Posts Tagged ‘japan’

 
ஜப்பானிய சமுதாயம், வீரர்கள் எனப்படும் சாமுராய், விவசாயிகள், கைத்தொழில் செய்பவர்கள், வணிகர்கள், சுத்தமே இல்லாதவர்கள் என சொல்லப்படும் எதா(ETA ) அல்லது புராகுமின், மனிதரே இல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டிருந்தது. இதில் எதா என்பவர்களை புராகுமின், கெதோ மக்கள், சோரி, புதுமகன், தள்ளிவைக்கப்படவர்கள் என்றும் கூறுகின்றனர். இவர்கள் செய்யும் தொழில் மாமிசம் விற்பது, விலங்குகளின் தோல்களை பிரித்து விற்பனை செய்வது, வைக்கோலைக்  கொண்டு காலணிகள் செய்வது. இவர்கள் தங்கள் பிறப்பை மறைப்பதோ, இடம் விட்டு இடம் போய் மறைந்து இருப்பது குற்றமாக கருதப்பட்டது.  இந்த நாவல் ஒரு எதா வகுப்பை சார்ந்தவன், தன்னுடைய பிறப்பால் தான் படும் துன்பத்தையும், சமூகம் எதா வகுப்பு மக்களை எப்படி நடத்தினார்கள் என்பதையும் விளக்கமாக எடுத்தியம்புகிறது.
 
THE BROKEN COMMANDMENT என்ற இந்த ஜப்பானிய நாவல் தோசான் ஷிமாசகி என்பவரால்  படைக்கப்பட்டது, தமிழில் நான் தலித் இல்லை என்ற  தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் தீண்டாமை போன்ற குற்றங்களை வெகுவாக நாம் பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம், மேலும் இங்கு சிலர் தீண்டாமையின் கோரத்தில் இருந்து விடுபடும் பொருட்டு புத்த மதத்தை ஏற்றுக் கொண்டதாக கூட அறிகிறோம். ஆனால் பௌத்தத்தை மதமாக கொண்ட ஜப்பானில் இந்த தீண்டாமை கொடுமை எந்த அளவிற்கு வேருன்றி இருந்தது என்பதற்கு இந்த நாவல் ஒரு சாட்சி.
 
உறவுகளை விட்டு விலகி மலைப்பகுதியில் வாழும் தகப்பன், சித்தப்பா, தங்களின் அடுத்த தலைமுறையாவது எதா என்று வழங்கப்படக்கூடாது என்ற ஆவலில் இறக்கும் தருவாயில் கூட தன் மகனை எதா பிரிவினன் என்று எங்கேயும் சொல்லிவிடாதே என்று கட்டளையிட்டு போகிறார். கதையின் நாயகன் செகாவா உஷிமாத்ஷோ, ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சாதூர்யமாக ஆசிரியப்பயிற்சி பள்ளியிலும் தற்போது வேலை செய்யும் பள்ளியிலும் தனது இனத்தை மறைத்து வாழ்கிறார், காரணம் தனது தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி. ஜப்பானிய சமூகத்தில் எதா பிரிவினன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் அவன் எதா பிறப்பினனாக இருந்தால் அவனை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். இந்நிலையில் அவனின் பிறப்பு பற்றி செய்தி தெரிந்தால் அவனது வேலையை இழக்க நேரிடும், அவன் மனதார விரும்பும் பெண்ணே கூட அவனை

விட்டுப் பிரியலாம், வாடகைக்கு இருக்கும் இடத்தில் இருந்து துரத்தப்படுவான். இவை எல்லாவற்றையும் மனதில் வைத்து புழுங்கி கொண்டு வாழ்கிறான், இந்த நிலையில் அவனுக்கு ஒரே துணை அவனுடைய மானசீக குரு இனாகோ ரெந்தாரோவின் எழுத்துக்கள் தான்.
 
செகாவின் தந்தை இறந்த நிலையில் அவரை காண ஊருக்கு செல்லும் போது ரெந்தாராவை ரயிலில் சந்திக்கிறார், அவருடன் மனம்விட்டு பேசுகிறார், அவருடன் ஜப்பானிய டயட் சபைக்கு தேர்தலில் போட்டியிடயிருக்கும்  அவரது வக்கீல் நண்பரையும் சந்திக்கிறார், ரெந்தாரோ தான் எதா என்று வெளிப்படையாக பேசுவதும், எழுதுவதும் செகாவிற்க்கு ஒரு உந்துதலையும், கிளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது அவரிடம் தானும் ஒரு எதா என்று சொல்ல பல முறை எண்ணி சொல்ல முடியாமல் தவிக்கிறான். சில நாட்களுக்கு பிறகு அவர் தேர்தல் கூட்டத்தில் பங்கேற்ற்று விட்டு வரும் போது கொலை செய்யப்படுகிறார். தேர்தலில் வக்கீலுக்கு எதிராக இருப்பவர் இந்த கொலையை செய்கிறார், அவர் ஏற்கனவே செகாவா ஒரு எதா என்பதை பலரிடம் சொல்லிவிடுகிறார், காரணம் அவர் ஒரு பணக்கார எதா பெண்ணை மனம் முடித்துகொள்கிறார் அந்த பெண் செகாவாவிற்கு தெரிந்தவள் என்பதால் இந்த விசயத்தை செகாவா மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி விடுவான் என்ற பயத்தில் இவர் முந்திக் கொள்கிறார். மனமுடைந்து போன செகாவா பள்ளியில் சென்று தான் ஒரு எதா என்று வகுப்பறையில்  சொல்லி, தனது ராஜினாமாவை கொடுத்துவிட்டு, தன் காதலியின் வீட்டுக்கு சென்று உண்மையை கூறுகிறார்.  
 
இந்த நாவலைப் பொறுத்தவரை, ஜப்பானின் சமூகச்சூழலை அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கிறது.  வதந்தி, வம்புபேச்சு ஒரு மனிதனை எவ்வளவு மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் என்பதையும் விளக்குகிறது. நம் பெற்றோர்களை நாம் தேர்ந்தெடுக்கவில்லை, அதனால் நாம் நம் இனத்தையும் தேர்ந்தெடுப்பதில்லை, அப்படியிருக்க நாம் பிறப்பால் உதாசினப்படுத்தப்படுவது, ஒதுக்கி வைக்கப்படுவது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை இந்நாவல் நன்கு விளக்குகிறது. 1906ல் வெளியிடப்பட்ட இந்த படைப்பு  ஆசிரியர்க்கு முதல் நாவல் என்றால் யாராலும் நம்ப முடியாது… அற்புதமான இந்த கலைப்படைப்பை உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தவறாமல் படியுங்கள்.   
 
இன்றிலிருந்து 65 ஆண்டுகளுக்கு முன் 1945 இல்  இதே நாளில் நாகசாகியில் குண்டு மனிதனால் (fat man) பல்லாயிரக்கணக்கான மக்கள் துடி துடித்து இறந்த நாள்.  யார் இந்த குண்டு மனிதன்? இது அமெரிக்கா நாகசாகியின் மீது போட்ட அணு குண்டின் பெயர். ஜப்பான்  நாட்டிலுள்ள   ஹிரோஷிமா- நாகசாகி நகரங்கள் மீது  1945  ஆம் ஆண்டு அமெரிக்கா  அணுகுண்டுகளை விமானம் மூலம் போட்டது. ஹிரோஷிமா மீது 1945  ஆகஸ்ட் 6 ஆம் நாள் வீசிய அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் சின்னப்பையன் (LITTLE BOY) என்பதாகும். மூன்று நாட்கள் கழித்து அதாவது ஆகஸ்ட் 9  ஆகிய இந்நாளில்   நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்கு குண்டு மனிதன் (FAT MAN) என்று பெயர் சூட்டினர். இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.

சுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். ‘இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்’ என்று ஆய்வறிக்கை கூறியது.

அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப்போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. நெஞ்சுபதறும் இப்படுபாதகப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது.

அணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான் அமெரிக்கா இச்செயலைச் செய்தது. அமெரிக்காவுக்கு அணுகுண்டைப் போட எந்தத் தேவையும் அப்போது இருக்கவில்லை” என்று ஜப்பான் தன் நிலையை முன்வத்தது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15  ஆம் தேதி ஜப்பான் சரணடைவதாக அறிவித்து  செப்டம்பர் 2  ஆம் தேதி சரணடைவுப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்தது.

உயிர்நீத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக இந்த இடுகையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

நன்றி: விக்கிபீடியா

உலகின் இணையம் வேகமாக இயங்கும் நாடு எது தெரியுமா?  தென்கொரியா.
சராசரியாக உலகின் இனைய வேகம் 1 .7 Mbps . சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றில் தென் கொரியாவில் உள்ள மாசன் என்ற நகரம் 12 Mbps வேகத்திற்கு இணையம் இயங்கும் நகரம் என்று தெரிய வந்துள்ளது. அதற்கடுத்து ஹாங்காங் 9  Mbps ஜப்பான்  7 .8 Mbps வேகத்துடன் முறையே இரண்டாவது மூன்றாவது இடத்தில உள்ளது. முதல் 10 இடங்களை பிடித்த நாடுகளின் வரிசை பட்டியலை கிழே  காணலாம்.
 01  தென் கொரியா 12 Mbps
02  ஹாங்காங் 9  Mbps
03  ஜப்பான் 7 .8  Mbps
04  ரோமானியா 6.3  Mbps
05  லத்வியா 6.3 Mbps
06  சுவீடன் 6.1  Mbps
07  நெதெர்லாந்து 5.9  Mbps
08  செக் ரிபப்ளிக் 5.4  Mbps  
09  டென்மார்க் 5.3  Mbps
10  சுவிட்சர்லாந்து 5.2  Mbps
இங்க 1 Mbps இணைப்பே தகராறா இருக்குது, என்றைக்கு நமக்கு மாசன் நகரத்து மக்கள் போல இணைப்பு கிடைக்குமோ? 

சமிபத்தில் நான் படித்த இந்த நூல் ஒரு கம்யூநிச  காம்ரேடின் வரலாறு. 1890 ல் பிரெஞ்சு ஆக்கிரமிப்பில் இருந்த வியட்நாமில்  பிறந்த இவரின் இயற்ப்பெயர் நிகுயன். இளமையில் அவர் எவ்வளவு சிறந்த பண்புகளோடும் தேசபக்தி கொண்டவராகவும் இருந்தார் என்பதை நூல் நன்கு விளக்குகிறது, ஒரு சமையல் காரனாக அமெரிக்காவுக்கு செல்லும் கப்பலில் வேலையாளாக சேர்கிறார். பின் இங்கிலாந்து செல்கிறார் அங்கு சிலகாலம் பனிபுரிகிறார் அங்கிருந்து தங்கள் நாட்டை அடிமையாக்கி வைத்துள்ள பிரெஞ்சு தேசத்திற்கே வருகிறார். கம்யூநிசத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் ரஷ்யாவிற்கு பயணமாகிறார், ரஷ்ய கம்யூநிச அரசில் பணியமர்கிறார், பின்பு தாய்நாடு வருகிறார், அதற்குள் இவர் தேடும் குற்றவாளியாக இருப்பதால் பல சிறை செல்ல வேண்டியதாகிறது. சீனாவில் சில காலம் சிறையில் இருக்கிறார் அத்தருணத்தில் இவர் இறந்துவிட்டதாகவே நினைத்தனர். ஆனால்  பல கண்டங்களில் இருந்து தப்பி தாயகம் வருகிறார், பிரெஞ்சு ஆக்ரமிப்பு போய் ஜப்பானிய ஆக்ரமிப்பு, சீனாவின் மேலாண்மை இப்படி பல இடையூறுகளுக்கு மத்தியில் சுதந்திர வியட்நாமை அறிவிக்கிறார், குறிகிய காலத்தில் அதுவும் முடிவுக்கு  வருகிறது. மறுபடியும் பிரெஞ்சு படைகள், பின் அமெரிக்காவின் மேலாதிக்கம் தேசம்  இரண்டாக துண்டாடப்படுகிறது. வடக்கு தெற்காக பிரிகிறது அமெரிக்காவின் அட்டுழியங்கள் இவ்வளவையும் தாண்டி தேசத்திற்கு விடுதலை வாங்கி தருகிறார் ஹோ சி மின்.

இவரைப்பற்றி  நிறைய கேள்விபட்டு இருக்கிறேன் முதல் முறையாக அவரின் வரலாறை படிக்கும் போது, அந்த காலகட்டத்தில் காலனிய ஆட்சிமுறை எப்படி இருந்தது.  மக்கள் எவ்வளவு வேதனையை அனுபவித்து இருக்கிறார்கள் என்பதையும் இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த பல விஷயங்கள் இதில் சொல்லப்பட்டு இருக்கிறது.    ரஷ்ய கம்யூநிச ஆட்சினை பற்றிய விரிவான விளக்கங்களும் அது மனித குலத்திற்கு எவ்வளவு நன்மை பயப்பனவாக இருந்தது என்பதையும் சுரண்டலற்ற சமுகம் எப்படி அமையும் என்பதையும். புரட்சி என்றால் என்ன என்பதையும் நூல் நன்கு விளக்குகிறது. கம்யூநிச வழி போரட்டங்களையும், கொரில்லா போர் குறித்த தகவல்களையும் இந்த நூல் நமக்குத் தருகிறது.

நூலை படிக்கும் போது வியட் நாம் எவ்வளவு சிறிய நாடு அதில் எப்படி புரட்சி விதைகள் தூவப்பட்டன எப்படி போராடினார்கள் ஏன் நம் நாட்டில் அது போல போராட்டங்கள் பெரிதாக நடைபெறவில்லை,  விந்தையாக இருக்கிறது?. இயற்கையிலையே நாம் அடிமையாய்  இருப்பதை சுகமாக நினைகிறோமோ என்ற சந்தேகமும் எழுகிறது. போராடி வாங்காத சுதந்திரத்தின் மேன்மை நமக்கு தெரியாமல் தான் இருக்கிறது. அஹிம்சை ஒரு நல்ல விசயமாக பட்டாலும் நமக்கு போராட்ட குணத்தை அது கொடுக்கவில்லையே, அடங்கிப் போவது எப்படி என்று தானே கற்றுக்கொடுத்திருகிறது.

N . ராமகிருஷ்ணன் என்ற மார்க்சிய கம்யூநிசவாதியால் எழுதப்பட்ட இந்த நூல் கிழக்கு பதிப்பகத்தால் 2007 ல் வெளியிடப்பட்டது. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் இந்த நூலை வாங்கி படியுங்கள், உண்மையில் நல்லதொரு படைப்பு வெளியீட்டார்களுக்கு நன்றி.

 
உலகின் முதல் தர  ஜனநாயக நாடு  டென்மார்க், சமிபத்தில் நான் கேள்விப்பட்ட ஒரு துணுக்கு செய்தி இது. இது உண்மையா? பொய்யா? உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தரம் என்ன? இப்படி கேள்வி மேல் கேள்வி எழவே வலைத்தளத்தில் தேடி WORLDAUDIT.ORG என்ற வலைதளத்தின் இந்த புள்ளிவிவரங்களை கண்டறிந்தேன். உண்மையில் வியப்பாக தான் இருந்தது.
 
ஜனநாயக தரத்தில் டென்மார்க் முதலிடத்தில் இருந்தது
 
பத்திரிகை சுதந்தரத்தில் பின்லாந்த் முதலிடம்.
 
லஞ்சமில்லா நாடுகளில் நியூஷிலாந்து முதலிடம்.
 
ஜனநாயக தரவரிசையில் முதல் 20 இடங்களில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளே இருந்தன. ஆசியாவில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் நிலை என்ன தெரியுமா? ஜனநாயக தரவரிசையில் 47 வது இடத்திலும் பத்திரிகை சுதந்தரத்தில் 45 வது இடத்திலும் லஞ்ச லாவண்யங்களை கட்டுபடுத்துவதில் 64 வது இடத்திலும் இருக்கிறது.
கொஞ்ச நேரத்திற்கு பின் தான் உறைத்தது, கைபுண்ணுக்கு ஏன் கண்ணாடி.  இங்கே கேள்வி கேட்டாலே தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் போது இவர்களின் ஜனநாயக லட்சணத்தை ஒரு வலைதளத்தை போய் பார்த்து தான் தெரிந்து கொள்ளணுமா என்ன? மேற்படி இது நவம்பர் 2009 இல் வெளியிடப்பட்ட தரப்பட்டியல் இப்போது இன்னும் தரங்கெட்டு போய் இருக்கும் இந்தியா…
 

தெர்சு உசலா, அகிரா குரோசோவாவின் படைப்புகளில் ஒன்று, இது சோவித்-ஜப்பான் கூட்டுத் தயாரிப்பு. சிறந்த வெளிநாட்டு படப்பிரிவில் 1975 வருடத்துக்கான ஆஸ்கார் வென்றது. விளாடிமிர் அர்செனிவ் என்ற ரஷ்யனின் தெர்சு உசலா என்ற சுய சரியதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். (சைபீரிய காட்டுப்பகுதியில் அர்செனிவ் பயணித்த பல பயணங்களை  மையமாக கொண்டது) அழகிய சைபீரியப் பகுதிகளில் இந்த  படம் படமாக்கபட்டுள்ளது. 

அர்செனிவ் ஒரு கல்லறையை தேடி போவதை தொடக்கமாக கொண்டு படம் அரம்பிக்கப்படுகிறது, பின்பு அர்செனிவ் தனது நினைவுகளில் மூழ்கி போகிறார். அங்கு கிராமங்கள் உருவாவதற்கு  முன் பயணம் மேற்க்கொளும்போது  தெர்சு உசலா என்ற ஒரு மலைவாழ் வேட்டைக்காரனை சந்திக்கிறார் அர்செனிவ், அவன் அவர்களின் பயணத்துக்கு உதவ முன்வருகிறார். தெர்சு உசலா அந்தப் பகுதியை பற்றிய அதீத அறிவு பெற்று இருந்தான். முதலில் அவனை பார்க்கும் போது ஒரு படிக்காத சாதாரண, வயது முதிர்ந்த மனிதனாகவே அர்செனிவ்க்கு தென்பட்டான், ஆனால் அவனுடைய சாதுர்யமும், கூர்மையான உள்ளுணர்வும், புத்தி கூர்மையும் அர்செனிவ் குழுவினரால் அவர் மீது பெரிய மரியாதையே ஏற்படுத்தியது.

அர்செனிவ் மற்றும் அவருடன் பயணித்த இன்னொரு பயணியின் உயிரையும் இரண்டு தடவை காப்பாற்றுகிறார் தெர்சு உசலா. சில வருடங்களுக்கு பிறகு மறுபடியும் அர்செனிவ் அவரை  சந்திக்கிறார். ஆனால் இப்போது அவரின் முதுமை காரணமாக  உடல் நலம் குன்றி காணப்பட்டார். சைபீரிய புலி ஒன்றை வேட்டையாடும் போது அவருடைய கண் பார்வை எவ்வளவு மங்கியுள்ளது என்பதை அர்செனிவ் புரிந்து கொள்கிறார். அர்செனிவ் அவரை  தன்னுடன் நகரத்துக்கு வந்து விடுமாறு கூறி தன்னுடன் அழைத்து செல்கிறார். ஆனால் நகரத்துக்குள் அவருக்கு மரம் வெட்டவோ வேட்டையாடவோ முடியவில்லை, அது குற்றம் எனவும் எடுத்துரைக்கபட்டது முடிவில் அவர் மறுபடியும்  காட்டிற்கே திரும்பி செல்லும் நிலை வருகிறது. அர்செனிவிடம் சொல்லிவிட்டு கிளம்பும்போது அர்செனிவ் ஒரு புதுரக துப்பாக்கியை பரிசாகத் தருகிறார்.

சில காலங்களுக்கு பிறகு ஒரு தந்தி  அர்செனிவிற்கு வருகிறது அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இருக்கிறது என்றும் அவரிடம் அர்செனிவின் காலிங் கார்ட் இருப்பதாகவும் அவரை அடையாளம் காட்ட உடனே வருமாறும் செய்தி வந்திருந்தது. அர்செனிவ் சென்று பார்த்த போது அது தெர்சு உசலாவின் சடலம் என புரிந்து கொள்கிறார். தெர்சுவிடம் இருந்த தூப்பாக்கியை பறிப்பதற்காகவே யாரோ அவரை கொலை செய்திருக்கிறார்கள் என தெரிய வருகிறது.

அழகான சைபீரிய காட்டுப்பகுதியில் படம் வெகு நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது. நாகரீகத்தின் வளர்ச்சியால் இயற்கையோடு இயைந்து வாழும் முறை எப்படி மாறிபோய் இருக்கிறது என்பதையும், முதுமையுடன் போராடும் ஒரு வயோதிகனின் நிலையும் , இரு வேறு பின் புலத்தில் இருந்து வரும் மனிதர்களின் நட்பும் நன்றாக படமாக்கப்பட்டுள்ளது.