Posts Tagged ‘என்.எஸ். கிருஷ்ணன்’

எம்.ஜி.ஆர், சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது எல்லோர்க்கும் தெரியும், அறிமுகப்படுத்திய இயக்குனர் யார் தெரியுமா? அமெரிக்காவில் ஓஹாயோ மாநிலத்தில் பார்டன் என்னும் சிற்றூரில்  பிறந்த எல்லிஸ் ஆர். டங்கன் (Ellis R. Dungan) என்பவர் தான் அவர்.  எம்.ஜி.ஆர் தவிர டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் போன்ற காலத்தை வென்ற கலைஞர்களை  தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே…

 

( படத்தில் கே. பி. சுந்தராம்பாள், டங்கனின் அம்மா, டங்கனின் நண்பர் மாணிக்லால் டாண்டன், டங்கன். இந்த புகைப்படம் நந்தனார் திரைப்பட படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது.  மாணிக்லால் டாண்டன் நந்தனார் திரைப்படத்தை இயக்கியவர் )

கலிபோர்னியாவில் திரைப்படத்துறையை பற்றிய படிப்பு  படிக்கும்போது, கல்லூரியில் டங்கனுடன் மாணிக்லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் படித்தார். அவர் இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரிக்கும் போது அவருக்கு துணையாக டங்கன் அவருக்கு துணையாக  இருந்தார், அவர் முதன்முதலில் பணிபுரிந்த திரைப்படம் நந்தனார், இப்படத்தில்  சில காட்சிகளை இவர் இயக்கினார். கல்கத்தாவில் படப்பிடிப்பின்போது டாண்டனை ஏ. என். மருதாசலம் செட்டியார் என்ற தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் தனது அடுத்த படத்தை இயக்கித்தரும்படி கேட்டார். நந்தனார் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் தனது அமெரிக்க நண்பரான  எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களை இயக்குனராக்கிக்கொள்ளும்படி டாண்டன் பரிந்துரைத்தார்.

 

(அம்பிகாபதி படத்தின் படப்பிடிப்பின்போது டங்கன் காமிரா கோணத்தை ஆராய்கிறார்)

இவ்வாறு டங்கன், செட்டியார் தயாரித்த சதி லீலாவதி படத்தின் மூலம் தமிழ்ப்பட  இயக்குனரானார். இப்படத்தில் தான் எம்.ஜி.ஆர் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து, டங்கனுக்கு பல திரைப்பட வாய்புகள் கிட்டின. தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி ஒரு வருடத்திற்கும் மேல் தொடந்து ஓடி சாதனை படைத்தது. தமிழ் மொழி தெரியாவிட்டாலும், தனது ஆங்கிலம் அறிந்த உதவியாளர்களின் மூலம் நடிகர்களிடமும், தொழிற்கலைஞர்களோடும் இனைந்து பணியாற்ற முடிந்தது. இரண்டாம் உலகப்போரின்போது ஆங்கிலேயர்களின்  கொள்கைகளை பரப்பும் சில படங்களையும் இயக்கினார். எம். எஸ் சுப்புலட்சுமியின் நடிப்பில் டங்கன் இயக்கிய மீரா அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, அதே படத்தை இந்தியிலும் இயக்கினார்.

(அம்பிகாபதி திரைப்படத்தில் பாகவதரையும், சந்தானலக்ஷ்மியையும் ஒரு காதல் காட்சியில் டங்கன் இயக்கி கொண்டிருக்கிகிறார்)

நெருக்கமான காதல் காட்சிகள் இவரை அமெரிக்க கலாச்சாரத்தை தமிழகத்தில் பரப்புகிறார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாக்கியது. ஆனால் புதிய ஓளியுத்தி, நவீன ஒப்பனை முறைகளையையும்  இவரே  தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவர்  இயக்கிய கடைசித் தமிழ்ப்படம் மந்திரிகுமாரி. இந்தப் படத்தை பற்றி நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை, தமிழ்த் திரையுலகில் தவிர்க்கமுடியாத சில படங்களில் இதுவும் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது. டங்கன்  1950 ஆம் ஆண்டு அமெரிக்கா திரும்பினார்.

(max factor makeup என்ற நவீன  ஒப்பனை முறையை 1934ல் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார். இவர் ஒப்பனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது மட்டுமில்லாமல், அதில் அதீத அறிவையும்   பெற்றிருந்தார். மேற்கண்ட புகைப்படம் சீமந்தினி என்ற திரைப்படத்தில் T P ராஜலக்ஷ்மி அவர்களுக்கு ஒப்பனையை திருத்திக் கொண்டிருக்கிறார்)

இவர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்  

  சதிலீலாவதி (1936)

  சீமந்தினி (1936)

  இரு சகோதரர்கள் (1936)

  அம்பிகாபதி (1937)

  சூர்யபுத்ரி (1940)

  சகுந்தலா (1940)

  காளமேகம் (1940)

  தாசிப்பெண் (1943)

  வால்மீகி (1945)

  மீரா (1945)

  பொன்முடி (1950)

  மந்திரிகுமாரி (1950)

 

(படத்தில் எம் எஸ் சுப்புலக்ஷ்மி, டங்கன், மீரா படப்பிடிப்பின் போது)

இது தவிர ஆங்கிலேயர்களின்  கொள்கைகளை பரப்பும் சில படங்களையும், நந்தனாரில் சில காட்சிகளையும் இவர் இயக்கி இருக்கிறார். டங்கன் அமெரிக்காவில் மீண்டும் குடியேறிய பிறகு  எல்லிஸ் டங்கன் ப்ரொடக்சன்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இந்தியாவில் படப்படிப்பு நடத்திய அமெரிக்கப்படங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார்.  மேலும் ட்யூக் கோல்ட்பர்க் என்ற தயாரிப்பாளருக்காக செய்திப் படங்களைத் தயாரித்தார். மீண்டும் இவர் தமிழகம் வந்த போது தமிழ்த் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டங்கன் டிசம்பர் 1, 2001 இல் இயற்கை எய்தினார். டங்கன் தனது திரையுலக அனுபவங்களை எ கைட் டு அட்வன்ச்சர் என்ற தலைப்பில் சுயசரிதையாக வெளியிட்டுள்ளார்.

நன்றி: விக்கிப்பீடியா,  நடிகர் மோகன் ராமன்(புகைப்படங்கள் இவருடைய facebook தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது)   
 

ஆகஸ்ட் 30 அன்று கலைவாணரின் பிறந்த நாளை ஒட்டி அவரின் நினைவாக அவரின் சில புகைப்படங்களை இன்று கலைவாணரின் பிறந்தநாள் என்ற இடுகையின் மூலம் உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்த இடுகையை கண்ட கலைவாணரின் பேத்திகள் தனது மகிழ்ச்சியை தெரிவித்து பின்னூட்டம் செய்திருந்தார்கள், மேலும் அவர்கள் கலைவாணரை பற்றிய ஒரு வலைதளத்தை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தனர். என்னுடைய முந்தைய கலைவாணரின் இடுகையில், நேரமில்லாத காரணத்தினால் அவரை பற்றி எந்த செய்தியையும் பெரிதாக குறிப்பிடவில்லை. பின்பொரு நாளில் அவரைப் பற்றிய விரிவான இடுகையை எழுத நினைத்திருந்தேன். ஆனால் நேற்று கலைவாணரின் பேத்தி மதிப்பிற்குரிய ஷண்முகப்ரியா அவர்கள் குறிப்பிட்டிருந்த வலைதளத்திற்கு சென்று பார்த்தபின், இந்த வலைதளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என்று இந்த இடுகையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

 http://www.kalaivanar.com என்ற இந்த வலைதளம் ஆங்கிலத்திலும் தமிழுலும் படிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் ஆங்கிலத்தில் மட்டுமே இப்போதைக்கு படிக்க இயலும். தமிழ்த்தளம் விரைவில் தயாராகிவிடும் என்று நம்புகிறேன். கலைவாணரின் சுருக்கமான வரலாறு, ரெஸ்யூம் போல எளிமையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய இளமைக் காலங்கள், நாடக நாட்கள், கலைவானரும் சினிமாவும், அவருடைய பொன்மொழிகள் என்று பல வகைகளின் கீழ் கலைவாணரைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அவருடைய அறிய புகைப்படங்களும் நிறைய இடம் பெற்றிருக்கின்றன. நான் ரசித்த விஷயம் இந்த வலைதளத்தில் interesting incidents வகையின் கீழ் உள்ள பக்கம் அதில் ஒரு நாடக சம்பவத்தில், “சக நடிகரை பார்த்து உன்னுடைய 32 பற்களையும் பேர்த்து விடுவேன் என்று சொல்லவேண்டிய வசனத்தை உன்னுடைய 31 பற்களையும் பேர்த்து விடுவேன் என்று சொன்னாராம், நடிகர் என்ன ஒரு பல்லை விட்டுடீங்களே என்று கேட்டதற்கு, அந்த ஒரு பல்லால் நீ பல்வலி வந்தே செத்து மடி என்று தனக்கே உரிய பாணியில் நகைக்க வைத்தாராம்”. 

கலைஞர் தொலைக்காட்சியில் கலைவாணரின் நினைவாக மறக்க முடியுமா? என்ற ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினர், நண்பர் கௌரிசங்கர் தான் அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர், அவர் என்னிடம் கலைவாணரை பற்றிய பல இனிய சம்பவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார், அதில் ஒன்று இந்த நிகழ்ச்சியின் போது பேட்டி எடுக்க கலைவாணரின் உறவினர்களை சந்தித்திருக்கிறார், அந்தப் பேட்டியின் போது அவர்கள் கூறுகையில், “கலைவாணரின் நினைவாக அவர் பேரில் ஒரு சாலை திறக்கப்பட்டிருந்த புதிதில் அவருடைய உறவினர்கள் எல்லாம் சேர்ந்து அந்த வீதியின் பெயர்பலகை இருக்கும் இடத்தில நின்று ஒரு புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்களாம். வழிப்போக்கன் ஒருவன் என்ன இப்படி சாலையை மறித்துக்கொண்டு புகைப்படம் எடுக்குறீங்க இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடானு கேட்டாராம்” இந்த வார்த்தையை கேட்டு அவர்கள் அவ்வளவு மகிழ்ந்தார்களாம் கலைவாணரின் உறவுகள். மேலும் கலைவாணரின் கொடைத்தன்மையை பற்றிய பல சம்பவங்களை நண்பர் மூலம் கேட்டு பிரம்மித்தேன்.

கலைவாணருக்கு, கலைவாணர் என்ற பட்டத்தை 1947ம் வருடம் சென்னை திருவல்லிகேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டது. இந்த கழகம் என் வீட்டினை அடுத்து உள்ளது என்பதில் ஒரு சின்ன பெருமிதம் கூட இருக்கிறது எனக்கு, இப்போது இந்த கழகத்தின் சார்பில் ஒரு நூலகமும், சமுதாயக்கூடம் ஒன்றும் உள்ளது. அந்த கழகத்தின் சார்பில் சில நலத்திட்டங்களை இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கலைவாணரை பற்றிய தகவல்களை எல்லாம் திரட்டி “சமூக விஞ்ஞானி கலைவாணர்” என்று அவரது மகள் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறராம். அன்னாரைப் பற்றிய தகவல்களை வலைதளம் மூலம் அறிய விரும்புபவர்கள் http://www.kalaivanar.comஎன்ற இந்த வலைதளத்திற்கு சென்று பாருங்கள்.

இன்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள்.  ஏறத்தாழ 150 படங்களில் நடித்த கலைவாணர்  தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தவர் . யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக தன் கருத்துகளை பரப்பியவர்.
 
சமீபத்தில் அவருடைய வாழ்க்கை தொகுப்பை கலைஞர் தொலைக்காட்சியில்  மறக்க முடியுமா என்ற நிகழ்ச்சியில் பார்த்திருப்பீர்கள் அதிலிருந்து சில அறிய புகைப்படங்களை உங்களோடு அவரின் நினைவாக பகிர்ந்து கொள்கிறேன்.