Posts Tagged ‘film’

150 கோடியில் திரைப்படம் தயாரிக்கும் நிலையில் இருக்கும் இன்றைய தமிழ் திரையுலகம் முதன்முதலில் எங்கு ஆரம்பித்தது, யார் ஆரம்பித்து வைத்தது என்பதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த இடுகை  தமிழ் திரையுலகின் முதல் தயாரிப்பாளர் நடராஜ முதலியார் பற்றியது. திரைப்பட நடிகர் மோகன்ராமன் அவர்களின் FACEBOOK ல் இது பற்றிய ஸ்கேன் செய்யப்பட்ட பத்திரிகை செய்தியை சில நாட்களுக்கு முன் பார்த்தேன். பார்த்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நடராஜ முதலியார் பற்றிய பேட்டி இயக்குனர் ஸ்ரீதர் நடத்திய சித்ராலயா என்ற இதழில் 1970ம் ஆண்டு வெளியானது. 1936 ம் ஆண்டு நடராஜ முதலியார் பற்றிய ஒரு செய்தி அன்றைய மெயில் பத்திரிகையில் வெளியாகி இருந்ததாம், இந்த பழைய பத்திரிகை செய்தியை ஸ்ரீதர் பார்க்க நேர்ந்து அது பற்றிய செய்தியை சித்ராலயாவில் வெளியிட நடராஜ முதலியாரின் பேட்டி எடுத்து இருக்கிறார்கள்.

 

இவர் முதன்முதலில்  1916 ம் வருடம் கீசகவதம் என்ற படத்தை 35 நாட்களில் எடுத்திருக்கிறார். திரைப்பட துறைக்கு வருவதற்கு முன் இவர் மவுண்ட்ரோட்டில் மோட்டார் கார் வியாபாரம் செய்து கொண்டிருந்தார், பிறகு இதை சிம்சனிடம் விற்றுவிட்டதாக தகவல். கலையார்வம் மிகுந்த இவர் ஒளிப்பதிவின்  மேல் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார் அதனால் கர்சன் பிரபுவின் தர்பாரில் படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளரான ஸ்மித் என்பவறின் அறிமுகம் கிடைக்க அவர் மூலமாகவே கையால் ராட்டை போல சுழற்றி படம் பிடிக்கும்  காமிராவை இயக்கக் கற்றார்.  படமெடுக்க நன்கு கற்ற பிறகு படப்பிடிப்பு சாதனங்களை வாங்கினார், அந்நாளில் பிலிம் லண்டனில் இருந்தே வரும் பம்பாயில் கொடாக் நிறுவனத்தில் ஒரு நல்ல பதவியில் இருந்த கார்பெண்டர் என்பவர் மூலம் நடராஜ முதலியார் தனக்கு வேண்டிய பிலிம் சுருள்களை பெற்றதாக பேட்டியில் தெரிவிக்கிறார்.

 

இவர் தயாரித்த படங்களில் இவர் தான் இயக்குனர், ஒளிப்பதிவாளர். பிலிம் கழுவ ஒரு நபரையும், இவருக்கு உதவிக்காக  மற்றொருவரையும்  வேலையில் அமர்த்திக்கொண்டார். அக்காலத்தில் குளிர்சாதன வசதி இல்லாத காரணத்தினால்  லேபராட்ரியை பெங்களூரில் வைத்துகொண்டார். படப்பிடிப்பு சென்னை கீழ்பாக்கத்தில் நடக்குமாம்.  நாடகங்களில் நடிப்பவர்களை இவர் திரைபடத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். அப்படியும் நடிப்பதற்கு பெண்கள் வரமாட்டார்களாம், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கூட படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் இவருடைய திரௌபதி வஸ்த்ராபுராணம் என்ற படத்தில் நடிக்க ஒரு ஆங்கிலேயப் பெண்ணை திரௌபதியாக நடிக்க வைத்தாராம்.

 

திரௌபதி வஸ்த்ராபுராணம்,  கீசகவதம், லவகுசா, ருக்மணி சத்யபாமா, மார்கண்டேயா, காலிங்க மர்த்தனம் ஆகிய ஆறு படங்களை நடராஜ முதலியார் தயாரித்திருக்கிறார். படத்தை இங்கே வெளியிட்டதல்லாமல் வடநாட்டிற்க்கும் விநியோக உரிமை கொடுத்திருக்கிறார். 

பேட்டி எடுக்க சென்ற போது நடராஜ முதலியார் சென்னை அயனாவரத்தில் ஒரு சிறிய இடத்தில் வறுமையில் பிடியில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

ரஜினி, சிவாஜி படத்துல சொல்வாரே, பெயரைக் கேட்டாலே அதிருதுள்ளனு, அது போல சில்க் பெயரைக் கேட்டாலே இன்னும் சில பேருக்கு கிளுகிளுப்பா தான் இருக்கும். சரி அவர் காலமாகி 14 ஆண்டுகள் கழிந்து இப்போ என்ன அவரைப்பற்றி பேச்சு, காரணம் இருக்கே அவருடைய வாழ்கையை அடிப்படையாக வைத்து படம் தயாராகிக்கொண்டு இருக்கிறது தெரியுமா? முன்னாபாய்MBBS படத்துல நடிச்ச வித்யாபாலன் சில்க் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். 

வித்யாபாலன் இதுவரை நடித்த படங்களில் ஆபாசமாகவோ, கவர்ச்சிகரமாகவோ நடித்ததில்லை, இவரை எப்படி சில்க் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை, இதிலிருந்தே இந்தப் படம் சில்க்கின் கவர்சிகரமான பட வாழ்கையை தவிர்த்து அவரது வாழ்கையை மையப்படுத்தி இருக்கும் என்பது தெளிவாக புரிகிறது. இந்தப் படத்தை சின்னத்திரையில்  தொடர்களை தயாரித்து பெரும் புகழை அடைந்த பாலாஜி டெலிபிலிம்ஸின்   ஏக்தா கபூர் தயாரிக்கிறார்கள்.  இந்தியாவின் சின்னத்திரை வரலாற்றில் ஏக்தா கபூருக்கென்று ஒரு தனி இடம் உண்டு, ரசிகர்களை தொலைக்காட்சியின் முன் கட்டிப்போட்ட பல தொடர்களை இவர் தயாரித்து இருக்கின்றார்.

சரி இப்போ சில்க் பற்றி பார்ப்போம், சில்க் ஆந்த்ராவில் பிறந்தவர், இவருடைய இயற்பெயர் விஜயலக்ஷ்மி, நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். சினிமாவில் சேர வேண்டும் என்ற முனைப்பில் சென்னையை வந்து அடைந்தார். வண்டிசக்கரம்  என்ற படத்தில் முதன் முதலாக சில்க் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு  முன்பே அவருடைய பெயரை சுமிதா என்று மாற்றிக் கொண்டார். வண்டிசக்கரம் படத்திற்கு பின் சில்க்சுமிதா ஆனார். இந்தப் படத்திற்கு பின் அவருக்கு பல வாய்புகள் வந்து தென்னிந்திய திரை உலகில் கொடி கட்டி பறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்ற இவரது வாழ்கை ஹாலிவுட்டின்  மர்லின் மன்ரோவினை ஒத்து இருப்பதாக கூட சொல்வார்கள். இவர் நடித்த மூன்றாம் பிறை, அலைகள் ஓய்வதில்லை, மூன்று முகம், கைதி, லயனம் போன்ற படங்கள் இன்றளவும் பேசப்படும் படங்கள்.

ஆண்களை மட்டுமில்லாமல் பெண்களையும் கவர்ந்தவர் சில்க், இன்று எல்லா நடிகைகளும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள், அன்றைய கால கட்டத்தில் உள்ள நடிகைகள் 5 லிருந்து 10 வருடங்களுக்குள் தனது அழகை இழந்து விடுவார்கள், உடல் எடைபற்றிய போதிய அறிவு, உணவு பழக்கவழக்கம் உடலை எப்படி பாதிக்கும், உடற் பயிற்சி மூலம் உடலை எப்படி பாதுகாப்பது இப்படி பல விசயங்களில் சில்க் தென்னிந்திய நடிகைகளுக்கு ஒரு முன்னோடி. 

1996 இல் சில்க் தனது இல்லத்தில் இறந்து கிடந்த செய்தி சினிமா வட்டாரத்திலே பல அதிர்வுகளை  ஏற்படுத்தியது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது எனது கணினி வரைகலை படிப்பிற்காக பிரசாத் ஸ்டுடியோவிற்குள் அப்போது இருந்த வெக்டார் இன்ஸ்டிடுயிடில்  பயின்று கொண்டிருந்தேன், அந்த சமயம் சில்க்கின் இறப்புசெய்தி  கோடம்பாக்கத்தில் இண்டு இடுக்கில் எல்லாம் பேசப்பட்டது, அவருக்காக  அனுதாபப்படாத  ஆட்களே இல்லை. சில்க் சுமிதா பொருளாதார நெருக்கடியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கேள்விப்பட்டு சினிமா ரசிகர்கள் எல்லோருமே தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டனர்.

இந்தப் படத்தில் ரசிகர்கள் விரும்புகிற கவர்ச்சியோடோ, ஆபாசமாகவோ  நடிக்கமாட்டேன்  என்று ஏற்கனவே வித்யா பாலன் அறிவித்திருக்கும் நிலையில் இந்த படம் இப்போதே பலரின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. உங்களைப் போல் நானும் இந்தப் படத்தின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

 

டாய் ஸ்டோரி 1995 இல் வெளியான முதல் முப்பரிமான(3D) உயிரோவிய திரைப்படம். இதனை டிஸ்னி/ பிக்ஸார் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. ஜான் லாச்சட்டர் (john lasseter) என்பவரால் இயக்கப்பட்டது. இந்தப்படத்தின் பெயரை வைத்தே புரிந்துகொண்டு இருப்பீர்கள் இது பொம்மைகளை  மையமாக வைத்து பின்னப்பட்ட ஒரு கதை. மனிதர்கள் இல்லாத சமயங்களில் பொம்மைகள் உயிர்பெற்று செய்யும் சாகசங்களை சொல்லும் கதை இது. பொம்மை கூட்டத்தின் தலைவரான  கௌ பாய் கதாபாத்திரம் woody க்கு Tom Hanks குரல் கொடுத்திருக்கிறார். ஆன்டி(andy) என்ற சிறுவனின் விளையாட்டு பொம்மைகளான woody யும் அதன் சகாக்களும் அவனின் பிறந்தநாள் பரிசான புது பொம்மை விண்வெளி வீரன்  பஸ்ஸை வரவேற்கிறார்கள். woody க்கு பஸ்சின் வருகை உண்மையில் பிடிக்கவில்லை இதனால் தனது முக்கியத்துவம் குறைந்துவிடும் என கருதுகிறான். பஸ்சுக்கு தான் ஒரு பொம்மை என்ற உணர்வே இல்லாமல் உண்மையில் தன்னை  ஒரு விண்வெளி வீரனாகவே நினைத்து woody தனக்கு எதிரானவன் என முதலில் கருதுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் woody யால் பஸ் வீட்டிலிருந்து வெளியேற வேண்டியதாகிறது. மற்ற பொம்மைகள் woody யை தவறாக நினைக்க, தன்மேல் உள்ள கறையை போக்க பஸ்ஸை திரும்ப வீட்டுக்கு அழைத்து வர  woody செய்யும் சாகசங்களே கதையின் மிச்சம்.

 முழுக்க முழுக்க ஒரு குழந்தைகள் திரைப்படமாக எடுத்த இப்படம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திரைப்படம், 1995க்கு முன் வரை உயிரோவிய துறை மூலம் வெளிவந்த படங்கள் 2 பரிமாணங்கள் அதாவது கார்ட்டூன் படங்களாகவே இருந்தன. டாய் ஸ்டோரி தான் முதல் முப்பரிமான படமாக வெளியானது. அதாவது முழுக்க முழுக்க முப்பரிமான கதாபாத்திரங்கள் கொண்டே எடுக்கப்பட்ட படம் (உயிர் உள்ள எந்த ஜீவனும் நடிக்காத படம்), 15 வருடங்கள் கழித்து இன்று பார்க்கும் போது முப்பரிமான உயிரோவிய திரைப்படங்கள் பெரிய நட்சத்திர நடிகர்கள் நடித்து வெளியான படங்களுக்கும் மேலாக வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் வந்த டாய் ஸ்டோரியின் மூன்றாவது பாகம் இதுவரை அதிக வசூலான படங்களில் 9 வது இடத்தை பிடித்திருக்கிறது. ஷெரேக்(shrek) படத்தின் இரண்டாம் பாகம் 14 வது இடத்திலும் ஐஸ் ஏஜ் (ice age: dawn of the dinasaur)ன் மூன்றாவது பாகம் 18 வது இடத்திலும், பைன்டிங் நிமோ(finding nemo) 21 வது இடத்திலும் இருப்பதை பார்த்தாலே தெரியும் முப்பரிமான திரைப்படங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு. 

டாய் ஸ்டோரி திரைப்படம் 30 மில்லியன் டாலர் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம், 20 மில்லியன் டாலர் விளம்பரத்திற்கு தனியாக பட்ஜெட், மொத்தம் 110 உயிரோவிய கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. முதலில் 27 உயிரோவிய கலைஞர்களை கொண்டு 400 வெவ்வேறான முப்பரிமான கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன, அதிலிருந்து படத்திற்கு  தேவையான கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. முப்பரிமான கதாப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்ட பிறகு இயக்கங்கள் (motion control ) கொடுக்கப்பட்டன, அதாவது நடக்க, பேச, குதிக்க, இதுபோன்ற இயக்கங்களை தயார் செய்தனர். woody கதாபாத்திரத்திற்கு  723 இயக்கங்களை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. அதன் முகத்திற்கு மட்டுமே 212 ம் வாய்க்கு 58 தனித்தனி இயக்கங்களும் தயார் செய்தனர். குரல் கொடுப்பவரின்  குறளுக்கேற்ப உதட்டு அசைவுக்கான இயக்கங்களை கொடுக்கும் போது, ஒரு வரைகலை கலைஞர் 8 செகண்டுக்கான பிரேம்(frame) முடிக்க ஒரு வாரம் எடுத்துக்கொண்டதாக அறியப்படுகிறது. கதாபாத்திரங்களும் அதற்கு தேவையான இயக்கங்களும் தயாரான பிறகு ஸ்டோரி போர்டு தயாரிக்கப்பட்டு வண்ணம் கொடுக்கப்பட்டு, ஒளி, ஸ்பெஷல் எபக்ட்ஸ் எல்லாம் சேர்த்து படம் ஒரு சராசரி நடிகர்களை வைத்து எடுத்தால் எப்படி எடுக்க வேண்டுமோ அப்படி முடிக்கப்பட்டது.

இந்த படத்திற்கு பின் 3D தொழில் நுட்பத்திற்கு இருக்கும் வரவேற்ப்பை  பார்த்த பிறகு, கணினிகளில் வரைகலைக்கு ஏற்றவாறு பல கிராபிகல் சிப்புகள் வெளிவந்தன. மேலும் வீடியோ  விளையாட்டு தொழிலில் 3D தொழில் நுட்பம் செல்வாக்கு பெற்றது. இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் கணினிகளிலும் நல்ல தரமான கிராபிகல் ஆக்சிலேட்டர் கார்ட் வசதியோடு வர ஆரம்பித்து விட்டது. டிஸ்னியின் புகழ் பெற்ற கதா பாத்திரங்களின் வரிசையில் woody யும் பஸ்சும் இனைந்து  விட்டன, டிஸ்னி லேன்ட்டில் இந்த 2 கதாபாத்திரங்களை கொண்ட பல நிகழ்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

மொத்தத்தில் டாய் ஸ்டோரி, திரைப்படங்களில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு வரலாற்று நிகழ்வு.    

(உலகின் அதிக வசூலான படங்களின் பட்டியலை இந்தக்கட்டுரையின் பின் இணைப்பாக கிழ் கண்ட வலைத்தளத்தில் காணலாம்)

http://en.wikipedia.org/wiki/List_of_highest-grossing_films