Posts Tagged ‘ஹிந்தி’

சமீபத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி? படத்தை பார்த்து நண்பர்களிடம் அந்த படத்தை பற்றி விவாதித்து கொண்டிருக்கையில் ஒரு நண்பர் சொன்னார்  இதே  GENEREல  ஹிந்தியில் PYAR KA PANCHNAMAனு படம்  வந்திருக்கு பார்த்தீங்கலான்னு கேட்க உடனே பார்க்கணும்னு பிரியப்பட்டு பார்த்தேன்.

இந்த படத்தின் தலைப்பே வித்தியாசமானது பஞ்சநாமா-ங்கற வார்த்தைக்கு    ஹிந்தியில் POST MORTEM REPORTனு அர்த்தமாம், PYAR KA PUNCHNAMA னா POST MORTEM OF LOVE, வித்யசமா தானே இருக்கு… காதலில் சொதப்புவது எப்படி டாக்குமெண்டரி ஸ்டைல்ல எடுக்கப்பட்ட ஒரு காதல் கதை என்பது படம் பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும், இந்தப்படம் ரொமாண்டிக் காமெடி வகை.  IT நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று இளம் வாலிபர்கள் காதல் வலையில் சிக்குண்டு எப்படி தத்தளிக்கிறார்கள் என்பதே கதை. 

ரஜத், நிஷாந்த(லிக்கியுட்), சௌத்ரி என்ற மூன்று நண்பர்கள் ஒரே வீட்டில் தங்கி பணிபுரிகிறார்கள். ரஜத், நேஹா என்ற பெண்ணுடன் காதல் கொள்கிறான், அவளுடன் LIVING TOGETHER முறையில் குடும்பம் நடத்துகிறான், நாள் போகப்போக அந்த உறவுமுறை ரஜத்தை துன்பத்தில் தள்ளுகிறது. நிஷாந்த தன்னுடன் பணிபுரியும் சாரு என்ற பெண்ணுடன் காதல் கொள்கிறான், அவளுக்காக அவளுடைய பணியை இவனே பலமுறை செய்து தருகிறான், ஏறக்குறைய அவளுடைய காலிலேயே விழுந்து கிடக்கிறான் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவளுக்கு ஏற்கனவே ஒரு BOY FREIND இருப்பது தெரிந்தும் இவனுடைய காதலை அவள் ஏற்காத பிறகும் நட்பு என்ற போர்வையில் அவளை காதல் கொள்கிறான், இந்த விஷயம் தெரிந்தும் அவள் இவனை பயன்படுத்திக் கொள்கிறாள். அவளுடைய வேலைகளை செய்வது, இரவில் துணையாக வீடு வரை செல்வது, அவளுக்கு BEAUTY PARLOUR செலவு உட்பட இவனே செய்கிறான். சௌத்ரி, ரியா என்ற பெண்ணை காதல் கொள்கிறான் அவள் ஏற்கனவே LIVING TOGETHER RELATIONSHIPல் ஒருவனோடு 5 வருடம் இருந்தவள் அவர்களுக்குள் உள்ள இடைவெளியில் இவன்பால் மையல் கொள்கிறாள். சௌத்ரி, ரியா பழைய காதலனை மறந்துவிட்டாள் என்று நினைத்து அவளுடன் பழகுகிறான் ஆனால் நாட்பட நாட்பட ரியா இன்னும் பழைய காதலனோடு நாட்களை கழிப்பது தெரிய வருகிறது. இப்படி மூன்று பேர்களும் காதலின் பிடியில் சிக்கி பின் போதும்டா சாமின்னு அந்த பெண்களை விட்டு வருவதே மீதி கதை.

இந்தப் படத்தை பொறுத்த வரையில் காதல் என்பதே ஆண்களை கையகப்படுத்த பெண்கள் கையாளும் ஒரு ஆயுதமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள(செக்ஸ் உட்பட), தனக்கு துணையாய் ஒரு செக்யூரிட்டி வேலை பார்க்க, இப்படி நீண்டு கொண்டே போகிறது லிஸ்ட்.

படத்தின் ஒரு காட்சியில் மூன்று வாலிபர்களில் ஒருவன், இந்த பெண்கள் ஒரு காதல் தோல்விக்குப் பின் வெகு எளிதாக இன்னொருவனை கவிழ்த்து விடுகிறார்கள். நம்ம பசங்களுக்குள்ள ஒரு ஒற்றுமையே இல்லை, இப்படி பட்ட பெண்களை 2 வருடங்களுக்கு எந்த ஆணும் காதலிக்க கூடாது என்ற சட்டம் வரவேண்டும் என்ற வசனம் நகைச்சுவையாக இருந்தாலும் ஆண்களின் இயலாமையை நினைத்தால் கஷ்டமாகத் தான் இருக்கிறது. (பொதுவாக எதிர்பாலர் மேல் ஒரு மோகம் எல்லோருக்கும் இருக்கும், இது பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே அதிகமாக இருக்கிறது; காரணம், பெண்கள் சுலபமாக தனக்கு துணையை தேர்ந்து எடுக்க முடிகிறது. ஆனால் ஆண்கள் நிறைய போராட்டத்திற்கு பின்னே ஒரு பெண்ணின் மனதில் இடம் பெற முடிகிறது).

பெண்களை காதலிக்க ஆரம்பிக்கும் போது அவளுக்காக காத்திருப்பதும், ஏவல் பணி புரிவதும் சுகமாக இருக்க… நாள் போகப்போக காதலியை தவிர்ப்பதும் அவளை விட்டு தனியாக பிக்னிக் போக நினைத்து பின் அவரவர் தத்தம் காதலிகளோடு  கோவா சென்று அங்கே அவதிப்படுவதும் நல்ல காட்சி அமைப்பு. நல்ல திரைக்கதை, அருமையான கதாபாத்திரங்கள், விழுந்து விழுந்து சிரிப்பீர்கள் சில காட்சிகளில், பாடல்களும் நன்றாகவே உள்ளது.

மொத்தத்தில் இந்தக் கதை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது காரணம் பெண்கள் ஆண்களை அவ்வளவு துன்புறுத்துவது போல கதை உள்ளது. அரக்க குணம் கொண்டவள் பெண் என்பது போல சித்தரிக்கப்பட்டிருகிறது ஆண்களுக்கும் இந்தப் படம் பிடிக்க வாய்ப்பு இல்லை காரணம் இந்தப் படத்தில் வரும் நாயகர்கள் பெண்களின் காலடியில் விழுந்து கிடப்பது போலவே படம் முழுதும் உள்ளது. ஆண்மைத்தனம் என்று சொல்லக்கூடிய ஒரு விசயமும் இல்லை படத்தில்.

படத்தில் எனக்கு பிடித்த மிக முக்கியமான காட்சி உங்கள் பார்வைக்கு

இன்றைய சினிமாவில் கவர்ச்சி அதிகம் வன்முறை அதிகம் என்றெல்லாம் சமூக நல ஆர்வலர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை புலம்புவதை நாம் பார்த்திருக்கிறோம். முதன் முதலில் நம் நாட்டில் இந்த கவர்ச்சி அல்லது ஆபாசமான உடையனிந்தது யார் தெரியுமா? அது தான் இன்றைய ஹிந்தி திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சாயப் அலி கான் பட்டோடியின் அம்மா சர்மிலா தாகூர்.

போன தலைமுறை மக்களுக்கு மறக்கமுடியாத ஹிந்தி படங்களான பாபி, குருபானி போன்ற பட வரிசைகளில் ஆராதனாவை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சென்னையில் உள்ள ஆனந்த் திரை அரங்கில் வெள்ளிவிழா கண்ட படம். ஹிந்தி அதிகம் பரிட்சயம் இல்லாத அந்த காலகட்டத்திலேயே பெரும் வரவேற்ப்பை பெற்ற அந்தபடத்தின் வரவேற்ப்புக்கு படத்தின் பாடல்கள், மற்றும் ராஜேஷ் கண்ணாவின் நடிப்பு அதை விட சர்மிலா தாகூரும் ஒரு முக்கிய காரணம் என்றால் யாரும் மறுக்கமாட்டார்கள். அவர் புகழின் உச்சியில் இருந்த கால கட்டம். இவர் தான் இந்திய நடிகைகளுக்கெல்லாம் கவர்ச்சியில் முன்னோடி. AN EVENING IN PARIS என்ற படத்தின் மூலம் முதன்முதலில் பிக்கினி என்று சொல்லப்படும் நீச்சல் உடையில் திரைப்படத்தில் தோன்றினார். இதனைத் தொடர்ந்து FILMFARE பத்திரிகைக்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்தார். படத்தின் கவர்ச்சியைக் காட்டிலும் பத்திரிகையில் வெளியான புகைப்படம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த புகைப்பட ஒளிப்பதிவின் போது, ஒருங்கிணைப்பாளர் சர்மிலா தாகூர் அரங்கில் நுழைந்த போது எங்கே உங்கள் புகைப்படத்திற்க்கான உடை என்று கேட்கும் போது தனது கைப்பையை காண்பித்தாராம்.

பல பேர் தங்களது தலையணைக்கு அடியில் வைத்து கொண்ட 1966ல் வெளியான FILMFARE ஆகஸ்ட் இதழின்   அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

தொலைபேசி பிடிக்காத, பயன்படுத்த பயப்படும் ஒரு நபரை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? அப்படி இருந்தால் அவன் எப்படி இருப்பான், அவன் நமது கார்த்திக் போல இருப்பான். கார்த்திக் ஒரு நல்ல படித்த பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்பவன். கார்திக்கோட பிரச்னை எல்லோருக்கும் பயப்படறது, யார் எது சொன்னாலும் மறுத்து பேசாம இருக்கறது, மனசுக்குள்ள வச்சு புழுங்கறது. அதனால அவனை எல்லோரும் ஏய்த்துக் கொண்டிருப்பதை அவனும் நன்கு அறிவான், அவனுடைய அலுவலகத்திலேயே ஒரு பெண் வேலை செய்கிறாள் அவளின் பால் இவனுக்கு ஒரு ஈர்ப்பு தினமும் அவளுக்கு மின்னஞ்சல் அனுப்ப நினைத்து முடிவில் அனுப்பாமல் விட்டு விடுவான்.

 இப்படி இருக்கும் தருவாயில் ஒருநாள் காலை 5 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது, பேசுபவர் நான் கார்த்திக் பேசுகிறேன் என்று சொல்ல கார்த்திக் பேச முடியாமல் உளற, நான் வேறு யாரும் இல்லை நீ தான் எனவும் சொல்ல கார்திக் உறைந்து போகிறான் பின்பு டெலிபோன் எக்ஸ்சேஞ் சென்று விசாரிக்கும் போது கார்திக்கு எந்த அழைப்பும் வரவேயில்லை என தெரிந்து இன்னும் அதிர்கிறான். மறுநாள் அதேபோல 5 மணிக்கு அழைப்பு வருகிறது தொலைபேசியில் இவனுக்கு சில யோசனைகள் சொல்லப்படுகிறது அதனால் இவனுக்கு அலுவலகத்தில் நல்ல பதவி, காதலி கிடைக்கிறாள். இதற்கிடையில் தன் காதலியிடம் தனக்கு வரும் தொலைபேசி அழைப்பை பற்றி சொல்ல அவள் கார்த்திக்கை மனநோய் நிபுணரிடம் சென்று பார்க்க சொல்கிறாள். தொலைபேசியில் பேசும் கார்திக் இதை கேட்டு அதிருப்தி அடைகிறான் ஏனெனில் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லகூடாது என்பது நிபந்தனை. அதனால் இவனை பழிவாங்க போவதாக சொல்கிறான். வேலை பறிபோகிறது, காதலி வெறுக்கிறாள், வங்கியில் உள்ள பணம் காணாமல் போகிறது. மனமுடைந்த கார்திக் ஏதோ ஒரு ரயிலில் ஏறி எங்கே என்று அவனுக்கே தெரியாத ஊரில் 2 வாரம் தங்குகிறான். எந்த தொலைபேசி அழைப்பையும் கொடுக்க கூடாது, தொலைக்காட்சி, செய்தித்தாள் எதுவும் வேண்டாம் என்று அறையிலேயே தனிமை சிறைக்குள் இருப்பது போல இருக்கிறான். சில மாதங்களுக்கு பிறகு கேரளாவில் ஒரு சிற்றூரில் எந்த பிரச்னையும் இல்லாமல் வேலை செய்து கொண்டு இருக்கிறான், சிறிது நாட்களுக்கு பிறகு அவனது மேலதிகாரி இவனை ஒரு தொலைபேசி வாங்கிக் கொள்ளுமாறு கட்டயப்படுத்த வந்தது மறுபடியும் தொந்தரவு.  மறுபடியும் தொலைபேசி அழைப்பு வருகிறது. உன்னை  விடமாட்டேன் என்று கர்ஜிக்கிறது தொலைபேசியில் கார்திக்கின் குரல்.

இதற்கிடையில் கார்திக்கின் காதலி அவனை தேடிக்கொண்டிருக்கிறாள், அவளை கார்திக்கின் மனநோய் மருத்துவர் தொடர்பு கொள்கிறார், மனநோய் நிபுணர் கார்திக் மனச்சிதைவால் துன்பப்படுகிறான் எனவும் அவனுக்கு வரும் தொலைபேசி அவனே அவனது ஆழ்மனதின் விழிப்பின் போது(அவனுக்கே தெரியாமல்) தொலைபேசியில் பதிவு செய்து அதை அவனே கேட்டுக்கொண்டிருக்கிறான். மேலும் அவனுக்கு இந்த  வியாதி சிறுவயது முதலே இருக்கிறது எனவும் இல்லாத ஒரு சகோதரனை கொன்றுவிட்டதாக அவனே எண்ணிக்கொண்டு துன்பப்படுகிறான் எனவும் கூற அவன் மேல் பரிதாபம் உண்டாகிறது கதாநாயகிக்கு. முடிவில் ஒரு நாள் கார்திக் ஒரு மின்னஞ்சலை தன் காதலிக்கு எழுதி விட்டு அன்று இரவு தூக்க மாத்திரைகளை விழுங்கி இரக்க இருக்கிறான், ஆனால் கதாநாயகி தக்க சமயத்தில் வந்து அவனை காப்பற்றி விடுகிறாள், அவனை குணப்படுத்தி அவனுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக கதை முடிகிறது.

விஜய் லால்வாணி இயக்கிய  இந்த ஹிந்தி திரைப்படம் இந்த வருடம் வெளியானது . கார்த்திக் காலிங் கார்த்திக். அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம், கதாநாயகன் பர்ஹான் அக்தர்  நடிப்பு பிரமாதம். கதாநாயகியாக  தீபிகா படுகோன் அழகு பதுமையாக வந்து போய் இருக்கிறார். உண்மையில் ஒரு மாறுபட்ட கோணத்தில் படம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, திரைக்கதையில் நல்ல தெளிவு, கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் நன்றாக அமைந்திருக்கலாம். ஆரம்பத்தில்  ஒரு super natural power படம் போல ஆரம்பித்து இறுதியில் யதார்த்தமாக படத்தை முடித்திருப்பது உண்மையில் படத்தில் நல்ல திருப்பம்.