Posts Tagged ‘pather panchali’

சத்யஜித் ரே அவர்களின் சாருலதா, பதேர் பாஞ்சாலி போன்ற படங்களை பார்த்தவர்களுக்கு கூபி கெயின் பாகா பெயின் திரைப்படம் ஆச்சர்யத்தை கொடுக்கும், உண்மையில் இது சத்யஜித் ரே படமா? என்று கேட்கும் அளவிற்கு இந்த படத்தின் கதையமைப்பு அமைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் fairytale  என்று சொல்வார்களே அந்த வகையின்  கீழ் வரும் இந்த படம் குழந்தைகள் திரைப்படமாக சினிமா ஆர்வலர்களால்  வரையறுக்கபடுகிறது.

கூபி ஒரு குடியானவனின் மகன், அவனுக்கு பாடுவதில் வெகு ஆசை ஆனால் அதற்குரிய திறன் இல்லாதவன் ஒரு நாள் அரண்மனைக்கு அருகில் உள்ள கோவிலில் அவன் பாடும் போது அரசன் அவனை கழுதை மேல் ஏற்றி ஊருக்கு வெளியே கொண்டு விடுமாறு ஆணையிடுகிறான். இதற்கிடையில் டோல் இசைப்பதில் ஆர்வம் உள்ள பாகா என்பவனும் இதுபோல ஒரு அவமானத்திற்கு உள்ளாகி காட்டில் கூபியை சந்திக்க நேர்கிறது. இந்நிலையில் காட்டில் பூதங்களின் தலைவன் மூலமாக இவர்களுக்கு மூன்று வரம் கிடைகிறது. முதல் வரமாக நல்ல உணவும் உடையும் கேட்கிறார்கள், இரண்டாவதாக நினைத்த இடத்திற்கு செல்ல உதவும் ஒரு காலனி கிடைக்கிறது, மூன்றாவதாக மற்றவர்கள் விரும்பும் அளவிற்கு தங்களுக்கு விருப்பமான சங்கீத ஞானத்தையும் வரமாக பெறுகின்றார்கள். இந்த வரங்கள் இருவரும் ஒவ்வொரு முறையும்  ஒரு சேர கை தட்டும் போதும் கிடைக்கப் பெறுகின்றன.

இதற்கிடையில் சுண்டி என்ற ராஜ்யத்தில் இசை  மேதைகளின் போட்டி நடைபெறுவதை அறிந்து அங்கு சென்று தங்களின் இசை ஞானத்தின் மூலமாக வெற்றி பெறுகின்றார்கள் கூபியும், பாகாவும். அரண்மனையில் தங்கி இருக்கும் போது சுண்டி நாட்டின் மீது ஹல்லா  அரசன் படை எடுத்து வருவது அறிந்து இந்த போரை தாங்கள் நிறுத்தி அமைதிக்கு வழி வகுக்கிறோம் என்று கூற, அது மட்டும் நடந்தால் தனது மகளை கூபி, பாகா இருவருள் ஒருவர்க்கு மணமுடித்து தருவதாகவும் வாக்குறுதி தருகிறார் சுண்டி தேசத்தின் ராஜா. இருவரும் தங்கள் இசையால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் வரா வண்ணம் தடுத்து ராஜ குமாரிகளை மனம் முடிப்பதே கதை.

இந்த படம் வங்கத்தில் 51  வாரம் ஓடி சாதனை படைத்தது. சத்யஜித் ரே படங்களில் அதிகமான நாட்கள் திரையரங்கில் ஓடிய படம் இது.  இந்த படத்தில் கூபி கதாபாத்திரத்தில் நடித்த தபன் சட்டர்ஜி ஒரு புதுமுகம் பாகா கதாபாத்திரத்தில் நடித்தவர் ரபி கோஸ். இருவரின் நடிப்பும் படத்திற்கு சிறப்பு, இப்படத்தின் இயக்கத்துடன் கூட  சத்யஜித் ரே அவர்களே பாடல்களை இயற்றி இசை அமைத்திருக்கிறார் மேலும் உடை வடிவமைப்பும் இவரே செய்திருக்கிறார்.  பைசைக்கிள் தீவ்ஸ் படத்தை பார்த்து நியோ ரியலிசம் படங்களை எடுக்க ஆர்வம் கொண்ட சத்யஜித்ரே இது போன்ற படம் எடுத்திருப்பது அவரது பன்முகத்தன்மையை வெளிக்காட்டுகிறது.

சந்தேஷ் என்ற குழந்தைகளுக்கான பத்திரிகை ஒன்றை சத்யஜித் ரே நடத்தி வந்தது நம்மில் பலருக்கு தெரியும்  அதனால் அவர்  குழந்தைகளுக்கான படம் எடுத்தது அந்த பத்திரிகை அனுபவப் பின்னணி என்பது நன்கு விளங்கும் .

பிபூதிபூசன் பண்டோபாத்யாய் என்பவர் எழுதிய நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. 

வங்காளத்தின் ஒரு கிராமிய சூழலில் இந்த படத்தின் களம் அமைந்திருக்கிறது. ஹரிஹர் என்பவர் ஒரு ஏழை பிராமணன், அவருக்கு வேதம் ஓதுதலை விட எழுத ரொம்ப பிடிக்கும், தனது எழுத்தாற்றல் அவருடைய வறுமையை போக்கும் என்ற நினைப்பில் நிறைய எழுதுகிறார் துருதிஷ்டவசமாக அவருடைய படைப்புகள் எதுவும் அவர் வறுமையை போக்கவில்லை. ஹரிஹரின் மனைவி சர்பஜெயா,  கிடைக்கும் வருமானத்தில்  தன் குடும்பத்தை ஒருவாறு நிர்வகித்து கொண்டிருக்கிறாள். ஹரிஹர் சர்பஜெயா தம்பதிக்கு துர்கா என்ற பெண் ஒருத்தி இருக்கிறாள், கதையின் போக்கில் அப்பு என்கிற ஒரு மகனும் பிறக்கிறான். குடும்பத்தில் இன்னொரு உறுப்பினராக ஹரிஹரின் மூத்த சகோதரி ஒருவளும் இருக்கிறாள், வயதான மூதாட்டியான அவள்  அடிக்கடி சர்பஜெயாவிடம் சண்டை போட்டுகொண்டு தனது உறவினர்களின் வீட்டில் போய் தங்கிவிட்டு மீண்டும் ஹரிஹர் வீட்டுக்கே திரும்பி விடுவாள். துர்கா துடுக்கான ஒரு பெண், தன் வீட்டிற்க்கு அருகில் உள்ள வீட்டின் மரங்களில் இருந்து பழங்களை திருடிவிட்டதாகவும்  ஒரு சமயம் சிருமனியால் ஆன ஒரு கழுத்து சங்கிலியை திருடி விட்டாள் என்றும் புகார்கள் வந்தவன்னம் இருக்கும் இதனால் சர்பஜெயா மிகுந்த வேதனைபட்டாள், மேற்கொண்டு வாங்கிய கடனை திரும்பி கொடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தாள்.  ஹரிஹர் தன் குடும்ப வறுமையை போக்க அருகிலுருக்கும் நகரம் ஒன்றிற்கு வேலைக்கு செல்கிறார், சென்றவர் வெகு நாட்கள் ஆகியும்  வீடு திரும்பவே இல்லை, கடிதம் ஒன்றின் மூலமாக சென்ற காரியம் ஈடேறவில்லை ஆதலால் போதுமான பணம் சம்பாதித்து வர சிறிது காலம் ஆகும் என தகவல் கூறி இருந்தார். இந்நிலையில் துர்கா தனது தம்பி அப்புவின் ஆசையை நிவர்த்தி செய்யும் பொருட்டு ரயில் போவதை பார்க்க  செல்கின்றனர் ஆனால் மழைகாலம் ஆதலால் துர்கா மழையில் நனைய வேண்டியதாகிறது, இதனால் காய்ச்சல் வருகிறது, வறுமையின் பிடியில் இருப்பதால்  சரியான  சிகிச்சை கொடுக்க முடியவில்லை. காய்ச்சல் மோசமாகி துர்கா இறக்க நேரிடுகிறது. பலத்த மழையின்  காரணமாக வீடு மிகுந்த சேதாரத்திற்கு உள்ளாகிறது இந்நிலையில் ஹரிஹர் வீடு திரும்புகிறார் துர்கா இறந்த செய்தி கேள்விப்பட்டு மனமுடைந்து  அழுகிறார். கடைசியில் தனது மூதாதையரின் வீட்டையும் அந்த கிராமத்தையும்  விட்டு விட்டு குடும்பத்தோடு ஹரிஹர் ஒரு வண்டியில் ஏறி கிளம்புவதாக படம் முடிகிறது.  

படத்தில் துர்கா கதாபாத்திரம் வெகு அருமையாக வடிவமைக்கப்பட்டிருகிறது, சிறுமியின் நடிப்பு படத்திற்கு முதுகெலும்பாக அமைகிறது. துர்கா இறந்த பின் களவு போன சிருமனியால் ஆன கழுத்து சங்கிலி அப்புவிற்கு கிடைப்பதும் தனது இறந்த அக்காவின் மேல் பழி வரகூடாது என்று அதை ஒரு குட்டையில் எறிவதும் நெஞ்சை நெகிழ செய்கிறது. ஹரிஹரின் சகோதரியாக வரும் மூதாட்டியின் நடிப்பும் வெகு பிரமாதம், காட்டுப்பகுதியில் மூதாட்டி அனாதையாக இறந்து கிடக்கும் காட்சி மனதை நெருடுகிறது. இந்தப்படம் சத்யஜித்ரேவின்  முதல்படம், வறுமை கொடியது,  கொடிதான வறுமையை கொஞ்சம் கூட குறையாமல் நம்மை உணர செய்கிறார் இயக்குனர்.

இந்தப்படம் போரால் என்ற வங்காள கிராமத்தில் படமாக்கப்பட்டது. இந்தப்படம் சத்யஜித் ரே விற்கும் அவருடைய ஒளிப்பதிவாளருக்குமன்றி, தொழில்நுட்ப கலைஞர்கள் பலருக்கு முதல் படம். இந்த படத்தை முதலில் ரே அவர்களே தயாரித்தார். போதுமான பணம் இல்லாத காரணத்தால் தயாரிப்பு தடைபட்டு, தடைபட்டு தொடர்ந்தது, வரைகலை நிபுணராக பணியாற்றி அதன் மூலம் வந்த வருவாயிலும், தன் மனைவியின் நகைகளை விற்றும் படம் முடியவில்லை, கடைசியில் வங்காள அரசு உதவியுடன் இந்த படம் முடிக்கப்பட்டு திரையிடப்பட்டது.  சத்யஜித்ரே படம் தாமதமாக முடிந்தபிறகு  3 காரணங்களால் இந்த படம் காப்பாற்றப்பட்டது, அப்புவின் மழலைதனமான குரல் உடையவில்லை, துர்கா அதிகம் வளரவில்லை, மூதாட்டி இந்த்ரால் இறக்கவில்லை என்று வேடிக்கையாக  சொன்னார்.

1956 ஆம் ஆண்டின் சிறந்த இந்திய படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 1956  ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த மனித ஆவணம்(best human document) என்ற விருதும், இதை தொடர்ந்து இந்த படத்திற்கு சர்வதேச அளவில் நிறைய விருதுகள் கிடைத்தது.