Posts Tagged ‘தமிழ்’

திருவையாறு P ராஜலக்ஷ்மி  , இவர் தான் தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இவர் தான் முதல் பெண் இயக்குனர் என்று கூறுகிறார்கள்.

ராஜலக்ஷ்மி 1911 இல் திருவையாறில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர், இவரது தந்தை ஒரு குருக்கள். இவருக்கு 11 வயது இருக்கும் போது திருமணம் ஆனது, துரதிர்ஷ்டவசமாக இவரது மன வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னமே முடிந்து விட்டது. வரதட்சனை கொடுக்க முடியாத காரணத்தினால் இவரது கணவர் இவரை விட்டு பிரிந்தார்.  இதனால் மனமுடைந்த இவரது தகப்பனார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்பு ராஜலக்ஷ்மி அவரது தாயாருடன் திருவையாறை விட்டு வெளியேறினார். நாடக கம்பெனி ஒன்றில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்

படத்தில் TP ராஜலக்ஷ்மி அவர்களுடன் சிறுவயது TR மகாலிங்கம்

புகழ்பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள் குழுவில் இனைந்து நாட்டியம், சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றார்.  1931 இல் காளிதாஸ் என்ற படத்தில் கதாநாயகியாய் நடித்த பிறகு இவர் புகழின் உச்சிக்கு சென்றார். இந்த திரைப்படம் தமிழின் முதல் பேசும் படம் என்று அறியப்படுகிறது. முன்னதாக இவர் 1929 லேயே திரையுலகில் காலெடுத்து வைத்தவர், கோவலன் என்ற பேசாத படத்தில் நடித்திருக்கிறார். காளிதாஸ் திரைப்படத்திற்கு பிறகு இவர் அந்நாளைய சூப்பர் ஸ்டார்களாகிய கிட்டப்பா, தியாகராஜ பாகவதர் போன்றவர்களுடன் இனைந்து நடிக்கும் அளவிற்கு பெரிய நடிகையானார். 

 
காந்தியவாதியான இவர் இந்தியத் தாய் என்ற ஒரு திரைப்படத்தை தயாரித்தார், அங்கிலேயர் ஆட்சியில்  தணிக்கையில் சிக்கிய இத்திரைப்படம்  வெளிவராமலே போனதாக தகவல். இருப்பினும் தன்னாலான அளவில் சுதந்திர போராட்டத்தில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். மிஸ். கமலா என்ற திரைப்படம் மூலம் இவர் 1936 இல் இயக்குனர் ஆனார். 1929 முதல் 1950 வரை இவர் 23 திரைப்படங்களில் நடித்திருக்கிறார், இவற்றில் மிஸ் கமலா, மதுரை வீரன் ஆகிய படங்களில் இவர் நடித்தும் இயக்கியும் இருக்கிறார்.
 
 
இவர் நடித்த திரைப்படங்கள்:
 
01 கோவலன் 1929
02 ராஜேஸ்வரி 1930
03 உஷா சுந்தரி 1930
04 காளிதாஸ் 1931
05 சாவித்திரி சத்யவான் 1933
06 பூர்ண சந்திரா 1935
07 லலிதாங்கி 1935
08 பக்த குசேலா 1935
09 குலே பகாவலி 1935
10 பாமா பரிணயம் 1936
11 சீமந்தினி 1936
12 மிஸ் கமலா 1936
13 கவுசல்யா  பரிணயம் 1937
14 அனாதை பெண் 1938
15 மதுரை வீரன் 1938
16 நந்தா குமார் 1938
17 தமிழ் தாய் 1939
18 சுகுணா சரஸா 1939
19 பக்த குமரன் 1939
20 உத்தமி 1943
21 பரஞ்சோதி 1945
22 ஜீவஜோதி 1947
23 இதய கீதம் 1950
 

ஆசிரியர் தினம் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.  இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான நாளை, செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் தினமாகக்  கொண்டாடப்படுகிறது.  

ஒரு சமுதாயத்திற்கு ஆசிரியர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை, எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற சொல்லின் மூலம் நாம் உணரலாம். நமது முன்னோர்கள், ஆசிரியர்களுக்கு என்று சிறப்பானதொரு இடத்தை சமூகத்தில் கொடுத்திருக்கின்றனர். உண்மையில் தற்போது ஆசிரியர்கள் அந்த சிறப்பான இடத்திற்கு தகுதி உடையவர்களாக இருக்கிறார்களா? முன்பெல்லாம் ஆசிரியர்கள் பாடங்கள் மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை, வாழ்கையை நமக்கு வாழ கற்றுக்கொடுத்தார்கள், ஒழுக்கம், அன்பு, நெறி, மற்றும் பல விசயங்களை ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தனர். இன்றைய அவசர காலத்தில் இதை சொல்லித்தர அவர்களுக்கு நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை. மேலும் அவர்களுக்கே ஒழுக்கத்தையும் நெறியையும் நாம் கற்றுத்தர வேண்டியிருக்கிறது. நீங்கள் கேட்கக்கூடும் எல்லாத் துறையிலும் தான் இப்படி இருக்கிறது இவர்களை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும் என்று, உண்மை தான், ஆனால் ஆசிரியர்கள் ஒரு சமுதாயத்தின் தூண்கள், அவர்கள் நமக்குள் விதைப்பதை தான் நாம் அறுவடை செய்கிறோம். 

இன்றைய கால கட்டத்தில் மதிப்பெண்களை முன்னிறுத்தியே பாடங்கள் போதிக்கப்படுகின்றன. ஒரு மாணவனுக்கு சுயமாக சிந்திக்க, கற்பனா சக்தியையும், அவனுடைய சிந்தனா சக்தியை தூண்டவும் இன்றைய பாடத்திட்டங்களோ, ஆசிரியர்களோ உதவியாக இல்லை என்றே சொல்லவேண்டும். நிறைய பேர் சொல்லக் கேள்வி பட்டு இருக்கிறேன். ஆங்கிலேயர்கள் நமக்கு குமாஸ்தா வேலை செய்ய ஏற்ப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை(மெக்காலே) நாம் இன்னும் பின்பற்றிகொண்டிருக்கிறோம் என்று, உண்மை தான் இன்றைய நிலையில் ஆராய்ச்சிப் படிப்புகளில் யாரும் அக்கறைக்  காட்டாமல் இருப்பதே  இதற்கு சான்று. மந்தையில் ஒரு ஆடு போகும் போது பின்பற்றி செல்லும் ஆடுகள் போல போய்க் கொண்டிருக்கிறார்கள் இன்றைய மாணவர்கள். பணம் மட்டுமே வாழ்கையின் குறிக்கோளாகிப் போன இந்த காலத்தில் பெற்றோர்களும் இதற்கு உடந்தை. எப்போதும் படிப்பு படிப்பு, நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும், உயர் படிப்பை முடித்து அமெரிக்காவிற்கு போக வேண்டும் இதான்  இன்றைய பெற்றோர்களின் மற்றும் மாணவர்களின் குறிக்கோள்.

 ஒரு கால கட்டத்தில் தமிழகத்தில் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாகவே ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தார்கள், தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும், மொழி ஒரு சமூகத்தின் அடையாளம் என்பதையும், அந்த அடையாளத்தை நாம் அடைய பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ், தமிழில் பள்ளிகளில்  பேசினால் குழந்தைகள் தண்டிக்கப்படுகிறார்கள், குழந்தைகளுக்கு நம் மொழியினை பேசுவதையே சிறுமை என மறைமுகமாக போதிக்கின்றனர். 

என் ஆசிரியர்கள் பற்றிய பசுமையான நினைவுகள் எனக்கு நிறைய இருக்கின்றன, என்னுடைய முதல் பள்ளி ஆசிரியை மரகதவல்லி, அவர்கள் எங்கள் குடும்ப உறவாகவே மதிக்கப்படும் ஒரு நபர். எங்கள் வீட்டு விசேஷங்கள் எல்லாவற்றிலும் கலந்து கொள்வார்கள். நான் மதிக்கும் மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர். எனது தமிழாசிரியர்கள் எல்லோருமே அருமையான வழிகாட்டிகள், விலங்கியல் பாடம் எடுத்த திருமலை  ஆசிரயரை மறக்கவே முடியாது ஒரு விரிவுரையாளர் கூட அவ்வளவு நுட்பமாக பாடம் எடுக்க முடியாது, அற்புதமான மனிதர், மேல்நிலை வகுப்பு ஆசிரியர்கள் யாவரும் என் மனதில்  நீங்கா இடம் பெற்றவர்கள். கல்லூரியில் எனக்கு கிடைத்த ஆசிரியர்கள், நண்பர்களை போல நடத்துவார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பிருந்தா ஆசிரியர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ்  விரிவுரையாளர். 

மாதா, பிதா, குரு அப்புறம் தான் தெய்வம், அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு சிறப்பளிக்கும் ஆசிரியர் தினத்தின் மேன்மையை நம் குழந்தைகளுக்கு எடுத்து கூறுவோம். வருங்கால சமுதாயத்தை ஆசிரியர்கள் நன்முறையில் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த இடுகையின் மூலம் ஆசிரிய பெருந்தகைகளுக்கு என் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி: ஓவியர் பாலாஜி

செம்மொழி மாநாடு  முடிந்து சென்றவாரம் முதல்வர் பத்திரிகையாளர் சந்திப்பில் செம்மொழி மாநாட்டுக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார், பேட்டியின் போது நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலாக இனி மருத்துவப் படிப்பினையும் தமிழிலேயே படிக்க ஆவன செய்யப்படும் என்று உறுதி அளித்தார் மேலும் ஏற்கனவே பொறியியல் கல்வியை தமிழில் பயில வழிவகை செய்யப்படுள்ளது என தெரிவித்தார். தமிழ்வழயில் படித்த, படிக்கும் மானவர்களுக்கு அரசாங்க வேலையில் முன்னிரிமை வழங்கப்படும் என தமிழ்வழியில் பயிலும் மானவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இது அமையும் எனவும் கூறினார்.

 

முதல்வரின் நோக்கம் சிறப்பானது அதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை, ஆனால் தமிழ்வழிக் கல்வியில் படிப்பவர்களுக்கு நடைமுறை இடர்பாடுகள் சில உள்ளது, உதாரனத்துக்கு பேராசிரியர்கள் முழமையாக தமிழில் பாடம் எடுப்பதில்லை குறிப்பாக அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்திருப்பவர்களுக்கு  இது பெரிய பிரச்சனை. மேலும் பாடநூல்கள் தமிழில் அரிதாகவே உள்ளது. நான் இயற்பியலை முதன்மை பாடமாக எடுத்து எனது இளமறிவியல் பட்டப்படிப்பை படித்தபோது ஒரே ஒரு நூலாசிரியர் மட்டுமே பாடநூல் வெளியிட்டுருந்தார்  அதிலும் ஆயிரத்தெட்டு அச்சு பிழைகள், அறிவியல் பாடப்பிரிவினை பொருத்தமட்டில் ஒரு இடம் தவறானால் முற்றிலும் தவறாகிவிடும், முக்கியமாக சூத்திரங்களில். மாறாக ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 3 புத்தகங்களாவது எளிதாக கடைகளில் கிடைக்கும். ஒவ்வொரு பாடத்துக்கும் முடிவில் ஆதார நூற்பட்டியல் நூற்றொகை மற்றும் ஆதார நூல்களை பற்றிய தகவல்களும் இருக்கும். பாடத்தை செவ்வனே படிக்க அது மிக ஏதுவாக அமையும். ஆனால் தமிழ் வழியில் பயில்பவர்களுக்கு இதர்கெல்லாம் வழியே இல்லை. தமிழில் பாடநூல்  கிடைப்பதே அரிதாக உள்ள நிலையில் ஆதார நூல்கள் தமிழில் எங்கே கிடைக்கும். வேறு வழி இல்லாமல் ஆங்கில நூல்களை படித்து குறிப்பு எடுத்துக்கொன்டு படித்து பரீட்சை எழுத வேண்டிய கட்டாயம். இது 1990 – 93 ல் நான் படித்த காலத்தில் இருந்த நிலை, இன்னும் இந்நிலை மாறவேயில்லை  என சில மானவர்கள் கூறுகின்றனர். அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் பெரிதான மாற்றம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். 

தமிழ்வழி கல்வியின் அடிப்படையே  தமிழில் சிந்திக்க வேண்டும் என்பதாகும். அதற்கு தமிழிலேயே படித்தால் தான் எளிமையாக இருக்கும். ஆங்கிலத்தில் அரைகுறையாக படித்து அதை தமிழில் எழுதவும் சிந்திக்கவும் கட்டயப்படுத்துவது தமிழ்வழி கல்வியை பிரபலப்படுத்தவோ அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதற்கோ பயன்படாது. ஆகவே அரசாங்கம் பள்ளிகளில் இலவச பாட புத்தகங்களை வழங்குவது போல கல்லூரியில் படிக்கும் தமிழ்வழிக் கல்வி பயிலும் மானவர்களுக்கு பாடநூல்கள் வழங்கினால் ஒழிய தமிழ்வழிக் கல்வி என்பது பயன் தராது.

மேலும் பேராசிரியர்கள் மற்றும் புத்தக வெளியீட்டார்களும்   வியாபார நோக்கம் பாராமல் பாடநூல்களை வெளியிடுவார்களேயானால்   மானவர்களுக்கு பயனாக அமையும். அறிவியல் தமிழை வளர்த்தாலொழிய தமிழை வளர்க்க முடியாது. பாரதி சொன்னது போல நல்ல நூல்களை தமிழில் மொழிபெயர்க்க சிலர் முயன்று கொன்டுதான் இருகிறார்கள், பேராசிரியர்கள் பாடநூல்களுக்கு தேவையான ஆதார நூல்களை தமிழில் மொழி பெயர்த்தல் இன்னும் நன்மை பயக்கும்.

இன்றைய நிலையில் குழந்தைகள் பார்க்கும் கார்டூன்கள் முதற்க்கொன்டு பெரியவர்கள் பார்க்கும் ஹாலிவூட் திரைப்படங்கள் வரை தமிழில் மொழியாக்கம் செய்யபடுகிறது. வியாபார நோக்கில் உத்தியாக மட்டுமே மொழியாக்கத்தை நிருத்திகொள்ளாமல்  பாடநூல்களுக்கு தேவையான ஆதார நூல்களை மொழிபெயர்த்தல் மேற்படிப்புக்கு செல்லும் மானவர்கள் எண்ணிகையை  பெருக்க உதவும். தாய் மொழியில் சிந்தித்து, தாய்மொழியிலேயே நல்ல விளக்கங்களும் கிடைத்தால் நல்ல அறிவியல் கண்டுபிடிப்புகளும் நமக்கு கிடைக்க ஏதுவாக அமையும்.

 ஆகவே, கலைஞரின் பதிலுக்கு ஒரு கேள்வி? 

தமிழில் பாட நூல்கள் கிடைக்க வழிவகை செய்வீர்களா?