150 கோடியில் திரைப்படம் தயாரிக்கும் நிலையில் இருக்கும் இன்றைய தமிழ் திரையுலகம் முதன்முதலில் எங்கு ஆரம்பித்தது, யார் ஆரம்பித்து வைத்தது என்பதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த இடுகை  தமிழ் திரையுலகின் முதல் தயாரிப்பாளர் நடராஜ முதலியார் பற்றியது. திரைப்பட நடிகர் மோகன்ராமன் அவர்களின் FACEBOOK ல் இது பற்றிய ஸ்கேன் செய்யப்பட்ட பத்திரிகை செய்தியை சில நாட்களுக்கு முன் பார்த்தேன். பார்த்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நடராஜ முதலியார் பற்றிய பேட்டி இயக்குனர் ஸ்ரீதர் நடத்திய சித்ராலயா என்ற இதழில் 1970ம் ஆண்டு வெளியானது. 1936 ம் ஆண்டு நடராஜ முதலியார் பற்றிய ஒரு செய்தி அன்றைய மெயில் பத்திரிகையில் வெளியாகி இருந்ததாம், இந்த பழைய பத்திரிகை செய்தியை ஸ்ரீதர் பார்க்க நேர்ந்து அது பற்றிய செய்தியை சித்ராலயாவில் வெளியிட நடராஜ முதலியாரின் பேட்டி எடுத்து இருக்கிறார்கள்.

 

இவர் முதன்முதலில்  1916 ம் வருடம் கீசகவதம் என்ற படத்தை 35 நாட்களில் எடுத்திருக்கிறார். திரைப்பட துறைக்கு வருவதற்கு முன் இவர் மவுண்ட்ரோட்டில் மோட்டார் கார் வியாபாரம் செய்து கொண்டிருந்தார், பிறகு இதை சிம்சனிடம் விற்றுவிட்டதாக தகவல். கலையார்வம் மிகுந்த இவர் ஒளிப்பதிவின்  மேல் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார் அதனால் கர்சன் பிரபுவின் தர்பாரில் படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளரான ஸ்மித் என்பவறின் அறிமுகம் கிடைக்க அவர் மூலமாகவே கையால் ராட்டை போல சுழற்றி படம் பிடிக்கும்  காமிராவை இயக்கக் கற்றார்.  படமெடுக்க நன்கு கற்ற பிறகு படப்பிடிப்பு சாதனங்களை வாங்கினார், அந்நாளில் பிலிம் லண்டனில் இருந்தே வரும் பம்பாயில் கொடாக் நிறுவனத்தில் ஒரு நல்ல பதவியில் இருந்த கார்பெண்டர் என்பவர் மூலம் நடராஜ முதலியார் தனக்கு வேண்டிய பிலிம் சுருள்களை பெற்றதாக பேட்டியில் தெரிவிக்கிறார்.

 

இவர் தயாரித்த படங்களில் இவர் தான் இயக்குனர், ஒளிப்பதிவாளர். பிலிம் கழுவ ஒரு நபரையும், இவருக்கு உதவிக்காக  மற்றொருவரையும்  வேலையில் அமர்த்திக்கொண்டார். அக்காலத்தில் குளிர்சாதன வசதி இல்லாத காரணத்தினால்  லேபராட்ரியை பெங்களூரில் வைத்துகொண்டார். படப்பிடிப்பு சென்னை கீழ்பாக்கத்தில் நடக்குமாம்.  நாடகங்களில் நடிப்பவர்களை இவர் திரைபடத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். அப்படியும் நடிப்பதற்கு பெண்கள் வரமாட்டார்களாம், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கூட படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் இவருடைய திரௌபதி வஸ்த்ராபுராணம் என்ற படத்தில் நடிக்க ஒரு ஆங்கிலேயப் பெண்ணை திரௌபதியாக நடிக்க வைத்தாராம்.

 

திரௌபதி வஸ்த்ராபுராணம்,  கீசகவதம், லவகுசா, ருக்மணி சத்யபாமா, மார்கண்டேயா, காலிங்க மர்த்தனம் ஆகிய ஆறு படங்களை நடராஜ முதலியார் தயாரித்திருக்கிறார். படத்தை இங்கே வெளியிட்டதல்லாமல் வடநாட்டிற்க்கும் விநியோக உரிமை கொடுத்திருக்கிறார். 

பேட்டி எடுக்க சென்ற போது நடராஜ முதலியார் சென்னை அயனாவரத்தில் ஒரு சிறிய இடத்தில் வறுமையில் பிடியில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

பின்னூட்டங்கள்
  1. படைப்பாளி சொல்கிறார்:

    அருமையானத் தகவல்..அந்த தமிழனை நினைத்து பெருமையடைகிறேன்..

  2. karthikeyan சொல்கிறார்:

    நல்ல தகவல் .. நன்றி

  3. எஸ். கே சொல்கிறார்:

    புதிய தகவல்! அவரை நினைத்தால் பெருமையாக உள்ளது!

  4. thozhilnutpam சொல்கிறார்:

    மிகவும் அருமையான தகவல்!

  5. prajaraman சொல்கிறார்:

    offbeat பதிவு, முயற்சிக்கு நன்றி கடைசி வரிகள் மனதை உரசிப்பார்த்தது! அது என்னமோ! நம் நாட்டில் சோதனை செய்து பார்க்கும் திறனாளர்களின் முடிவு காலம் வறுமையைதான் சந்திக்க வேண்டும் போல!

பின்னூட்டமொன்றை இடுக