Posts Tagged ‘பத்திரிகை’

சத்யஜித் ரே அவர்களின் சாருலதா, பதேர் பாஞ்சாலி போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு கூபி கெயின் பாகா பெயின் திரைப்படம் ஆச்சர்யத்தை கொடுக்கும், உண்மையில் இது சத்யஜித் ரே படமா? என்று கேட்கும் அளவிற்கு இந்த படத்தின் கதையமைப்பு அமைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் fairytale  என்று சொல்வார்களே அந்த வகையின்  கீழ் வரும் இந்த படம் குழந்தைகள் திரைப்படமாக சினிமா ஆர்வலர்களால்  வரையறுக்கபடுகிறது.

கூபி ஒரு குடியானவனின் மகன், அவனுக்கு பாடுவதில் வெகு ஆசை ஆனால் அதற்குரிய திறன் இல்லாதவன் ஒரு நாள் அரண்மனைக்கு அருகில் உள்ள கோவிலில் அவன் பாடும் போது அரசன் அவனை கழுதை மேல் ஏற்றி ஊருக்கு வெளியே கொண்டு விடுமாறு ஆணையிடுகிறான். இதற்கிடையில் டோல் இசைப்பதில் ஆர்வம் உள்ள பாகா என்பவனும் இதுபோல ஒரு அவமானத்திற்கு உள்ளாகி காட்டில் கூபியை சந்திக்க நேர்கிறது. இந்நிலையில் காட்டில் பூதங்களின் தலைவன் மூலமாக இவர்களுக்கு மூன்று வரம் கிடைகிறது. முதல் வரமாக நல்ல உணவும் உடையும் கேட்கிறார்கள், இரண்டாவதாக நினைத்த இடத்திற்கு செல்ல உதவும் ஒரு காலனி கிடைக்கிறது, மூன்றாவதாக மற்றவர்கள் விரும்பும் அளவிற்கு தங்களுக்கு விருப்பமான சங்கீத ஞானத்தையும் வரமாக பெறுகின்றார்கள். இந்த வரங்கள் இருவரும் ஒவ்வொரு முறையும்  ஒரு சேர கை தட்டும் போதும் கிடைக்கப் பெறுகின்றன.

இதற்கிடையில் சுண்டி என்ற ராஜ்யத்தில் இசை  மேதைகளின் போட்டி நடைபெறுவதை அறிந்து அங்கு சென்று தங்களின் இசை ஞானத்தின் மூலமாக வெற்றி பெறுகின்றார்கள் கூபியும், பாகாவும். அரண்மனையில் தங்கி இருக்கும் போது சுண்டி நாட்டின் மீது ஹல்லா  அரசன் படை எடுத்து வருவது அறிந்து இந்த போரை தாங்கள் நிறுத்தி அமைதிக்கு வழி வகுக்கிறோம் என்று கூற, அது மட்டும் நடந்தால் தனது மகளை கூபி, பாகா இருவருள் ஒருவர்க்கு மணமுடித்து தருவதாகவும் வாக்குறுதி தருகிறார் சுண்டி தேசத்தின் ராஜா. இருவரும் தங்கள் இசையால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் வரா வண்ணம் தடுத்து ராஜ குமாரிகளை மனம் முடிப்பதே கதை.

இந்த படம் வங்கத்தில் 51  வாரம் ஓடி சாதனை படைத்தது. சத்யஜித் ரே படங்களில் அதிகமான நாட்கள் திரையரங்கில் ஓடிய படம் இது.  இந்த படத்தில் கூபி கதாபாத்திரத்தில் நடித்த தபன் சட்டர்ஜி ஒரு புதுமுகம் பாகா கதாபாத்திரத்தில் நடித்தவர் ரபி கோஸ். இருவரின் நடிப்பும் படத்திற்கு சிறப்பு, இப்படத்தின் இயக்கத்துடன் கூட  சத்யஜித் ரே அவர்களே பாடல்களை இயற்றி இசை அமைத்திருக்கிறார் மேலும் உடை வடிவமைப்பும் இவரே செய்திருக்கிறார்.  பைசைக்கிள் தீவ்ஸ் படத்தை பார்த்து நியோ ரியலிசம் படங்களை எடுக்க ஆர்வம் கொண்ட சத்யஜித்ரே இது போன்ற படம் எடுத்திருப்பது அவரது பன்முகத்தன்மையை வெளிக்காட்டுகிறது.

சந்தேஷ் என்ற குழந்தைகளுக்கான பத்திரிகை ஒன்றை சத்யஜித் ரே நடத்தி வந்தது நம்மில் பலருக்கு தெரியும்  அதனால் அவர்  குழந்தைகளுக்கான படம் எடுத்தது அந்த பத்திரிகை அனுபவப் பின்னணி என்பது நன்கு விளங்கும் .

150 கோடியில் திரைப்படம் தயாரிக்கும் நிலையில் இருக்கும் இன்றைய தமிழ் திரையுலகம் முதன்முதலில் எங்கு ஆரம்பித்தது, யார் ஆரம்பித்து வைத்தது என்பதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த இடுகை  தமிழ் திரையுலகின் முதல் தயாரிப்பாளர் நடராஜ முதலியார் பற்றியது. திரைப்பட நடிகர் மோகன்ராமன் அவர்களின் FACEBOOK ல் இது பற்றிய ஸ்கேன் செய்யப்பட்ட பத்திரிகை செய்தியை சில நாட்களுக்கு முன் பார்த்தேன். பார்த்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நடராஜ முதலியார் பற்றிய பேட்டி இயக்குனர் ஸ்ரீதர் நடத்திய சித்ராலயா என்ற இதழில் 1970ம் ஆண்டு வெளியானது. 1936 ம் ஆண்டு நடராஜ முதலியார் பற்றிய ஒரு செய்தி அன்றைய மெயில் பத்திரிகையில் வெளியாகி இருந்ததாம், இந்த பழைய பத்திரிகை செய்தியை ஸ்ரீதர் பார்க்க நேர்ந்து அது பற்றிய செய்தியை சித்ராலயாவில் வெளியிட நடராஜ முதலியாரின் பேட்டி எடுத்து இருக்கிறார்கள்.

 

இவர் முதன்முதலில்  1916 ம் வருடம் கீசகவதம் என்ற படத்தை 35 நாட்களில் எடுத்திருக்கிறார். திரைப்பட துறைக்கு வருவதற்கு முன் இவர் மவுண்ட்ரோட்டில் மோட்டார் கார் வியாபாரம் செய்து கொண்டிருந்தார், பிறகு இதை சிம்சனிடம் விற்றுவிட்டதாக தகவல். கலையார்வம் மிகுந்த இவர் ஒளிப்பதிவின்  மேல் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார் அதனால் கர்சன் பிரபுவின் தர்பாரில் படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளரான ஸ்மித் என்பவறின் அறிமுகம் கிடைக்க அவர் மூலமாகவே கையால் ராட்டை போல சுழற்றி படம் பிடிக்கும்  காமிராவை இயக்கக் கற்றார்.  படமெடுக்க நன்கு கற்ற பிறகு படப்பிடிப்பு சாதனங்களை வாங்கினார், அந்நாளில் பிலிம் லண்டனில் இருந்தே வரும் பம்பாயில் கொடாக் நிறுவனத்தில் ஒரு நல்ல பதவியில் இருந்த கார்பெண்டர் என்பவர் மூலம் நடராஜ முதலியார் தனக்கு வேண்டிய பிலிம் சுருள்களை பெற்றதாக பேட்டியில் தெரிவிக்கிறார்.

 

இவர் தயாரித்த படங்களில் இவர் தான் இயக்குனர், ஒளிப்பதிவாளர். பிலிம் கழுவ ஒரு நபரையும், இவருக்கு உதவிக்காக  மற்றொருவரையும்  வேலையில் அமர்த்திக்கொண்டார். அக்காலத்தில் குளிர்சாதன வசதி இல்லாத காரணத்தினால்  லேபராட்ரியை பெங்களூரில் வைத்துகொண்டார். படப்பிடிப்பு சென்னை கீழ்பாக்கத்தில் நடக்குமாம்.  நாடகங்களில் நடிப்பவர்களை இவர் திரைபடத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். அப்படியும் நடிப்பதற்கு பெண்கள் வரமாட்டார்களாம், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கூட படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் இவருடைய திரௌபதி வஸ்த்ராபுராணம் என்ற படத்தில் நடிக்க ஒரு ஆங்கிலேயப் பெண்ணை திரௌபதியாக நடிக்க வைத்தாராம்.

 

திரௌபதி வஸ்த்ராபுராணம்,  கீசகவதம், லவகுசா, ருக்மணி சத்யபாமா, மார்கண்டேயா, காலிங்க மர்த்தனம் ஆகிய ஆறு படங்களை நடராஜ முதலியார் தயாரித்திருக்கிறார். படத்தை இங்கே வெளியிட்டதல்லாமல் வடநாட்டிற்க்கும் விநியோக உரிமை கொடுத்திருக்கிறார். 

பேட்டி எடுக்க சென்ற போது நடராஜ முதலியார் சென்னை அயனாவரத்தில் ஒரு சிறிய இடத்தில் வறுமையில் பிடியில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

ஆங்கிலத்தில் பாய்காட் என்று ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஒத்துழைக்காமல் தவிர்ப்பது, ஒன்றாய் இனைந்து புறக்கணிப்பது என்பது இதன் பொருள். இந்த சொல் எப்படி வந்தது ? தெரியுமா?

ஐயர்லாந்தில் காடுகளிலும், தோட்டங்களிலும் வேலை செய்ய காப்டன் சார்லஸ் பாய்காட் என்ற ஐரிஸ் கான்ட்ராக்டர்  கூலியாட்களை நியமித்து வேலை வாங்கி வந்தார். கூலியாட்களும் ஐரிஸ்காரர்கள். இவர்களிடம் மிகவும் கடுமையாகவும் கொடுமையாகவும் நடந்து கொண்டார் பாய்காட்.  பல நாட்கள் பொறுத்திருந்தும் விடிவு எதுவும் ஏற்படாததால் அந்த கூலியாட்கள் அனைவரும் ஒன்றாய் இனைந்து பாய்காட்டின் காண்ட்ராக்ட் வேலையை செய்ய மறுத்து அவரை புறக்கணித்தனர். அந்தப் பகுதியில் அவர் தனித்து விடப்பட்டார். அவரின் வேலையாட்கள் அவரின் நிலத்தில், வீட்டில் வேலை செய்ய மறுத்து விட்டனர், அவ்வூரில் உள்ள வியாபாரிகளும் இவருடன் வணிகம் செய்ய மறுத்துவிட்டனர். தபால் கொடுப்பவர் கூட தபாலை கொடுக்க மறுத்துவிட்டாராம். அந்த பகுதி மக்கள் யாருமே அவருக்கு ஒத்துழைக்கவில்லையாம்.

அவருடைய நிலத்தில் அறுவடைக்கு ஆள் கிடைக்காமல் வேறு இடங்களில் இருந்து சொற்ப ஆட்களை கொண்டு அறுவடை செய்தாராம், 50௦ தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ஆயிரத்திற்கும் மேற்ப்பட காவலர்களை நியமிக்க வேண்டியதாகிவிட்டது . வேடிக்கையான விஷயம் என்னவென்றால்  அறுவடையால் கிடைத்த  லாபத்தை விட காவலர்களுக்கும் விவசாயக் கூலிகளுக்கும் கொடுத்த பணம் அதிகம் ஆகிவிட்டது.  

இந்த நிகழ்வுக்கு பின்னர்தான் இத்தகைய ஒத்துழையாமையை பாய்காட் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். முதன் முதலில் 1880 இல் பாய்காட் என்ற பதத்தை டைம்ஸ் பத்திரிகை ஒரு ஒத்துழையாமை போராட்டத்தை பற்றிய செய்தியில் உபயோகப்படுத்தியது.