Posts Tagged ‘ஸ்டாலின்’

 
உலகம் முழுவதற்கும் ஒரு பொதுவான மொழி இருந்தால் உபயோகமாக இ ருக்குமென்று 1887ல்  டாக்டர் லுடோவிக் லாசரஸ் ஜாமன்ஹாப், எஸ்பராண்டோ என்ற ஒரு புது மொழியை உருவாக்கினார். இம்மொழிக்கான இலக்கணம் அதே ஆண்டில் டாக்டர் எஸ்பராண்டோ என்ற புனைப் பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. இவ்வார்த்தைக்கு நம்பும் டாக்டர் என்று பொருள். நாடுகட்கிடையே மொழித் தடைகளை போக்கி உலகப் பொது மொழியாக இது உருவாக வேண்டுமென அவர் விரும்பினார். தொடக்கத்திலேயே பல நாடுகள் கடுமையாக இதை எதிர்த்தன. ரஷ்யாவில் தீவிர எதிர்ப்பு இருந்தது. 1954 வரை இம்மொழிக்கு அங்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இம்மொழிக்கு ஆதரவு காட்டிய ஆயிரகனக்கானவர்கள் நாசிகளால் கொல்லப்பட்டனர். ஸ்டாலின் 11000 பேர்களை சிறைக்கு அனுப்பினார். பிரான்சும் இம்மொழிக்கு தடை விதித்து இருந்தது.
 
இவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையேயும் அதன் ஆதரவாளர்கள் உதவியுடன்  அம்மொழி உருவாக்கப்பட்டது. 1987ல் நூற்றாண்டு விழா  கொண்டாடியபோது  குறைந்தது 1 1/2 கோடி பேர் இம்மொழியை கற்றிருந்தனர். சாதாரண கல்வியறிவு உள்ளவர்களும் எளிதில் இதைக் கற்றுக் கொண்டுவிடமுடியும் என்று கூறுகின்றனர். பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளின் 3500 வேர்ச்சொற்களே   இதில் பயன்படுத்தப்படுகின்றன. உச்சரிப்பு ஸ்பானிஷ், இத்தாலிய மொழி போல இருக்குமாம் . மொத்தம் 28  எழுத்துகள். எழுத்தை எப்படி சொல்கிறோமோ அதுபோலவே வார்த்தைகளின் உச்சரிப்பும் இருக்கும் என்றும்  இலக்கணம் 18 விதிகளை மட்டுமே கொண்டதாகவும் இது அறியப்படுகிறது. ஐரோபியரல்லாதவர்கள் கற்பது சுலபம், 6 மாதங்களில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்கின்றனர்.
 
சீனாவில் 5 லட்சம் பேர் இம்மொழி அறிந்தவர்கள் உள்ளனராம். பெய்ஜிங்கில் ஒரு வானொலி நிலையம் இம்மொழியில் ஒலிபரப்பு செய்கிறது. உலகம் முழுதிலும் 100க்கும் மேற்ப்பட்ட பத்திரிகைகள் இம்மொழியில் வெளியாகிறது. பல நாடுகளில் வானொலி ஒலிபரப்பும், ஆயிரக்கணக்கான புத்தகங்களும்  வெளியாகி உள்ளன. இம்மொழி பேசுபவர்களின் தலைமையகம் லண்டன். இம்மொழியை பேசத் தெரிந்தவர்கள் பச்சை நிற பேட்ஜ் அணிந்திருப்பர். 50களில் இம்மொழி இந்தியாவிற்கு வந்தது. சாந்தி நிகேதன் இதற்கு ஆதரவு தந்தது. வினோபா பாவே இம்மொழியை 3 மாதங்களில் கற்றதாக தகவல்.
பொது மொழியின் மூலம் உலகமுழுதும் ஒரு சமூகமாக செய்வதே இதன் நோக்கமாக கூறுகிறார்கள்.
 
மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம் என்பர், இது போன்ற பொதுமொழி என்ற விஷயம் எந்த இனத்தாரும்   மனம் உவந்து ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவதற்கில்லை. இம்மொழி பற்றிய மேலதிக விவரங்களுக்கு கீழ்காணும் விக்கி பக்கத்திற்கு சென்று பாருங்கள்.
 
 

கிர்கீசியாவில் பிறந்த சிங்கிஸ் ஐத்மாத்தவ் படைப்புகள் அனைத்தும் உலகப் புகழ் பெற்றவை குல்சாரி என்ற நாவல் அதில் ஒன்று. இரண்டாம் உலகப் போரில் சோவியத் சமுதாயத்தில் நடைபெற்ற எல்லாவற்றிற்கும் ஸ்டாலின் தான் காரணம் என்ற பரப்புரையை இந்த குறு நாவல் தகர்க்கிறது. சமூகப் போராட்டத்தை மிக நேர்த்தியாக குதிரையை(குல்சாரி) மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இந்த கதை படிப்போர் நெஞ்சை கவர்கிறது. இந்த குறுநாவலில் இடம் பெற்றுள்ள குதிரையும் மக்களும் நம்மோடு வாழ்ந்து பிரிகின்றனர்.

தானாபாய் என்ற வயது முதிர்ந்த தொழிலாளியையும் அவன் வளர்த்த குல்சாரியையும் மையப் படுத்தி இந்த கதை உள்ளது. நாவலின் ஆரம்பத்தில், முதியவரான தானாபாய் தன் மருமகளின் சுடு சொற்களால் புண்ணாகிப் போன இதயத்துடன் தன் கிழட்டு குதிரை குல்சாருடன் தன் இருப்பிடத்தை நோக்கி போகும் போது பழைய நினைவுகளை நினைத்து வருந்தி கொண்டு போவது போல கதை ஆரம்பிக்கிறது.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து தொழிலாளர் வர்க்கம் புதிய அரசை ஏற்படுத்தி ஆண்டு வந்த ஆரம்ப காலம், கிராமத்தில் கூட்டுப் பண்ணைகள் தீவிரமடைந்து வர்க்க பேதமற்று சமுதாய முன்னேற்றத்திற்காக போராடி கொண்டிருந்த காலம். கூட்டுப் பண்ணைகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெறுகின்றன. முக்கிய பொறுப்புகளில் எதிர் புரட்சியாளர்கள் உள்நுழைந்து அவற்றை சீரழிக்கிறார்கள். அரசு அதிகாரிகளில் சிலர் தான்தோன்றிதனமாகவும், பொறுப்பற்றவர்களாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் மாறி  மக்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் ஆகி விடுகின்றனர்.  இத்தகைய போக்கு தானாபாயை சீரழிக்கிறது. பட்டறையில் வேலை செய்து வந்த தானாபாய் முதலில் குதிரைகளை பராமரிக்கும் தொழிலாளியாய் தன் கட்சிக்காக உழைக்க முன் வருகிறான்.  அந்த சமயத்தில்தான் இளம்பிராயத்து குல்சாரி அவனுக்கு அறிமுகமாகிறது. குல்சாரி குலுங்கா நடையன் என்ற சிறப்பு பெயருடன் பலரை கவரும் வகையில் உள்ள குதிரை, தன் எஜமானிடம் அதிக விசுவாசம் கொண்டது. பந்தயங்களில் பல வெற்றியை தானா பாய்க்கு ஈட்டி தருகிறது. ஒரு நாள் அதை அரசு அதிகாரிகளுக்கு ஏவல் செய்ய அது அழைத்து செல்லப்படுகிறது. அடிக்கடி அது கிராமத்திலிருந்து மலையில் எஜமானின் இருப்பிடத்திற்கு தன் மந்தையை சேர்ந்த குதிரைகளை பார்க்க ஓடிவருகிறது. தானாபாயின் நண்பர் சோரோ குதிரை வளர்ப்பிலிருந்து அவனை ஆட்டு கிடைகளை பராமரிக்க நியமிக்கிறார், போதிய உணவோ உறைவிடமோ இல்லாமல் அவரும் அவரது ஆடுகளும் பல இன்னல்களை அனுபவிக்க நேரிடுகிறது. அரசு தரப்பில் எந்த உதவியும் செய்யாமல் ஆடுகளை சரியாக பராமரிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறான்.

அதனால் அரச அதிகாரிகளை அடிக்க போய் விடுகிறான் தானாபாய். இதனால் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இதனால் மனமுடைந்து தன் சேவைகளும், உழைப்பும் வீணாய்  போனதை எண்ணி வருந்துகிறான். இந்த துயரம் தாளாமல் அவரது நண்பர் சோரோ இறக்க நேரிடுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு அவனை மீண்டும் கட்சியில் சேர அழைப்பு  விடுக்கின்றனர், ஆனால் தன் பழைய கசப்பான  நினைவுகளால்  மனமொடிந்திருந்த  தானாபாய் சேராமலே இருக்கிறார். இந்நிலையில் அவனது நண்பனாக விளங்கும் குல்சாரி இறந்து அந்த மனசுமையோடு வீடு நோக்கி போவது போலவும், விரைவில் கட்சியில் சேர்ந்து சமுதாயப் பனி ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடும் தானாபாய் என்ற தொழிலாளி தன் கம்யூனிச சித்தாந்தத்தின் மேல் அளவற்ற மதிப்பும் அதுவே உலகை நிலை நிறுத்தவல்ல சக்தி எனவும் நமக்கு சொல்லாமல் சொல்கிறது இந்த நாவல்.

ஆரம்பத்தில் தொழிலாளிகளின் கூட்டுப் பண்ணைகள் எவ்வாறு நடைபெற்றன. அது எத்தகைய இன்னல்களை சந்தித்தன எவ்வளவு தூரம் தங்கள் உயிரை கொடுத்து வேலை செய்தார்கள். அதன் பலனை கூட அவர்களால் அனுபவிக்க முடியாமல் போன சோகம், மேலும் கட்சிகள் மேல் அவர்களுக்கு இருந்த மதிப்பு, வர்க்க பேதமற்ற அரசிலும் அதிகாரிகள் என்ற பெயரில் ஒரு மேலாண்மை கொண்ட பிரிவு உருவான விதம், அது நாளடைவில் சரி செய்யப்பட்ட தகவல் எல்லாம் இந்த நாவலை படிக்கும் போது நமக்கு புலனாகிறது. அந்த கஷ்டங்கள் தான் மக்களை கம்யூனிச சித்தாந்தத்தை பயந்து நோக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய சொகுசு வாழ்க்கைக்காக போட்டு உடைத்த உண்மையும் நமக்கு புலனாகிறது. 

எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ்  பற்றி மேலும் நீங்கள் அறிந்து கொள்ள விக்கிப்பீடியாவின் கீழ்கண்ட வலைதளத்திற்கு சென்று பாருங்கள்.

http://en.wikipedia.org/wiki/Chinghiz_Aitmatov