Posts Tagged ‘triplicane’

இது ஓர் தொடர் பதிவுநமக்கு சிறுவயதில் நேர்ந்த அனுபவங்களின் பகிர்வு 

சிறு வயதில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் இந்த தொடர்பதிவில்  நண்பர் படைப்பாளி என்னை இணைத்து கொண்டதற்கு முதலில் நன்றியை  தெரிவித்துகொள்கிறேன். நண்பர் தனது இடுகையின் முடிவில் என் களர்நிலத்தில் பயிர் செய்ய வேண்டும் என கூறி இருந்தார். அவரின் விருப்பத்திற்கிணங்க இதோ என் சிறு வயதின்  சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நான் பிறந்தது திருகழுக்குன்றம் என்ற சென்னையை ஒட்டிய பகுதி, வாழ்ந்தது, வளர்ந்தது எல்லாம் சிங்கார சென்னை. நகர வாழ்கை நரக வாழ்கை என்று சொல்வார்கள் நான் எப்போதும் அப்படி நினைத்ததே இல்லை. இந்த நகரம் என்னுள் பல நினைவுகளை சுமக்க வைத்திருக்கிறது. இன்றளவும் என்னால் இந்த நகரத்தை விட்டு அகல முடியாத படி என்னை கட்டுபடுத்தி வைத்திருக்கும் ஒரு முக்கிய விஷயம் மெரீனா கடற்கரை. இந்த கடற்கரை பல வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை தன்னுள் சுமந்து கொண்டு இருக்கிறது. அந்த வரலாற்று நிகழ்வுகளுக்கு மத்தியில் ஒரு கமா அல்லது ஒரு முற்றுபுள்ளி அளவுக்கேனும் என் நிகழ்வுகள் அங்கு  இருக்கின்றன. அந்த பரந்த கடலை சாலையின் ஓரத்தில் இருந்து பார்த்தாலே போதும் என் சுமைகள், மனக்கஷ்டங்கள் எல்லாம் பறந்து போகும். எனக்கு கிடைத்த முதல் நண்பன், இந்த நண்பனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எனது தாத்தா, சிறுவயதில் ஒவ்வொரு ஞாயிறும் என்ன வெயில் அடித்தாலும் 3 மணிக்கே கிளம்பிவிடுவோம். அவர் ஒரு உணவுப் பிரியர், எந்த ஹோட்டலில் என்ன சிறப்பாக இருக்கும் என்பது அவருக்கு அத்துப்படி, அவருடன் சேர்ந்து நானும் களமிறங்குவேன், அந்த கால கட்டத்தில் ராஜரத்தினம் என்பவர் டேப் (ராஜபாட் ரங்கதுரை படத்தில் சிவாஜி பாடுவாரே, தம்பி என்று நம்பி உன்னை வளர்த்தேன், அந்த இசைக்கருவி) அடித்து கொண்டு தனது கணீர் குரலில் பாடிக்கொண்டு  பல்பொடி விற்பார். பல்பொடி வாங்குவார்களோ இல்லையோ அவர் பாடலை கேட்க நிறைய கூட்டம் கூடும். கிளிஞ்சல்கள்  பொருக்கி, தண்ணீரில் விளையாடி அழுக்கு மூட்டையாய் வீடு வந்து சேர இரவு ஆகிவிடும். வாரம்தோறும் அம்மாவிடம் வசவு வாங்குவேன். 

 என் சிறுவயதில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் என குறிப்பிட்டு சொன்னால் நான் வீட்டை விட்டு ஓடிய நாள் தான் அந்த 8 மணி நேரத்தை என் வாழ்நாளில் அடிக்கடி நினைத்து கொள்வேன். பக்கத்து வீட்டு மாடியில் ஏறி அவர்கள் போட்டு வைத்த வடாம், வத்தல்களை  மிதித்து விளையாடியதால் கிடைத்த வசவு  காரணமாக ஓடிய ஓட்டம் அது. எங்கு போவது என்று தெரியாமல் ஏதோ வண்டியில் ஏறி சென்னை சென்ட்ரலில் இறங்கி அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டே கும்மிடிபூண்டி போகும் ஒரு ரயிலில் ஏறி எங்காவது சென்று விடவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அடுத்தது என்ன என்று தெரியாமல் அழுது, நான் அழுவதை பார்த்து பலர் கூடிவிட ரயிலில் மாறி மாறி உபதேசம். உண்மையில் எனக்கு அன்பு, பாசம் என்றால் என்ன என்பதை அங்கு தான் முதன் முதலில் உணர்ந்தேன். இனிமேல் என்னால் என் தாயை பார்க்க முடியாது என்ற ஒரு சிந்தனை வந்த உடனே என்னை மீறி அழுது விட்டேன். நல்லவேளையாக குழுமி இருந்தோர் எனக்கு அறிவுரை கூறி சிலர் தங்கள் கையில் இருந்த பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தது, என்னை தேடி என் குடும்பத்தார் அலைந்து திரிந்து கொண்டிருந்ததை  நேரில் பார்த்து நான் அழுதது, என் தாத்தா என்னை தேடி ஊர் ஊராய் சுற்றி மறுநாள் காலையில் வந்து என்னை கடிந்து கொண்டது, நினைத்து பார்க்கும் போது இன்னமும் என் அறியாமையை நினைத்து சிரித்து கொள்வேன். 

அப்போது வீடியோ வந்த புதிது, துபாயில் இருந்து கடத்தி வந்த VCR இல் படம் போட்டு பார்ப்பது என்பது ஒரு பெரிய விசேஷம் சென்னையை பொறுத்தவரை  கல்யாணத்திலிருந்து, துக்க நிகழ்ச்சிகள் வரை இந்த வீடியோ போடுவது விழாவை சிறப்பிக்க ஒரு வழி, பல சமயங்களில் கட்டாயம். சென்னையில் பல இடங்களில் திரை அரங்குகளை போல வீடியோ அரங்குகள் இருந்தது. முக்கியமாக திருவல்லிகேணியை ஒட்டிய பகுதிகளில் இது கூடுதல். திரை அரங்குகளில் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு படம் தான், வீடியோ அரங்குகளை பொறுத்த மட்டில் தினம் தினம் புது புது படங்கள், அதுவும் சில அரங்குகளில் விடலை பருவத்தினருக்கு என்றே சிறப்பான படங்களும் உண்டு.  இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம்  யாதெனில் அரங்கு வீடுகள் இருக்கும் பகுதியிலே இருப்பதால், அங்கு பக்கத்தில் இருக்கும் வீடுகளில் உள்ள பெண்கள் எல்லாம், ஸ்கூலுக்கு போக அனுப்பிச்சா இப்படி ஊர் சுத்ரிங்களானு திட்டி தீர்ப்பார்கள், அவர்களின் பாசம் நிறைந்த அதட்டல்கள் எரிச்சலைக் கொடுத்தாலும் அவர்களின் திட்டல்கள் என்னை  வெட்கி தலை குனியவே செய்யும். இதற்காகவே சீருடைக்கு மாற்றாக ஒரு சட்டை வைத்திருப்போம், அப்படியெல்லாம் படிப்பை சட்டை செய்யாமல் பின்னாளில் அவதிப்பட்டு இன்றைக்கு இருக்கும் நிலையை அடைய எத்துனை போராட்டங்கள்.

இப்படி அடுக்கிகொண்டே போகலாம் என் நினைவுகளை, முதன் முதலில் நண்பனுக்காக எழுதிய காதல் கடிதம், ஸ்டெபிகிராப் ஐ ஞாபகபடுத்தும் ஒரு பெண்ணின் பின்னால்  போனது, ஏழாம் வகுப்பில் படிக்கும் போது முதன் முதலில் பிடித்த சிகரேட், ஊருக்கு செல்லும் போது ஏற்படும் உற்சாகம், மூச்சிரைக்காமல் ஏறிய மலை, புளியமரத்தில் மேலே ஏறி  ஓடி பிடித்து விளையாடியது. மடுவில் நீராடிய நினைவுகள், முந்தரி பழத்தை சுவைத்து ஏற்பட்ட கீச்சுக்குரல், நுங்கு வண்டி ஒட்டி சைக்கிள் வண்டியில் மோதிக் கொண்டது, அன்பான தாத்தா இறந்த போது இரவில் தனியாக அவரின் நினைவால் அழுத நேரங்கள். இப்படி போய் கொண்டே இருக்கிறது என் நினைவுகள்.  

 நண்பர் படைப்பாளிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி, எப்பொழுதும் இறந்தகாலம், சொர்க்கலோகம்… என் சொர்கத்தை கொஞ்ச நேரம் சுற்றி பார்க்க வைத்ததற்கு.  

இந்தத் தொடரை சகோதரன் தொடர வேண்டுமென நான் விரும்புகிறேன். எனக்கு பதிவுலகில் கிடைத்த நல்ல நண்பர்களில் சகோதரன் ஜெகதீஸ்வரனும்  ஒருவர், இந்தத் தொடர்பதிவை  அவரின் வலைப்பூவில் பின்னுவார் என் எதிர்பார்க்கிறேன்.

நினைவுகளை தொடர்பவர்கள்:

 

1.படைப்பாளி கருப்பு,வெள்ளையில் கலர்புல் நினைவுகள்..

2.களர்நிலம் என் நினைவுகளின் நிர்வாணம்.

3.சகோதரன்  நானும் என் கிராமமும்

4.இதயம் பேத்துகிறது நெஞ்சில் இட்டக் கோலம் எல்லாம்……

சென்னையில் ஐஸ் ஹவுஸ் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இல்லையா அப்போ விவேகானந்தர் இல்லம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்… மெரினா கடற்கரையில், திருவல்லிகேணியில் உள்ளதே இந்த கட்டிடம். சரி  அது என்ன ஐஸ் ஹவுஸ், நான் சிறுவயதில் நினைத்து இருந்தேன் அந்த பகுதியில் நிறைய ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தது என்று.  ஐஸ் ஹவுஸ் என்பது இப்போதிருக்கும் விவேகானந்தர் இல்லம் தான், உண்மையில் அங்கு ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை எதுவும் இல்லை ஆனால் ஐஸ் சேமித்து வைக்கும் இடமாக இருந்தது. இந்த கட்டிடம் 1842 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. விக்டோரிய கட்டடக் கலையைப் பின்பற்றி இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இப்போது இது தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு சுற்றுலாத்தளமாக விளங்குகின்றது.

அன்றைய கால கட்டத்தில் ஐஸ் தயாரிக்க தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத சமயத்தில் கப்பல் மூலம் ஐஸ் வரவழைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. பிரெடெரிக் டுடோர் என்ற ஆங்கிலேயரால் இது நிர்மானிக்கபட்டது தொழில் நலிவடைந்ததால் 1880 ஆம் ஆண்டு பிலிகிரி அய்யங்காரிடம் இந்த கட்டிடம் கை மாறியது. அவர் இதை புனரமைப்பு  செய்து கேமன்  கோட்டை (keman  castle) என்று பெயர் வைத்தார். இந்த சமயத்தில் தான் விவேகானந்தர் சென்னைக்கு வருகை புரிந்தார் அய்யங்கார் விவேகானந்தரின் பால் உள்ள பற்றின் காரணமாக அவரை தனது இல்லத்தில் தங்குமாறு கோற, விவேகானந்தர் 9 நாட்கள்(6 பிப்ரவரி 1897 லிருந்து 14  பிப்ரவரி)  அங்கு தங்கி சென்றதாக தகவல். இங்கு அவர் சில சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் என்று சொல்லப்படுகிறது,  விவேகானந்தர்  சென்ற பிறகு அவரின் நினைவாக ஒரு நிரந்தர மையத்தை விவேகானந்தரை பின்பற்றுபவர்களுக்காக  உருவாக்கினார் அய்யங்கார்.

1906 வரை இந்த மையம் செயல்பட்டு கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது பின்னர் இந்த இடம் ஒரு ஜமிந்தாரின் வசம் சென்றது. பின்னர் இந்த இடம் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு மகளீர்க்கான விடுதியுடன் கூடிய  பயிற்சி பள்ளி ஒன்றை நிறுவியது. 1963 இல் இந்த இடத்தின்  பெயர் விவேகானந்தர் இல்லம் என்று தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டது. விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி 1997 இல்   இந்த இடம் ராமகிருஷ்ண மடத்திற்கு குத்தகையாக விடப்பட்டு இருக்கிறது. இப்போது இந்த இடத்தை நிர்வகிக்கும் ராமகிருஷ்ண  மடத்தவர் அங்கு நிரந்தர புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களுடன் கூடிய கண்காட்சியை வைத்திருக்கின்றனர். மேலும் இதனுள்ளே ஒரு தியான   மண்டபம் ஒன்று உள்ளது இங்கு தான் விவேகானந்தர் தியானம் செய்ததாக அறிகிறோம். சிலர் இந்த இடம் ராமகிருஷ்ண மடத்தவர் என்ற பெயரில்  RSS வசமாகி விட்டதாக சொல்கின்றனர். அது என்னமோ உண்மை தானே தியானதில்  ஆரம்பித்தால்  ஆன்மீகத்தில் நுழைந்து இந்துயசத்தில் தானே அது போய் முடியும். எது எப்படியோ கடற்கரையின் ஓரத்தில் அழகான அந்த கட்டிடம் உண்மையில் மெரினாவின் மகுடத்தில் பொதித்த ஒரு விலை மதிப்பற்ற மாணிக்கம்.