Archive for the ‘தகவல்கள்’ Category

உலகின் உள்ள எல்லா எறும்புகளின் மொத்த எடை உலகிலுள்ள மொத்த மனிதர்களின் எடையளவுக்கு சமமாம் . எறும்பு தன் எடையளவு போல இரண்டு மடங்கு எடையை சுமக்கவல்லது எல்லோரும் அறிந்ததே, நினைத்து பாருங்கள் எறும்புகள் எல்லாம் மனிதர்கள் பால் வெறுப்பு கொண்டு புரட்சி செய்ய நேரிட்டு ஒட்டு மொத்தமாக எல்லா மனிதர்களையும் தூக்கி கடலில் எரிந்து விட்டால் நம் நிலைமை என்னவாகும்.

டைட்டானிக் கப்பலை கட்டுவதற்கு 7 மில்லியன் டாலர்கள் தேவைப்பட்டது, ஆனால் JAMES CAMERON இயக்கிய டைட்டானிக் திரைப்படம் தயாரிக்க 200 மில்லியன் டாலர்கள் செலவானது.

DREAMT என்ற ஒரே ஆங்கில சொல், ஆங்கில மொழியில் MT என்று முடியுமாறு அமைந்திருக்கிறது.

இந்தியாவில் கழிப்பறைகளை விட கைபேசிகளின்(MOBILE PHONE) எண்ணிக்கை அதிகமாம்.

மும்பை நகரத்தில் ஒரு நாள் சுவாசிப்பது, 2.5 பாக்கெட் சிகரட் உபயோகிப்பதற்கு சமமாம்.

தற்கொலை செய்து கொள்பவர்களின் கணக்கெடுப்பை (statistics) பார்க்கும் போது, திங்கட்கிழமை தற்கொலை செய்துகொள்வதற்கு ஏற்ற நாளாக அதிகப்படியானோர் தேர்ந்தெடுகின்றார்களாம்.

கொட்டாவி விடும் போது நாக்கை தொடுவீர்களானால் உங்கள் கொட்டாவி நின்று போகுமாம்.

நீங்கள் பேசிக்கொண்டே ஒருவருடன் நடக்கும் போது, அவரது நடையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து உங்களால் நடக்க முடியும், ஆகவே உங்களோடு அதிக வேகத்தில் நடப்பவரோடு சேர்ந்து உங்களின் காலை நடைப் பயிற்சியை செய்வது நன்மை பயக்கும்.

நமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்டிக் கொள்ள முடியுமா? முடியுமாம், உங்களின் வாயின் மேற்பகுதியை தொடும் போது உங்களுக்கு நீங்களே கூச்சம்(tickle) உண்டாகிக் கொள்ள முடியும்.

மனிதர்களின் கை ரேகையைப்போல ஒவ்வொரு மனிதனின் நாக்கில் உள்ள ரேகையும் தனித்துவம் வாய்ந்தது.

 

நன்றி: omgfacts.com

எட்வர்ட் முன்ச்சின் The Scream  மோனாலிசா ஓவியம போன்ற ஒரு நவீன ஓவியம். 1893 – 1910 வருடத்துக்கிடைப்பட்ட காலகட்டத்தில் வரையப்பட்டதாக கருதப்படும் இந்த ஓவியம் நேற்று (மே 2, 2012) sotheby’s (உலகின் மிகப் பெரிய ஓவிய மற்றும் பழம் பெருமை வாய்ந்த கலைப்பொருட்களை ஏலமிடும் நிறுவனம்) என்ற அமெரிக்க ஏல நிறுவனத்தால் ஏலமிடப்பட்டு 119,922,500 டாலருக்கு(சுமார் 630 கோடி) ஒரு பெயர் குறிப்பிடப்படாத நபருக்கு விற்கப்பட்டது.

ஏலம் 40 மில்லியன் டாலரில்(சுமார் 212 கோடி) ஆரம்பிக்கப்பட்டது. 12 நிமிடங்களில் 119,922,500 டாலருக்கு(சுமார் 630 கோடி) தொலைபேசி வாயிலாக பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு நபரால் வெற்றிகரமாக ஏலமெடுகப்பட்டது. பிக்காசோவின் Nude, Green Leaves and Bust என்ற ஓவியம், 106.5  மில்லியன் டாலருக்கு(சுமார் 564 கோடி) மே 4, 2010ல் க்ரிஷ்ட்டி நிறுவனத்தால் விற்கப்பட்டதே இதற்கு முந்திய அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட ஓவியமாகும்.

எட்வர்ட் முன்ச் இந்த ஓவியத்தை 4 வகைகளின்(4 media) கீழ் நான்கு முறை (4 versions) வரைந்திருக்கிறார்.  முன்ச் அவர்களால் ஜெர்மனில் Der Schreider Natur (The Scream of Nature) பெயரிடப்பட்டது.

நன்றி: விக்கிப்பீடியா

http://en.wikipedia.org/wiki/The_Scream

ஸ்பைடர்மேன் பட வரிசையில் மற்றுமொரு புதிய வருகை தி அமேசிங் ஸ்பைடர்மேன் நான்காம் பாகமாக வரும் இந்தப் படம் ஜூலை மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சோனி நிறுவனம் படத்துக்கான விளம்பரமாக சில போஸ்டர்களை வெளியிட்டிருக்கிறது.

 

 

அந்நியன் படத்தில் பார்த்திருப்பீர்கள் விக்ரம் ரயிலில் பயணம் செய்யும் போது தரமற்ற உணவு வழங்கப்படுவதையும், தான் கொடுத்த பணத்திற்கு ஏற்ற உணவு பரிமாறவில்லை என்றும் பயணச்சீட்டு பரிசோதகரிடம் வாதிடும் காட்சியும் அதைத் தொடர்ந்து ரயில்வே உணவு தயாரிக்கும் குத்தகைகாரரை கொலை செய்வதையும். நம்மில் பலருக்கும்  பல தருணங்களில் இது நடந்திருக்கும் நாமும் இதை யாரிடம் சொல்லி அழுவது என்று வேண்டா வெறுப்பாக  கிடைத்ததை கொறித்து விட்டு அன்றோடு அதை மறந்து போய் இருப்போம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் அதன் கிளை நிறுவனமான CRIS  ( CENTRE FOR RAILWAY INFORMATION SYSTEM )வுடன் இனைந்து  வாடிக்கையாளர்களுக்கு ஒரு 24மணி நேர   சேவையை ஆரம்பிக்க உள்ளது. இதன் மூலம் உங்கள் உணவு உங்களுக்கு சரியாக இல்லை என்ற பட்சத்தில் இவர்கள் கொடுத்திருக்கும் 57886  என்ற  எண்ணில் குறுஞ்செய்தி (SMS) செய்தாலே போதும் இதன் பேரில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். உங்கள் குறை சீக்கிரம் களையப்படும்  என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.  இந்த சேவை டிசம்பர் மாதம் முதல் அமுலுக்கு வருகிறது. இந்த சேவை எந்த அளவுக்கு மக்களுக்கு நன்மையை பயக்கும் என்பது தெரியாது… நல்லதையே நினைப்போம்… நன்மையே நடக்கும்…

இன்றைய சினிமாவில் கவர்ச்சி அதிகம் வன்முறை அதிகம் என்றெல்லாம் சமூக நல ஆர்வலர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை புலம்புவதை நாம் பார்த்திருக்கிறோம். முதன் முதலில் நம் நாட்டில் இந்த கவர்ச்சி அல்லது ஆபாசமான உடையனிந்தது யார் தெரியுமா? அது தான் இன்றைய ஹிந்தி திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சாயப் அலி கான் பட்டோடியின் அம்மா சர்மிலா தாகூர்.

போன தலைமுறை மக்களுக்கு மறக்கமுடியாத ஹிந்தி படங்களான பாபி, குருபானி போன்ற பட வரிசைகளில் ஆராதனாவை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சென்னையில் உள்ள ஆனந்த் திரை அரங்கில் வெள்ளிவிழா கண்ட படம். ஹிந்தி அதிகம் பரிட்சயம் இல்லாத அந்த காலகட்டத்திலேயே பெரும் வரவேற்ப்பை பெற்ற அந்தபடத்தின் வரவேற்ப்புக்கு படத்தின் பாடல்கள், மற்றும் ராஜேஷ் கண்ணாவின் நடிப்பு அதை விட சர்மிலா தாகூரும் ஒரு முக்கிய காரணம் என்றால் யாரும் மறுக்கமாட்டார்கள். அவர் புகழின் உச்சியில் இருந்த கால கட்டம். இவர் தான் இந்திய நடிகைகளுக்கெல்லாம் கவர்ச்சியில் முன்னோடி. AN EVENING IN PARIS என்ற படத்தின் மூலம் முதன்முதலில் பிக்கினி என்று சொல்லப்படும் நீச்சல் உடையில் திரைப்படத்தில் தோன்றினார். இதனைத் தொடர்ந்து FILMFARE பத்திரிகைக்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்தார். படத்தின் கவர்ச்சியைக் காட்டிலும் பத்திரிகையில் வெளியான புகைப்படம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த புகைப்பட ஒளிப்பதிவின் போது, ஒருங்கிணைப்பாளர் சர்மிலா தாகூர் அரங்கில் நுழைந்த போது எங்கே உங்கள் புகைப்படத்திற்க்கான உடை என்று கேட்கும் போது தனது கைப்பையை காண்பித்தாராம்.

பல பேர் தங்களது தலையணைக்கு அடியில் வைத்து கொண்ட 1966ல் வெளியான FILMFARE ஆகஸ்ட் இதழின்   அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

 
உலகம் முழுவதற்கும் ஒரு பொதுவான மொழி இருந்தால் உபயோகமாக இ ருக்குமென்று 1887ல்  டாக்டர் லுடோவிக் லாசரஸ் ஜாமன்ஹாப், எஸ்பராண்டோ என்ற ஒரு புது மொழியை உருவாக்கினார். இம்மொழிக்கான இலக்கணம் அதே ஆண்டில் டாக்டர் எஸ்பராண்டோ என்ற புனைப் பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. இவ்வார்த்தைக்கு நம்பும் டாக்டர் என்று பொருள். நாடுகட்கிடையே மொழித் தடைகளை போக்கி உலகப் பொது மொழியாக இது உருவாக வேண்டுமென அவர் விரும்பினார். தொடக்கத்திலேயே பல நாடுகள் கடுமையாக இதை எதிர்த்தன. ரஷ்யாவில் தீவிர எதிர்ப்பு இருந்தது. 1954 வரை இம்மொழிக்கு அங்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இம்மொழிக்கு ஆதரவு காட்டிய ஆயிரகனக்கானவர்கள் நாசிகளால் கொல்லப்பட்டனர். ஸ்டாலின் 11000 பேர்களை சிறைக்கு அனுப்பினார். பிரான்சும் இம்மொழிக்கு தடை விதித்து இருந்தது.
 
இவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையேயும் அதன் ஆதரவாளர்கள் உதவியுடன்  அம்மொழி உருவாக்கப்பட்டது. 1987ல் நூற்றாண்டு விழா  கொண்டாடியபோது  குறைந்தது 1 1/2 கோடி பேர் இம்மொழியை கற்றிருந்தனர். சாதாரண கல்வியறிவு உள்ளவர்களும் எளிதில் இதைக் கற்றுக் கொண்டுவிடமுடியும் என்று கூறுகின்றனர். பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளின் 3500 வேர்ச்சொற்களே   இதில் பயன்படுத்தப்படுகின்றன. உச்சரிப்பு ஸ்பானிஷ், இத்தாலிய மொழி போல இருக்குமாம் . மொத்தம் 28  எழுத்துகள். எழுத்தை எப்படி சொல்கிறோமோ அதுபோலவே வார்த்தைகளின் உச்சரிப்பும் இருக்கும் என்றும்  இலக்கணம் 18 விதிகளை மட்டுமே கொண்டதாகவும் இது அறியப்படுகிறது. ஐரோபியரல்லாதவர்கள் கற்பது சுலபம், 6 மாதங்களில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்கின்றனர்.
 
சீனாவில் 5 லட்சம் பேர் இம்மொழி அறிந்தவர்கள் உள்ளனராம். பெய்ஜிங்கில் ஒரு வானொலி நிலையம் இம்மொழியில் ஒலிபரப்பு செய்கிறது. உலகம் முழுதிலும் 100க்கும் மேற்ப்பட்ட பத்திரிகைகள் இம்மொழியில் வெளியாகிறது. பல நாடுகளில் வானொலி ஒலிபரப்பும், ஆயிரக்கணக்கான புத்தகங்களும்  வெளியாகி உள்ளன. இம்மொழி பேசுபவர்களின் தலைமையகம் லண்டன். இம்மொழியை பேசத் தெரிந்தவர்கள் பச்சை நிற பேட்ஜ் அணிந்திருப்பர். 50களில் இம்மொழி இந்தியாவிற்கு வந்தது. சாந்தி நிகேதன் இதற்கு ஆதரவு தந்தது. வினோபா பாவே இம்மொழியை 3 மாதங்களில் கற்றதாக தகவல்.
பொது மொழியின் மூலம் உலகமுழுதும் ஒரு சமூகமாக செய்வதே இதன் நோக்கமாக கூறுகிறார்கள்.
 
மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம் என்பர், இது போன்ற பொதுமொழி என்ற விஷயம் எந்த இனத்தாரும்   மனம் உவந்து ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவதற்கில்லை. இம்மொழி பற்றிய மேலதிக விவரங்களுக்கு கீழ்காணும் விக்கி பக்கத்திற்கு சென்று பாருங்கள்.
 
 

150 கோடியில் திரைப்படம் தயாரிக்கும் நிலையில் இருக்கும் இன்றைய தமிழ் திரையுலகம் முதன்முதலில் எங்கு ஆரம்பித்தது, யார் ஆரம்பித்து வைத்தது என்பதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த இடுகை  தமிழ் திரையுலகின் முதல் தயாரிப்பாளர் நடராஜ முதலியார் பற்றியது. திரைப்பட நடிகர் மோகன்ராமன் அவர்களின் FACEBOOK ல் இது பற்றிய ஸ்கேன் செய்யப்பட்ட பத்திரிகை செய்தியை சில நாட்களுக்கு முன் பார்த்தேன். பார்த்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நடராஜ முதலியார் பற்றிய பேட்டி இயக்குனர் ஸ்ரீதர் நடத்திய சித்ராலயா என்ற இதழில் 1970ம் ஆண்டு வெளியானது. 1936 ம் ஆண்டு நடராஜ முதலியார் பற்றிய ஒரு செய்தி அன்றைய மெயில் பத்திரிகையில் வெளியாகி இருந்ததாம், இந்த பழைய பத்திரிகை செய்தியை ஸ்ரீதர் பார்க்க நேர்ந்து அது பற்றிய செய்தியை சித்ராலயாவில் வெளியிட நடராஜ முதலியாரின் பேட்டி எடுத்து இருக்கிறார்கள்.

 

இவர் முதன்முதலில்  1916 ம் வருடம் கீசகவதம் என்ற படத்தை 35 நாட்களில் எடுத்திருக்கிறார். திரைப்பட துறைக்கு வருவதற்கு முன் இவர் மவுண்ட்ரோட்டில் மோட்டார் கார் வியாபாரம் செய்து கொண்டிருந்தார், பிறகு இதை சிம்சனிடம் விற்றுவிட்டதாக தகவல். கலையார்வம் மிகுந்த இவர் ஒளிப்பதிவின்  மேல் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார் அதனால் கர்சன் பிரபுவின் தர்பாரில் படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளரான ஸ்மித் என்பவறின் அறிமுகம் கிடைக்க அவர் மூலமாகவே கையால் ராட்டை போல சுழற்றி படம் பிடிக்கும்  காமிராவை இயக்கக் கற்றார்.  படமெடுக்க நன்கு கற்ற பிறகு படப்பிடிப்பு சாதனங்களை வாங்கினார், அந்நாளில் பிலிம் லண்டனில் இருந்தே வரும் பம்பாயில் கொடாக் நிறுவனத்தில் ஒரு நல்ல பதவியில் இருந்த கார்பெண்டர் என்பவர் மூலம் நடராஜ முதலியார் தனக்கு வேண்டிய பிலிம் சுருள்களை பெற்றதாக பேட்டியில் தெரிவிக்கிறார்.

 

இவர் தயாரித்த படங்களில் இவர் தான் இயக்குனர், ஒளிப்பதிவாளர். பிலிம் கழுவ ஒரு நபரையும், இவருக்கு உதவிக்காக  மற்றொருவரையும்  வேலையில் அமர்த்திக்கொண்டார். அக்காலத்தில் குளிர்சாதன வசதி இல்லாத காரணத்தினால்  லேபராட்ரியை பெங்களூரில் வைத்துகொண்டார். படப்பிடிப்பு சென்னை கீழ்பாக்கத்தில் நடக்குமாம்.  நாடகங்களில் நடிப்பவர்களை இவர் திரைபடத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். அப்படியும் நடிப்பதற்கு பெண்கள் வரமாட்டார்களாம், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கூட படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் இவருடைய திரௌபதி வஸ்த்ராபுராணம் என்ற படத்தில் நடிக்க ஒரு ஆங்கிலேயப் பெண்ணை திரௌபதியாக நடிக்க வைத்தாராம்.

 

திரௌபதி வஸ்த்ராபுராணம்,  கீசகவதம், லவகுசா, ருக்மணி சத்யபாமா, மார்கண்டேயா, காலிங்க மர்த்தனம் ஆகிய ஆறு படங்களை நடராஜ முதலியார் தயாரித்திருக்கிறார். படத்தை இங்கே வெளியிட்டதல்லாமல் வடநாட்டிற்க்கும் விநியோக உரிமை கொடுத்திருக்கிறார். 

பேட்டி எடுக்க சென்ற போது நடராஜ முதலியார் சென்னை அயனாவரத்தில் ஒரு சிறிய இடத்தில் வறுமையில் பிடியில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

ரஜினி, சிவாஜி படத்துல சொல்வாரே, பெயரைக் கேட்டாலே அதிருதுள்ளனு, அது போல சில்க் பெயரைக் கேட்டாலே இன்னும் சில பேருக்கு கிளுகிளுப்பா தான் இருக்கும். சரி அவர் காலமாகி 14 ஆண்டுகள் கழிந்து இப்போ என்ன அவரைப்பற்றி பேச்சு, காரணம் இருக்கே அவருடைய வாழ்கையை அடிப்படையாக வைத்து படம் தயாராகிக்கொண்டு இருக்கிறது தெரியுமா? முன்னாபாய்MBBS படத்துல நடிச்ச வித்யாபாலன் சில்க் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். 

வித்யாபாலன் இதுவரை நடித்த படங்களில் ஆபாசமாகவோ, கவர்ச்சிகரமாகவோ நடித்ததில்லை, இவரை எப்படி சில்க் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை, இதிலிருந்தே இந்தப் படம் சில்க்கின் கவர்சிகரமான பட வாழ்கையை தவிர்த்து அவரது வாழ்கையை மையப்படுத்தி இருக்கும் என்பது தெளிவாக புரிகிறது. இந்தப் படத்தை சின்னத்திரையில்  தொடர்களை தயாரித்து பெரும் புகழை அடைந்த பாலாஜி டெலிபிலிம்ஸின்   ஏக்தா கபூர் தயாரிக்கிறார்கள்.  இந்தியாவின் சின்னத்திரை வரலாற்றில் ஏக்தா கபூருக்கென்று ஒரு தனி இடம் உண்டு, ரசிகர்களை தொலைக்காட்சியின் முன் கட்டிப்போட்ட பல தொடர்களை இவர் தயாரித்து இருக்கின்றார்.

சரி இப்போ சில்க் பற்றி பார்ப்போம், சில்க் ஆந்த்ராவில் பிறந்தவர், இவருடைய இயற்பெயர் விஜயலக்ஷ்மி, நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். சினிமாவில் சேர வேண்டும் என்ற முனைப்பில் சென்னையை வந்து அடைந்தார். வண்டிசக்கரம்  என்ற படத்தில் முதன் முதலாக சில்க் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு  முன்பே அவருடைய பெயரை சுமிதா என்று மாற்றிக் கொண்டார். வண்டிசக்கரம் படத்திற்கு பின் சில்க்சுமிதா ஆனார். இந்தப் படத்திற்கு பின் அவருக்கு பல வாய்புகள் வந்து தென்னிந்திய திரை உலகில் கொடி கட்டி பறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்ற இவரது வாழ்கை ஹாலிவுட்டின்  மர்லின் மன்ரோவினை ஒத்து இருப்பதாக கூட சொல்வார்கள். இவர் நடித்த மூன்றாம் பிறை, அலைகள் ஓய்வதில்லை, மூன்று முகம், கைதி, லயனம் போன்ற படங்கள் இன்றளவும் பேசப்படும் படங்கள்.

ஆண்களை மட்டுமில்லாமல் பெண்களையும் கவர்ந்தவர் சில்க், இன்று எல்லா நடிகைகளும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள், அன்றைய கால கட்டத்தில் உள்ள நடிகைகள் 5 லிருந்து 10 வருடங்களுக்குள் தனது அழகை இழந்து விடுவார்கள், உடல் எடைபற்றிய போதிய அறிவு, உணவு பழக்கவழக்கம் உடலை எப்படி பாதிக்கும், உடற் பயிற்சி மூலம் உடலை எப்படி பாதுகாப்பது இப்படி பல விசயங்களில் சில்க் தென்னிந்திய நடிகைகளுக்கு ஒரு முன்னோடி. 

1996 இல் சில்க் தனது இல்லத்தில் இறந்து கிடந்த செய்தி சினிமா வட்டாரத்திலே பல அதிர்வுகளை  ஏற்படுத்தியது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது எனது கணினி வரைகலை படிப்பிற்காக பிரசாத் ஸ்டுடியோவிற்குள் அப்போது இருந்த வெக்டார் இன்ஸ்டிடுயிடில்  பயின்று கொண்டிருந்தேன், அந்த சமயம் சில்க்கின் இறப்புசெய்தி  கோடம்பாக்கத்தில் இண்டு இடுக்கில் எல்லாம் பேசப்பட்டது, அவருக்காக  அனுதாபப்படாத  ஆட்களே இல்லை. சில்க் சுமிதா பொருளாதார நெருக்கடியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கேள்விப்பட்டு சினிமா ரசிகர்கள் எல்லோருமே தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டனர்.

இந்தப் படத்தில் ரசிகர்கள் விரும்புகிற கவர்ச்சியோடோ, ஆபாசமாகவோ  நடிக்கமாட்டேன்  என்று ஏற்கனவே வித்யா பாலன் அறிவித்திருக்கும் நிலையில் இந்த படம் இப்போதே பலரின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. உங்களைப் போல் நானும் இந்தப் படத்தின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

நேற்று முன்தினம்  தெரியுமா? எந்திரனில் பாடப்பட்ட கிளிமஞ்சாரோவைப் பற்றி? என்ற இடுகையை உங்களோடு பகிர்ந்துகொண்டேன்.  தலைப்பை பார்த்து ஐஸ்வர்யா ராய் பற்றிய செய்தியாய் இருக்கும் என்று நிறைய பேர் ரொம்பவே ஏமாந்து விட்டது தெரிந்து கொஞ்சம் சங்கடமாகவே போய்விட்டது எனக்கு, நண்பர் ராஜேஷ் அந்த பாடல் எடுக்கப்பட்ட இடமான மச்சு பிச்சுவைப் பற்றி கொஞ்சம் சொல்லி இருக்கலாமே என்று ஒரு வலைதள முகவரியையும் கொடுத்திருந்தார். ஐஸ்வர்யாவைப் பற்றி எதுவும் எனக்கு தெரியாத நிலையில் குறைந்தபட்சம் இந்த மச்சு பிச்சுவை பற்றிய சில தகவல்களை உங்களோடு இன்று பகிர்ந்துகொள்கிறேன். 

 

யுநெஸ்கோவின்  உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான இந்த மச்சு பிச்சு பெரு நாட்டில், ஒரு பள்ளத்தாக்கில் உள்ள மலைத்தொடரில் கடல் மட்டத்தில் இருந்து  2400 மீட்டர் உயரே அமைந்துள்ளது. இது இன்கா பேரரசின் வரலாற்று சின்னமாகும், இதை இன்காக்களின் தொலைந்த நகரம் என்றும் கூறுவர். இது 1450 ம் ஆண்டு கட்டப்பட்டது, ஸ்பானியர்கள் படையெடுப்பிற்கு  பிறகு இன்கா அரசு அழிந்த நிலையில் இந்த இடம் கைவிடப்பட்டிருந்தது, பின்னர் ஒரு ஆங்கிலேய வரலாற்றறிஞர் இந்த இடத்தை கண்டறிந்தார். இந்த இடத்தை அவர் ஒரு குழுவுடன் சென்று சுத்தம் செய்ய 3 ஆண்டுகள் பிடித்தது, இங்கிருந்து 521 பொருட்களை அவர் கண்டெடுத்ததாக தகவல். அவற்றில் பல இன்னும் யேல் பல்கலைக்கழகத்தில் இருக்கிறதாம். மேலும் 173 எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாம் அதில் 150 பெண்கள், அவர்கள் பலியிட்டவர்களாக இருக்ககூடும் என்ற கருத்து நிலவுகிறது. பளபளப்பாக்கப்பட்ட உலர் கற்களைக் கொண்டு மச்சு பிச்சு கட்டப்பட்டிருக்கிறது, தஞ்சை பெரிய கோயில், மாமல்லபுரம் சிற்பங்களை பற்றிச் சொல்லும் போது இத்தனை கற்களை எப்படி கொண்டு வந்து கட்டினார்கள் என்று வியப்போம், அதே போல இந்த மச்சு பிச்சுவில் இத்தனை அடி உயரத்தில் இந்த கற்களை எங்கிருந்து கொண்டு வந்தார்கள். எப்படி இந்த இடத்தை நிர்மாணித்தார்கள் என்று நினைத்தாலே ஒரே வியப்பாக இருக்கிறது.

இந்த இடத்தின் வரலாற்று பின்னணியை பார்க்கில், ஸ்பானியர்கள் தாக்குதலின் போது இங்கிருந்த இன்கா மக்கள் தப்பித்து பக்கத்தில் இருந்த அடர்ந்த காடுகளில் தஞ்சம் அடைந்தனர், 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்த தாக்குதல் நடந்ததாம், கடைசியில் இன்கா அரசின் மன்னர் பிடிபட்டார் அவரை பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் படுகொலை செய்தனர் ஸ்பானியர்கள்.

 

1981ம் ஆண்டு மச்சு பிச்சு இருக்கும் இடத்தையும் சேர்த்து சுமார் 325 சதுர கிலோமீட்டர்களை பெரு அரசின் வரலாற்று சின்னமாக அறிவித்தது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ஆம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

இந்த இடத்தை பற்றிய இன்னும் பிற தகவல்கள் அறிய கீழ்கண்ட வலைதளத்திற்கு சென்று பாருங்கள். இந்த தளத்தில் VIRTUAL TOUR என்ற வகையின் கீழ் மச்சு பிச்சுவின் முக்கிய இடங்களை 360 டிகிரியில் சுற்றிக் காண்பிக்கிறார்கள் .

 http://www.peru-machu-picchu.com/

 
ஜூன் 15 2007 இல் ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 2 ம் நாளை  அனைத்துலக அஹிம்சை நாளாக ஏகமனதாகத் ஏற்றுக்கொண்டு தீர்மானமாக நிறைவேற்றியது. வன்முறையற்ற உலகு அமைய காந்தி அரும்பாடுபட்டதை உலகுக்கு உணர்த்தும் விதமாகவும், அவரை கௌரவப் படுத்தும் விதமாகவும் அக்டோபர் 2 ம் நாளான அவருடைய பிறந்த நாளை சர்வதேச அஹிம்சை நாளாக பிரகடனப்படுத்தியது. தன வாழ்நாள் முழுவதையும் வன்முறையற்ற வழியான அஹிம்சையை  கடைபிடித்து அதன் உன்னதத்தை உலகிற்கு உணர்த்திய மகாத்மா காந்தியின்  கொள்கைகளை  யாவரும் உணரும் விதமாகவும் அஹிம்சையின் மகத்துவத்தை ஒவ்வொருவரும் உணரவேண்டும்  என்ற நோக்கில் இந்த நாளை கொண்டாடவேண்டும் என்றும் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அஹிம்சை, பரந்த மனப்பான்மை, மனிதஉரிமை, சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பது முக்கியம் எனவும் அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்றைய உலகில் அஹிம்சை என்பது எந்த அளவிற்கு எடுபடுமோ என்பது தெரியாது, ஆனால் மனிதாபிமானம், மனிதநேயம்  இதெல்லாம் குறைந்து வருகின்ற நிலையில் குறைந்தபட்சம் அஹிம்சை என்றால் என்ன என்றாவது அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லவேண்டியது நம் கடமை ஆகிறது.
 
இந்த பிரகடனத்தை முழுமையாக படிக்க விரும்புவோர் கீழ்கண்ட URL மூலம் அந்த வலை பக்கத்திற்கு சென்று படிக்கலாம்.
 
நன்றி: விக்கிபீடியா