Posts Tagged ‘பிரான்சுவாஸ் சகன்’

பிரெஞ்சு இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் “வணக்கம் துயரமே”( Bonjour Tristesse). நாவலாசிரியர் பிரான்சுவாஸ் சகன் பிரெஞ்சு இலக்கியவாதிகளில் மிக முக்கியமான படைப்பாளி, தீவிரமான பெண்ணியவாதி. இந்நாவலில் 17 வயது இளம் பெண் ஒருத்தியின் உடல், மன, பாலுணர்வு உளைச்சல்கள், நாவல் வெளிவந்த காலத்து  சமூக நெறிகளை அலட்சியபடுத்தி சொல்லப்பட்டதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் வாசகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. 1954 ல் முதல்பதிப்பு வெளிவந்த ஓரிரு நாட்களிலேயே 3000 புத்தகங்கள் விற்று தீர்ந்தன, ஓராண்டுக்கு பிறகு எட்டரை லட்சத்தை தாண்டியது எண்ணிக்கை, இன்றைய தேதியில் 2 மில்லியன் பிரதிகள் விற்றதாக தகவல்.அழகான இளம் ராட்சசி என்ற செல்லப் பெயரால் பிரெஞ்சு இலக்கிய விமர்சகர்களால் புகழப்பட்ட சகன், 18 வது வயதில் 188 பக்கங்களில் நான் அடைந்த புகழ்  “ஒரு வான வேடிக்கை” என்பதாக ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.  15 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது இவரது படைப்புகள், இவரது முக்கிய நாவல்கள் அனைத்தும் திரை வடிவில் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றன. இந்த நூலை புதுச்சேரியை சேர்ந்த நாகரத்தினம் கிருஷ்ணா என்பவர் மொழியாக்கம் செய்திருக்கிறார், காலச்சுவடு பதிப்பகத்தால் 2008 ல் வெளியிடப்பட்டது. 

 

செசில் 17  வயது இளம்பெண் தனது தந்தையுடன் பிரான்சில் வசித்து வருகிறார். தாயார் நினைவு தெரியும் முன்னரே  இறந்துவிட்ட நிலையில் தாயாரின் தோழி ஆன்னி லார்சன் வளர்ப்பில் தனது பிள்ளைப்பருவத்தை கழித்து பின் விடுதியில் இருந்தவாறே படிப்பை தொடர்கிறாள். இவளது தந்தை ரேமொன் ஒரு கேளிக்கைப் பிரியர், பெண்களை தனது பேச்சாலும் செயலாலும் கவர்பவர். விருந்துகளில் கலந்து கொள்வதும் புதுப்புது பெண்களுடன் சல்லாபிப்பதும் அவரது வாடிக்கை, தற்சமயம் எல்சா அவளின் பெண் சிநேகிதியாய் இருக்கிறாள். தனது தந்தையின் நடவடிக்கைகளால் முதலில் எரிச்சளுக்குள்ளான  செசில் நாளடைவில் அப்பாவின் போக்கை மன்னித்தார், காரணம் அவர் இவள் மேல் காட்டும் அளவுக்கதிகமான  அன்பும் பாசமும்.

இந்த வருட கோடையை கழிக்க அவளும், அப்பா ரேமொன் அவருடைய காதலி சகிதம் ஒரு கடற்கரை வாசஸ்தலத்தில்  வில்லா ஒன்றை  வாடகைக்கு எடுத்து தங்குவதாக திட்டம், அதன்படி மூவரும் தங்கியிருக்க அங்கு சிரில் என்ற  இளைஞனை சந்திக்கிறாள் அவன் மேல் ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. அது காதலா  இல்லை உடல் வேட்கையா என்பதை புரிந்து கொள்ளாத நிலையில் அவ்வுறவை தொடர்கிறாள். இதற்கிடையில் தந்தையார் தனது இறந்து போன மனைவியின் தோழியும் மகளை வளர்த்தவளுமான  ஆனியை கோடைவிடுமுறையை தங்களுடன் கழிக்க அழைப்பு விடுத்து அவளும் அங்கு வருகிறார். எல்சாவிற்க்கும் செசிலுக்கும் அது தர்ம சங்கடமாக இருக்கிறது. ஆணி குணத்தால் செசில், ரேமொன் ஏன் எல்சாவிற்க்கும் நேர் எதிரானவள்.

 நாட்கள் செல்ல செல்ல ரெமொனுக்கும் ஆனிக்கும் இடையே நெருக்கம் அதிகம் ஆகிறது . ஒரு நள்ளிரவு விருந்தின் போது அது அப்பட்டமாக வெளிப்பட்டது. எல்சவையும் செசிலையும் தனியாக விட்டு இருவரும் அந்த இரவை கழித்தனர், மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக மறுநாள் தெரிவிக்க அதிர்ந்தே போகிறாள் செசில். இந்த திருமணம் நடந்தால் வீட்டில் ராணுவ ஆட்சி தான் நடக்கும் என நினைத்து எல்சாவை தனது காதலனுடன் நெருக்கமாக இருக்குமாறு நடிக்க செய்து தந்தையை எரிச்சல் அடைய செய்கிறாள். ஒரு சில நாட்களுக்கு பிறகு எல்சாவின் மேல் அவர் பார்வை பட இந்த விஷயம் அறிந்து ஆனி வீட்டை விட்டு போகிறாள். போகும்போது விபத்தில் அவள் இறக்க நேரிடுகிறது. குற்ற உணர்ச்சியில் தந்தையும் மகளும் குறுகிப் போகிறார்கள். ஆனியை நினைத்து துயரப்படுகிறார்கள். தங்களின் வாழ்வை நன்னெறிப்படுத்த  வந்தவளை உதாசினப்படுத்தி துயரத்தை வணக்கம் சொல்லி வரவேற்க நேரிடுகிறது.