக்கு முன் திரை இடப்பட்டது.  இந்தப் படம் தான் இந்திய திரை இசையின் முன்னோடி எனக் கூறலாம். ஆலம் ஆரா அர்தேசர் இராணி என்பவரால் இயக்கப்பட்டது, இது ஜோசப் டேவிட் என்பவர் எழுதிய ஒரு பார்சி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். 2  மணி நேரமும் 4  நிமிடங்களும்  ஓடக் கூடிய இந்த படத்தில் வித்தல், ஜுபைதா, L .V . பிரசாத் மற்றும் பிரித்திவி ராஜ் கபூர் நடித்துள்ளனர். 
 
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்ப்பை பெற்றது, மேலும் வாசிர் முஹம்மது கான் பாடிய தே தே குதா கே நாம் பர் என்ற பாடல் இந்தியாவின் முதல் சூப்பர் ஹிட் பாடல் என்ற அந்தஸ்தையும் பெற்றது. ஒலிப்பதிவில் இரைச்சலை தவிர்ப்பதற்காக  இந்தப் படம் பெரும்பாலும் இரவிலேயே படமாக்கப்பட்டது, மைக்ரோ போன்களை காமெரா கோணத்தில் அமையாதபடி வைத்து ஒலிப்பதிவு செய்தனர்.  
 
இந்தப் படத்தின் பிரதி இப்போது இல்லை. கடைசி பிரதி 2003 புனேயின் திரைப்பட ஆவணக் காப்பகத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்தின் போது அழிந்துவிட்டது. மூன்று வருடங்களுக்கு முன் தகவல்   தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் ஆலம் ஆரா படத்தின் எந்தப் பிரதியும் தேசிய ஆவணக் காப்பகத்தில் இல்லை என்பதை தெரிவித்தது. இந்தியா முழுவதும் தேடும் பனி தொடங்கியது இருப்பினும் இதுவரை இந்தியாவின் முதல் பேசும் படத்தின் ஒரு பிரதியும் கிடைக்கப் பெறவில்லை.
 
இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா இந்திய வரலாற்றில் பேசாமல் தன் இருத்தலை நமக்கு உணர்த்துகிறது…

படத்தின் தலைப்பை பார்த்து இதை ஒரு முழு நீள காதல் திரைப்படம் என்று நினைத்து திரையரங்கில் நுழைந்தால், இது ஒரு சாதாரண குடும்ப சித்திரம். நம்ம தமிழ் திரைப்படங்களில் குடும்ப சித்திரம் என்பது, உணர்ச்சி வயப்படும் வசனங்களும், செண்டிமெண்ட் காட்சிகளும் கொண்டதாகவே இதுவரை நமக்கு தரப்பட்டிருகிறது அதனால் இதை குடும்ப சித்திரம் என்ற வரையரைக்குள்ளும் எடுத்து வரமுடியாது. அப்போ கமலின் வழக்கமான நகைச்சுவை படம் என்று சொல்லலாமா? அதுவும் சொல்ல முடியாது நமக்கு நாமே கக்கத்தில் விரல் விட்டு சிரிப்பு மூட்டிக் கொண்டால்தான் உண்டு. இது ஆங்கிலத்தனமான குடும்ப திரைப்படம் (family drama) என்று வேண்டுமானால் சொல்லலாம்.

சரி  கதைக்கு வருவோம். மதன் என்கிற ஒரு தொழிலதிபர் அம்புஜா (நிஷா) என்ற நடிகையை காதலித்து  மனம் முடிக்க இருக்கிறார், இதற்கிடையில் அம்புவின் நடத்தை மீது சந்தேகம். அதற்காக துப்பறிய, மன்னார் என்ற கதாபாத்திரத்தை  உளவு பார்க்க அம்பு விடுமுறைக்கு செல்லும்போது உடன் அனுப்புகிறார், மின்சார கனவு பாணியில் மன்னாரே அம்புவைக் கரம் பிடிக்கிறார். இதுதான் படத்தின் ஒரு வரிக்கதை.

ரங் தே பசந்தி, மும்பை மேரி  ஜான், 3  இடியட்ஸ், அன்பே சிவம் போன்ற நல்ல திரைப்படங்களில் நடித்த அனுபவங்களை மாதவனின் நடிப்பில் பார்க்க முடிகிறது. சங்கீதாவின் நடிப்பும் சொல்லும்படியாக இருக்கிறது ஆனால் அது அந்த கதாபாத்திர வடிவமைப்பின் அழகு. சங்கீதாவின் மகனாக வரும் சிறுவனும் சொல்லும் படியாக நடித்திருக்கிறார். மொத்தத்தில் நடிப்பை பொறுத்தவரை எல்லோருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.

கதை ஏற்கனவே சொல்லிவிட்டேன், திரைக்கதைக்கு வருவோம்… நண்பர்கள் சிலர் முதல் பாதி நன்றாக உள்ளது இரண்டாம் பாதி அறுவை என்று கூறினர். என்னை பொறுத்தவரை ஒரு திரைப்படத்தை பாதி பாதியாக பார்க்க  சின்னத்திரை நாடகம் இல்லை. முதல் பாதி பாத்திரங்களை இடம் சுட்டி பொருள் விளக்கவே நேரம் சரியாக உள்ளது. கதையை கொஞ்சம் கூட நகர்த்தியதாக தெரியவில்லை. இரண்டாம் பாதி அவசர அவசரமாக படத்தை முடித்தது போல இருந்தது, இறுதிக் காட்சிக்கு ஆயத்தமாகும் காட்சிகள் நன்றாகவே இருந்தது ஆனால் இது கமலின் பழைய நகைச்சுவை படங்களின் பாதிப்பை அதிகம் உணர வைக்கிறது.

லைவ் ஆடியோ இந்த படத்திற்கு ஒரு நெகடிவ், சில இடங்களில் வசனங்கள் என்னவென்று புரியவே இல்லை. காட்சிமைப்பு அருமை, ஒளிப்பதிவாளருக்கு முதல் படம் என்றால் நம்பவே முடியாது. பாடல் காட்சிகள் சொல்லும்படியாக இல்லை.  காட்சியை திருப்பி போடும் reverse footage பாடல் நிறையபேருக்கு lipsync reverse இல்லாமல் இருப்பதை உணரவே முடியவில்லை. மெனக்கெட்டு செய்திருக்கிறார்கள் ஆனால் அதன் முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்வதிற்கில்லை. டைட்டானிக் கப்பல் போல ஒரு கப்பலில் படமாக்கப்பட்டிருக்கிறது படத்தின் பெரும் பகுதி. கண்ணுக்கு குளிர்ச்சி.

நிறைய நண்பர்கள், படத்தில் காட்சிகள் இணைப்பு வசனங்கள் அல்லது இணைப்பு காட்சிகள் இல்லாமல் இருப்பதை சுட்டிக் காட்டினார்கள். சிலர் இதை நான் லீனியர் வகையான திரைப்படத்திற்குண்டான பாணியில் படத்தின் காட்சிகளை  படத்தொகுப்பு செய்திருப்பதாகவும் கூறுகின்றார்கள், ஆனால் இதை ஒரு குறையாக கூற முடியாது. எல்லாவற்றையும் கூற திரைப்படம் எதற்கு கதாகாலட்சபம் போதுமே.

சரி இந்த படத்தில் கமலையும், இயக்குனர் ரவி குமாரையும் தேடி தேடி அலுத்தேவிட்டது எனக்கு. எந்த ஒரு காட்சியிலும் அவர்களின் முத்திரை தெரியவே இல்லை. பார்த்த களங்களோ, கேட்ட கதைகளோ, இல்லாமல் வெகு நேர்த்தியாக இளம் இயக்குனர்கள் கதைகளை தேர்வு செய்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இது வெறும் சாதாரண ஒரு திரைப்படம். மொத்தத்தில் அம்பு துளைத்தது நமக்கு தான், மேலும் அது அம்பு இல்லை ஆப்பு என்பதை கமல் படம்,  கே.எஸ். ரவிகுமார் படம்  என்ற எதிர்பார்ப்பில் போனவர்கள் நன்கு உணர்வார்கள்… 

இந்து மதத்தை கேவலப்படுத்தி ஒரு பாடல் வந்ததாக அதை கத்தரித்து விட்டார்களாம். ஆனால் தமிழ் தெரு பொறுக்கும்னு ஒரு வசனம். மொழியை கேவலப்படுத்துவதை கூட பொறுத்துக்கொள்வோம், மதத்தை கேவலப்படுத்துவதை விட்டு விட மாட்டோம்.,  ஏனென்றால் நாங்கள் எல்லோரும் கமல் போல பகுத்தறிவு வாதி… ஹி… ஹி….

திருவையாறு P ராஜலக்ஷ்மி  , இவர் தான் தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இவர் தான் முதல் பெண் இயக்குனர் என்று கூறுகிறார்கள்.

ராஜலக்ஷ்மி 1911 இல் திருவையாறில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர், இவரது தந்தை ஒரு குருக்கள். இவருக்கு 11 வயது இருக்கும் போது திருமணம் ஆனது, துரதிர்ஷ்டவசமாக இவரது மன வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னமே முடிந்து விட்டது. வரதட்சனை கொடுக்க முடியாத காரணத்தினால் இவரது கணவர் இவரை விட்டு பிரிந்தார்.  இதனால் மனமுடைந்த இவரது தகப்பனார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்பு ராஜலக்ஷ்மி அவரது தாயாருடன் திருவையாறை விட்டு வெளியேறினார். நாடக கம்பெனி ஒன்றில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்

படத்தில் TP ராஜலக்ஷ்மி அவர்களுடன் சிறுவயது TR மகாலிங்கம்

புகழ்பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள் குழுவில் இனைந்து நாட்டியம், சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றார்.  1931 இல் காளிதாஸ் என்ற படத்தில் கதாநாயகியாய் நடித்த பிறகு இவர் புகழின் உச்சிக்கு சென்றார். இந்த திரைப்படம் தமிழின் முதல் பேசும் படம் என்று அறியப்படுகிறது. முன்னதாக இவர் 1929 லேயே திரையுலகில் காலெடுத்து வைத்தவர், கோவலன் என்ற பேசாத படத்தில் நடித்திருக்கிறார். காளிதாஸ் திரைப்படத்திற்கு பிறகு இவர் அந்நாளைய சூப்பர் ஸ்டார்களாகிய கிட்டப்பா, தியாகராஜ பாகவதர் போன்றவர்களுடன் இனைந்து நடிக்கும் அளவிற்கு பெரிய நடிகையானார். 

 
காந்தியவாதியான இவர் இந்தியத் தாய் என்ற ஒரு திரைப்படத்தை தயாரித்தார், அங்கிலேயர் ஆட்சியில்  தணிக்கையில் சிக்கிய இத்திரைப்படம்  வெளிவராமலே போனதாக தகவல். இருப்பினும் தன்னாலான அளவில் சுதந்திர போராட்டத்தில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். மிஸ். கமலா என்ற திரைப்படம் மூலம் இவர் 1936 இல் இயக்குனர் ஆனார். 1929 முதல் 1950 வரை இவர் 23 திரைப்படங்களில் நடித்திருக்கிறார், இவற்றில் மிஸ் கமலா, மதுரை வீரன் ஆகிய படங்களில் இவர் நடித்தும் இயக்கியும் இருக்கிறார்.
 
 
இவர் நடித்த திரைப்படங்கள்:
 
01 கோவலன் 1929
02 ராஜேஸ்வரி 1930
03 உஷா சுந்தரி 1930
04 காளிதாஸ் 1931
05 சாவித்திரி சத்யவான் 1933
06 பூர்ண சந்திரா 1935
07 லலிதாங்கி 1935
08 பக்த குசேலா 1935
09 குலே பகாவலி 1935
10 பாமா பரிணயம் 1936
11 சீமந்தினி 1936
12 மிஸ் கமலா 1936
13 கவுசல்யா  பரிணயம் 1937
14 அனாதை பெண் 1938
15 மதுரை வீரன் 1938
16 நந்தா குமார் 1938
17 தமிழ் தாய் 1939
18 சுகுணா சரஸா 1939
19 பக்த குமரன் 1939
20 உத்தமி 1943
21 பரஞ்சோதி 1945
22 ஜீவஜோதி 1947
23 இதய கீதம் 1950
 
 
அப்துல் கலாமை முன்மாதிரியாக கொண்டு வாழ்கையில் முன்னேறப் போராடும்  ஒரு ஏழை சிறுவனைப் பற்றிய 87 நிமிட திரைப்படம் ஐ ஆம் கலாம். இந்தப் படம் லண்டனில் நடைபெறவுள்ள உலகத் திரைப்பட விழாவில் பங்குபெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் மேலும் 8 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மே மாதம் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்ட இந்த படம் வரும் டிசம்பரில் திரைக்கு வரவிருப்பதாக தகவல்.
 
படத்தின் களம் ராஜஸ்தான், அங்கு ஒரு தாபா(dhaba)வில் வேலை செய்யும் சிறுவன் சோட்டு, ஒரு நாள் தொலைக்காட்சியில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறைப்பற்றி அறிகிறான், எவ்வளவு இடற்பாடுகளுக்கு இடையில் அவர் படித்து இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்று அறியும் அவன், அவர் போலவே வாழ்வில் நல்ல நிலைக்கு வரவேண்டும், அதற்காக படிக்க வேண்டும் என்று ஆசைகொள்கிறான். அந்த கனவை நோக்கிய பயணமே இந்தப் படம். படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்க்கும் போதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது இந்தப் படம். டெல்லியில் உள்ள ஒரு சேரியில் வசிக்கும் ஹர்ஷ் மயார் என்ற சிறுவன் சோட்டு என்ற கதாபாத்திரமாக நடித்திருக்கிறான். இந்தப் படம் குழந்தை தொழிலாளர்களின் அவலங்களை எடுத்து கூறுவதாக அமையும் என எதிர்பார்க்கிறேன். மேலும் இந்தப் படம் வளரும் நாடுகளில் உள்ள எல்லா மக்களுக்கும் பொருந்தும் விதமாக அமைந்திருப்பதாக படத்தின் இயக்குனர் தெரிவிக்கிறார்.
 
படத்தின் முன்னோட்டக்காட்சி உங்களின் பார்வைக்கு…
 

மனிதன் ஒரு சமூகப் பிராணி இது அரிஸ்டாட்டிலின் வாய்மொழி, அவர் எதுக்கு சொன்னாரோ, இந்தப் படத்தை பற்றி விமர்சிப்பவர்கள் எல்லாம் இயக்குனர் சாமியை ஒரு பிராணியை பார்ப்பது போலத் தான் பார்க்கிறார்கள். வரைமுறை  இல்லாத கோணங்களில் சிந்திக்கிறார், சமூகத்திற்கு தேவை இல்லாத, குரூர எண்ணங்களை விதைக்கிறார் என்று பாய்கிறது ஒரு கூட்டம். சிலர் இதெல்லாம் அன்றாடம் இவ்வுலகில் ஏதாவது ஒரு மூலையில் நடந்து கொண்டு தானே இருக்கிறது, இதை படமாக எடுத்ததில் என்ன தவறு இருக்கிறது, சமூகத்தின் கண்ணாடி தானே கலையும், இலக்கியங்களும் என்றும் சாமிக்கு வரிந்து கட்டி கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.உண்மையில் படம் எப்படி இருக்கிறது,காட்சி வடிவமைப்பிலும், வசனங்களிலும் வக்கிரங்கள் இருக்கிறதா இதையெல்லாம் ஆராயக்கூட விருப்பமில்லாமல், படத்தின் கருவே தவறு என்று அவரை வாய்க்கு வந்தபடி வசவு பாடி, சில இயக்கங்கள் அடித்ததாக கூட கேள்விப்பட்டேன். 

சரி அதெல்லாம் இருக்கட்டும் இது போன்ற வரம்பு மீறிய உறவு முறைகளை நியாயப்படுத்த முடியுமா? நியாயப்படுத்தலாமா? என்னுடைய பள்ளி பருவத்தில் ஆசிரியர் ஒருவர் ஒரு விவாதத்தின் போது சொன்னார், ஒரு காலத்தில் சில பிரிவு மக்களில், தன் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்கும் வீட்டுப் பெரியவர்தான் முதலில் அந்த பெண்ணுடன் உறவு வைத்து கொள்வார் இது ஒரு சடங்காக இருந்ததாக கூறினார், அப்பெண்ணுக்கு பிறக்கும் முதல் குழந்தை தன் தகப்பனை அண்ணன் என்றே கூப்பிடும் பழக்கமும் இருந்ததாகவும், நாளடைவில் இந்த சடங்கு சம்பிரதாயம் போனாலும், முதல் குழந்தை தகப்பனை அண்ணன் என்றும் கூப்பிடும் வழக்கம் வெகு காலமாக நீடித்தே வந்தது என்றும் அறிந்து அதிர்ந்தேபோனேன். மேலும் சில இனங்களில் கடவுளின் பெயரால் பூசாரிகள் இந்த சடங்கை செய்தார்கள் என்றும் நான் படித்து இருக்கிறேன். இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையோ பொய்யோ தெரியாது. ஒரு விஷயம் மட்டும் தெரிகிறது, இந்த காலத்தில் இது சமூகத்திற்கு ஒவ்வாது. ஒவ்வாது என்றால் வழக்கத்தில் இல்லையா? வலைதளங்களில் அடிக்கடி சாட்(CHAT) செய்பவர்களுக்கு இன்செஸ்ட்(INCEST) என்ற வாக்கியம் தெரிந்திருக்கும். இந்த வார்த்தைக்கு அர்த்தம் உறவு முறைகளுடன் உறவு கொள்வது போல கற்பனை செய்து பேசுவது தான் அது. அதிக நேரம் நீங்கள் ஒரு சாட் அறையில் இருந்தீர்களானால் ஒரு அழைப்பாகினும் R U INCEST என்று கேட்டு வரும். அவ்வளவு காமுகர்களும் குரூர எண்ணம் படைத்தவர்களும் நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். 

சரி சமூகத்தில் இதெல்லாம் இருக்கிறது, ஆனாலும் அதை பெரிதுபடுத்தி காட்ட வேண்டிய அவசியம் என்ன? இது திரைப்பட வடிவில் வரும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பது தான் முக்கியக் குற்றச்சாட்டு. கலை விர்ப்பன்னர்களுக்கு என்று ஒரு சமூக பொறுப்பு இருக்கிறது, அந்த பொறுப்பை வியாபாரத்திற்காக விட்டுக் கொடுத்து நாட்டை சீற்கெடுக்காதீர்கள் என்கிறது ஒரு கூட்டம். கெடுக்க என்ன மிச்சம் இருக்கிறது, எல்லாம் கெட்டுத்தானே இருக்கிறது என்கிறது இயக்குனர்  பக்கம் பேசும் கூட்டம். மேலும் இந்தப் படத்தை பொறுத்தவரை இது தவறு என்ற கோணத்தில், சமூகத்திற்கு ஒவ்வாத இந்த உறவு முறையால் அந்த உறவுகளும், சமூகத்தினால் அந்த குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளும் தானே சொல்லப்பட்டிருக்கிறது என்பதும் அவர்கள் வாதம்.  

நாகரீகத்தின் பிம்பம் சொத்து சேர்க்க ஆரம்பித்தது, உறவுகளும் நமக்கு சொத்து தானே. பிரெஞ்சு சிந்தனாவாதி ரூசோ, எப்போது நாம் ஒரு வட்டத்தை போட்டு இது என் சொத்து என்று சொல்ல ஆரம்பித்தோமோ அன்றே பிடித்தது நமக்கு சனி என்கிறார். உண்மையாக கூட இருக்கலாம் அவர் கூற்று. ஆனாலும் அவர் இருக்கும் காலத்திலேயே அதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தத்துவமாகத் தான் இன்றளவும் இருக்கிறது, சில விஷயங்கள் படிக்க,பேச நன்றாக இருக்கும் நடைமுறைக்கு சாத்தியப்படாது. அது போல சமூகத்தோடு ஒத்து, அதன் கட்டத்திற்குள்  வாழ்வது முக்கியமாகிறது. அது தானே நாகரீகம் என வரையறை செய்யப் படுகிறது. நாகரீகம்தானே நமக்கு எல்லாம் கற்றுக்கொடுத்தது, அநாகரீகம் உட்பட

தொலைபேசி பிடிக்காத, பயன்படுத்த பயப்படும் ஒரு நபரை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? அப்படி இருந்தால் அவன் எப்படி இருப்பான், அவன் நமது கார்த்திக் போல இருப்பான். கார்த்திக் ஒரு நல்ல படித்த பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்பவன். கார்திக்கோட பிரச்னை எல்லோருக்கும் பயப்படறது, யார் எது சொன்னாலும் மறுத்து பேசாம இருக்கறது, மனசுக்குள்ள வச்சு புழுங்கறது. அதனால அவனை எல்லோரும் ஏய்த்துக் கொண்டிருப்பதை அவனும் நன்கு அறிவான், அவனுடைய அலுவலகத்திலேயே ஒரு பெண் வேலை செய்கிறாள் அவளின் பால் இவனுக்கு ஒரு ஈர்ப்பு தினமும் அவளுக்கு மின்னஞ்சல் அனுப்ப நினைத்து முடிவில் அனுப்பாமல் விட்டு விடுவான்.

 இப்படி இருக்கும் தருவாயில் ஒருநாள் காலை 5 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது, பேசுபவர் நான் கார்த்திக் பேசுகிறேன் என்று சொல்ல கார்த்திக் பேச முடியாமல் உளற, நான் வேறு யாரும் இல்லை நீ தான் எனவும் சொல்ல கார்திக் உறைந்து போகிறான் பின்பு டெலிபோன் எக்ஸ்சேஞ் சென்று விசாரிக்கும் போது கார்திக்கு எந்த அழைப்பும் வரவேயில்லை என தெரிந்து இன்னும் அதிர்கிறான். மறுநாள் அதேபோல 5 மணிக்கு அழைப்பு வருகிறது தொலைபேசியில் இவனுக்கு சில யோசனைகள் சொல்லப்படுகிறது அதனால் இவனுக்கு அலுவலகத்தில் நல்ல பதவி, காதலி கிடைக்கிறாள். இதற்கிடையில் தன் காதலியிடம் தனக்கு வரும் தொலைபேசி அழைப்பை பற்றி சொல்ல அவள் கார்த்திக்கை மனநோய் நிபுணரிடம் சென்று பார்க்க சொல்கிறாள். தொலைபேசியில் பேசும் கார்திக் இதை கேட்டு அதிருப்தி அடைகிறான் ஏனெனில் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லகூடாது என்பது நிபந்தனை. அதனால் இவனை பழிவாங்க போவதாக சொல்கிறான். வேலை பறிபோகிறது, காதலி வெறுக்கிறாள், வங்கியில் உள்ள பணம் காணாமல் போகிறது. மனமுடைந்த கார்திக் ஏதோ ஒரு ரயிலில் ஏறி எங்கே என்று அவனுக்கே தெரியாத ஊரில் 2 வாரம் தங்குகிறான். எந்த தொலைபேசி அழைப்பையும் கொடுக்க கூடாது, தொலைக்காட்சி, செய்தித்தாள் எதுவும் வேண்டாம் என்று அறையிலேயே தனிமை சிறைக்குள் இருப்பது போல இருக்கிறான். சில மாதங்களுக்கு பிறகு கேரளாவில் ஒரு சிற்றூரில் எந்த பிரச்னையும் இல்லாமல் வேலை செய்து கொண்டு இருக்கிறான், சிறிது நாட்களுக்கு பிறகு அவனது மேலதிகாரி இவனை ஒரு தொலைபேசி வாங்கிக் கொள்ளுமாறு கட்டயப்படுத்த வந்தது மறுபடியும் தொந்தரவு.  மறுபடியும் தொலைபேசி அழைப்பு வருகிறது. உன்னை  விடமாட்டேன் என்று கர்ஜிக்கிறது தொலைபேசியில் கார்திக்கின் குரல்.

இதற்கிடையில் கார்திக்கின் காதலி அவனை தேடிக்கொண்டிருக்கிறாள், அவளை கார்திக்கின் மனநோய் மருத்துவர் தொடர்பு கொள்கிறார், மனநோய் நிபுணர் கார்திக் மனச்சிதைவால் துன்பப்படுகிறான் எனவும் அவனுக்கு வரும் தொலைபேசி அவனே அவனது ஆழ்மனதின் விழிப்பின் போது(அவனுக்கே தெரியாமல்) தொலைபேசியில் பதிவு செய்து அதை அவனே கேட்டுக்கொண்டிருக்கிறான். மேலும் அவனுக்கு இந்த  வியாதி சிறுவயது முதலே இருக்கிறது எனவும் இல்லாத ஒரு சகோதரனை கொன்றுவிட்டதாக அவனே எண்ணிக்கொண்டு துன்பப்படுகிறான் எனவும் கூற அவன் மேல் பரிதாபம் உண்டாகிறது கதாநாயகிக்கு. முடிவில் ஒரு நாள் கார்திக் ஒரு மின்னஞ்சலை தன் காதலிக்கு எழுதி விட்டு அன்று இரவு தூக்க மாத்திரைகளை விழுங்கி இரக்க இருக்கிறான், ஆனால் கதாநாயகி தக்க சமயத்தில் வந்து அவனை காப்பற்றி விடுகிறாள், அவனை குணப்படுத்தி அவனுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக கதை முடிகிறது.

விஜய் லால்வாணி இயக்கிய  இந்த ஹிந்தி திரைப்படம் இந்த வருடம் வெளியானது . கார்த்திக் காலிங் கார்த்திக். அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம், கதாநாயகன் பர்ஹான் அக்தர்  நடிப்பு பிரமாதம். கதாநாயகியாக  தீபிகா படுகோன் அழகு பதுமையாக வந்து போய் இருக்கிறார். உண்மையில் ஒரு மாறுபட்ட கோணத்தில் படம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, திரைக்கதையில் நல்ல தெளிவு, கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் நன்றாக அமைந்திருக்கலாம். ஆரம்பத்தில்  ஒரு super natural power படம் போல ஆரம்பித்து இறுதியில் யதார்த்தமாக படத்தை முடித்திருப்பது உண்மையில் படத்தில் நல்ல திருப்பம்.