Posts Tagged ‘உலக அதிசியம்’

நேற்று முன்தினம்  தெரியுமா? எந்திரனில் பாடப்பட்ட கிளிமஞ்சாரோவைப் பற்றி? என்ற இடுகையை உங்களோடு பகிர்ந்துகொண்டேன்.  தலைப்பை பார்த்து ஐஸ்வர்யா ராய் பற்றிய செய்தியாய் இருக்கும் என்று நிறைய பேர் ரொம்பவே ஏமாந்து விட்டது தெரிந்து கொஞ்சம் சங்கடமாகவே போய்விட்டது எனக்கு, நண்பர் ராஜேஷ் அந்த பாடல் எடுக்கப்பட்ட இடமான மச்சு பிச்சுவைப் பற்றி கொஞ்சம் சொல்லி இருக்கலாமே என்று ஒரு வலைதள முகவரியையும் கொடுத்திருந்தார். ஐஸ்வர்யாவைப் பற்றி எதுவும் எனக்கு தெரியாத நிலையில் குறைந்தபட்சம் இந்த மச்சு பிச்சுவை பற்றிய சில தகவல்களை உங்களோடு இன்று பகிர்ந்துகொள்கிறேன். 

 

யுநெஸ்கோவின்  உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான இந்த மச்சு பிச்சு பெரு நாட்டில், ஒரு பள்ளத்தாக்கில் உள்ள மலைத்தொடரில் கடல் மட்டத்தில் இருந்து  2400 மீட்டர் உயரே அமைந்துள்ளது. இது இன்கா பேரரசின் வரலாற்று சின்னமாகும், இதை இன்காக்களின் தொலைந்த நகரம் என்றும் கூறுவர். இது 1450 ம் ஆண்டு கட்டப்பட்டது, ஸ்பானியர்கள் படையெடுப்பிற்கு  பிறகு இன்கா அரசு அழிந்த நிலையில் இந்த இடம் கைவிடப்பட்டிருந்தது, பின்னர் ஒரு ஆங்கிலேய வரலாற்றறிஞர் இந்த இடத்தை கண்டறிந்தார். இந்த இடத்தை அவர் ஒரு குழுவுடன் சென்று சுத்தம் செய்ய 3 ஆண்டுகள் பிடித்தது, இங்கிருந்து 521 பொருட்களை அவர் கண்டெடுத்ததாக தகவல். அவற்றில் பல இன்னும் யேல் பல்கலைக்கழகத்தில் இருக்கிறதாம். மேலும் 173 எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாம் அதில் 150 பெண்கள், அவர்கள் பலியிட்டவர்களாக இருக்ககூடும் என்ற கருத்து நிலவுகிறது. பளபளப்பாக்கப்பட்ட உலர் கற்களைக் கொண்டு மச்சு பிச்சு கட்டப்பட்டிருக்கிறது, தஞ்சை பெரிய கோயில், மாமல்லபுரம் சிற்பங்களை பற்றிச் சொல்லும் போது இத்தனை கற்களை எப்படி கொண்டு வந்து கட்டினார்கள் என்று வியப்போம், அதே போல இந்த மச்சு பிச்சுவில் இத்தனை அடி உயரத்தில் இந்த கற்களை எங்கிருந்து கொண்டு வந்தார்கள். எப்படி இந்த இடத்தை நிர்மாணித்தார்கள் என்று நினைத்தாலே ஒரே வியப்பாக இருக்கிறது.

இந்த இடத்தின் வரலாற்று பின்னணியை பார்க்கில், ஸ்பானியர்கள் தாக்குதலின் போது இங்கிருந்த இன்கா மக்கள் தப்பித்து பக்கத்தில் இருந்த அடர்ந்த காடுகளில் தஞ்சம் அடைந்தனர், 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்த தாக்குதல் நடந்ததாம், கடைசியில் இன்கா அரசின் மன்னர் பிடிபட்டார் அவரை பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் படுகொலை செய்தனர் ஸ்பானியர்கள்.

 

1981ம் ஆண்டு மச்சு பிச்சு இருக்கும் இடத்தையும் சேர்த்து சுமார் 325 சதுர கிலோமீட்டர்களை பெரு அரசின் வரலாற்று சின்னமாக அறிவித்தது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ஆம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

இந்த இடத்தை பற்றிய இன்னும் பிற தகவல்கள் அறிய கீழ்கண்ட வலைதளத்திற்கு சென்று பாருங்கள். இந்த தளத்தில் VIRTUAL TOUR என்ற வகையின் கீழ் மச்சு பிச்சுவின் முக்கிய இடங்களை 360 டிகிரியில் சுற்றிக் காண்பிக்கிறார்கள் .

 http://www.peru-machu-picchu.com/