Posts Tagged ‘செண்டிமெண்ட்’

சோகத்தில் எல்லாம் பெரிய சோகம் புத்திரசோகம் என்று நமக்கு ராமாயணம் முதற்கொண்டு பல நூல்கள் எடுத்து இயம்பி இருக்கின்றன, அதை மூலக்கருவாக வைத்து எடுத்த படமே தெய்வத் திருமகள். படம் வருவதற்கு முன்னமே படத்தின் தலைப்பினால்   சர்ச்சை,  படத்தின் கதைதிருடப்பட்டது என்று மற்றொரு சாரார், படத்தை பார்த்து வீடு திரும்புபவர்கள் அழுது  வடிந்து திரும்புகின்றனர் என்ற அளவிற்கு உணர்சிகளை தூண்டும் படியாக உள்ளது படம் என்று  நண்பர்களின்  விமர்சனம்,  சரி அப்படி என்னதான் இருக்கிறது இந்த படத்தில்….

படத்தின் கதை ஒரு தந்தையிடம் இருந்து  பிரிக்கப்பட்ட குழந்தையை  சட்ட பூர்வமாக  அவர் மீட்டு எடுப்பதே. திரைக்கதையில்  பெரிய  திருப்பங்களோ, வீர தீர செயல்களோ,  புது தொழில் நுட்ப யுத்திகளோ   துளியும் இல்லை. அப்புறம் எதற்கு இந்த திரைப்படத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு. ஆங்கிலத்தில் HUMAN VALUES என்று சொல்வார்கள் அந்த விஷயம் மட்டுமே இந்த படத்தின் மூலக்கருவாக வைத்து இயக்குனர் களம் இறங்கி இருக்கிறார். ஒரு தந்தை, அவர் குழந்தை, அவர்களின் பாசம், பிரிவின் துயரம், அந்த இருவரை இந்த சமூகமும் அவரது சுற்றாரும் பார்க்கும் பார்வைகளின் கோர்வை மட்டுமே இந்த படம்.

 வழக்கமாக தமிழ் திரைப்படங்களில் செண்டிமெண்ட் காட்சிகள் நீளமான வசனங்களையும், அழுகை காட்சிகளையும், கொண்டதாக இருக்கும். இந்த படத்தில் நடித்தவர்கள் அழுதோ, இல்லை நீளமான வசங்களை பேசியோ நமது பொறுமையை சோதிக்கவே இல்லை, நமக்கு சிவாஜிகளையும், மனோரமாக்களையும் இந்த படம் ஞாபகப்படுத்தவே இல்லை இருந்தும் நல்லதொரு செண்டிமெண்ட் படம் என்றே கூற வேண்டும். 

விக்ரமின் நடிப்பை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், இருப்பினும் இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகளையும் விளம்பர காட்சிகளையும் பார்த்தபோது விக்ரம் கொடுத்த காசுக்கு மேல நடிச்சு நம்மை கொல்லப்போகிறார் என்று நினைத்து போனால் நம்மை ரொம்பவே வியக்க வைத்து விட்டார், அநியாயத்திற்கு அடக்கி வாசித்திருக்கிறார், அளவான நடிப்பு. வழக்கமாக இது வரை தமிழ் திரைபடத்தில்  மன வளர்ச்சி குன்றியவர்களாக நடித்தவர்கள் யாரையும் ஞாபகப்படுத்தவில்லை, பிரமாதம். அவரை விட அவரின் குழந்தையாக வரும் சிறுமி அசத்தி இருக்கிறார். அனுஷ்காவும், சந்தானமும் வியாபாரத்திற்காக இணைத்தவர்கள் என்று நன்றாகவே தெரிகிறது இருப்பினும் நன்றாகவே நடித்து இருக்கிறார்கள். இடைச் சொருகலான அனுஷ்காவிற்கு கொடுக்கப் பட்ட பாடலை தவிர்த்து பார்த்தால் பாடல்களும் பின்னணி இசையும்  அருமை. படத்திற்கு தேவை இல்லை என்பதை தவிர்த்து பார்த்தால், இந்தப் பாடலும் அருமையாகவே படமாக்கப்பட்டுள்ளது,

 தெய்வத் திருமகளை பார்ப்பதற்கு முன் 2  ஆஸ்கார் விருதை  வென்றிருக்கும்  SEAN PENNன் நடிப்பில் ஆங்கிலத்தில் வந்த I AM SAM  படத்தையும் பார்க்க சொனார்கள் சில நண்பர்கள். I AM SAM  படத்தின் சில காட்சிகளை இணையத்தில் பார்த்தேன், அப்பட்டமான திருட்டு என்று குற்றம் சாட்டுபவர்களின் கூற்று உண்மை போல தான் தெரிகிறது. ஆனால் நல்ல இலக்கியங்களை மற்ற மொழிகளில் இருந்து மொழி மாற்றம் செய்வதை தொன்று தொட்டே செய்து  இருகின்றார்கள் ஏன் திரை படங்களில் மட்டும் மற்ற மொழிப் படங்களை தமிழில் எடுக்கும் போது திருட்டு என்ற குற்றச்சாட்டுகிறார்கள்.   வெளிப்படையாக இயக்குனர்களோ நடிகர்களோ தழுவி எடுக்கப் பட்ட கதை என்பதை  ஒத்துக்கொள்ளாததற்கு இது ஒரு காரணமாக இருக்குமோ? சில வருடங்களுக்கு  முன்பு ராம்கோபால்வர்மாவின் சர்கார் படம் பார்த்தபோது படத்தின் ஆரம்பத்திலேயே அவர் காட்பாதர் கதை தான் இந்த படம் எடுக்க  தூண்டியதாக  முன்னுரை செய்து இருப்பார் இதுபோன்ற துணிச்சல் தமிழ் இயக்குனர்களுக்கு இல்லாதது தான் இதற்க்கு காரணம் என்று நினைக்க தோன்றுகிறது.

இந்தப் படத்தின் கதையை இயக்குனர் விஜய், விக்ரமிற்கு  எப்படி விளக்கி இருப்பார்,   ஏன் என்றால் இது ஒரு THIN LINE STORY,  SEAN  PENN நடித்த IAMSAM  திரைப்படத்தை  போட்டு காண்பித்து  இருப்பாரோ? அப்படியானால் இது விஜயின் படம் என்று சொல்வதை விட
SEANPENN ன் தெய்வத் திருமகள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

படத்தின் தலைப்பை பார்த்து இதை ஒரு முழு நீள காதல் திரைப்படம் என்று நினைத்து திரையரங்கில் நுழைந்தால், இது ஒரு சாதாரண குடும்ப சித்திரம். நம்ம தமிழ் திரைப்படங்களில் குடும்ப சித்திரம் என்பது, உணர்ச்சி வயப்படும் வசனங்களும், செண்டிமெண்ட் காட்சிகளும் கொண்டதாகவே இதுவரை நமக்கு தரப்பட்டிருகிறது அதனால் இதை குடும்ப சித்திரம் என்ற வரையரைக்குள்ளும் எடுத்து வரமுடியாது. அப்போ கமலின் வழக்கமான நகைச்சுவை படம் என்று சொல்லலாமா? அதுவும் சொல்ல முடியாது நமக்கு நாமே கக்கத்தில் விரல் விட்டு சிரிப்பு மூட்டிக் கொண்டால்தான் உண்டு. இது ஆங்கிலத்தனமான குடும்ப திரைப்படம் (family drama) என்று வேண்டுமானால் சொல்லலாம்.

சரி  கதைக்கு வருவோம். மதன் என்கிற ஒரு தொழிலதிபர் அம்புஜா (நிஷா) என்ற நடிகையை காதலித்து  மனம் முடிக்க இருக்கிறார், இதற்கிடையில் அம்புவின் நடத்தை மீது சந்தேகம். அதற்காக துப்பறிய, மன்னார் என்ற கதாபாத்திரத்தை  உளவு பார்க்க அம்பு விடுமுறைக்கு செல்லும்போது உடன் அனுப்புகிறார், மின்சார கனவு பாணியில் மன்னாரே அம்புவைக் கரம் பிடிக்கிறார். இதுதான் படத்தின் ஒரு வரிக்கதை.

ரங் தே பசந்தி, மும்பை மேரி  ஜான், 3  இடியட்ஸ், அன்பே சிவம் போன்ற நல்ல திரைப்படங்களில் நடித்த அனுபவங்களை மாதவனின் நடிப்பில் பார்க்க முடிகிறது. சங்கீதாவின் நடிப்பும் சொல்லும்படியாக இருக்கிறது ஆனால் அது அந்த கதாபாத்திர வடிவமைப்பின் அழகு. சங்கீதாவின் மகனாக வரும் சிறுவனும் சொல்லும் படியாக நடித்திருக்கிறார். மொத்தத்தில் நடிப்பை பொறுத்தவரை எல்லோருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.

கதை ஏற்கனவே சொல்லிவிட்டேன், திரைக்கதைக்கு வருவோம்… நண்பர்கள் சிலர் முதல் பாதி நன்றாக உள்ளது இரண்டாம் பாதி அறுவை என்று கூறினர். என்னை பொறுத்தவரை ஒரு திரைப்படத்தை பாதி பாதியாக பார்க்க  சின்னத்திரை நாடகம் இல்லை. முதல் பாதி பாத்திரங்களை இடம் சுட்டி பொருள் விளக்கவே நேரம் சரியாக உள்ளது. கதையை கொஞ்சம் கூட நகர்த்தியதாக தெரியவில்லை. இரண்டாம் பாதி அவசர அவசரமாக படத்தை முடித்தது போல இருந்தது, இறுதிக் காட்சிக்கு ஆயத்தமாகும் காட்சிகள் நன்றாகவே இருந்தது ஆனால் இது கமலின் பழைய நகைச்சுவை படங்களின் பாதிப்பை அதிகம் உணர வைக்கிறது.

லைவ் ஆடியோ இந்த படத்திற்கு ஒரு நெகடிவ், சில இடங்களில் வசனங்கள் என்னவென்று புரியவே இல்லை. காட்சிமைப்பு அருமை, ஒளிப்பதிவாளருக்கு முதல் படம் என்றால் நம்பவே முடியாது. பாடல் காட்சிகள் சொல்லும்படியாக இல்லை.  காட்சியை திருப்பி போடும் reverse footage பாடல் நிறையபேருக்கு lipsync reverse இல்லாமல் இருப்பதை உணரவே முடியவில்லை. மெனக்கெட்டு செய்திருக்கிறார்கள் ஆனால் அதன் முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்வதிற்கில்லை. டைட்டானிக் கப்பல் போல ஒரு கப்பலில் படமாக்கப்பட்டிருக்கிறது படத்தின் பெரும் பகுதி. கண்ணுக்கு குளிர்ச்சி.

நிறைய நண்பர்கள், படத்தில் காட்சிகள் இணைப்பு வசனங்கள் அல்லது இணைப்பு காட்சிகள் இல்லாமல் இருப்பதை சுட்டிக் காட்டினார்கள். சிலர் இதை நான் லீனியர் வகையான திரைப்படத்திற்குண்டான பாணியில் படத்தின் காட்சிகளை  படத்தொகுப்பு செய்திருப்பதாகவும் கூறுகின்றார்கள், ஆனால் இதை ஒரு குறையாக கூற முடியாது. எல்லாவற்றையும் கூற திரைப்படம் எதற்கு கதாகாலட்சபம் போதுமே.

சரி இந்த படத்தில் கமலையும், இயக்குனர் ரவி குமாரையும் தேடி தேடி அலுத்தேவிட்டது எனக்கு. எந்த ஒரு காட்சியிலும் அவர்களின் முத்திரை தெரியவே இல்லை. பார்த்த களங்களோ, கேட்ட கதைகளோ, இல்லாமல் வெகு நேர்த்தியாக இளம் இயக்குனர்கள் கதைகளை தேர்வு செய்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இது வெறும் சாதாரண ஒரு திரைப்படம். மொத்தத்தில் அம்பு துளைத்தது நமக்கு தான், மேலும் அது அம்பு இல்லை ஆப்பு என்பதை கமல் படம்,  கே.எஸ். ரவிகுமார் படம்  என்ற எதிர்பார்ப்பில் போனவர்கள் நன்கு உணர்வார்கள்… 

இந்து மதத்தை கேவலப்படுத்தி ஒரு பாடல் வந்ததாக அதை கத்தரித்து விட்டார்களாம். ஆனால் தமிழ் தெரு பொறுக்கும்னு ஒரு வசனம். மொழியை கேவலப்படுத்துவதை கூட பொறுத்துக்கொள்வோம், மதத்தை கேவலப்படுத்துவதை விட்டு விட மாட்டோம்.,  ஏனென்றால் நாங்கள் எல்லோரும் கமல் போல பகுத்தறிவு வாதி… ஹி… ஹி….