Archive for the ‘தெரியுமா ?’ Category

தெரியுமா? உழைப்பாளர் சிலை வடித்த சிற்பி யாரென்று ?

Posted: ஏப்ரல் 30, 2012 in தெரியுமா ?
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மே தினம் தொழிலாளர்களுக்கான நாள் என்பது எல்லோர்க்கும் தெரியும், இதன் ரிஷிமூலம், நதி மூலம் தெரியுமா உங்களுக்கு. தெரிந்தால் சந்தோஷம், தெரியவில்லை என்றால் யாரிடாமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்;  இல்லையெனில் இந்த இடுகையின் முடிவில் அது பற்றி சொல்கிறேன்…

இந்த இடுகை தொழிலாளர் தினத்தை பற்றியது அல்ல, உழைப்பாளர் சிலை பற்றியது. நம்மில் பலர் சென்னை கடற்கரையில்  உள்ள தொழிலாளர் சிலையை பார்த்திருப்பீர்கள், சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்து இருப்பீர்கள். இந்த காலத்தால் அழியாத சிலையை செய்தது யார் தெரியுமா? அவரைப் பற்றிய சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அவர் பெயர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி, வங்கத்தை சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு ஓவியர் ஆனால் சிலை வடிப்பதிலும் ஆர்வம கொண்டவர். மேலும் இவர் ஒரு எழுத்தாளர், புல்லாங்குழல் இசை வித்தகர், மல்யுத்த வீரர், வேட்டைக்காரர் என்று பன்முகத் தன்மை கொண்டவர்.

4 தொழிலாளர்கள் ஒரு கடினமான பாறாங்கல்லை உந்தி தள்ளுவது போன்ற இந்த சிலை வெண்கலத்தால் உருவாக்கப்பட்டது. உழைப்பாளர்களின் கோவணத் துண்டோடு கூடிய இறுகிய உடல், உழைப்பின் களைப்பு, விடாமுயற்சி, ஒற்றுமை, மனோபலம் மேலும் உழைப்பின் உன்னதத்தை நம் பார்வைக்கு இம்மியளவும் பிசகாமல் எடுத்துக் காட்டியிருக்கிறார் ராய். சுதந்திர இந்தியாவின் கரடு முரடான பாதையில் நாம் எதிர் கொள்ள வேண்டிய கடமையை(உழைப்பை) உருவகப்படுத்துவதாக இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அது நமக்கு இருக்க வேண்டிய மன வலிமையையும், ஒற்றுமையை எடுத்தியம்புவதாக அமைந்திருக்கிறது.

D.P.ராய், ஹிரன்மாய் ராய் சௌத்ரியிடம் சிலை வடிப்பதை கற்றார், அபாநிந்த்ரநாத் தாகூர் என்பவரிடம் WATER COLOUR முறையில் ஓவியத்தை கற்றார் பின் மேற்கத்திய பாணியில் ஆர்வம கொண்டு அவ்வழியில் தன் பணியை தொடர்ந்தார். சிலை வடிப்பதில் IMPRESSIONISM வகையின் கீழ் வரும் AUGUSTIN RODIN போன்றவர்களின் பால் ஈர்ப்பு கொண்டு நவீன மேற்கத்திய சிலை வடிப்பாளர்களின் வழியில் ராய் தன் பணியை தொடர்ந்தார். ராயின் முக்கிய அம்சமாக கருதப்படுவது செதுக்குவதை காட்டிலும் வார்த்து எடுத்தலே ஆகும். இவரின் பல படைப்புகள் உலக சிறப்பு வாய்ந்ததாகும், சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலை, காந்தி சிலை, பாட்னாவில் உள்ள மார்ட்டிர்ஸ் மெமோரியல்(வெள்ளையனே  வெளியேறு இயக்கத்தின் போது தேசியக் கொடியை ஏற்ற முற்பட்டு உயிர் துறந்த 7 இளைஞர்களின் நினைவாக உருவாக்கப்பட்டது), விவேகானந்தர் சிலை, தண்டி யாத்திரையை  சித்தரிப்பது போன்ற கியாரா மூர்த்தி சிலை என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இவர் தன் முதல் ஓவியக் கண்காட்சி 1933-34ல் கொல்கத்தாவில் நடத்தினார், 1937ல் ஆங்கிலேய அரசாங்கத்தால் MBE பெற்றார், 1953ல் லலித் கலா அகாதமியின் முதல் தலைவராகவும் பின்னர் 1955ல் UNESCOவின் ART SEMINARக்கு  தலைவரவாகவும், இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 1958ல் பத்மா பூசன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார். ராய் சென்னை ஓவியக் கல்லூரியின் தலைவராகவும் இருந்தார் அச்சமயம் தான் உழைப்பாளர் சிலை வடித்தார் என்பது கேள்வி, இது தவிர கடற்கரையின் மறுமுனையில் இருக்கும் காந்தியின் சிலையும் இவரால் வடிக்கப்பட்டதே.

மே தினத்தை பற்றித் தெரியாதவர்களுக்கு…

அமெரிக்காவில் ஒரு நாளில் எட்டு மணி நேரம் மட்டுமே உழைக்க முடியும், மற்றும் வார விடுமுறை போன்ற சீர்திருத்தங்களை அமலாக்க கோரி 1886ல் மே 1ம் தேதியன்று தேசம் தழுவிய ஒரு கிளர்ச்சி செய்தனர். இதில்  சிகாகோவில் கிளர்ச்சியாளர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே பெரிய மோதல் ஏற்பட்டது, மேலும் ஹேமார்கட் ஷ்கொயரில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு பலர் மாண்டனர். இந்த கிளர்ச்சியின் போது இறந்த தொழிலாளர்கள், மற்ற தொழிலாளர்களால் உலகம் முழுதும் மாவீரர்களாக போற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து 1989ல் பாரிசில் நடந்த சர்வதேச சோசலிஸ்ட் காங்கிரஸ் கூட்டத்தில், மே 1ம் தேதியை தொழிலாளர் தினமாகவகும், ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பு, வார விடுமுறையை அமல்படுத்த தீர்மானம் போட்டு அதை மற்ற நாடுகள் ஏற்கும் வண்ணம் செய்தனர்.

துணுக்கு செய்தி

மே டே என்பது தொழிலார் தினமாக அறியப்படும் நிலையில், விமானம், கப்பல் போன்ற வாகனங்களில் நெருக்கடியான நிலையில் உதவி கோரும் போது இந்த பதத்தை அதாவது மே டே என தனது அருகாமையில் உள்ள தளத்திற்கு தெரியப்படுத்தி உடனடியாக உதவியை பெறுகின்றனர். இது ஒரு பிரெஞ்சு வார்த்தை m’aider  ( Venes m’aider) என்பதில் இருந்து வந்தது. இதன் அர்த்தம் ஆங்கிலத்தில் COME HELP ME. முதன் முதலில் லண்டனில் குரோயோடின் விமானதளத்தில் ஒரு சீனியர் ரேடியோ ஆபீசர் ஒருவரால் கூறப்பட்டு அது இன்றளவும் புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாக மாறிவிட்டது.

தெரியுமா? பாகிஸ்தானியால் எழுதப்பட்டது “சாரே ஜகான் சே அச்சா”

Posted: திசெம்பர் 22, 2010 in தெரியுமா ?
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

சர் அலாமா முகமது இக்பால்,  உருது, அரபு, மற்றும் பாரசீக மொழிகளில் இவர் எழுதிய கவிதைகள் தற்காலத்தின் பெருமைமிக்க இலக்கியப் படைப்புகள் என்று சொன்னால் மிகையாகாது.

ஆங்கிலேயர் ஆண்ட பிரிவினைக்கு உட்படாத இந்தியாவில், தற்போதைய பாகிஸ்தானில்  பிறந்தவர் இவர். மாணவப் பருவத்திலேயே மிகவும் திறமையாகத் திகழ்ந்த இக்பால் இங்கிலாந்தில் சட்டம் பயிலும் மாணவராக இருந்தபோதும் கூட தனது எழுத்துப்பணியினைத் தொடர்ந்தார்.  இக்பால் சட்டத்துறையில் தொழிலை ஆரம்பித்தார். ஆனாலும் அரசியல், பொருளாதாரம், வரலாறு, மெய்யியல், மற்றும் சமயம் ஆகிய துறைகளிலேயே அவர் நிறைய எழுதினார்.

நம்மில் நிறைய பேருக்கு முகமது அலி ஜின்னா தான் பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முதலில் கோரியவர் என்று அறிந்திருப்போம். ஆனால்  அது உண்மை இல்லை 1930 இல் அலஹாபாத்தில் ஒரு கூட்டத்தில் இக்பால் அவர்களே இரு நாடு கோரிக்கையை வைத்து இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற தனது அவாவை வெளிப்படுத்தியவர். இந்த சிறு பொறியே பின்னாளில் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாக காரணம் ஆனது.

இவரைப் பற்றிய மற்றுமொரு முக்கிய தகவல், பிரசித்தி பெற்ற சாரே ஜகான் சே அச்சா  பாடலை இயற்றியவர் இவரே. ஜவஹர்லால் நேருவுக்கு மிகவும் பிடித்த இப்பாடல் அதிகம் அவரால் கையாளப் பட்டதை நாம் அறிவோம். இந்தப் பாடல் சுதந்திர இந்தியாவின் முதல்  நாடாளுமன்றக் கூட்டத்தில் பாடப்பட்டது.  அதிகார பூர்வமற்ற தேசியகீதம் என்று சொல்லும் அளவிற்கு எழுச்சி மிக்கப் பாடல். இந்திய  ராணுவ அணிவகுப்பின் போது பாடப்பெரும் அளவிற்கு புகழ் வாய்ந்தது. ராகேஷ் ஷர்மா விண்வெளியிலிருந்து அன்றைய பிரதமர் இந்திராகாந்தியுடன் உரையாடும் போது இப்பாடலைப் பாடி இந்தியர் என்பதில் பெருமிதம் கொண்டார். தற்போதைய இந்தியப் பிரதமரான மன்மோகன்  சிங்  அவர்களும் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்தப் பாடலை ஒரு கேள்விக்கு மேற்கோளாகக் கூறினார்.

எம்.ஜி.ஆர், சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது எல்லோர்க்கும் தெரியும், அறிமுகப்படுத்திய இயக்குனர் யார் தெரியுமா? அமெரிக்காவில் ஓஹாயோ மாநிலத்தில் பார்டன் என்னும் சிற்றூரில்  பிறந்த எல்லிஸ் ஆர். டங்கன் (Ellis R. Dungan) என்பவர் தான் அவர்.  எம்.ஜி.ஆர் தவிர டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் போன்ற காலத்தை வென்ற கலைஞர்களை  தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே…

 

( படத்தில் கே. பி. சுந்தராம்பாள், டங்கனின் அம்மா, டங்கனின் நண்பர் மாணிக்லால் டாண்டன், டங்கன். இந்த புகைப்படம் நந்தனார் திரைப்பட படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது.  மாணிக்லால் டாண்டன் நந்தனார் திரைப்படத்தை இயக்கியவர் )

கலிபோர்னியாவில் திரைப்படத்துறையை பற்றிய படிப்பு  படிக்கும்போது, கல்லூரியில் டங்கனுடன் மாணிக்லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் படித்தார். அவர் இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரிக்கும் போது அவருக்கு துணையாக டங்கன் அவருக்கு துணையாக  இருந்தார், அவர் முதன்முதலில் பணிபுரிந்த திரைப்படம் நந்தனார், இப்படத்தில்  சில காட்சிகளை இவர் இயக்கினார். கல்கத்தாவில் படப்பிடிப்பின்போது டாண்டனை ஏ. என். மருதாசலம் செட்டியார் என்ற தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் தனது அடுத்த படத்தை இயக்கித்தரும்படி கேட்டார். நந்தனார் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் தனது அமெரிக்க நண்பரான  எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களை இயக்குனராக்கிக்கொள்ளும்படி டாண்டன் பரிந்துரைத்தார்.

 

(அம்பிகாபதி படத்தின் படப்பிடிப்பின்போது டங்கன் காமிரா கோணத்தை ஆராய்கிறார்)

இவ்வாறு டங்கன், செட்டியார் தயாரித்த சதி லீலாவதி படத்தின் மூலம் தமிழ்ப்பட  இயக்குனரானார். இப்படத்தில் தான் எம்.ஜி.ஆர் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து, டங்கனுக்கு பல திரைப்பட வாய்புகள் கிட்டின. தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி ஒரு வருடத்திற்கும் மேல் தொடந்து ஓடி சாதனை படைத்தது. தமிழ் மொழி தெரியாவிட்டாலும், தனது ஆங்கிலம் அறிந்த உதவியாளர்களின் மூலம் நடிகர்களிடமும், தொழிற்கலைஞர்களோடும் இனைந்து பணியாற்ற முடிந்தது. இரண்டாம் உலகப்போரின்போது ஆங்கிலேயர்களின்  கொள்கைகளை பரப்பும் சில படங்களையும் இயக்கினார். எம். எஸ் சுப்புலட்சுமியின் நடிப்பில் டங்கன் இயக்கிய மீரா அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, அதே படத்தை இந்தியிலும் இயக்கினார்.

(அம்பிகாபதி திரைப்படத்தில் பாகவதரையும், சந்தானலக்ஷ்மியையும் ஒரு காதல் காட்சியில் டங்கன் இயக்கி கொண்டிருக்கிகிறார்)

நெருக்கமான காதல் காட்சிகள் இவரை அமெரிக்க கலாச்சாரத்தை தமிழகத்தில் பரப்புகிறார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாக்கியது. ஆனால் புதிய ஓளியுத்தி, நவீன ஒப்பனை முறைகளையையும்  இவரே  தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவர்  இயக்கிய கடைசித் தமிழ்ப்படம் மந்திரிகுமாரி. இந்தப் படத்தை பற்றி நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை, தமிழ்த் திரையுலகில் தவிர்க்கமுடியாத சில படங்களில் இதுவும் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது. டங்கன்  1950 ஆம் ஆண்டு அமெரிக்கா திரும்பினார்.

(max factor makeup என்ற நவீன  ஒப்பனை முறையை 1934ல் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார். இவர் ஒப்பனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது மட்டுமில்லாமல், அதில் அதீத அறிவையும்   பெற்றிருந்தார். மேற்கண்ட புகைப்படம் சீமந்தினி என்ற திரைப்படத்தில் T P ராஜலக்ஷ்மி அவர்களுக்கு ஒப்பனையை திருத்திக் கொண்டிருக்கிறார்)

இவர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்  

  சதிலீலாவதி (1936)

  சீமந்தினி (1936)

  இரு சகோதரர்கள் (1936)

  அம்பிகாபதி (1937)

  சூர்யபுத்ரி (1940)

  சகுந்தலா (1940)

  காளமேகம் (1940)

  தாசிப்பெண் (1943)

  வால்மீகி (1945)

  மீரா (1945)

  பொன்முடி (1950)

  மந்திரிகுமாரி (1950)

 

(படத்தில் எம் எஸ் சுப்புலக்ஷ்மி, டங்கன், மீரா படப்பிடிப்பின் போது)

இது தவிர ஆங்கிலேயர்களின்  கொள்கைகளை பரப்பும் சில படங்களையும், நந்தனாரில் சில காட்சிகளையும் இவர் இயக்கி இருக்கிறார். டங்கன் அமெரிக்காவில் மீண்டும் குடியேறிய பிறகு  எல்லிஸ் டங்கன் ப்ரொடக்சன்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இந்தியாவில் படப்படிப்பு நடத்திய அமெரிக்கப்படங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார்.  மேலும் ட்யூக் கோல்ட்பர்க் என்ற தயாரிப்பாளருக்காக செய்திப் படங்களைத் தயாரித்தார். மீண்டும் இவர் தமிழகம் வந்த போது தமிழ்த் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டங்கன் டிசம்பர் 1, 2001 இல் இயற்கை எய்தினார். டங்கன் தனது திரையுலக அனுபவங்களை எ கைட் டு அட்வன்ச்சர் என்ற தலைப்பில் சுயசரிதையாக வெளியிட்டுள்ளார்.

நன்றி: விக்கிப்பீடியா,  நடிகர் மோகன் ராமன்(புகைப்படங்கள் இவருடைய facebook தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது)   
 

இங்கு காணப்படும் படங்கள் யாவும் சென்னையின் பழைய படங்கள், இவை யாவும் திரைப்படங்களில் இருந்து எடுக்கப்பட்டது, ஏற்கனவே வரும் ஞாயிறு வந்தால் சென்னைக்கு வயது 371 என்ற இடுகையில் சென்னையின் பழைய புகைப்படங்களுடன் சென்னையின் வரலாற்றையும் எழுதி இருந்தேன். இப்போது இந்த இடுகையில் உள்ள படங்கள் சென்னையின் எந்த பகுதிகள் என உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். சென்னையை எவ்வளவு உங்களுக்கு தெரிந்திருக்கிறது என்று பார்போம்…

 
ஓசோன் படிவத்தைப் பற்றி நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம் சமீப ஆண்டுகளாக, சரி இந்த ஓசோன் என்பது என்ன தெரியுமா? 
 
உண்மையில் ஓசோன் என்பது ஆக்சிஜன் தான், அப்புறம் எதற்கு இதை ஓசோன் என்று கூறுகிறார்கள். ஏன் என்றால் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் போல் இது இல்லை, நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனுக்கு 2 மூலக்கூறுகள் கொண்ட இணைப்பு. அதாவது o2 , ஒசோனுக்கு 3 மூலக்கூறுகள் கொண்ட இணைப்பு  அதாவது o3 உண்மையில் இது நம் உடலுக்கு ஒரு மாசு, இது நமக்கும், விலங்குகளுக்கும் மூச்சுக் கோளாறை உண்டாக்க கூடியது.  இந்த வாயுவை முகர நேர்ந்தால் தலைவலியும், கண் எரிச்சலும், மூச்சுக்குழல் அரிப்புணர்வும் உண்டாகும். காற்றின் ஊடே மின்சாரம் பாயும்போது ஓசோன் உண்டாகும் என்று கூறுகின்றனர். மோட்டார் ஓடும்போது ஒரு வித துர்நாற்றம் உண்டாகுமே இது ஒசானால் உண்டாவதே.  இந்த ஓசோன் எனும் வார்த்தை கிரேக்க மொழியில் நாற்றம் என்னும் பொருள் படும். 
 
வெப்பநிலை -112 °செ இல் இது கரிய நீல நீர்மமாக மாறுகின்றது. இன்னும் கீழான வெப்பநிலையில் -193 °செ இல் கருமை மிக்க கத்தரிப்பூ நிறத்தில் திண்மமாக மாறுகின்றது. இப்படி தின்ம நிலையில் பஞ்சு போன்ற நிலையில் தான் வளிமண்டலத்தின் மேல் இது காணப்படுகிறது. இதன் சிறப்பம்சமே சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களை புவியின் வளிமண்டலத்திற்குள் வராமல் தடுப்பது அல்லது குறைப்பது. 
 
இந்தப் படலத்தில் ஓட்டை அதிகமாகிக் கொண்டே போவது தான் பெரிய பிரச்சனையாக   சொல்கிறார்கள். அது நமக்கு ஒவ்வாத புற ஊதாக்கதிர்களை நம் மீது திணித்து  புற்றுநோய் முதலான நோய்களை உண்டாக்கும். 
 
 
இப்போது சமீபத்தில் வெளியான எந்திரன் படத்தில் வரும் கிளிமஞ்சாரோ பாடல் இந்த வருடத்தின் ஹிட்டான பாடல் என்ற பெயரை ஏற்கனவே பெற்றுவிட்டது. இதில் வரும் கிளிமஞ்சாரோ என்பது என்ன தெரியுமா? நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்  இது ஒரு அழகான மலை என்பது. தெரியாதவர்களுக்கு  இந்த மலையை பற்றி சில தகவல்கள்.
 
தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை கிளிமஞ்சாரோ. இதுவே ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மலைகளிலேயே  மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். நம் இமயமலையின்  மிக உயந்த சிகரம் எவரெஸ்ட் அது  போல கிளிமஞ்சாரோவின் மிக உயர்ந்த சிகரம் உகுரு. இது பெரிய மலை வகையை சார்ந்தது அல்ல. ஆனால் பெரும்பாலான பெரிய மலைகள் மலைத்தொடர்கள், ஆனால் கிளிமஞ்சாரோ தனிமலை வகைகளில் மிக உயர்ந்தது என அறியப்படுகிறது.  இம்மலைக்குக் கிளிமஞ்சாரோ என்னும் பெயர் எப்படி வந்தது என்ற விஷயம் தெளிவாகத் தெரியவில்லை ஆனால், சுவாகிலி எனும்  மொழியில் கிளிமா (Kilima) என்றால் குன்று (சிறுமலை) என்று பொருள் என்றும் ஞ்சாரோ (Njaro) என்றால் பழைய சுவாகிலி மொழியில் வெள்ளை,பளபளப்பான என்று பொருள் என்றும் கூறுகின்றனர். ஆனால் வேறு சிலர் இது சுவாகிலி மொழிச்சொல் அல்ல என்றும், கிச்சகா மொழியில் ஜாரோ(jaro) என்றால் பயணம் செல்லும் தொடர் (caravan) என்றும் பல்வேறு விதமாகக் கூறுகின்றனர்.
 
ஐஸ்வர்யாவை எதற்காக கிளிமஞ்சாரோ மலையோடு கவிஞர் ஒப்பிட்டரோ தெரியவில்லை, பளபளப்பான அழகுடன் விளங்கும் மலைப் பிரதேஷம்  கிளிமஞ்சாரோ, ஐஸ்வர்யா அவ்வளவு எழிலோடு உள்ளார் போலும்… ஆனாலும் இது எரிமலை ஆயிற்றே… என்ன உவமையோ…யார் கண்டது.
 
 
மேற்கத்திய உணவு வகை சாப்பிடும் எல்லோரும் அறிந்திருப்பர் CAN FOOD என்றால் என்னவென்று, இப்போது இந்திய உணவு வகைகளும் நிறைய இதுபோல கேன்களில் அடைத்து சீலிடப்பட்டு  வருகிறது. சரி இதுபோல கேன்களில் அடைத்து உணவுகளை விற்கும் முறை எப்போது வந்தது என்று தெரியுமா?
 
போர்க்காலங்களில் வீரர்களுக்கு உணவுகளை எடுத்து செல்லும் போது, அது பல வகைகளில் பாழாகியது, கெட்டுப்போனது. இதனால் அதிகப்படியான பொருட்செலவும், தேவையான சமயத்தில் உணவு இல்லாமல் வீரர்கள் சோர்வடையும் நிலையும் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் பிரெஞ்சு மாமன்னர் நெப்போலியன் இந்த பிரச்சனைக்கு யார் தீர்வு சொல்கிறார்களோ அவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். அதாவது குறைந்த செலவில் உணவுகளை கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் வழிமுறையை கண்டறிய இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து நிகோலஸ் அபர்ட் (nicholas appert) என்பவரால் உணவுகளை கேன்களில் அடைக்கும் வழிமுறை கண்டறியப்பட்டது. காற்றுப்புகாத ஜாடியில் அடைக்கப்படும் உணவு கெட்டுப்போகாது  என்ற தனது கண்டுபிடிப்பின் மூலம் 12000 பிராங்க்ஸ் பரிசும் பெற்றார். முதலில் உணவுகளை கண்ணாடி குடுவைகளில் பயன்படுத்த ஆரம்பித்து இன்று வித விதமான வடிவங்களில் கேன்களில் உணவுகள் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுகின்றன.
 

ஆங்கிலத்தில் பாய்காட் என்று ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஒத்துழைக்காமல் தவிர்ப்பது, ஒன்றாய் இனைந்து புறக்கணிப்பது என்பது இதன் பொருள். இந்த சொல் எப்படி வந்தது ? தெரியுமா?

ஐயர்லாந்தில் காடுகளிலும், தோட்டங்களிலும் வேலை செய்ய காப்டன் சார்லஸ் பாய்காட் என்ற ஐரிஸ் கான்ட்ராக்டர்  கூலியாட்களை நியமித்து வேலை வாங்கி வந்தார். கூலியாட்களும் ஐரிஸ்காரர்கள். இவர்களிடம் மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் நடந்து கொண்டார் பாய்காட்.  பல நாட்கள் பொறுத்திருந்தும் விடிவு எதுவும் ஏற்படாததால் அந்த கூலியாட்கள் அனைவரும் ஒன்றாய் இனைந்து பாய்காட்டின் காண்ட்ராக்ட் வேலையை செய்ய மறுத்து அவரை புறக்கணித்தனர். அந்தப் பகுதியில் அவர் தனித்து விடப்பட்டார். அவரின் வேலையாட்கள் அவரின் நிலத்தில், வீட்டில் வேலை செய்ய மறுத்து விட்டனர், அவ்வூரில் உள்ள வியாபாரிகளும் இவருடன் வணிகம் செய்ய மறுத்துவிட்டனர். தபால் கொடுப்பவர் கூட தபாலை கொடுக்க மறுத்துவிட்டாராம். அந்த பகுதி மக்கள் யாருமே அவருக்கு ஒத்துழைக்கவில்லையாம்.

அவருடைய நிலத்தில் அறுவடைக்கு ஆள் கிடைக்காமல் வேறு இடங்களில் இருந்து சொற்ப ஆட்களை கொண்டு அறுவடை செய்தாராம், 50௦ தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஆயிரத்திற்கும் மேற்ப்பட காவலர்களை நியமிக்க வேண்டியதாகிவிட்டது . வேடிக்கையான விஷயம் என்னவென்றால்  அறுவடையால் கிடைத்த  லாபத்தை விட காவலர்களுக்கும் விவசாயக் கூலிகளுக்கும் கொடுத்த பணம் அதிகம் ஆகிவிட்டது.  

இந்த நிகழ்வுக்கு பின்னர்தான் இத்தகைய ஒத்துழையாமையை பாய்காட் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். முதன் முதலில் 1880 இல் பாய்காட் என்ற பதத்தை டைம்ஸ் பத்திரிகை ஒரு ஒத்துழையாமை போராட்டத்தை பற்றிய செய்தியில் உபயோகப்படுத்தியது.

 
 
சென்ற வாரம் எனக்கு உடலில் அங்கங்கே சிறு சிறு புடைப்புகள் தோன்றியது கூடவே கொஞ்சம் நமைச்சல், நானும் அது சாதாரண கொசுக்கடி என்றே இருந்துவிட்டேன், ஏனெனில் பகல் பொழுதில் என்னால் புடைப்புகளையோ நமைச்சலையோ உணரமுடிய வில்லை, மாலை வீடு சென்ற பிறகே இப்படி ஆகிக்கொண்டிருந்தது. ஆனால் என் வீட்டிலோ அந்த அளவிற்கு கொசுத்தொல்லையும்  இல்லை. 2 நாட்கள் கழித்த பின் தான் உணர்ந்தேன் இது ஏதோ அலர்ஜி போல இருக்குமோ என்று. நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்கும் போது அவர் அவருடைய குழந்தைக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருந்ததாகவும், இது ஒரு வகை  அலர்ஜி தான் எனவும் அலர்ஜி மாத்திரை ஒன்றை வாங்கி போடுங்கள் சரியாகிவிடும் என்றார்.

அவர் சொன்னது போல ஒரு மாத்திரையை விழுங்கிய பின் ஒரே நாளில் சரியானது. அந்த சமயத்தில் நான் அலர்ஜி பற்றி வலை தளங்கள் மூலமாகவும் ஒரு புத்தகத்தின் மூலம் படித்த விசயத்தை உங்களோடு இன்று பகிர்ந்து கொள்கிறேன்.
 
நாம் உண்ணும் உணவால் சில சமயம்  உடலுக்கு சில உபத்திரவங்கள் உண்டாகும் ஆனால் அவை எதனால் ஏற்படுகின்றது என்ற விவரம் புரியாது. இத்தகைய ஒரு நிலைக்கு பெயரே அலர்ஜி. உடலுக்கு ஒவ்வாத ஒரு பொருள் உடலுக்குள் நுழையும் போது எதிர்ப்பு கிளம்புகிறது, அங்கு ஒரு ஒத்துழையாமை இயக்கம் நடைபெறுகிறது. மருத்துவ மொழியில் சொல்ல வேண்டுமானால் ஆண்டிஜென்னுக்கும், ஆண்டிபாடிக்கும் நடக்கும் சண்டை. இந்த விஷப்பொருளை( உடலுக்கு தேவை இல்லாத எல்லாப் பொருள்களும் விசப்பொருட்கள் தான்)  ஹிஸ்டாமின் சீரோடோனின் என்று மருத்துவத்துறையில் சொல்வர். உடலில் எந்தப் பகுதியில் இந்த விஷப் பொருள் தாக்குகிறதோ அந்தப் பகுதியில் அலர்ஜி ஏற்படுகிறது. இந்த விஷப்பொருள் ரத்தத்துடன் உடல் முழுவதற்கும் செல்கிறது. இதனால் ரத்த நாளங்கள் விரிவடையும். ரத்தம் அதிகமாகி அந்த இடம் சிவந்து விடுகிறது. உடலில் தடிப்பாக அங்கங்கு துருத்தும். சில உணர்வு நரம்புகளை தூண்டி நமைச்சலை ஏற்படுத்துகிறது. சுவாசக் குழாய்களை தாக்க ஆஸ்துமாவையும் உண்டாக்கும் சிலவகை அலர்ஜிக்கள். 
 
 
 
முதல்வன் படத்தில் பார்த்திருப்பீர்கள் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக பொறுப்பேற்று பணியாற்றுகிற மாதிரி, உண்மையில் அது போல ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது தெரியுமா? ஆனால் இங்கு எந்த சவாலின் அடிப்படையிலும் பொறுப்பு கொடுக்கப்படவில்லை. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜேம்ஸ்  கே.போக் என்பவரின் பதவிக்காலம் 3.3.1849 அன்று முடிவடைந்து மறுநாள் 4.3.1849 புதிய ஜனாதிபதியாக ஜகேரி டைலர் என்பவர் பொறுப்பேற்கவேண்டும் ஆனால் அது ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அன்று பொறுப்பேற்க அவர் மறுத்துவிட்டார். அமெரிக்காவை பொருத்தமட்டில் ஒரு நாள் கூட ஜனாதிபதி இல்லாமல் இருக்கக்கூடாது, மேலும் பதவிகாலம் முடிந்தும் ஒரு நாள் கூட பழைய ஜனாதிபதி பொறுப்பில் நீடிக்கக் கூடாது. இந்நிலையில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் செனட்டர் சபையின் தலைவர் பொறுப்பை ஏற்கலாம் என்பதை கருத்தில் கொண்டு டேவிட் ரைஸ் அட்சிசன் ஒரு நாள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
 
 
 24 மணி நேரமே ஜனாதிபதியாக இருந்த இவருக்கு அவரின் சொந்த ஊரான பிளாட்ஸ்பர்கில் சிலை வைக்கப்பட்டு, சிலையின் அடியில் அமெரிக்காவின் ஒரு நாள் ஜனாதிபதி என்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது. வழக்குரைஞராக வாழ்கையை தொடங்கிய இவர் பின்பு அரசியலில் ஈடுபட்டார். அடிமை ஒழிப்பு முறையின் போது நிகழ்ந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.