Posts Tagged ‘video’

சமீபத்தில் நான் பார்த்த இந்த காணொளி ஒரு நாத்திகனுக்கும் ஆத்திகனுக்கும் உள்ள வேறுபாடுகளையும், வாழ்கையை அணுகும் முறையையும் விளக்கமாகவே கூறுகிறது. இன்று இந்த காணொளியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், பார்த்து உங்களது கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டம் செய்யுங்கள்.

Advertisements
இனவெறி என்பது எல்லா காலங்களிலும், எல்லா நாடுகளிலும் இருந்துகொண்டிருந்த, இருந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை. இனத்தை அடிப்படையாக வைத்து ஒரு நபரையோ அல்லது அந்த இனத்தையோ துவேஷிப்பது அருவருக்கத்தக்க ஒரு விஷயம். சட்டரீதியாக எல்லா நாடுகளிலும் இதற்கு தடையும், கடுமையான தண்டனைகளும் உள்ளன. ஆனால் இப்போது இனத்துவேஷத்தின் உடல்ரீதியான(physical) கொடுமைகள் குறைக்கப்பட்டுவிட்ட நிலையிலும் பேச்சாலும்(verbal) செயலாலும் இனத்துவேஷம் செய்வதை சில இனவெறியர்கள் இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு தற்போது இலக்காகி இருப்பவர் நமது டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்.
 
காமன்வெல்த் விளையாட்டுகளின் மூலம் சுரேஷ் கல்மாடியும், ஷீலா தீட்சித்தும்  களங்கப்பட்டது எல்லோருக்கும் தெரிந்ததே, இந்த விளையாட்டுப் போட்டியை பற்றிய ஒரு நிகழ்ச்சித்தொகுப்பின் ஒளிபரப்பின் போது நியூசிலாந்தில்  தொலைக்காட்சி தொகுப்பாளர் பால் ஹென்றி மூலம் ஷீலா தீட்சித் மேலும் களங்கப்பட்டிருக்கிறார். இம்முறைஅவருடைய பெயரின் உச்சரிப்பை வைத்து அவரை களங்கப்படுத்தி இருக்கிறார்கள்.
 
வழக்கமாகவே தொலைக்காட்சிகள் பெயரின் உச்சரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, அதற்கு நம் இந்திய தொலைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல, வட இந்திய தொலைக்காட்சிகள் தென்னிந்திய பெயர்களை கடித்து துப்புவதை பலமுறை பார்த்திருப்பீர்கள். தென்னிந்தியாவை பொறுத்தவரை  வட இந்திய பெயர்களின் உச்சரிப்பை அவ்வளவு கொலை செய்வதில்லை. அதற்கு முக்கிய காரணம் பிற மொழிகள் மேலோ, பிற இனத்தின் மேலோ பெரிய அளவில் காழ்ப்புணர்ச்சி என்பது நமக்கு கிடையாது, அதனால் மற்றவர் மனதை புண்படுத்தும்படி அல்லது விளங்காத வகையில் உச்சரிக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் உச்சரிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் என்றும் சொல்லலாம். 
 
இந்த பால் ஹென்றி விசயத்தில் உச்சரிப்பு தவறு என்பது மட்டுமல்ல, அவர் அதை வைத்து நிமிடக் கணக்கில் வேடிக்கை செய்தும் இருக்கிறார். ஆங்கிலத்தில் D**K, SHIT என்பது எந்த மாதிரியான வார்த்தைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். கீழ்காணும் காணொளியை பார்த்தால் உங்களுக்கே புரியும் அந்த இரண்டு வார்த்தைகளை வைத்து தீட்சித் என்ற பெயரை எப்படி களங்கப்படுத்தி பேசி இருக்கிறார் என்று. இதனால் கடும்  கண்டனத்திற்கு ஆளான ஹென்றி தற்போது பணியிடைநீக்கம்  செய்யப்பட்டிருப்பதாக தகவல்.  இந்திய அரசின் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   
 
 
 

 

உலகின் மிகவும் அறியப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான சைக்கோ திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் ரசிகர்களை உலுக்கும் ஒரு திரைப்படம். ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கிய இந்தப் படம் நியூயார்க் திரையரங்குகளில் முதல் முறையாக திரையிடப்பட்ட போது ரசிகர்களை பீதியடையச் செய்ததாக அறிகிறோம். 

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் கதாநாயகி வசிக்கிறாள், தனது அலுவலகப் பணம் 40,000 டாலர்களை திருடிவிட்டு ஊரைவிட்டு காதலனை சந்திக்க ஓடிவிடுகிறார். போகும் வழியில் ஒரு விடுதியில் இரவு நேரத்தை கழிக்க வேண்டியதாகிறது. அது ஒரு தனித்து விடப்பட்ட ஆளரவம் இல்லாத  பகுதி. இரவு உணவுக்கு அழைப்பு விடுக்கிறார் விடுதியின் காப்பாளர், அவரின் தாயார் ஊர் பேர் தெரியாதவரோடு சேர்ந்து உணவருந்த மறுக்கிறார், இந்த உரையாடலை கதாநாயகி கேட்க நேரிடுகிறது. இரவு விருந்தில் கதாநாயகியும் விடுதி காப்பாளரும் கலந்து கொள்கிறார்கள், தன் தாயின் பேச்சுக்காக மன்னிப்பு கோருகிறார் காப்பாளர். பின்பு தன் அறைக்கு திரும்புகிறார் கதாநாயகி, அவளின் நடவடிக்கையை அறையில் உள்ள துளை வழியாக காப்பாளர் நோட்டமிடுகிறார். அவள் தான் திருடி வந்த பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு குளிக்கச் செல்கிறாள். ஷவரில் குளித்துக் கொண்டிருக்கும்போது அவள் கொல்லப்படுகிறாள். காட்சியின் இறுதியில் விடுதியின் பின்புறம், ஐயோ அம்மா, ரத்தம் ரத்தம் என விடுதி காப்பாளன் கத்துகிறான். விடுதிக்குள் ஓடி வருகிறான் அங்கு கதாநாயகியின் சடலத்தை காண்கிறான், சிந்தியிருந்த ரத்தத்தை துடைத்து அவளுடைய எல்லா பொருட்களையும் எடுத்து அவள் வந்த காரிலேயே நிரப்பி காரை பக்கத்திலுள்ள  ஒரு ஓடையில் மூழ்க செய்கிறான்.

அலுவலகப்பனத்தை கைப்பற்ற துப்பறியும் நிபுணர் ஒருவர் கதாநாயகியை பற்றி விசாரித்துக்கொண்டு விடுதிக்கு வருகிறார், அவரும் அவளை போலவே கொல்லப்படுகிறார். பின்பு கதாநாயகியின் காதலனும் அவளுடைய தங்கையும் உள்ளூர் காவல் அதிகாரி மூலம் விடுதியின் காப்பாளனின் தாய் 10 வருடங்களுக்கு முன்னதாகவே இறந்த செய்தி அறிகிறார்கள், மேலும் நேரடியாக  விடுதிக்கு சென்று கதாநாயகிக்கு என்ன நேர்ந்தது என அறிய திட்டமிடுகிறார்கள். அங்கு விடுதியின் காப்பாளன் தன் தாயின் சடலத்தை 10 வருடங்களாக  பாதுகாத்து வருவதும், அவளைப் போலவே இவன் உடை அணிந்து, தன் தாயாகவே மாறி கொலை செய்வதும் தெரிய வருகிறது. ஒரு பெரிய போராட்டதிற்கு பிறகு விடுதி காப்பாளன் கைது செய்யப்படுகிறான்.

விடுதிகாப்பாளன் தந்தை இறந்த பிறகு, அவனும் அவனுடைய தாயும் தனியாக வாழ்கிறார்கள், தாயின் மேல் மிகுந்த பாசத்தோடு வளர்கிறான் இதற்கிடையில் அவளுடைய தாய் ஒரு நபரிடம் காதலில் விழ, தன் பாசத்தையும் அன்பையும் பங்கு போட ஒருவன் வந்ததை பொறுக்க முடியாமல் தாயையும் அவளின் காதலனையும் கொன்றுவிடுகிறான். அவள் இறந்ததை மறைத்து அவளின் உடலை பாதுகாத்து அவளுடனே வாழ்ந்து வருகிறான், சில சமயங்களில் அவனே அவனின் தாய் போல உடை அணிந்து தனக்கு தானே பேசிக்கொள்வான். இவ்விதம் மருத்துவர் அவனின் மனநோயினை பற்றி ஆய்ந்தரிகிறார். சிறையில் விடுதிக் காப்பாளன் தன் தாயினைப் பற்றிய சிந்தனையில் இருப்பது போல கதை முடிகிறது.

சைக்கோ திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் ஹிட்ச்காக் தனது நகைச்சுவை மற்றும் திகிலூட்டும் திரைப்படங்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார். ஆனால் சைக்கோ திரைப்படம் அவரை மற்றொரு பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றது. சினிமா ரசிகர்களை உலுக்கிக் கலக்கிய ஒரு உலகுக்கு அழைத்து சென்றவர் ஹிட்ச்காக்.

சைக்கோ திரைப்படம் இன்றளவும் பேசப்பட்டு ரசிகர்களை ஆட்டிப்படைத்து அச்சுறுத்தி வருகிறது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள். சைக்கோ திரைப்படம் வெளியான 1960 ஆம் ஆண்டு ஹிட்ச்காக்குக்கு வயது 60. ஹாலிவுட்டின் புகழ் உச்சியில் அவர் இருந்த காலகட்டம்.

அந்தப் படம் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் வித்தியாசமாக இருந்தது. இவ்வளவுக்கும் அந்தப் படம் ஒரு சாதாரண கதையை அடிப்படையாக வைத்து கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருந்தது. படத்தின் கதாநாயகி ஜேனட் லே குளியல் அறையில் கொலை செய்யப்படும் சம்பவம் ரசிகர்களை உறையவைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பேசாப் படங்களில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய ஹிட்ச்காக். அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சத்தில் இருக்கும் ரசிகர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் நிபுணராக இருந்தார். அந்த சமயத்தில் அவர்களின் உணர்வலைகளுடன் எப்படி சிறப்பாக விளையாடுவது என்பதில் அவர் வல்லவராக இருந்தார். இந்தப் படம் 1998 இல் மறுபடியும் அதே திரைக்கதையில் ரீ மேக்  செய்யப்பட்டது.

இந்தப் படத்தின் மிகப் பிரபலமான, கதாநாயகியின் குளியலறை கொலைக்காட்சியின் காணொளி உங்கள் பார்வைக்கு… 

மழலைகள் என்றாலே எல்லோர்க்கும் பிடிக்கும். எனக்கு கொஞ்சம் கூடவே பிடிக்கும், பெண் குழந்தைகள் என்றால் மேலும் கூடுதல் பிரியம், எனக்கு குழந்தை பிறக்கும் முன்பே அது பெண் குழந்தையாகத் தான் இருக்கும் என்று ஆதிரை என்று பெயரே வைத்துவிட்டேன். ஆதி என்று செல்லமாக அழைக்கவும் ஆரம்பித்துவிட்டேன், ஆனால் பையனாக  பிறந்துவிட்டான். ஆதி என்ற பெயரை விட மனமில்லாமல் ஆதித்த கரிகாலன் என்று பெயர் மாற்றம் செய்ய, அதையும் என் மனைவி சுருக்கி ஆதித்தன் என்று வைத்து விட்டாள்.  இன்னும் மூன்று மாதத்தில் எனது இரண்டாவது குழந்தையை  எதிர்பார்த்து  காத்திருக்கும் எனக்கு இன்னும் பெண் குழந்தைகளின் மேல் உள்ள மோகம் குறையவே இல்லை, என் எதிர்பார்ப்பு இந்த முறையாகிலும் நிறைவேறும் என எதிர்பார்கிறேன்.  இந்தக் கானொளியில் இருக்கும் குழந்தையை பார்க்கும் போது என் குழந்தயின் மழலை பேச்சு எல்லாம் நினைவுக்கு வருகிறது. வாழ்கையின் வசந்த காலமே குழந்தைகளோடு நாம் இருக்கும் தருணங்கள் தானே… இந்த மழலை  அவளுடைய அப்பா சொல்லும் கதைக்கு ஏற்றவாறு  முகபாவங்களையும், குரல் ஓசைகளையும் கொடுத்த விதம், உண்மையில் மனதை கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்திருந்தது. இந்த காணொளியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன், கண்டிப்பாக உங்களுக்கு உங்கள் குழந்தைகளின் மழலை பேச்சுகள் ஞாபகத்திற்கு வரும் பாருங்களேன்…