1853ல் சாலமன் நார்த்தப் என்ற சுதந்திர கருப்பின அமெரிக்கரை கடத்தி அவரை அடிமையாக விற்றபிறகு அவருக்கு நிகழ்ந்த கொடுமைகளில் இருந்து மீண்டு வருவது தான் 12 இயர்ஸ் எ ஸ்லேவ்ஸ். இது நார்த்தப்பிற்கு உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.
நியூயார்க்கில் வசிக்கும் சாலமன் நார்த்தப் ஒரு சுதந்திர கருப்பின அமெரிக்கர், திறமையான வயலின் இசை வித்தகரான நார்த்தப்பை நயவஞ்சகமாக பேசி 2 வார இசை நிகழ்ச்சிக்காக இருவர் அழைத்துச்சென்று குடிக்க வைத்து தன்னிலை மறந்த நிலையில் அவரை அடிமையாக விற்று விடுகின்றனர். கடுமையான அடி உதை சித்திரவதைக்கு பிறகு அவரின் பெயரை பிளாட் என்று மாற்றி நியூ ஓர்லியன்ஸ் நகரத்தில் தச்சு வேலை செய்வதற்காக விற்கப்படுகிறான், தன் கடுமையான உழைப்பின் மூலம் அவருக்கு பிடித்த வயலின் ஒன்றை பரிசாகப் பெரும் அளவிற்கு எஜமானரின் நன்மதிப்பை பெறுகிறார் நார்த்தப். அங்கு அவரின் மேலதிகாரியுடன் நிகழும் ஒரு பிரச்சினையினால் அங்கிருந்து பருத்திக்காடு வைத்திருக்கும் ஒருவருக்கு அடிமையாகிறான். ஒவ்வொரு அடிமையும் குறைந்தபட்சம் 200 பவுண்டு பருத்தியை பரிக்கவேன்டும், இல்லையெனில் கசையடி சித்திரவதை தான். அங்கு பேட்சி என்ற தினமும் 500 பவுண்டு பருத்தியை பறிக்குமளவிற்கு கடுமையான உழைப்பாளியான மற்றொரு அடிமையை சந்திக்கிறான். பேட்சியை அவரது எஜமானன் ஆசை நாயகியாக வைத்திருப்பதையறிந்து அவரது மனைவி அவளை துன்புருத்துகிறாள். இதனால் பல தொல்லைகளுக்கு ஆளாக நேரிடுகிறது பேட்சிக்கு, கடுமையான தருணங்களில் நார்த்தப், பேட்சிக்கு துணையாக இருக்கிறார். இப்படியாக அடிமை வாழ்க்கையில் 12 வருடங்களை கடந்த நிலையில் ஒரு கன்னடிய தச்சரின் உதவியால் நியூயார்க்கில் உள்ள சாலமன் நார்த்தப்பின் நண்பர் கடிதம் மூலம் வரவழைக்கப்பட்டு சுதந்திர மனிதனாவதே கதை.
ஆண்டுக்கு ஆண்டு பலதரப்பட்ட கறுப்பின அடிமைகளின் கதைகளை பார்திருப்பதால் சற்று சலிப்பு ஏற்பட்டாலும் ஆஸ்கரின் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இப்படம், நல்ல திரைக்கதையுடன், விறுவிறுப்பாக, உணர்ச்சியைத் தூண்டக்கூடியதாக அமைந்திருக்கிறது.
பிராட் பிட், மற்றும் இயக்குனர் ஸ்டீவ் மெக்யூனைச் சேர்த்து 7 தயாரிப்பாளர்கள் கொண்ட இப்படம் சிறந்த தயாரிப்புகான விருதுப் பரிந்துரையில் உள்ளது. தயாரிப்புடன் நார்த்தப்பை காப்பாற்ற உதவும் கன்னடிய தச்சராக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர் பிராட்பிட். பிராட்பிட்டுக்கு ஆஸ்கரில் இது 5வது பரிந்துரை, இதுவரை ஒரு முறை கூட இவருக்கு வெற்றி கிட்டவில்லை என்பது பரிதாபகரமானது.
தயாரிப்பைச் சேர்த்து இயக்குனருக்காகவும் இப்படத்தின் மூலம் ஸ்டீவ் மெக்யூன் பரிந்துரைக்கப்பட்டிருகிறார்.
2012 படம் மூலம் நமக்கு நல்ல பரிட்சயமான இப்படத்தின் கதாநாயகன் ச்சீவெட்டல் எஜியோபர் இப்படத்தின் மூலம் தனது ஆஸ்கர் பயணத்தை தொடர்ந்திருக்கிறார். க்ரிஸ்ட்டியன் பேல் மற்றும் மேத்யூ மெக்காணகே இவருக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள் என நினைக்கிறன்.
எஜியோபர் போல துணைக்கதாநாயகனாக வரும் மைக்கேல் பாஸ்பென்டேருக்கும் இது முதல் பரிந்துரை. தி வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட் படத்தில் நடித்த ஜோனா ஹில் மற்றும் டாலஸ் பையர் க்ளப்பில் நடித்திருக்கும் ஜேரெட் லேட்டோவையும் பார்க்கும்போது இவருக்கு இப்பிரிவில் விருது கிடைப்பது கடினம் தான்.
துணைக் கதாநாயகியாக வரும் லூபிடோ நியாங்கோவிற்கு விருது வெல்லும் வாய்ப்பு நிறைய இருப்பதாகவே தோன்றுகிறது, இருப்பினும் அமெரிக்கன் ஹஸ்ஷல் படத்தில் தோன்றும் ஜெனிபர் லாரான்சை இவர் சமாளிக்க வேண்டி இருக்கும்.
சிறந்த படம் (Best Picture)
சிறந்த இயக்குனர் (Best Direction)
சிறந்த நடிகர் (Actor in a Leading Role)
சிறந்த துணைக் கதாநாயகன் (Actor in a Supporting Role)
சிறந்த துணைக் கதாநாயகி (Actress in a Supporting Role)
சிறந்த படத்தொகுப்பு (Best Editing)
சிறந்த ஆடை வடிவமைப்பு (Best Costume Design)
சிறந்த கலை (Best Production Design)
சிறந்த தழுவி எழுதிய திரைக்கதை (Writing Adapted Screenplay) என்று 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது 12 இயர்ஸ் எ ஸ்லேவ்.
இந்தத் தலைமுறை அமெரிக்கர்களைப் பொருத்தவரை தம் முன்னோர்கள் கறுப்பினத்தவர்களுக்கு இழைத்த கொடுமைகளை உணர்வுபூர்வமாக அணுகுகிறார்கள். ஆதலால் அடிமை முறையச் சார்ந்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. இந்தப் படமும் வணிகரீதியில் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கிறது, விருதுகளைப் பொறுத்தவரையிலும் இதே நிலை தான். ஆதலால் இந்த வருட ஆஸ்கரில் இப்படமும் சில விருதுகளை வெல்லும் என்று நம்பப்படுகிறது.