Archive for the ‘படித்ததில் பிடித்தது’ Category

 
ஜப்பானிய சமுதாயம், வீரர்கள் எனப்படும் சாமுராய், விவசாயிகள், கைத்தொழில் செய்பவர்கள், வணிகர்கள், சுத்தமே இல்லாதவர்கள் என சொல்லப்படும் எதா(ETA ) அல்லது புராகுமின், மனிதரே இல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டிருந்தது. இதில் எதா என்பவர்களை புராகுமின், கெதோ மக்கள், சோரி, புதுமகன், தள்ளிவைக்கப்படவர்கள் என்றும் கூறுகின்றனர். இவர்கள் செய்யும் தொழில் மாமிசம் விற்பது, விலங்குகளின் தோல்களை பிரித்து விற்பனை செய்வது, வைக்கோலைக்  கொண்டு காலணிகள் செய்வது. இவர்கள் தங்கள் பிறப்பை மறைப்பதோ, இடம் விட்டு இடம் போய் மறைந்து இருப்பது குற்றமாக கருதப்பட்டது.  இந்த நாவல் ஒரு எதா வகுப்பை சார்ந்தவன், தன்னுடைய பிறப்பால் தான் படும் துன்பத்தையும், சமூகம் எதா வகுப்பு மக்களை எப்படி நடத்தினார்கள் என்பதையும் விளக்கமாக எடுத்தியம்புகிறது.
 
THE BROKEN COMMANDMENT என்ற இந்த ஜப்பானிய நாவல் தோசான் ஷிமாசகி என்பவரால்  படைக்கப்பட்டது, தமிழில் நான் தலித் இல்லை என்ற  தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் தீண்டாமை போன்ற குற்றங்களை வெகுவாக நாம் பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம், மேலும் இங்கு சிலர் தீண்டாமையின் கோரத்தில் இருந்து விடுபடும் பொருட்டு புத்த மதத்தை ஏற்றுக் கொண்டதாக கூட அறிகிறோம். ஆனால் பௌத்தத்தை மதமாக கொண்ட ஜப்பானில் இந்த தீண்டாமை கொடுமை எந்த அளவிற்கு வேருன்றி இருந்தது என்பதற்கு இந்த நாவல் ஒரு சாட்சி.
 
உறவுகளை விட்டு விலகி மலைப்பகுதியில் வாழும் தகப்பன், சித்தப்பா, தங்களின் அடுத்த தலைமுறையாவது எதா என்று வழங்கப்படக்கூடாது என்ற ஆவலில் இறக்கும் தருவாயில் கூட தன் மகனை எதா பிரிவினன் என்று எங்கேயும் சொல்லிவிடாதே என்று கட்டளையிட்டு போகிறார். கதையின் நாயகன் செகாவா உஷிமாத்ஷோ, ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சாதூர்யமாக ஆசிரியப்பயிற்சி பள்ளியிலும் தற்போது வேலை செய்யும் பள்ளியிலும் தனது இனத்தை மறைத்து வாழ்கிறார், காரணம் தனது தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி. ஜப்பானிய சமூகத்தில் எதா பிரிவினன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் அவன் எதா பிறப்பினனாக இருந்தால் அவனை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். இந்நிலையில் அவனின் பிறப்பு பற்றி செய்தி தெரிந்தால் அவனது வேலையை இழக்க நேரிடும், அவன் மனதார விரும்பும் பெண்ணே கூட அவனை

விட்டுப் பிரியலாம், வாடகைக்கு இருக்கும் இடத்தில் இருந்து துரத்தப்படுவான். இவை எல்லாவற்றையும் மனதில் வைத்து புழுங்கி கொண்டு வாழ்கிறான், இந்த நிலையில் அவனுக்கு ஒரே துணை அவனுடைய மானசீக குரு இனாகோ ரெந்தாரோவின் எழுத்துக்கள் தான்.
 
செகாவின் தந்தை இறந்த நிலையில் அவரை காண ஊருக்கு செல்லும் போது ரெந்தாராவை ரயிலில் சந்திக்கிறார், அவருடன் மனம்விட்டு பேசுகிறார், அவருடன் ஜப்பானிய டயட் சபைக்கு தேர்தலில் போட்டியிடயிருக்கும்  அவரது வக்கீல் நண்பரையும் சந்திக்கிறார், ரெந்தாரோ தான் எதா என்று வெளிப்படையாக பேசுவதும், எழுதுவதும் செகாவிற்க்கு ஒரு உந்துதலையும், கிளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது அவரிடம் தானும் ஒரு எதா என்று சொல்ல பல முறை எண்ணி சொல்ல முடியாமல் தவிக்கிறான். சில நாட்களுக்கு பிறகு அவர் தேர்தல் கூட்டத்தில் பங்கேற்ற்று விட்டு வரும் போது கொலை செய்யப்படுகிறார். தேர்தலில் வக்கீலுக்கு எதிராக இருப்பவர் இந்த கொலையை செய்கிறார், அவர் ஏற்கனவே செகாவா ஒரு எதா என்பதை பலரிடம் சொல்லிவிடுகிறார், காரணம் அவர் ஒரு பணக்கார எதா பெண்ணை மனம் முடித்துகொள்கிறார் அந்த பெண் செகாவாவிற்கு தெரிந்தவள் என்பதால் இந்த விசயத்தை செகாவா மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி விடுவான் என்ற பயத்தில் இவர் முந்திக் கொள்கிறார். மனமுடைந்து போன செகாவா பள்ளியில் சென்று தான் ஒரு எதா என்று வகுப்பறையில்  சொல்லி, தனது ராஜினாமாவை கொடுத்துவிட்டு, தன் காதலியின் வீட்டுக்கு சென்று உண்மையை கூறுகிறார்.  
 
இந்த நாவலைப் பொறுத்தவரை, ஜப்பானின் சமூகச்சூழலை அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கிறது.  வதந்தி, வம்புபேச்சு ஒரு மனிதனை எவ்வளவு மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் என்பதையும் விளக்குகிறது. நம் பெற்றோர்களை நாம் தேர்ந்தெடுக்கவில்லை, அதனால் நாம் நம் இனத்தையும் தேர்ந்தெடுப்பதில்லை, அப்படியிருக்க நாம் பிறப்பால் உதாசினப்படுத்தப்படுவது, ஒதுக்கி வைக்கப்படுவது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை இந்நாவல் நன்கு விளக்குகிறது. 1906ல் வெளியிடப்பட்ட இந்த படைப்பு  ஆசிரியர்க்கு முதல் நாவல் என்றால் யாராலும் நம்ப முடியாது… அற்புதமான இந்த கலைப்படைப்பை உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தவறாமல் படியுங்கள்.   
 

நாவல் இலக்கியத்தில் மிகவும் சிறந்த நாவல் எதுவென்று கேட்டால் டால்ஸ்டாயின்  போரும் சமாதானமும் என்பர். அதுபோல நாவல் இலக்கியத்தில்  மிகச்சிறந்த நாவலாசிரியர் என்றால் சந்தேகத்திற்கிடமின்றி டாஸ்டாவ்ஸ்கி என்று தான் சொல்வார்கள். ரஸ்ய இலக்கிய மேதையான டாஸ்டாவ்ஸ்கி இளமையில் ஒரு புரட்சிவாதி இதன் காரணமாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, தூக்குமேடை வரை சென்றவர், கடைசி நிமிடத்தில் மரண தண்டனை சிறை தண்டனையாக மாற்றப்பெற்று உயிர் தப்பினார்.

மனோதத்துவ துறை சரியான உருவம் எடுப்பதற்கு முன்னரே தன் நாவல்களை மனோதத்துவ அடிப்படையில் படைத்தவர். வேறு எங்கும் படித்து அறிந்து கொள்ள முடியாத பல விசயங்களை டாஸ்டாவ்ஸ்கியை படித்து நான் அறிந்து கொண்டேன் என்கிறார் உலகின் மிகப் பெரிய மனோதத்துவ நிபுணரான டாக்டர் பிராய்ட்.

அத்தனை புகழ்பெற்ற டாஸ்டாவ்ஸ்கியின் ஒரு உன்னத படைப்பு தான் கரமசாவ் சகோதரர்கள் என்ற நாவல். இது ஒரு துப்பறியும் நாவலை போன்ற கதையம்சம் கொண்டது. கரமசாவ் என்பது ஒரு குடும்ப பெயர், ஒரு வம்சத்தின் பெயர். இந்த வம்சத்தின் மூத்தவர் பயோடர் பாவலோவிச், ஒரு பொறுப்பற்ற தந்தை, வட்டி வியாபாரி ஓயாத குடிகாரன், காமவெறியன். உலக சுகபோகங்களில் அதிக அளவில் ஈடுபட்டவன். இன்ப வாழ்கையும் பணமுமே அவன் குறிக்கோள் மற்றவர்கள் பணத்தில் அவன் சுகபோக வாழ்க்கை நடத்தி வந்தான். பாவலோவிச் கரம்சாவின் முதல் மனைவியின் பெயர் அடலிடா அவள் மூலம் 25 ஆயிரம் ரூபிள்களையும் ஒரு வீட்டையும் சீதனமாகவும் பெற்று, அவள் மூலம் மிதியா என்ற குழந்தையையும் பெறுகிறார். பாவலோவிச்சின் கொடுமை தாங்காமல் மூன்று வயது மகன் மிதியாவைத் தன் கணவரிடம் விட்டு அவள் ஒரு இளம் காதலனுடன் ஓடிப்போய் சில காலம் அவனுடன் வாழ்ந்து இறந்து போனாள். மனைவி இறந்த செய்தி கிடைத்த போது அவன் மது அருந்தி விட்டு நண்பர்களிடம்  சவால் விட்டு ஒரு பைத்தியக்காரியை பலவந்தப்படுத்தி உறவு கொண்டு பின்னாளில் அவள் மூலம் சிமார்டியாகாவ் என்ற மகனை பெற நேர்கிறான். இக்குழந்தை பிறகு வேலைக்காரன் கிரிகோரியினால் வளர்க்கப்பட்டு வேலையாளனாக பாவலோவிச்சின் வீட்டிலே இருக்க நேர்ந்தது. குடிகாரனும் மோசமான குணமும் உள்ள தகப்பன் தாயற்ற மிதியாவை எவ்விதம் வளர்ப்பான்? தன் 3 வயது மகனை அலட்சியம் செய்தான். அடியோடு மறந்து போனான்.  கிரிகோரி குழந்தையை வளர்த்து வந்தான் பின் மிதியாவை தாயின் சொந்தக்காரர் கொண்டு போய் வளர்த்து படிக்க வைத்தார்.  மிதியாவிற்கு 4 வயது நிரம்பிய சமயம் பாவலோவிச் ஒரு மாதா கோயில் அதிகாரியின் மகளான சோபியாவை 2 வது முறையாக திருமணம் செய்து கொள்கிறார். பாவலோவிச் தன் மனைவியின் எதிரிலேயே  வீட்டில் மோசமான பெண்களை அழைத்து வந்து மோசமாக நடந்து கொள்வான்.. 

பாவலோவிச்சின் தொல்லையின் காரணமாக சோபியாவிற்கு சிறு வயதில் ஏற்ப்பட்ட நோய் மீண்டும் தலை தூக்க தொடங்குகிறது. சிற்சில சமயங்களில் இந்நோய் காரணமாக நாள் முழுதும் இழுப்பு வந்துவிடும். அப்படியும் அவள் ஐவான், அலக்சி என்ற இரு குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். ஐவானுக்கு 7 வயதும் அலக்சிக்கு 4 வயதும் இருக்கும் போது சோபியா இறக்கிறாள். சோபியாவின் மரணத்திற்கு பிறகு மிதியவைப்போல இவர்களும் வேலைக்காரன் கிரிகோரியிடம் வளர்ந்தனர். இந்த 4 பிள்ளைகளும்வளர்ந்து பெரியவர்களாகின்றனர் , மிதியா தன் தாயின் சொத்தை அவரின் தந்தையிடம் இருந்து கைப்பற்றுவதில் குறியாக இருந்தான். அவனுக்கு ஒரு காதலி இருந்தாள் அவளின் பெயர் கிரிஷங்கா, இவளின் பால் பாவலோவிச்சுக்கு ஒரு கண். அவளை அடைய அவரும் முயன்றுகொண்டிருந்தார். இந்நிலையில் ஒரு நாள் அவர் கொல்லப்படுகிறார், அவரை யார் கொலை செய்தது என்ற ரீதியில் கதை தொடர்கிறது. முடிவில் சிமார்டியாகாவ் கொலை செய்தது தெரிகிறது ஆனால் மிதியா சந்தர்ப்பவசத்தால் சிறைக்கு  செல்கிறான். சிமார்டியாகாவ் குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து கொள்கிறான். ஐவான், அலக்சி ஆகிய இருவரும் தங்களால் தந்தையை காப்பாற்ற முடியவில்லையே என மன உளைச்சளுக்கு ஆளாகுவதாக கதை முடிகிறது.

இந்தக் கதையை பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின்  கீழ் கண்ட இணைப்பில் சென்று பாருங்கள். http://en.wikipedia.org/wiki/The_Brothers_Karamazov

இந்த கதையின் ஆசிரியர் டாஸ்டாவ்ஸ்கி பற்றி அறிய விக்கிப்பீடியாவின்  கீழ் கண்ட இணைப்பில் சென்று பாருங்கள். http://en.wikipedia.org/wiki/Fyodor_Dostoyevsky

கிர்கீசியாவில் பிறந்த சிங்கிஸ் ஐத்மாத்தவ் படைப்புகள் அனைத்தும் உலகப் புகழ் பெற்றவை குல்சாரி என்ற நாவல் அதில் ஒன்று. இரண்டாம் உலகப் போரில் சோவியத் சமுதாயத்தில் நடைபெற்ற எல்லாவற்றிற்கும் ஸ்டாலின் தான் காரணம் என்ற பரப்புரையை இந்த குறு நாவல் தகர்க்கிறது. சமூகப் போராட்டத்தை மிக நேர்த்தியாக குதிரையை(குல்சாரி) மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இந்த கதை படிப்போர் நெஞ்சை கவர்கிறது. இந்த குறுநாவலில் இடம் பெற்றுள்ள குதிரையும் மக்களும் நம்மோடு வாழ்ந்து பிரிகின்றனர்.

தானாபாய் என்ற வயது முதிர்ந்த தொழிலாளியையும் அவன் வளர்த்த குல்சாரியையும் மையப் படுத்தி இந்த கதை உள்ளது. நாவலின் ஆரம்பத்தில், முதியவரான தானாபாய் தன் மருமகளின் சுடு சொற்களால் புண்ணாகிப் போன இதயத்துடன் தன் கிழட்டு குதிரை குல்சாருடன் தன் இருப்பிடத்தை நோக்கி போகும் போது பழைய நினைவுகளை நினைத்து வருந்தி கொண்டு போவது போல கதை ஆரம்பிக்கிறது.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து தொழிலாளர் வர்க்கம் புதிய அரசை ஏற்படுத்தி ஆண்டு வந்த ஆரம்ப காலம், கிராமத்தில் கூட்டுப் பண்ணைகள் தீவிரமடைந்து வர்க்க பேதமற்று சமுதாய முன்னேற்றத்திற்காக போராடி கொண்டிருந்த காலம். கூட்டுப் பண்ணைகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெறுகின்றன. முக்கிய பொறுப்புகளில் எதிர் புரட்சியாளர்கள் உள்நுழைந்து அவற்றை சீரழிக்கிறார்கள். அரசு அதிகாரிகளில் சிலர் தான்தோன்றிதனமாகவும், பொறுப்பற்றவர்களாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் மாறி  மக்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் ஆகி விடுகின்றனர்.  இத்தகைய போக்கு தானாபாயை சீரழிக்கிறது. பட்டறையில் வேலை செய்து வந்த தானாபாய் முதலில் குதிரைகளை பராமரிக்கும் தொழிலாளியாய் தன் கட்சிக்காக உழைக்க முன் வருகிறான்.  அந்த சமயத்தில்தான் இளம்பிராயத்து குல்சாரி அவனுக்கு அறிமுகமாகிறது. குல்சாரி குலுங்கா நடையன் என்ற சிறப்பு பெயருடன் பலரை கவரும் வகையில் உள்ள குதிரை, தன் எஜமானிடம் அதிக விசுவாசம் கொண்டது. பந்தயங்களில் பல வெற்றியை தானா பாய்க்கு ஈட்டி தருகிறது. ஒரு நாள் அதை அரசு அதிகாரிகளுக்கு ஏவல் செய்ய அது அழைத்து செல்லப்படுகிறது. அடிக்கடி அது கிராமத்திலிருந்து மலையில் எஜமானின் இருப்பிடத்திற்கு தன் மந்தையை சேர்ந்த குதிரைகளை பார்க்க ஓடிவருகிறது. தானாபாயின் நண்பர் சோரோ குதிரை வளர்ப்பிலிருந்து அவனை ஆட்டு கிடைகளை பராமரிக்க நியமிக்கிறார், போதிய உணவோ உறைவிடமோ இல்லாமல் அவரும் அவரது ஆடுகளும் பல இன்னல்களை அனுபவிக்க நேரிடுகிறது. அரசு தரப்பில் எந்த உதவியும் செய்யாமல் ஆடுகளை சரியாக பராமரிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறான்.

அதனால் அரச அதிகாரிகளை அடிக்க போய் விடுகிறான் தானாபாய். இதனால் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இதனால் மனமுடைந்து தன் சேவைகளும், உழைப்பும் வீணாய்  போனதை எண்ணி வருந்துகிறான். இந்த துயரம் தாளாமல் அவரது நண்பர் சோரோ இறக்க நேரிடுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு அவனை மீண்டும் கட்சியில் சேர அழைப்பு  விடுக்கின்றனர், ஆனால் தன் பழைய கசப்பான  நினைவுகளால்  மனமொடிந்திருந்த  தானாபாய் சேராமலே இருக்கிறார். இந்நிலையில் அவனது நண்பனாக விளங்கும் குல்சாரி இறந்து அந்த மனசுமையோடு வீடு நோக்கி போவது போலவும், விரைவில் கட்சியில் சேர்ந்து சமுதாயப் பனி ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடும் தானாபாய் என்ற தொழிலாளி தன் கம்யூனிச சித்தாந்தத்தின் மேல் அளவற்ற மதிப்பும் அதுவே உலகை நிலை நிறுத்தவல்ல சக்தி எனவும் நமக்கு சொல்லாமல் சொல்கிறது இந்த நாவல்.

ஆரம்பத்தில் தொழிலாளிகளின் கூட்டுப் பண்ணைகள் எவ்வாறு நடைபெற்றன. அது எத்தகைய இன்னல்களை சந்தித்தன எவ்வளவு தூரம் தங்கள் உயிரை கொடுத்து வேலை செய்தார்கள். அதன் பலனை கூட அவர்களால் அனுபவிக்க முடியாமல் போன சோகம், மேலும் கட்சிகள் மேல் அவர்களுக்கு இருந்த மதிப்பு, வர்க்க பேதமற்ற அரசிலும் அதிகாரிகள் என்ற பெயரில் ஒரு மேலாண்மை கொண்ட பிரிவு உருவான விதம், அது நாளடைவில் சரி செய்யப்பட்ட தகவல் எல்லாம் இந்த நாவலை படிக்கும் போது நமக்கு புலனாகிறது. அந்த கஷ்டங்கள் தான் மக்களை கம்யூனிச சித்தாந்தத்தை பயந்து நோக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய சொகுசு வாழ்க்கைக்காக போட்டு உடைத்த உண்மையும் நமக்கு புலனாகிறது. 

எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ்  பற்றி மேலும் நீங்கள் அறிந்து கொள்ள விக்கிப்பீடியாவின் கீழ்கண்ட வலைதளத்திற்கு சென்று பாருங்கள்.

http://en.wikipedia.org/wiki/Chinghiz_Aitmatov

1998 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஆங்கில நாவல் மலை மேல் நெருப்பு. கரிக்னானோவில் தன்னந்தனியாக வாழ்ந்த நந்தாகவுல் என்ற மூதாட்டியை சுற்றி வருகிறது இந்த புதினம். இந்த கதாபாத்திரத்தை வெகு லாவகமாக கையாண்டுள்ளார் அனிதா தேசாய். நந்தாகவுலின் கொள்ளு பேத்தி ராக்காவின் வருகை அதனால் கவுலுக்கு ஏற்ப்பட்ட இடைஞ்சல்களை நன்கு சித்தரித்துள்ளார். கவுலின் தோழி இலா தாஸ்சின்  தோற்றம் எளிமையான, சோகமான நகைச்சுவையை உணர்த்துகிறது. அனிதா தேசாய் 1937 இல்  பிறந்தவர் அவருடைய தந்தை வங்காளத்தை சேர்ந்தவர் தாயார் ஜெர்மன், அனிதா தேசாய் டெல்லிக்கு சென்று கல்வி கற்றார். தெளிவான பகல் பொழுது, கட்டுப்பாட்டு நிலையில், விருந்தும் உபவாசமும் என்ற  3 நாவல்கள் புக்கர் பரிசு தேர்வில் இறுதி சுற்று வரை வந்தது.  இவர் சாகித்ய அகாடமியின்  ஆங்கிலக் குழுவின் அங்கத்தினராகவும் பணியாற்றினார். அசோகமித்திரன் மலை மேல் நெருப்பு என்ற இந்த நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
 
நந்தாகவுல் தனிமையில் ஒரு மலைவாழ் பகுதியில் வாழ்ந்து வருபவர், அவர் ஒரு பல்கலை கழகத்தின் முன்னாள்  துணைவேந்தரின் மனைவி, கணவர் இறந்தபின் தன் சொந்தங்களை எல்லாம் விட்டு தனிமையில் கசவுரியில் உள்ள கரிக்னோவில் வாழ்ந்து வருகிறார் அவருடைய அன்றாட தேவையை பூர்த்தி செய்ய ராம்லால் என்ற ஒரு வேலையாள் அவளின் உடன் இருந்தார். இந்நிலையில் அவளுடைய பெண் வயிற்று பேத்தி ஒருவள் அவளை பார்க்க வருவதாக தகவல் வருகிறது. பேத்தி ராக்கா வந்து சேர்கிறாள், அவளும் நந்தாவை போலவே தனிமை விரும்பியாகவே இருக்கிறாள். இப்படியாக கதை சென்று கொண்டிருக்கும் போது நந்தாவின் தோழி இலாதாஸ் அவளை பார்க்க வருகிறாள், சமூக சேவகியான அவள் வருகையின் மூலம் தனது பழைய நினைவுகளில் மூழ்க வேண்டியதாகிறது. நந்தாவின் கணவர் எப்படி அவள் மேல் அக்கறை இல்லாமல் இருந்தார், ஒரு விரிவுரையாளருடன்   அவருக்கிருந்த  நட்பின் காரணமாக இவளுக்கிருந்த மன அழுத்தம் எல்லாம் நினைவுக்கு வருகிறது. இந்த சோகத்தின் வெளிப்பாடு தான் அவள் தனிமையில் இந்த மலையில் தனியாக வாழ்வதற்கு காரணம் என்று சொல்லாமல் சொல்கிறார் ஆசிரியர். இலா தாஸ் நந்தாவை பார்த்து விட்டு செல்லும் வழியில் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டு இறந்து கிடக்கிறாள் எனவும் அவளை நந்தா வந்து அடையாளம் காட்ட அழைக்கப்படுவதும் அதன் பொருட்டு அவள் அடையும் சோகம், இப்படியாக கதை முடிகிறது.
 
நந்தா, ராக்கா, இலாதாஸ், ராம் லால் எல்லா பாத்திரங்களும் மனதில் பசுமையாக நிற்கிறது, பாத்திர வடிவமைப்பும் வெகு நேர்த்தியாக இருக்கிறது. அந்த மலைப்  பிரதேசத்தின் தொன்மை அதன் பின்புலம் யாவையும்  நன்றாக விளக்கியுள்ளார் அனிதா தேசாய். உண்மையில் கசவுரி பிரதேஷம் இன்னுமொரு பாத்திரமாகவே மிளிர்கிறது. 

 

சத்யஜித்ரேவை நமக்கு பலரில் உலகப்புகழ் பெற்ற இயக்குனராக தெரியும். அதுவும் கலைப்பட இயக்குனர், யதார்த்த சினிமா என்கிற பேரில்  மெதுவாக போகும் படங்கள் என்று வெகுஜன மக்களால் கூறப்படும் படங்களை தான் நாமறிவோம். ஆனால் அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வகையில், திருப்பங்களுடன் கூடிய  துப்பறியும் கதைகளை எழுதுவார் என்பது சமிபத்தில் கைலாஷில் ஒரு கொலையாளி என்ற அவரது கதையை படித்தபின் தான் தெரிந்தது. கதையின் முன்னுரையில் சத்யஜித்ரே சிறு வயதில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் எவ்வளவு  ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் அதுவே அவருக்கு இந்த பெலுடா கதைகளை எழுத தூண்டியதாக  சொல்லப்பட்டிருந்தது.

 இந்த பெலுடா கதைகள் சத்யஜித்ரேவின் தாத்தா நடத்தி வந்த சந்தேஷ் என்ற சிறுவர் பத்திரிகையில்  1965 முதல் வெளியாயியன. இந்த பத்திரிகை சில காரணங்களால் இடையில் நிறுத்தப்பட்டு பின் சத்யஜித்ரேவால் தொடர்ந்து நடத்தப்பட்டது. மொத்தம் 35 கதைகள் இதில் அடக்கம். முதல் 34 கதைகள் சத்யஜித்ரே வாழ்நாளிலேயே வெளியாயியன 35 வது கதை அவர் இறந்த பிறகு 1995 இல் வெளியானதாக தகவல்.

 கதைகள் யாவும் பெலுடா(கதாநாயகன்)வின் ஒன்று விட்ட சகோதரன் மாதேஷ் என்பவர் சொல்வது போல அமையும். பெலுடா, மாதேஷ், லால்மோகன் பாபு, சித்து, என்ற முக்கிய கதா பாத்திரங்கள் இதில் இடம்பெற்றிருக்கும். ஜெய் பாபா பெலுநாத், சோனார் கேளா என்ற 2  பெலுடா கதைகளை திரைப்படமாகவும் சத்யஜித் ரே எடுத்தார். சில பெலுடா கதைகள் காமிக்ஸ் புத்தக வடிவில் பின்னர் வெளியானது. ஒவ்வொரு வருடமும் சந்தேஷ் பத்திரிகையில் துர்கா பூஜை சமயத்தில் பெலுடாவின் புதிய கதை வெளியாகும். பின்னர் எல்லாம் தொகுக்கப்பட்டு ஒரு தலைப்பின் கீழ் வெளியானது.

கைலாஷில் ஒரு கொலையாளி சிலை திருட்டை மையமாக கொண்டு எழுதப்பட்ட ஒரு துப்பறியும் கதை. புவனேஷ்வரில் உள்ள ராஜா ராணி கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு யக்க்ஷி யின் தலை வெளிநாட்டவர் ஒருவரிடம் விற்கப்படுகிறது, அவர் போன விமானம் விபத்துக்குள்ளாகிறது, இந்த தகவல் பெலுடாவிற்கு எட்ட யக்க்ஷி தலையை மீட்க விபத்து நடந்த இடத்திற்கு செல்கிறார், அதற்க்கு முன்னே அதை விற்றவன் அதை கைப்பற்றி கொண்டு ஹௌரங்காபாத் செல்ல பின் தொடர்து மாதேஷ் மற்றும் ராம் பாபுவின் துணை கொண்டு குற்றவாளியை பிடிப்பதே கதையின் சுருக்கம்.

சத்யஜித்ரேவின் படங்களை பார்த்தவர்கள் இந்த பெலுடா கதைகளை படிப்பார்களேயானால் முற்றிலும் மாறுபட்ட ஒரு சத்யசித்ரேவை நாம் இந்த கதைகள் மூலம் அறியலாம். மேலும் துப்பறியும் கதைகளை நமது இலக்கியங்கள் ஒரு தரமான படைப்பிலக்கியமாக அங்கீகரிக்காத சூழ்நிலையில் சத்யஜித்ரேவின்  இந்த பெலுடா கதைகள் வெகுஜன மக்களின் விருப்பத்தையும் அவர் பூர்த்தி செய்திருக்கிறார் என்பது புலனாகிறது.

பிரெஞ்சு இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் “வணக்கம் துயரமே”( Bonjour Tristesse). நாவலாசிரியர் பிரான்சுவாஸ் சகன் பிரெஞ்சு இலக்கியவாதிகளில் மிக முக்கியமான படைப்பாளி, தீவிரமான பெண்ணியவாதி. இந்நாவலில் 17 வயது இளம் பெண் ஒருத்தியின் உடல், மன, பாலுணர்வு உளைச்சல்கள், நாவல் வெளிவந்த காலத்து  சமூக நெறிகளை அலட்சியபடுத்தி சொல்லப்பட்டதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் வாசகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. 1954 ல் முதல்பதிப்பு வெளிவந்த ஓரிரு நாட்களிலேயே 3000 புத்தகங்கள் விற்று தீர்ந்தன, ஓராண்டுக்கு பிறகு எட்டரை லட்சத்தை தாண்டியது எண்ணிக்கை, இன்றைய தேதியில் 2 மில்லியன் பிரதிகள் விற்றதாக தகவல்.அழகான இளம் ராட்சசி என்ற செல்லப் பெயரால் பிரெஞ்சு இலக்கிய விமர்சகர்களால் புகழப்பட்ட சகன், 18 வது வயதில் 188 பக்கங்களில் நான் அடைந்த புகழ்  “ஒரு வான வேடிக்கை” என்பதாக ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.  15 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது இவரது படைப்புகள், இவரது முக்கிய நாவல்கள் அனைத்தும் திரை வடிவில் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றன. இந்த நூலை புதுச்சேரியை சேர்ந்த நாகரத்தினம் கிருஷ்ணா என்பவர் மொழியாக்கம் செய்திருக்கிறார், காலச்சுவடு பதிப்பகத்தால் 2008 ல் வெளியிடப்பட்டது. 

 

செசில் 17  வயது இளம்பெண் தனது தந்தையுடன் பிரான்சில் வசித்து வருகிறார். தாயார் நினைவு தெரியும் முன்னரே  இறந்துவிட்ட நிலையில் தாயாரின் தோழி ஆன்னி லார்சன் வளர்ப்பில் தனது பிள்ளைப்பருவத்தை கழித்து பின் விடுதியில் இருந்தவாறே படிப்பை தொடர்கிறாள். இவளது தந்தை ரேமொன் ஒரு கேளிக்கைப் பிரியர், பெண்களை தனது பேச்சாலும் செயலாலும் கவர்பவர். விருந்துகளில் கலந்து கொள்வதும் புதுப்புது பெண்களுடன் சல்லாபிப்பதும் அவரது வாடிக்கை, தற்சமயம் எல்சா அவளின் பெண் சிநேகிதியாய் இருக்கிறாள். தனது தந்தையின் நடவடிக்கைகளால் முதலில் எரிச்சளுக்குள்ளான  செசில் நாளடைவில் அப்பாவின் போக்கை மன்னித்தார், காரணம் அவர் இவள் மேல் காட்டும் அளவுக்கதிகமான  அன்பும் பாசமும்.

இந்த வருட கோடையை கழிக்க அவளும், அப்பா ரேமொன் அவருடைய காதலி சகிதம் ஒரு கடற்கரை வாசஸ்தலத்தில்  வில்லா ஒன்றை  வாடகைக்கு எடுத்து தங்குவதாக திட்டம், அதன்படி மூவரும் தங்கியிருக்க அங்கு சிரில் என்ற  இளைஞனை சந்திக்கிறாள் அவன் மேல் ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. அது காதலா  இல்லை உடல் வேட்கையா என்பதை புரிந்து கொள்ளாத நிலையில் அவ்வுறவை தொடர்கிறாள். இதற்கிடையில் தந்தையார் தனது இறந்து போன மனைவியின் தோழியும் மகளை வளர்த்தவளுமான  ஆனியை கோடைவிடுமுறையை தங்களுடன் கழிக்க அழைப்பு விடுத்து அவளும் அங்கு வருகிறார். எல்சாவிற்க்கும் செசிலுக்கும் அது தர்ம சங்கடமாக இருக்கிறது. ஆணி குணத்தால் செசில், ரேமொன் ஏன் எல்சாவிற்க்கும் நேர் எதிரானவள்.

 நாட்கள் செல்ல செல்ல ரெமொனுக்கும் ஆனிக்கும் இடையே நெருக்கம் அதிகம் ஆகிறது . ஒரு நள்ளிரவு விருந்தின் போது அது அப்பட்டமாக வெளிப்பட்டது. எல்சவையும் செசிலையும் தனியாக விட்டு இருவரும் அந்த இரவை கழித்தனர், மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக மறுநாள் தெரிவிக்க அதிர்ந்தே போகிறாள் செசில். இந்த திருமணம் நடந்தால் வீட்டில் ராணுவ ஆட்சி தான் நடக்கும் என நினைத்து எல்சாவை தனது காதலனுடன் நெருக்கமாக இருக்குமாறு நடிக்க செய்து தந்தையை எரிச்சல் அடைய செய்கிறாள். ஒரு சில நாட்களுக்கு பிறகு எல்சாவின் மேல் அவர் பார்வை பட இந்த விஷயம் அறிந்து ஆனி வீட்டை விட்டு போகிறாள். போகும்போது விபத்தில் அவள் இறக்க நேரிடுகிறது. குற்ற உணர்ச்சியில் தந்தையும் மகளும் குறுகிப் போகிறார்கள். ஆனியை நினைத்து துயரப்படுகிறார்கள். தங்களின் வாழ்வை நன்னெறிப்படுத்த  வந்தவளை உதாசினப்படுத்தி துயரத்தை வணக்கம் சொல்லி வரவேற்க நேரிடுகிறது.

சமிபத்தில் நான் படித்த இந்த நூல் ஒரு கம்யூநிச  காம்ரேடின் வரலாறு. 1890 ல் பிரெஞ்சு ஆக்கிரமிப்பில் இருந்த வியட்நாமில்  பிறந்த இவரின் இயற்ப்பெயர் நிகுயன். இளமையில் அவர் எவ்வளவு சிறந்த பண்புகளோடும் தேசபக்தி கொண்டவராகவும் இருந்தார் என்பதை நூல் நன்கு விளக்குகிறது, ஒரு சமையல் காரனாக அமெரிக்காவுக்கு செல்லும் கப்பலில் வேலையாளாக சேர்கிறார். பின் இங்கிலாந்து செல்கிறார் அங்கு சிலகாலம் பனிபுரிகிறார் அங்கிருந்து தங்கள் நாட்டை அடிமையாக்கி வைத்துள்ள பிரெஞ்சு தேசத்திற்கே வருகிறார். கம்யூநிசத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் ரஷ்யாவிற்கு பயணமாகிறார், ரஷ்ய கம்யூநிச அரசில் பணியமர்கிறார், பின்பு தாய்நாடு வருகிறார், அதற்குள் இவர் தேடும் குற்றவாளியாக இருப்பதால் பல சிறை செல்ல வேண்டியதாகிறது. சீனாவில் சில காலம் சிறையில் இருக்கிறார் அத்தருணத்தில் இவர் இறந்துவிட்டதாகவே நினைத்தனர். ஆனால்  பல கண்டங்களில் இருந்து தப்பி தாயகம் வருகிறார், பிரெஞ்சு ஆக்ரமிப்பு போய் ஜப்பானிய ஆக்ரமிப்பு, சீனாவின் மேலாண்மை இப்படி பல இடையூறுகளுக்கு மத்தியில் சுதந்திர வியட்நாமை அறிவிக்கிறார், குறிகிய காலத்தில் அதுவும் முடிவுக்கு  வருகிறது. மறுபடியும் பிரெஞ்சு படைகள், பின் அமெரிக்காவின் மேலாதிக்கம் தேசம்  இரண்டாக துண்டாடப்படுகிறது. வடக்கு தெற்காக பிரிகிறது அமெரிக்காவின் அட்டுழியங்கள் இவ்வளவையும் தாண்டி தேசத்திற்கு விடுதலை வாங்கி தருகிறார் ஹோ சி மின்.

இவரைப்பற்றி  நிறைய கேள்விபட்டு இருக்கிறேன் முதல் முறையாக அவரின் வரலாறை படிக்கும் போது, அந்த காலகட்டத்தில் காலனிய ஆட்சிமுறை எப்படி இருந்தது.  மக்கள் எவ்வளவு வேதனையை அனுபவித்து இருக்கிறார்கள் என்பதையும் இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த பல விஷயங்கள் இதில் சொல்லப்பட்டு இருக்கிறது.    ரஷ்ய கம்யூநிச ஆட்சினை பற்றிய விரிவான விளக்கங்களும் அது மனித குலத்திற்கு எவ்வளவு நன்மை பயப்பனவாக இருந்தது என்பதையும் சுரண்டலற்ற சமுகம் எப்படி அமையும் என்பதையும். புரட்சி என்றால் என்ன என்பதையும் நூல் நன்கு விளக்குகிறது. கம்யூநிச வழி போரட்டங்களையும், கொரில்லா போர் குறித்த தகவல்களையும் இந்த நூல் நமக்குத் தருகிறது.

நூலை படிக்கும் போது வியட் நாம் எவ்வளவு சிறிய நாடு அதில் எப்படி புரட்சி விதைகள் தூவப்பட்டன எப்படி போராடினார்கள் ஏன் நம் நாட்டில் அது போல போராட்டங்கள் பெரிதாக நடைபெறவில்லை,  விந்தையாக இருக்கிறது?. இயற்கையிலையே நாம் அடிமையாய்  இருப்பதை சுகமாக நினைகிறோமோ என்ற சந்தேகமும் எழுகிறது. போராடி வாங்காத சுதந்திரத்தின் மேன்மை நமக்கு தெரியாமல் தான் இருக்கிறது. அஹிம்சை ஒரு நல்ல விசயமாக பட்டாலும் நமக்கு போராட்ட குணத்தை அது கொடுக்கவில்லையே, அடங்கிப் போவது எப்படி என்று தானே கற்றுக்கொடுத்திருகிறது.

N . ராமகிருஷ்ணன் என்ற மார்க்சிய கம்யூநிசவாதியால் எழுதப்பட்ட இந்த நூல் கிழக்கு பதிப்பகத்தால் 2007 ல் வெளியிடப்பட்டது. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் இந்த நூலை வாங்கி படியுங்கள், உண்மையில் நல்லதொரு படைப்பு வெளியீட்டார்களுக்கு நன்றி.

கேரள மாநிலத்தை சேர்ந்த நவீன எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எம். முகுந்தன், இவர் 1942ல் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த மைய்யழியில் பிறந்தவர். இவரது முதல் கதை 1961 ல் வெளியானது. ஈலோகம் அதிலொரு மனுஷ்யன் எனும் நாவலுக்கு கேரள சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தைவத்தின்ற விக்ருதிகள் எனும் இவரது நாவல் தேசிய அகாடமி பரிசை வென்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளியானது. முகுந்தன் எழுதிய மைய்யழி புழையோடே தீரங்களில்  நாவல் ஆன் தி பேங்க் ஆப் மைய்யழி  எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு 1996 ம் ஆண்டுக்கான கிராஸ் வோர்ட் பரிசு வென்றது. இவரது பல வருட இலக்கியப் பணியை சிறப்பிக்கும் பொருட்டு பிரெஞ்சு அரசாங்கம் இவருக்கு செவாலியே விருது கொடுத்து கௌரவித்தது     

மோகத்தீ,  இவர் எழுதிய நாவலின் தமிழாக்கம், இதை தமிழில் மொழிபெயர்த்தவர் சுரா. கதை கேரளாவில் இருக்கும் ஒரு கிராமப்புறத்தில் வசிக்கும் 50 வயதை தாண்டிய மீத்தலேடத்து ராமுண்ணி என்பவரைச் சுற்றி அமைகிறது. மதிப்பும், பாரம்பரியமும் வாய்ந்த மீத்தலேடத்து குடும்பத்தை சேர்ந்தவரான  இவருக்கு சரோஜினி என்ற ஒரு மனைவியும் 4 குழந்தைகளும் இருக்கின்றன. தனது குடும்பத் தொழிலான எண்ணெய் எடுக்கும் ஆலையும் வைத்திருக்கிறார். ஆலைக்கு தேவையான தேங்காய் அவருடைய தோப்பில் இருந்தே பெறப்படுகின்றன, அது அவருடைய தேவைக்கு போக வெளியில் விற்கும் அளவுக்கு பெரிய தென்னந்தோப்பும் இருந்தது அவருக்கு.  இவருடைய அன்றாட வேலை எண்ணெய் ஆலைக்கு சென்று வருவதும் அவருக்கு சொந்தமான நிலங்களை கவனித்து வருவதுமாகும்.  இவரின் நெருங்கிய நன்பர் அச்சு வாத்தியார், வாத்தியார் இவருடன் சிறுவயதில் படித்தவர். தன்னுடைய எல்லா விசயங்களையும் இவருடன் பகிர்ந்து கொள்வார் பெரியவர்.

ஒரு நாள் நீலகண்டன் என்பவன் ராமுண்ணியை பார்க்கவருகிறான் அவன் எப்போது இவரை பார்க்க வந்தாலும் கடன் கேட்டுத்தான் வருவான். அன்றும் அவ்வாறே வந்து 500 ரூபாய் கேட்க ராமுண்ணி கடன் கொடுக்க மறுத்ததோடு தன்னுடைய நிலைமை சரி  இல்லை  இனிமேல் கடன் கேட்டு வரவேண்டாம் என்றும் சொல்ல, எதிர்பாராத நேரத்தில் நீலகண்டன் ராமுண்ணி காலில் விழுந்து இந்தமுறை மட்டும் எப்படியாகினும் உதவி செய்யவேண்டும் என வேண்டினான் அதோடு நிற்காமல் தன் பையில் இருந்து ஒரு தங்கத்திலான இடுப்பு கொடியை கொடுத்து இதை வைத்து கொண்டு பணம் தருமாறு வேண்டினான் இதனால் கோபமடைந்த ராமுண்ணி தான் அடகு கடை வைத்து இருக்கவில்லை. இதெல்லாம் வேண்டாம் என மறுத்தும், நீலகண்டன் அழுது வேண்டிகேட்கவே  அவனின் நிலைமையை பார்த்து பணம் கொடுத்து அனுப்பினார் இடுப்புக்கொடியையும் திருப்பி கொடுக்க அதை நீலகண்டன் வாங்கி கொள்ள மறுத்துவிட்டு செல்கிறான்.  பெரியவர் மாலை அவன் வீட்டுக்கு சென்று அவனது மனைவியிடம் கொடுத்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டு தனது இடுப்பில் மடித்து வைத்துக் கொண்டார். 

மாலை நீலகண்டனின் வீட்டுக்கு சென்ற அவர், நீலகண்டனின் மனைவி சாவித்ரியை சந்திக்கிறார் அவளின் வனப்பை கண்டு மெய்மறக்கிறார், இடுப்புக்கொடியை கொடுக்காமல் வந்துவிடுகிறார். நாட்கள் நகர்கின்றன, ராமுண்ணி நீலகண்டனை தன்னிடம் வேலைக்கு அமர்த்தி கொள்கிறார் மேலும் அவனிடம் இடுப்புகொடியை கேட்க வேண்டாம் எனவும் அதற்க்கு பதிலாக இன்னும் ஒரு 500 ரூபாய் தருவதாகவும் கூறுகிறார். பெரியவர்க்கு சாவித்ரியின் பால் உள்ள ஈர்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது தன்னிடம் உள்ள அவளின் இடுப்பு கொடியை தனியாக இருக்கும் சமயங்களில் நெஞ்சோடு அனைத்துக் கொள்வதும் தடவிப் பார்ப்பதுமாக மோகம் தலைக்கு ஏறியவராக தன்னை மறந்து பித்து பிடித்தவர் போல இருக்கிறார். இதனால் இவருடைய நன்பர் அச்சு வாத்தியாரும், மனைவி சரோஜினியும் கலக்கமடைகின்றனர், ஒரு நாள் ராமுண்ணி மாடியில் உள்ள தனியறையில் இடுப்புக்கொடியுடன் கையும் களவுமாக மனைவியிடம் பிடிபடுகிறார், சரோஜினி இந்த விஷயத்தை அச்சு வாத்தியாரிடம் சொல்ல நீலகண்டனின் மனைவியின் இடுப்புக்கொடி தான் அது எனத் தெரிந்து அச்சு வாத்தியார் சாவித்திரியிடம் சென்று 500 ருபாய் கொடுத்து உன் இடுப்புக்கொடியை ராமுண்ணியிடம் இருந்து மீட்டு  வா என்று சொல்கிறார். ஆனால் பெரியவர் இடுப்புக்கொடியை கேட்க வேண்டாம் எனவும் அதற்க்கு பதிலாக பணம் கொடுத்து விட்டார் எனவும் அவள் கூற அச்சு வாத்தியார் செய்வதறியாது விழிக்கிறார். சிறிது நேரம் கழித்து ராமுண்ணியின் நிலைமையை விவரித்துக் கூற சாவித்திரி அதிர்ச்சி அடைகிறாள்.  கடைசியில் ஒரு நாள் சாவித்திரி அவளது வீட்டிற்கு அருகில் உள்ள ஓடையில் குளிக்கும் போது பட்டாம்பூச்சி  ஒன்றை துரத்தி கொண்டே நீந்தி செல்லும் போது புதரின் மறைவில் இருந்து ஒரு கை அவளின் இடுப்பில் அவளது இடுப்புக்கொடியை கட்ட செய்வதறியாது அதிர்ச்சியுடன் விழிப்பதாக கதை முடிகிறது.

ஒரு வயது முதிர்ந்த ஒருவரின் மோகம் அவரை எப்படி பாடாய் படுத்துகிறது என்பதை முகுந்தன் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார். ராமுண்ணிக்கு தான் செய்வது எவ்வளவு பெரிய தவறு என்பதும் அவருடைய குடும்ப மரியாதையும், பாரம்பரியமும் இதால் எவ்வளவு கெட்டுவிடும் என்பது தெரிந்தும் தன்னிலை மறந்து இருப்பதை ஆசிரியர் நன்கு விளக்கி இருக்கிறார்.  நாவலை படிக்கும் போது கிராமத்திலேயே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மொழியாக்கம் செய்து வெளியிட்டவர்களுக்கு நன்றி.

அதிதி ஒரு சமஸ்கிருத வார்த்தை, அக்கால முனிவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் வருவார்களாம், அப்படிப்பட்ட முனிவர்களை அதிதி என்று அழைப்பார்கள். இதற்கு நேர்மறையாக இருப்பதே திதி என்பார்கள், அதாவது சொல்லிக்கொண்டு வருபவர்கள் திதிகள்.  இதிலுருந்து சொல்லபடுவதே தேதி என்றும் சொல்வார்கள்.

ஆல்பர்ட் காம்யு என்ற நோபெல் பரிசு வென்ற அல்ஜீரிய-பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய ஒரு சிறுகதையின் தமிழாக்கத்தின் தொகுப்பே இந்த கட்டுரை. இதை தமிழில் இரா. இளங்கோ என்பவர் மொழி பெயர்த்திருக்கிறார்.

இந்த கதை 3 கதாபாத்திரங்களை உள்ளடக்கி உள்ளது, ஒரு பள்ளி ஆசிரியர், ஒரு காவல் துறை அதிகாரி, ஒரு அராபிய குற்றவாளி. ஒரு அந்தி மாலை பொழுதில் காவல் அதிகாரி எல்டாகி ஒரு அராபிய குற்றவாளியை எல்-அமுர் என்ற இடத்தில் இருந்து டிங்குவிட் என்ற இடத்தில் உள்ள தலைமை காவல் நிலையத்திற்கு அழைத்து கொண்டு சென்று இருக்கிறார்.  அது ஒரு பாலைவன பகுதியையும் மலை மேடுகளை கடந்து செல்ல வேண்டிய பகுதி.  எல்-அமுரில்ருந்து 3 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் ஒரு பள்ளிகூடத்தை வந்தடைகிறார்கள் காவல் அதிகாரியும், அரேபியா குற்றவாளியும். அதிகாரி அந்த பள்ளி ஆசிரியரிடம் குற்றவாளியை ஒப்டைத்து இவனை இங்கிருந்து 20 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் டிங்குவிட் நகரத்தில் இருக்கும் தலைமை காவல் அதிகாரியிடம் ஒப்படைக்கவேண்டும் இது அரசாங்க கட்டளை என்றும் கூறுகிறார். ஆசிரியர் மறுத்துரைக்கிறார்,  காவல் அதிகாரி போரின் போது குடிமக்களுக்கும் சில கடமைகள் இருக்கிறது அரசாங்கத்தின் கட்டளையை மீரவேண்டாம் என்று கூறுகிறார்.  காவல்அதிகாரி அரபியனை விட்டு செல்லும்போது இவன் ஒரு தகராறில் தனது அக்காள் மகனை ரசிதுகளை குத்தி வைக்கிற கம்பி கொண்டு கொன்று விட்டதாகவும் இவனை மீட்க இவனை சார்ந்தவர்கள் வர வாய்ப்பு இருக்கிறது. அதனால் உனது துப்பாக்கியை உன் கையோடு வைத்துகொள் என்று கூறி விட்டு செல்கிறார். பள்ளி ஆசிரியர்க்கு இந்த அரேபியனின் மீது குற்றபார்வை சிறிதும் இல்லை, அவனுடைய கட்டுகளை அவிழ்த்து அவனுக்கு சாப்பிட கொடுக்கிறார், இரவு படுக்க நல்ல வசதி செய்து கொடுக்கிறார். அவனை மறைமுகமாக தப்புவிக்க எண்ணுகிறார், ஆனால் அந்த அரபியன் தப்பிக்கும் எண்ணம் சிறிதும் இல்லாதவனாக இருக்கிறான்.  மறுநாள் இருவரும் டின்குவிட்டுக்கு பயணமாகிறார்கள் , நீண்ட தூரம் சென்ற பிறகு அவர் அரபியனை பார்த்து இங்குருந்து ஒரு நாள் நடந்தால் மூத்த நாடோடி இனத்தை சேர்ந்த ஒரு குடிஇருப்பு இருக்கிறது அங்கே அவர்கள் சட்டத்திற்கு பொருத்தி உன்னை ஆதரிப்பார்கள் மாறாக வேறொரு திசையை காண்பித்து இது வழியே போனால் டிங்குவிட் செல்லலாம், உன் வழியை நீயே தேர்ந்தெடுத்துக்கொள் என்று சொல்லி திரும்பி வந்து விடுகிறார், சில மணி நேரத்திற்கு பின் கொஞ்ச தூரம் போன பிறகு அந்த அரபியன் எங்கே போகிறான் என்று பார்க்க அவனை விட்ட இடத்துக்கு திரும்பி வரும் போது , அவன் காவல் அதிகாரியை சந்திக்க செல்லும் பாதையில் சென்று கொண்டிருப்பது ஆசிரியருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஆசிரியர்,இவனை காவல் அதிகாரிகளிடம் ஒப்புவிப்பது பெருமை தருவதாக இருக்காது என நினைத்து தனது சொந்த மக்கள் மீதே பழி போட்டு திட்டினார், கொலைக்கு அஞ்சாத அரபியன் தப்பிக்கிற மேலாண்மை இல்லாதவனாக இருக்கிறானே என்று அதிசயிப்பட்டார். திரும்பி வரும் போது பள்ளிகூட கரும்பலகையில் என் சகோதரனை ஒப்படைத்தீர் அதற்கு செலுத்த வேண்டியது உள்ளது என்ற வாசகம் பார்த்து கொண்டே நின்றார் ஆசிரியர்.

ஸ்டெபான் ஜ்வேயக் என்ற ஜெர்மனிய எழுத்தாளர் எழுதிய ஓடி போனவன் என்ற  சிறுகதையின் மொழிபெயர்ப்பு  பிரதியை நேற்று படித்தேன் அது பற்றிய சிறிய தொகுப்பு இது , அதை தமிழில் மொழி பெயர்த்தவர் யார் என்று தெரியவில்லை.
 
1918 ல் சுவிசர்லாந்தில் ஒரு இரவு நேரத்தில் கதை தொடங்குகிறது,  ஒரு மீனவன் ஜெனோவா ஏரியில் மீன் பிடிக்க செல்லும்போது ஒரு நிர்வான மனிதனை ஏரியில் கண்டு அவனை காப்பற்றி கரைக்கு கொண்டு வருகிறான். அவன் மொழி அங்கு இருப்பவர்களுக்கு  புரியவில்லை, அனால் அவனின் நிலை கண்டு இறங்கி அவனுக்கு உடுக்க உடை தருகிறார்கள் அந்த உள்ளூர் வாசிகள்.  அவனை எல்லோரும் ஒரு காட்சி பொருளாக திரளான மக்கள் வந்து பார்த்து சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் தருவாயில் ஒரு ஹோட்டல் மேலாளர் விஷயம் கேள்வி பட்டு இவனை வந்து சந்திக்கிறார் அவர் பல ஊர்களுக்கு சென்று வந்துள்ள நபர் என்பதால் அவருக்கு தெரிந்த மொழிகளில் எல்லாம் அவனிடம் கேள்வி கேட்டு கொண்டிருந்தார், ரஷ்ய மொழியில் பேசும் போது அவனிடம் இருந்து மலர்ச்சி தென்பட்டது பதில் பேச ஆரம்பித்தான். அவன் ரஷ்ய நாட்டின் சைபீரிய  பகுதியில் வசிக்கும் ஒரு விவசாயி என்பதும் அவன் தன்  மனைவியுடனும் 3 குழந்தைகளுடனும் வாழ்ந்து வருகிறான் என்பதும் தெரிய வந்தது. போரின் பொருட்டு அவனும் அவனுடன் 1000துக்கும்  மேற்பட்டவர்களுடன் ரயிலின் மூலம் வெகு தூரம் வந்ததாகவும் பின்பு கப்பலில்  ஏறியதாகவும் மறுபடியும் ரயிலில் பயணித்து ஒரு இடத்தில போர் புரிந்ததாகவும் குண்டடி பட்டதால் போரிலிருந்து ஓடி வந்ததாகவும் கூறினான்.  அவனது கூற்றின் படி பார்க்கும் போது இந்த ஜெனோவா ஏரியை சைபீரியாவுக்கு பக்கத்தில் உள்ள பைகால்   ஏறி என்று  நினைக்து ஒரு கட்டுமரத்தின் மூலம் வந்து ஏரியில் சிக்கி கொண்டான் என்பதும் தெரிந்தது. மேலும் அதிர்ச்சியான  விஷயம் என்னவெனில் அவன் ரஷ்ய சக்ரவர்த்திக்காக தான்  போர் புரிந்ததாக நினைத்து கொண்டு இருந்தான். 50வருடங்களுக்கு முன்பே ரஷ்ய சகரவர்தியின் ஆட்சி பறிபோனதாக ஹோட்டல் மேலாளர் கூறிய போது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இரவு அவனுக்கு உன்ன உணவு கொடுத்து அவனை ஒய்வு எடுத்துகொள்ள சொன்னார், மேலும் இரண்டொரு நாளில் நகர அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறோம்  அங்கிருந்து நீ உன் நாடு போய் சேரலாம் என்று சொன்ன போது நான் இந்த ஏரியில் நீந்தி கரையை கடந்து விடுவேன் என அப்பாவியாக கூறினான். அவனுக்கு நாடு, கடவு சீட்டு இது பற்றிய அறிவு எதுவும் இல்லாமல் இருந்தது கண்டு ஆச்சர்யமாக  இருந்தது ஹோட்டல் மேலாளருக்கு. மறுநாள் அவன் ஏரியில் நிர்வாணமாக மிதந்து கொடு இருந்தான் என்ற செய்தி கேட்டு பதறி போனார் மேலாளர். அவனுக்கு கொடுத்த ஆடைகளை ஒழுங்காக மடித்து ஏரியின் கரையில் வைத்து விடு மறுபடியும் நீந்தி கரையை கடக்க முயன்று இருக்கிறான். அனால்  அதில் தோல்வி அடைந்து அவன் இறந்திருக்கிறான். இவ்வாறாக கதை முடிகிறது…
 
போரினால் ஒரு அப்பாவி மனிதனின் வாழ்க்கை பறிபோன விதம் பற்றி  நயம் பட கூறி இருக்கிறார் ஸ்டெபான் ஜ்வேயக், இது போல யாருக்கு, எதற்காக, ஏன் சண்டை இடுகிறோம் என்று  கூட தெரியாத அப்பாவிகள்  இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்த சிறுகதையை நீங்களும் படித்து இன்புறுங்கள்.