திருவையாறு P ராஜலக்ஷ்மி , இவர் தான் தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர். தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இவர் தான் முதல் பெண் இயக்குனர் என்று கூறுகிறார்கள்.
ராஜலக்ஷ்மி 1911 இல் திருவையாறில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர், இவரது தந்தை ஒரு குருக்கள். இவருக்கு 11 வயது இருக்கும் போது திருமணம் ஆனது, துரதிர்ஷ்டவசமாக இவரது மன வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னமே முடிந்து விட்டது. வரதட்சனை கொடுக்க முடியாத காரணத்தினால் இவரது கணவர் இவரை விட்டு பிரிந்தார். இதனால் மனமுடைந்த இவரது தகப்பனார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்பு ராஜலக்ஷ்மி அவரது தாயாருடன் திருவையாறை விட்டு வெளியேறினார். நாடக கம்பெனி ஒன்றில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்
படத்தில் TP ராஜலக்ஷ்மி அவர்களுடன் சிறுவயது TR மகாலிங்கம்
புகழ்பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள் குழுவில் இனைந்து நாட்டியம், சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றார். 1931 இல் காளிதாஸ் என்ற படத்தில் கதாநாயகியாய் நடித்த பிறகு இவர் புகழின் உச்சிக்கு சென்றார். இந்த திரைப்படம் தமிழின் முதல் பேசும் படம் என்று அறியப்படுகிறது. முன்னதாக இவர் 1929 லேயே திரையுலகில் காலெடுத்து வைத்தவர், கோவலன் என்ற பேசாத படத்தில் நடித்திருக்கிறார். காளிதாஸ் திரைப்படத்திற்கு பிறகு இவர் அந்நாளைய சூப்பர் ஸ்டார்களாகிய கிட்டப்பா, தியாகராஜ பாகவதர் போன்றவர்களுடன் இனைந்து நடிக்கும் அளவிற்கு பெரிய நடிகையானார்.