Posts Tagged ‘goldenlotus’

ரபிந்திரநாத் தாகூர்  எழுதிய Nastanirh ( The broken Nest ) என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.  இது 1964 ம் ஆண்டு சத்யஜித்ரே அவர்களால் இயக்கப்பட்டது. 15 வது பெர்லின் திரைப்பட விழாவில்  இந்த படத்திற்கு  வெள்ளி கரடி  பரிசு 2 வது முறையாக சத்யஜித்ரே அவர்களுக்கு கிடைத்தது. 1965 ஆம் ஆண்டு சிறந்த படத்துக்கான   மத்திய அரசின் தங்கத் தாமரை விருது இந்த படத்திற்கு கிடைத்தது.

ஆங்கிலேயர் ஆண்ட இந்தியாவில்(கொல்கத்தா) கதைக்களம், சாருலதா ஒரு படித்த அறிவுஜீவியான பூபதி என்பவரின் மனைவி. சாரு பெரும்பாலும் தனிமையிலேயே தன் வாழ்கையை கழித்துக் கொண்டிருந்தாள் காரணம் அவளின் கணவன் தன் மொத்த நேரத்தையும்  தி செண்டிநெல் என்ற ஒரு ஆங்கில பத்திரிகையை நடத்துவதிலேயே செலவிட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது மைத்துனரும் மைத்துனரது  மனைவியும் அவர் இல்லத்திற்கு விருந்தாளியாக வருகிறார்கள். இவர்களுடன் பூபதியின் சகோதரனும்(cousin  brother) வருகிறார். பூபதி தனது மனைவியின் தனிமையை  போக்க தனது சகோதரனை சாருவின் எழுத்தாற்றலை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கிறார். இதன் மூலம் சாருவும் பூபதியின் சகோதரரும்  சற்று நெருக்கம்  ஆகிறார்கள். சாருவிற்கு நாள் ஆக ஆக அவர் மேல் ஈர்ப்பு அதிகம் ஆகிறது. இந்நிலையில் விருந்தாளியாக வந்த பூபதியின் மைத்துனர் அவருடைய பணத்தை களவாடிக் கொண்டு போய்விடுகிறார். தன் நம்பிக்கையை இப்படி வீணாக்கிவிட்டு போய்விட்டானே  என் மைத்துனன் என்று தனது சகோதரனுடன் புலம்பும்போது அதை தன் நிலையுடன் (சாருவிற்கு தன் மேல் உள்ள  ஈர்ப்பை)  ஒப்பிட்டு பார்த்து வீட்டை விட்டு வெளியேறுகிறார் பூபதியின் சகோதரன். சில நாட்கள் கழித்து சகோதரனிடம் இருந்து வந்த கடிதத்தை சாரு படித்து விட்டு, அழுது புலம்பும் போது அதை பார்த்து பூபதி அதிர்ந்து போகிறார்…. இப்படியாக படம் முடிகிறது. 

இந்த படத்தில் கதாநாயகி சாருலதா ஊஞ்சலில் ஆடிக்கொண்டே ரபிந்திர நாத் தாகூரின்  பாடலை பாடும் காட்சி சினிமா ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட காட்சி. தான் எடுத்த படங்களிலேயே மிக குறைவாக தவறு செய்தது இந்த படத்தில் தான் என சத்யஜித் ரே கூறுவார், மேலும் இந்தபடத்தை மறுபடியும் எடுக்க சொன்னால் அதை இப்போதிருப்பதை போலவே எடுப்பேன் எனவும் கூறுவார்.