Posts Tagged ‘school’

DETERMINATION என்றால் என்ன என்று முடியும் இந்தப்படம், உண்மையில் மனஉறுதி என்றால் என்ன? விடா முயற்சி என்றால் என்ன? என்பதை ஒரு பள்ளி செல்லும் சிறுமியின் வாயிலாக உணர்த்தியுள்ளார் இயக்குனர்.

ஹயாத் திரைப்படம் ஒரு பள்ளி செல்லும் சிறுமியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு அதிகாலை நேரம், இரானின் ஒரு கிராமத்தில் தொடங்குகிறது கதை.

மூன்று குழந்தைகள் கொண்ட ஒரு சிறு குடும்பம், அக்குடும்பத் தலைவர் மோசமான உடல்நலககுறைவு காரணமாக மருத்துவமனைக்கு ஊராரின் உதவியோடு அவரின் மனைவி அழைத்துச் செல்கிறார். கைக்குழந்தையான தங்கையையும், பள்ளி சிறுவனான தன் தம்பியையும் குடும்பத்தின் மூத்த மகளான ஹயாத் கவனிக்கும்படியாகிறது. பள்ளி  தேர்வுக்கு போகத் துடிக்கும் ஹயாத் வீட்டுக் கடமைகளை முடித்து குழந்தையை தன் அண்டை வீட்டுக்காரர்களிடம் ஒரு மணி நேரம் பார்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு வீடாக சென்று யாரும் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை ஏற்க மறுத்த நிலையில், ஹயாத் பள்ளி சென்றாளா? தேர்வு எழுதினாளா? என்பது தான் கதை…

கிழக்கித்திய நாடுகளில் ஒரு  பெண் குழந்தை  கல்வி கற்பதற்கு இருக்கும் இடையூருகளைச் சொல்லும் விதமாக எடுக்கப்பட்ட சாதாரண ஒரு வரிக்கதை போல இருந்தாலும், அருமையான திரைக்கதை மற்றும் ஹயாத்தாக வரும் சிறுமியின் நடிப்பு வாயிலாக நம்மை கதையோடு ஒன்றிப்போக செய்கிறார் இயக்குனர்.

முழுத் திரைப்படம் உங்கள் பார்வைக்கு 

நன்றி: யூ ட்யூப்

 
ஜப்பானிய சமுதாயம், வீரர்கள் எனப்படும் சாமுராய், விவசாயிகள், கைத்தொழில் செய்பவர்கள், வணிகர்கள், சுத்தமே இல்லாதவர்கள் என சொல்லப்படும் எதா(ETA ) அல்லது புராகுமின், மனிதரே இல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டிருந்தது. இதில் எதா என்பவர்களை புராகுமின், கெதோ மக்கள், சோரி, புதுமகன், தள்ளிவைக்கப்படவர்கள் என்றும் கூறுகின்றனர். இவர்கள் செய்யும் தொழில் மாமிசம் விற்பது, விலங்குகளின் தோல்களை பிரித்து விற்பனை செய்வது, வைக்கோலைக்  கொண்டு காலணிகள் செய்வது. இவர்கள் தங்கள் பிறப்பை மறைப்பதோ, இடம் விட்டு இடம் போய் மறைந்து இருப்பது குற்றமாக கருதப்பட்டது.  இந்த நாவல் ஒரு எதா வகுப்பை சார்ந்தவன், தன்னுடைய பிறப்பால் தான் படும் துன்பத்தையும், சமூகம் எதா வகுப்பு மக்களை எப்படி நடத்தினார்கள் என்பதையும் விளக்கமாக எடுத்தியம்புகிறது.
 
THE BROKEN COMMANDMENT என்ற இந்த ஜப்பானிய நாவல் தோசான் ஷிமாசகி என்பவரால்  படைக்கப்பட்டது, தமிழில் நான் தலித் இல்லை என்ற  தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் தீண்டாமை போன்ற குற்றங்களை வெகுவாக நாம் பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம், மேலும் இங்கு சிலர் தீண்டாமையின் கோரத்தில் இருந்து விடுபடும் பொருட்டு புத்த மதத்தை ஏற்றுக் கொண்டதாக கூட அறிகிறோம். ஆனால் பௌத்தத்தை மதமாக கொண்ட ஜப்பானில் இந்த தீண்டாமை கொடுமை எந்த அளவிற்கு வேருன்றி இருந்தது என்பதற்கு இந்த நாவல் ஒரு சாட்சி.
 
உறவுகளை விட்டு விலகி மலைப்பகுதியில் வாழும் தகப்பன், சித்தப்பா, தங்களின் அடுத்த தலைமுறையாவது எதா என்று வழங்கப்படக்கூடாது என்ற ஆவலில் இறக்கும் தருவாயில் கூட தன் மகனை எதா பிரிவினன் என்று எங்கேயும் சொல்லிவிடாதே என்று கட்டளையிட்டு போகிறார். கதையின் நாயகன் செகாவா உஷிமாத்ஷோ, ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சாதூர்யமாக ஆசிரியப்பயிற்சி பள்ளியிலும் தற்போது வேலை செய்யும் பள்ளியிலும் தனது இனத்தை மறைத்து வாழ்கிறார், காரணம் தனது தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி. ஜப்பானிய சமூகத்தில் எதா பிரிவினன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் அவன் எதா பிறப்பினனாக இருந்தால் அவனை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். இந்நிலையில் அவனின் பிறப்பு பற்றி செய்தி தெரிந்தால் அவனது வேலையை இழக்க நேரிடும், அவன் மனதார விரும்பும் பெண்ணே கூட அவனை

விட்டுப் பிரியலாம், வாடகைக்கு இருக்கும் இடத்தில் இருந்து துரத்தப்படுவான். இவை எல்லாவற்றையும் மனதில் வைத்து புழுங்கி கொண்டு வாழ்கிறான், இந்த நிலையில் அவனுக்கு ஒரே துணை அவனுடைய மானசீக குரு இனாகோ ரெந்தாரோவின் எழுத்துக்கள் தான்.
 
செகாவின் தந்தை இறந்த நிலையில் அவரை காண ஊருக்கு செல்லும் போது ரெந்தாராவை ரயிலில் சந்திக்கிறார், அவருடன் மனம்விட்டு பேசுகிறார், அவருடன் ஜப்பானிய டயட் சபைக்கு தேர்தலில் போட்டியிடயிருக்கும்  அவரது வக்கீல் நண்பரையும் சந்திக்கிறார், ரெந்தாரோ தான் எதா என்று வெளிப்படையாக பேசுவதும், எழுதுவதும் செகாவிற்க்கு ஒரு உந்துதலையும், கிளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது அவரிடம் தானும் ஒரு எதா என்று சொல்ல பல முறை எண்ணி சொல்ல முடியாமல் தவிக்கிறான். சில நாட்களுக்கு பிறகு அவர் தேர்தல் கூட்டத்தில் பங்கேற்ற்று விட்டு வரும் போது கொலை செய்யப்படுகிறார். தேர்தலில் வக்கீலுக்கு எதிராக இருப்பவர் இந்த கொலையை செய்கிறார், அவர் ஏற்கனவே செகாவா ஒரு எதா என்பதை பலரிடம் சொல்லிவிடுகிறார், காரணம் அவர் ஒரு பணக்கார எதா பெண்ணை மனம் முடித்துகொள்கிறார் அந்த பெண் செகாவாவிற்கு தெரிந்தவள் என்பதால் இந்த விசயத்தை செகாவா மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி விடுவான் என்ற பயத்தில் இவர் முந்திக் கொள்கிறார். மனமுடைந்து போன செகாவா பள்ளியில் சென்று தான் ஒரு எதா என்று வகுப்பறையில்  சொல்லி, தனது ராஜினாமாவை கொடுத்துவிட்டு, தன் காதலியின் வீட்டுக்கு சென்று உண்மையை கூறுகிறார்.  
 
இந்த நாவலைப் பொறுத்தவரை, ஜப்பானின் சமூகச்சூழலை அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கிறது.  வதந்தி, வம்புபேச்சு ஒரு மனிதனை எவ்வளவு மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் என்பதையும் விளக்குகிறது. நம் பெற்றோர்களை நாம் தேர்ந்தெடுக்கவில்லை, அதனால் நாம் நம் இனத்தையும் தேர்ந்தெடுப்பதில்லை, அப்படியிருக்க நாம் பிறப்பால் உதாசினப்படுத்தப்படுவது, ஒதுக்கி வைக்கப்படுவது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை இந்நாவல் நன்கு விளக்குகிறது. 1906ல் வெளியிடப்பட்ட இந்த படைப்பு  ஆசிரியர்க்கு முதல் நாவல் என்றால் யாராலும் நம்ப முடியாது… அற்புதமான இந்த கலைப்படைப்பை உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தவறாமல் படியுங்கள்.   
 

ஆசிரியர் தினம் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.  இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான நாளை, செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் தினமாகக்  கொண்டாடப்படுகிறது.  

ஒரு சமுதாயத்திற்கு ஆசிரியர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை, எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற சொல்லின் மூலம் நாம் உணரலாம். நமது முன்னோர்கள், ஆசிரியர்களுக்கு என்று சிறப்பானதொரு இடத்தை சமூகத்தில் கொடுத்திருக்கின்றனர். உண்மையில் தற்போது ஆசிரியர்கள் அந்த சிறப்பான இடத்திற்கு தகுதி உடையவர்களாக இருக்கிறார்களா? முன்பெல்லாம் ஆசிரியர்கள் பாடங்கள் மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை, வாழ்கையை நமக்கு வாழ கற்றுக்கொடுத்தார்கள், ஒழுக்கம், அன்பு, நெறி, மற்றும் பல விசயங்களை ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தனர். இன்றைய அவசர காலத்தில் இதை சொல்லித்தர அவர்களுக்கு நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை. மேலும் அவர்களுக்கே ஒழுக்கத்தையும் நெறியையும் நாம் கற்றுத்தர வேண்டியிருக்கிறது. நீங்கள் கேட்கக்கூடும் எல்லாத் துறையிலும் தான் இப்படி இருக்கிறது இவர்களை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும் என்று, உண்மை தான், ஆனால் ஆசிரியர்கள் ஒரு சமுதாயத்தின் தூண்கள், அவர்கள் நமக்குள் விதைப்பதை தான் நாம் அறுவடை செய்கிறோம். 

இன்றைய கால கட்டத்தில் மதிப்பெண்களை முன்னிறுத்தியே பாடங்கள் போதிக்கப்படுகின்றன. ஒரு மாணவனுக்கு சுயமாக சிந்திக்க, கற்பனா சக்தியையும், அவனுடைய சிந்தனா சக்தியை தூண்டவும் இன்றைய பாடத்திட்டங்களோ, ஆசிரியர்களோ உதவியாக இல்லை என்றே சொல்லவேண்டும். நிறைய பேர் சொல்லக் கேள்வி பட்டு இருக்கிறேன். ஆங்கிலேயர்கள் நமக்கு குமாஸ்தா வேலை செய்ய ஏற்ப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை(மெக்காலே) நாம் இன்னும் பின்பற்றிகொண்டிருக்கிறோம் என்று, உண்மை தான் இன்றைய நிலையில் ஆராய்ச்சிப் படிப்புகளில் யாரும் அக்கறைக்  காட்டாமல் இருப்பதே  இதற்கு சான்று. மந்தையில் ஒரு ஆடு போகும் போது பின்பற்றி செல்லும் ஆடுகள் போல போய்க் கொண்டிருக்கிறார்கள் இன்றைய மாணவர்கள். பணம் மட்டுமே வாழ்கையின் குறிக்கோளாகிப் போன இந்த காலத்தில் பெற்றோர்களும் இதற்கு உடந்தை. எப்போதும் படிப்பு படிப்பு, நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும், உயர் படிப்பை முடித்து அமெரிக்காவிற்கு போக வேண்டும் இதான்  இன்றைய பெற்றோர்களின் மற்றும் மாணவர்களின் குறிக்கோள்.

 ஒரு கால கட்டத்தில் தமிழகத்தில் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாகவே ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தார்கள், தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும், மொழி ஒரு சமூகத்தின் அடையாளம் என்பதையும், அந்த அடையாளத்தை நாம் அடைய பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ், தமிழில் பள்ளிகளில்  பேசினால் குழந்தைகள் தண்டிக்கப்படுகிறார்கள், குழந்தைகளுக்கு நம் மொழியினை பேசுவதையே சிறுமை என மறைமுகமாக போதிக்கின்றனர். 

என் ஆசிரியர்கள் பற்றிய பசுமையான நினைவுகள் எனக்கு நிறைய இருக்கின்றன, என்னுடைய முதல் பள்ளி ஆசிரியை மரகதவல்லி, அவர்கள் எங்கள் குடும்ப உறவாகவே மதிக்கப்படும் ஒரு நபர். எங்கள் வீட்டு விசேஷங்கள் எல்லாவற்றிலும் கலந்து கொள்வார்கள். நான் மதிக்கும் மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர். எனது தமிழாசிரியர்கள் எல்லோருமே அருமையான வழிகாட்டிகள், விலங்கியல் பாடம் எடுத்த திருமலை  ஆசிரயரை மறக்கவே முடியாது ஒரு விரிவுரையாளர் கூட அவ்வளவு நுட்பமாக பாடம் எடுக்க முடியாது, அற்புதமான மனிதர், மேல்நிலை வகுப்பு ஆசிரியர்கள் யாவரும் என் மனதில்  நீங்கா இடம் பெற்றவர்கள். கல்லூரியில் எனக்கு கிடைத்த ஆசிரியர்கள், நண்பர்களை போல நடத்துவார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் பிருந்தா ஆசிரியர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ்  விரிவுரையாளர். 

மாதா, பிதா, குரு அப்புறம் தான் தெய்வம், அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு சிறப்பளிக்கும் ஆசிரியர் தினத்தின் மேன்மையை நம் குழந்தைகளுக்கு எடுத்து கூறுவோம். வருங்கால சமுதாயத்தை ஆசிரியர்கள் நன்முறையில் கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த இடுகையின் மூலம் ஆசிரிய பெருந்தகைகளுக்கு என் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி: ஓவியர் பாலாஜி