OSCAR 2014 – கிராவிட்டி ( GRAVITY )

Posted: பிப்ரவரி 26, 2014 in ஆஸ்கார் 2014
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Gravity

ஆஸ்கரில் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிராவிட்டி, இதுவரை வந்திருக்கும் முப்பரிமான படங்களில் தவிர்க்கமுடியாத ஒரு படம், ஆங்கிலத்தில் டெக்னிக்கல் எக்ஸ்சலன்ஸ் என்ற சொல்லுக்கு தகுதியான இந்த வருட ஹாலிவுட்டின் ப்லாக் பஸ்டர் படம். ஏற்கனவே ஆஸ்கர் படங்களில் ஆல் இஸ் லாஸ்ட் என்ற படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுத்த படத்தை பற்றி பார்த்தோம், இது அந்த வரிசையில் இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் எதிர்பாராத விதமாக விண்வெளிக் கழிவுகள் எற்படுத்தும்  விபத்தினால் அவர்களின் விண்வெளி ஓடம் பழுதடைந்துவிடுகிறது. இதன் காரணமாய் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் அருகில் பல  கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் உட்பட  பாழாகின்றன. புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் படத்தின் நாயகி ரேயான் (சாந்த்ரா புல்லக்) தவிர மற்றவர்கள் அனைவரும் இறந்து விடுகின்னர். தான் வந்த விண்கலமும், பூமியைத் தொடர்பு கொள்ளத் தேவையான தொலைத்தொடர்பு சாதனங்களும் சேதமாகியிருக்க, செய்வதறியாது உயிர் வாழ வேண்டும் என்ற உந்துதலில் போராடி, ஒரு கட்டத்தில்  தற்கொலை முயற்சிக்கும் முயன்று பின்னர் கடின போராட்டத்திற்குப்பின் இறுதியில் பூமிக்குத் திரும்பி வருகிறார் கதாநாயகி

Sandra-Bulluck

இப்படத்தை சாதாரண வடிவில் அதாவது முப்பரிமான படமாக பார்க்காவிடில் வெகு சாதாரணமாகவெ தோன்றும், ஆதலால் பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் தயவுசெய்து இப்படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பது நல்லது. கதையை ஒருவரியில் சாதாரணமாக சொல்லிவிடலாம். ஆனால், கதையின் கட்டமைப்பு, கலைவடிவம் தான் பிரமிப்பு. வானம் சுழல்வது போன்ற காட்சி, நம்மை நோக்கி ஓர் சிறிய கல் வருவதுபோல் தோன்ற, அருகே வரவர கல் ஒரு மனிதனாக மாறி காட்சியளிக்கிறது. இருக்கையின் நுனிக்கே வரவழைத்துவிடும் முதல்காட்சியின் பிரம்மாண்டம். இதுபோல படத்தில் பல காட்சிகள்.

சிறந்த திரைப்படம் ( Best Picture)

சிறந்த கதாநாயகி ( Best Actress in a Leading Role )

சிறந்த படப்பதிவு ( Best Cinematography )

சிறந்த இயக்கம் ( Best Direction )

சிறந்த படத்தொகுப்பு ( Best editing )

சிறந்த பாடல் (best original score )

சிறந்த கலை ( Best Production Design )

சிறந்த ஒலித்தொகுப்பு ( Best Sound Editing )

சிறந்த ஒலி சேர்ப்பு ( Best Sound Mixing )

சிறந்த விஸ்வல் எபக்ட்ஸ் ( Best Visual Effects ) என்ற 10 பிரிவுகளில் ஆஸ்கரில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிராவிட்டி படம் விஸ்வல் எபக்ட்ஸ், கலை போன்ற பிரிவுகளில் விருதுகளை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி சிறந்த படம், கதாநாயகி, படப்பதிவு பிரிவுகளில் கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

the-croods

ஆஸ்கரில் உயிரோவிய(Animation) பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முப்பரிமான உயிரோவிய திரைப்படமான தி க்ரூட்ஸ், புகழ்பெற்ற ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 20த் சென்சுரி பாக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

கற்க்காலத்தில் தொடங்குகிறது கதை, ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம், குடும்பத்தலைவன் க்ரக் ஒரு பழமைவாதி, புதிய சிந்தனை என்பதே தவறு, புது சிந்தனைகள் என்பது இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் என்பது அவன் கருத்து. பிரச்சினை வரும் போதெல்லாம் குகைக்குள் சென்று நாட்கணக்கில் பதுங்கியிருப்பதுதான் அவன் வாடிக்கை. அவனுக்கு நேரெதிர் அவனது மகள் ஈப், அவள் ஒரு புதுமை விரும்பி, புது விசயங்களைத் தேடிச் செல்பவள். இதனால் இவர்கள் இருவருக்கிடையில் அடிக்கடி வாக்குவாதம் நடைபெறும், ஒரு நாள் குகைக்குள்  பதுங்கியிருக்கும்போது ஒரு ஒளி நகர்வதை பார்த்து குகைக்குள் இருந்து வெளியே வருகிறாள் ஈப். அப்போது தீயை முதன் முதலில் கண்டு ஆச்சர்யமடடைகிறாள், அதை உண்டாகிய கய் என்பவனிடம் நட்பு பரிமாறிக் கொள்கிறாள், அவன் மூலமாக அப்பகுதி நிலநடுக்கம் மற்றும் எரிமலையால் பாதிக்கப்படும் என்று அறிகிறாள். மேலும்  தன்னை தொடர்பு கொள்ள சங்கு போன்ற ஒரு இசைக் கருவியை கொடுத்துவிட்டும் செல்கிறான்  கய்

குகைக்குள் இருந்து தனியே வெளியே சென்றதற்காக க்ரக், ஈப்பை கடிந்து கொள்கிறார், தான் சந்தித்த நபர் பற்றியும், அவன் தீ செய்யத் தெரிந்தவன் என்பதையும், அவன் ஒரு புதுமைவிரும்பி என்றும் அவனைப் பற்றிய எல்லா விசயங்களையும் சொல்கிறாள், இந்நிலையில் அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறது குடும்பம், சங்கை முழங்க செய்து ஈப், கய்யை வரவழைகிறாள்.

அதன்பிறகு  கய், க்ரக் குடும்பத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றி, ஒரு புது இடத்திற்கு அழைத்து செல்வதே கதை. க்ரக், கய் இருவருக்குமிடையே உள்ள கருத்துவேறுபாடு நீங்கி புது முயற்சி தான் வாழ்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோகும் என்று க்ரக் உணர்வதாக முடிகிறது படம்.

க்ரக் கதாபாத்திரத்திற்கு நிக்கோலஸ் கேஜ் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். நல்ல திரைக்கதையோடு, 3D படங்களுக்கே உண்டான வண்ணமயமான காட்சி அமைப்புகளோடு, நகைச்சுவையும் கலந்த ஒரு அட்வெண்சர் படமான தி க்ரூட்ஸ் ஆஸ்கரில் உயிரோவிய(Animation) பிரிவில் நல்ல போட்டியைக் கொடுக்கும், டிஸ்னியின் ப்ரோசண் படத்திற்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு கருத்து நிலவுவதால் க்ரூட்ஸ்கு வெற்றி கிட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இப்படம் வெளியாவதற்கு முன், ட்ரீம்வொர்க்ஸ் கடுமையான நிதி பற்றாக்குறையை சந்தித்துக் கொண்டிருந்தது, பல உயிரோவியக் கலைஞர்களை பனி நீக்கம் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகி போயிருந்தது, அதிர்ஷ்டவசமாக க்ரூட்ஸ்கு கிடைத்த வரவேற்ப்பில் 583 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டி ட்ரீம்வொர்க்ஸ்சின் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவியது, மேலும் இது சென்ற ஆண்டின் 6வது மிகப் பெரிய வசூலாக அறியப்படுகிறது.

OSCAR 2014 – தி வுல்ப் ஆப் வால்ஸ்ட்ரீட் ( THE WOLF OF WALL STREET )

Posted: பிப்ரவரி 24, 2014 in ஆஸ்கார் 2014
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

TheWolfofWallStreet

5 ஆஸ்கர் பரிந்துரைகளில் உள்ள இப்படத்தின் பெயரைக் கேட்டவுடன் தெரிந்திருக்கும் இது பங்குசந்தையை களமாக வைத்து பின்னப்பட்ட கதையென்று. ஜோர்டான் பெல்போர்ட்  என்ற பங்குசந்தை தரகரின் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பபட்டதே தி வுல்ப் ஆப் வால்ஸ்ட்ரீட்.  ஏற்கனவே ஜோர்டானின் கதையைக் கருவாக வைத்து பாய்லர் ரூம் என்று 2000ம் ஆண்டு ஒரு படம் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பங்குசந்தை நிறுவனம் ஒன்றில் அடிப்படை வேலை ஒன்றில் இணையும் ஜோர்டான் பெல்போர்ட், தனது மேலதகரியாக வரும் மேத்யூ மெக்காணகேயின் சித்தாந்தமான ஆடம்பர வாழ்கை, போதைப் பொருள் உபயோகித்தல், தற்செயலான பாலுறவு போன்றவைகளின் மேல் ஈர்ப்படைகிறான் மேலும் அவரிடம் பங்குபரிவர்த்தனைகள் பற்றிய அடிப்படைகளையும், விற்கும் முறையையும் கற்க்கிறான். பங்குகளை விற்பதற்க்கு தகுதியுடையவனாக தேர்ச்சியடைந்து முதல்நாளில் வேலையைத் தொடங்கும்போது கறுப்புத் திங்கள் என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் வரலாறு காணாத பங்குசந்தை வீழ்ச்சியில் ஜோர்டானின் நிறுவனம் திவாலாகிறது, அதனால் வேலையை இழக்கிறான்.

இந்நிலையில் ஒரு சிறிய பென்னிஸ்டாக்ஸ் விற்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறான், பென்னிஸ்டாக்கில் கிடைக்கும் அதிகத் தரகுப்பணம் ஜோர்டான் பெல்போர்ட்டை கவர்கிறது, தனது பேச்சு சாதூர்யத்தால் பங்குகளை விற்றுக் குவிக்கிறான். இதற்கிடையில் அவனுடைய வீட்டருகில் இருக்கும் டோனி என்பவர் ஜோர்டானுக்கு நண்பராகி பங்குத்தொழிலிலும் இணைகிறார் மேலும் போதைப் பொருள் விற்கும் சில நண்பர்கள், பங்குச் சந்தை பற்றிய அடிப்படை அறிவு இல்லாத சிலருடன் கூடி ஸ்ட்ரடன் ஓக்மண்ட் என்று ஒரு பங்குச்சந்தை நிறுவனம் ஒன்றை தாமே தொடங்குகிறார். நிறுவனத்தின் மூலம் குறைவான விலைக்கு வாங்கிய சாதாரண பங்குகளை தவறான தகவல்களைக் கொடுத்து, அதிக நபர்களை வாங்கச் செய்து அதன் மூலம் பங்குகளின் விலையை தாறுமாறாக ஏற்றம் பெறச்செய்து பங்குசந்தை வரலாற்றில் பம்ப் அண்ட் டம்ப் என்று வர்ணிக்கப்படும் மோசடியை செய்கின்றனர்.

நிறுவனம் அதிக லாபத்தையடைந்து பல முதலீட்டாளர்களை ஈர்க்கிறது, போர்ப்ஸ் பத்திரிகையில் வுல்ப் ஆப் வால்ஸ்ட்ரீட் என்று வர்ணிக்கும் அளவிற்கு புகழடைகிறான் ஜோர்டான் பெல்போர்ட், இதனால் பல இளைய பங்குதரகர்கள் நிறுவனத்தில் இனைய படையெடுத்து வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக போர்ப்ஸ் பத்திரிகையின் கட்டுரை FBIயின் கவனத்திற்கு வந்து ஜோர்டானின் நிறுவனத்தை விசாரிக்க ஆரம்பிக்கின்றனர். ஜோர்டான் தன் முதல் மனைவியை விடுத்து ஒரு மாடல் அழகியை திருமணம் புரிந்து ஆடம்பர வாழ்விலும், போதை மயக்கத்திலும், நண்பர்களுடன் கேளிக்கை விருந்துகளிலும் பணம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் FBIயின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் நிறுவனத்தை இழந்து சிறைக்கு போகிறார். இறுதிக் காட்சியில் ஒரு விற்பனை ஆய்வரங்கில் உலகின் சிறந்த விற்பனையாளர் என்ற அறிமுகத்துடன் பொருட்களை எப்படி விற்பது என்று உரையாற்றுவதாக படம் முடிகிறது.

leonorda-di-caprio

டி காப்ரியோ கதாநாயகனாக நடிப்பில் அசரவைக்கிறார், பங்குகளை விற்கும் காட்சிகள், சக பங்கு தரகர்களிடம் புத்துணர்ச்சி பொங்க பேசும் காட்சிகள், நிறுவனத்தை விட்டுப் போக எத்தனிக்கும் தருணத்தில் ஆற்றும் உரை, போதை மயக்கத்தில் தன் மகிழுந்தை ஒட்டிக்கொண்டு வரும் காட்சி, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு காட்சியிலும் டிகாப்ரியோவின் நடிப்பு நம்மை அசர வைக்கிறது.

எப்போதுமே அசத்தலான நடிப்பையும் அருமையான கதைகளை தேர்வு செய்வதிலும் வல்லவரான டிகாப்ரியோவிற்கு நடிப்பு மற்றும் தயாரிப்பிர்க்கும் சேர்த்து இது 5வது ஆஸ்கர் பரிந்துரை, இதுவரை ஒருமுறை கூட ஆஸ்கர் வாங்காதது இவரது துரதிர்ஷ்டம். சிறந்தப்படத்திற்கான விருது கிடைக்க எவ்வளவு சிரமமோ அதை விட சிறந்த நடிகர் விருதுக்கு மேத்யூ மெக்காணகேயிடம் போட்டி போடவேண்டியிருக்கும் டி காப்ரியோவிற்கு

mathew-mccounaghey

படத்தில், மார்பைத் தட்டிகொண்டே மேத்யூ மெக்காணகே பேசும் காட்சி, உண்மையில் மேத்யூ மெக்காணகே நடிப்பதற்கு ஆயத்தமாவதற்காக செய்யும் ஒரு செயலாம், அதைப் பார்த்த டி காப்ரியோ அதை காட்சியில் வைக்கச் செய்து காட்சிக்கு அழகு செய்திருக்கிறார்.

jordan-belfort

இப்படம் ஒரு உண்மை கதை, உண்மையான ஜோர்டான் பெல்போர்ட், டி காப்ரியோவிற்கு தன் நடத்தை, தான் எப்படி அத்தருனங்களில் நடந்துகொண்டேன் என்பதை விவரித்து பயிற்சி கொடுத்திருக்கிறார்.

ஜோர்டான் பெல்போர்ட்டின் உண்மையான பல கேளிக்கை விருந்துகள் யூ ட்யூப் தளத்தில் காணக்கிடைகின்றன, அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு…

http://www.youtube.com/watch?v=C-Md3sFW4AM

https://www.youtube.com/watch?v=TIEFDWo9yeU

படம் நெடுகிலும் பாலுறவுக் காட்சிகள், போதைப் பொருள் நுகர்வு போன்றக் காட்சிகள் இருப்பதால் கண்டிப்பாக வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக்கூடியதாக உள்ளது, ஆஸ்கரின் பாரம்பரியத்தைப் பார்க்கும்போது இதுபோன்ற படங்கள் பரிந்துரைக்கப் பட்டாலும் பெரும்பாலும் விருது கொடுக்கப்படுவதில்லை. இப்படத்திற்கு சிறந்தப்படம் விருது கிட்டுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

martin-scorsese

மார்டின் ஸ்கார்சீஸ் இப்படத்திற்கான தயாரிப்பிலும், இயக்கத்திலும் விருதுப்பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். இம்முறையுடன் சேர்த்து இதுவரை 12 முறை இவர் பெயர் பரிந்துரைக்கப் பட்டிருந்தாலும், தி டிப்பார்டட் படத்திற்கான இயக்கத்திற்காக ஒரே ஒரு முறை மட்டுமே விருதை வென்று இருக்கிறார்.

jonah-hill

துணை நடிகர் பிரிவில் ஜோனா ஹில் பிரமாதப்படுத்தியுள்ளார், என்னைப் பொறுத்தவரையில் இவருக்கு ஒரே போட்டி டாலஸ் பையர்ஸ் கிளப்பில் நடித்த ஜாரெட் லேட்டோ

ஆக, சிறந்த திரைப்படம் (Best Picture)

சிறந்த நடிகர் (Best Actor in a Leading Role)

சிறந்த துணை நடிகர் (Best Actor in a  Supporting Role)

சிறந்த இயக்கம் (Best Director)

சிறந்த தழுவி எழுதிய திரைக்கதை (Best  Writing – Adapted Screenplay) என்ற ஐந்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது தி வுல்ப் ஆப் வால்ஸ்ட்ரீட்

OSCAR 2014 – நெப்ராஸ்கா ( NEBRASKA )

Posted: பிப்ரவரி 21, 2014 in ஆஸ்கார் 2014
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Nebraska

6 ஆஸ்கர் பரிந்துரைகளில் உள்ள நெப்ராஸ்கா திரைப்படம், ஒரு அப்பாவும் மகனும் மேற்கொள்ளும் ஒரு பயணக்கதை (Road Trip).

மோண்டனா என்ற நகரத்தில் வசிக்கும் கிரன்ட் வுட்டி, கேட் தம்பதிகளுக்கு ரோஸ் மற்றும் டேவிட் என்ற 2 மகன்கள். கிரன்ட் வுட்டி Dementia  என்ற வியாதியால் முதிய பருவத்திற்கே உரிய மறதி, சோர்வாக இயங்குவது போன்ற கோலாறுகளால் பீடிக்கப்பட்டிருந்தார், இந்நிலையில் அவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசாக விழுந்திருக்கிறது என்று நெப்ராஸ்கா புறப்படுகிறார். ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும் இது ஒரு புத்தக விற்பனையாளர் தனது புத்தகத்தின் ஆண்டு சந்தா விற்பனைக்கான வியாபார தந்திரத்திற்க்காக கையாளும் ஒரு வகை யுத்தியென்று. கிரன்ட் வுட்டி குடும்பத்தினர் சொல்வதை நம்ப மறுக்கிறார், ஆதலால் அவருடைய மகன் டேவிட் அவரை தனியே பயணிக்க விடுவதற்கு மனமில்லாமல் அவருடன் பயணிக்கிறான்.

நெப்ராஸ்கா போகும் வழியில் வுட்டி மற்றும் கேட்டின் சொந்த ஊரான லிங்கன் என்ற ஊரில் தங்குகின்றனர், கேட்டும் நடுவில் வந்து இனைந்து கொள்கிறார். அங்கு அவரது உறவினர்கள் மற்றும் பழைய நண்பர்களையும் சந்திக்கிறார், துரதிர்ஷ்ட வசமாக எல்லோரும் வுட்டிக்கு உண்மையில் பரிசு விழுந்து இருப்பதாக நினைத்து பரிசுத் தொகையில் அவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து உதுவுமாறு கேட்கின்றனர். டேவிட் உண்மையை எடுத்துக் கூறியும் யாரும் நம்பவில்லை, இதனால் சில சண்டை சச்சரவுகளையும் சந்திக்கிறான். ஒரு தருணத்தில் மற்றவர்கள் உண்மையை உணர்ந்து வுட்டியை கேலி செய்கின்றனர்.

இப்படியாக பயணத்தைத் தொடர்ந்து பரிசுத்தொகை இல்லை என்று முதியவர் வுட்டிக்கு தெரியவருகிறது, ஆனால் மில்லியன் டாலர் பணம் கிடைக்கும் அதை வைத்து ஒரு பிக்-அப் ட்ரக் மற்றும் தான் தொலைத்த ஒரு ஏர் கம்ப்ரசர் வாங்கவேண்டும் என்ற வுட்டியின் கனவு தகராமல் இருக்க வேண்டும் என்பதற்காக தன் மகிழுந்தை விற்று மகன் டேவிட் அவற்றை வாங்கி தருகிறான். வுட்டியினால் பிக்-அப் ட்ரக் ஓட்ட சட்டப்படி தகுதி இல்லாத போதும் லிங்கன் நகர்பகுதியை நெருங்கும் போது வுட்டியை ட்ரக்கை ஓட்ட செய்து அவ்வூர் மக்கள் வியந்து வுட்டியை பார்க்கும்படியாக கதை முடிகிறது.

எந்த வித படோடபமும் இல்லாமல் ஹாலிவுட் படம் போலல்லாமல் ஒரு உலக சினிமா பார்த்த திருப்தியை கொடுகிறது படம். முதியவர் ஒருவரின் வாழ்வியலை தத்ரூபமாக நம் கண்முன் கொண்டு வருகிறது படம்.

Alexander-Payne

கருப்பு வெள்ளையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இப்படம் இயக்குனர் அலெக்சான்டர் பெயனுக்கு ஆஸ்கரில் 7வது பரிந்துரை, இப்பரிந்துரைகளில் தழுவி எழுதிய திரைக்கதைக்காக 2004, 2011 ஆகிய இரு முறை வெற்றி பெற்றிருக்கிறார். மேலும் நெப்ராஸ்கா திரைப்படம், இவருடைய பிறந்த ஊரான நெப்ராஸ்காவின் பின்புலத்தில் அமைந்த 4வது திரைப்படம்.

Bruce-Dern

படத்தில் முதியவராக வரும் கதாநாயகன் ப்ருஸ் டெர்னுக்கு 2வது பரிந்துரை, முதுமையின் நிஜம் அவர் முகத்தில், நடிப்பில், பாவனையில் தெள்ளத்தெளிவாக பதிவாகியிருக்கிறது. நல்ல போட்டியை இப்பிரிவில் உள்ளவர்களுக்கு இவரின் நடிப்பு கொடுத்திருக்கிறது.

சிறந்த திரைப்படம் (Best Picture)

சிறந்த நடிகர் (Best Actor in a Leading Role)

சிறந்த துணைக் கதாநாயகி (Best Actress in a Supporting Role)

சிறந்த படப்பதிவு (Best Cinematography)

சிறந்த இயக்குனர் (Best Director)

சிறந்த திரைக்கதை ( Best Writing – Original Screenplay) ஆகிய 6 பிரிவுகளில் இப்படம் ஆஸ்கர் போட்டியியில் உள்ளது.

OSCAR 2014 – பிலோமினா ( PHILOMENA )

Posted: பிப்ரவரி 19, 2014 in ஆஸ்கார் 2014
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

philomena

ஆஸ்கரில் 4 பரிந்துரைகளில் உள்ள இத்திரைப்படம் மார்டின் சிக்ஸ்ஸ்மித் எழுதிய தி லாஸ்ட் சைல்ட் ஆப் பிலோமினா லீ என்ற புத்தகத்தை தழுவி பிபிசி பிலிம்சோடு இனைந்து தயாரிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் லேபர் கட்சியில் ஆலோசகராக இருக்கும் பத்திரிகையாளர் மார்டின் சிக்ஸ்ஸ்மித் தனது வேலையை இழந்த நிலையில், ஒரு பெண் 50 வருடங்களுக்கு முன் தனது தாய் பிலோமினாவின் குழந்தையான அந்தோனியை அவளுடைய விருப்பமில்லாமல் தத்து கொடுகப்பட்டதையும் அக்குழந்தை தற்போது எங்கிருக்கிறது என்று ஆராய்ந்து அதுபற்றி எழுதக் கோருகிறாள்.

முன்னதாக 1951ல் தாய்மையடைந்த நிலையில் பிலோமினா அயர்லாந்தில் உள்ள ஒரு ரோமன் கத்தோலிக்க காப்பகத்தில் சேர்கப்ப்பட்டு அங்கேயே மகப்பேறு அடைகிறாள். அங்கு தங்கி குழந்தைப்பெற்றதற்காக 4 வருடத்திற்கு அந்தக் காப்பகத்திலேயே தங்கியிருந்து லாண்டரி வேலைகளை செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தாள். ஒரு நாளில் ஓரிரு மணிகள் மட்டுமே இவளைப் போன்றப் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் இருக்க அனுமதிக்கப்பட்டனர். அக்காப்பகத்தின் குழந்தைகள் பல தாய்களின் விருப்பத்திற்க்கு மாறாக தத்து கொடுகப்படுகின்றனர். பிலோமீனாவின் குழந்தை அந்தோனியும் இப்படி தத்து கொடுக்கப்படுகிறான்.

இவ்வாறு முன்கதை இருக்க, தற்போது சிக்ஸ்ஸ்மித்தும், பிலோமீனாவும் காப்பகத்திற்க்கு சென்று குழந்தையைப் பற்றி விசாரிக்க, பிலோமீனா குழந்தை தத்து கொடுத்த விவரத்தையும் அவளின் குழந்தை பற்றிய எந்த விவரத்தையும் கேட்க மாட்டேன் என்று கையொப்பமிட்டு கொடுத்திருப்பதால் அது பற்றி விசாரிக்க வேண்டாம் என்றும் மற்றபடி பழைய கோப்புகள் யாவும் ஒரு தீ விபத்தில் அழிந்து விட்டதால் அவர்களுக்கு உதவமுடியாது என்றும் காப்பக முதன்மை அதிகாரி கூறுகிறார். ஆனால் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் பல அமெரிக்க வாழ் மக்களுக்கு தத்து கொடுக்கப்பட்டிருப்பது சிக்ஸ்ஸ்மித்துக்கு தெரியவர, அவரும் பிலோமீனாவும் அமெரிக்காவிற்கு பயணிக்கின்றனர். அங்கு அந்தோணி அமெரிக்க ஜனாதிபதி ரீகனுக்கும், ஜார்ஜ் புஷ்சுக்கும் ஆலோசகராக மைக்கேல் என்ற பெயரில் வாழ்ந்து இறந்து போய்விட்டதை அறிகின்றனர்.

மனம் நொந்த நிலையில் பிலோமீனா, தன் மகன் எப்போதாவது தனது தாய் மற்றும் பிறந்த மண்ணை நினைத்து பார்த்தானா என்பதை அறிய மீண்டும் மைக்கேல் என்ற அந்தோனியின் உறவினர்கள், நண்பர்களை சந்திக்கிறாள். பல தடைகளுக்குப் பிறகு பிலோமீனாவிற்கு, அந்தோனி அயர்லாந்து சென்று காப்பகத்தில் தன் தாய் பற்றி விசாரித்து அங்கு தான் ஒரு கைவிடப்பட்ட குழந்தை என்று அவர்கள் கூறியதைத் தொடர்ந்து தான் இறந்தபிறகு அந்த காப்பகத்திலேயே தன்னை புதைக்கவேண்டுமென்ற அவரது விருப்பம் நிறைவேறியதையும் அறிகிறாள்.

படத்தின் இறுதியில் சிக்ஸ்ஸ்மித்தும், பிலோமீனாவும் காப்பகத்திற்க்கு சென்று அந்தோணியின் கல்லறையில் அஞ்சலி செலுத்துகிறார்கள். முன்னதாக சிக்ஸ்ஸ்மித்திடம் இக்கதையை எழுத்து வடிவில் புத்தகமாக வெளியிட வேண்டாம் என்று சொன்ன பிலோமீனா, காப்பகத்தில் நடந்த கொடுமைகள் எல்லோருக்கும் தெரியவேண்டும் ஆதலால் புத்தகத்தை வெளியிட அனுமதிக்கிறேன் என்று கூறுவதாக கதை முடிகிறது.

கதையில் மார்டின் சிக்ஸ்ஸ்மித் கதாபாத்திரம் நாத்திகக் கருத்துகள், பருவத்தில் வரும் காமக்கிளர்ச்சி பற்றியும் பிலோமினாவுடன் பகிரும் விவாதக்காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.

judi-dench

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் M  கதாபாத்திரத்தில் நடித்து நமக்கு பரிட்சயமான ஜூடி டெஞ்ச் இப்படத்தின் கதாநாயகியாக ஒரு தாயின் உள்ளக்குமுறல்களை வெளிக் கொணர்ந்து செம்மையாக நடித்திருக்கிறார். இவருக்கு இப்படத்தின் மூலம் ஆஸ்கர் விருது வெல்வதில் வாய்ப்பு உள்ளது, இருப்பினும் ப்ளூ ஜாஸ்மின் கதாநாயகி கேட் ப்ளான்சட், மெரில் ஸ்ட்ரிப் ஆகியவர்களுடன் கடுமையான போட்டியை சந்திப்பார்.

சிறந்த திரைப்படம் (Best Picture)

சிறந்த கதாநாயகி  (Best Actress in a Leading Role)

சிறந்த இசை (Best Original Score)

சிறந்த தழுவி எழுதப்பட்ட திரைக்கதை (Best Adapted Screenplay) என்ற 4 பிரிவுகளில் ஆஸ்கரின் பரிந்துரையில் உள்ளது.

ஆஸ்கரில் 5 பரிந்துரைகளில் உள்ள ஹெர் திரைப்படம் ஒரு விஞ்யானக்(sci-fiction) காதல் கதை

3bf2e981

தியோடர் டவாம்பலி  தனிமையான யாருடனும் நெருங்கிப் பழகாத ஒரு மனிதன். உணர்வுகளை சரியாக பகிர்ந்து கொள்ள முடியாதவர்களுக்கென்று அவர்கள் சார்பாக கடிதம் எழுதும் பணியில் ஹேன்ட்ரிட்டன்.காம் எனும் நிறுவனத்தில் பனிபுரிந்து கொண்டிருகின்றான். விவாகரத்தை எதிர்கொண்டிருக்கும் தியோடர் கனினியில் ஆர்டிபிசியல்  இன்டெலிஜென்ஸ் தொழில் நுட்பத்தில் மனிதனைப் போல சிந்திக்கவும் செயல்படவும் திறன் கொண்ட ஒரு ஆபரேடிங் சிஸ்டத்தை வாங்குகிறான். முதலில் அதை உபயோகிக்க ஆரம்பிக்கும்போது கணினி சில கேள்விகளை அவனிடம் கேட்கிறது அதற்கு பதிலளித்து தனது ஆபரேடிங் சிஸ்டத்துக்கு ஒரு பெண்ணின் குரலையும் சமந்தா என்ற பெயரையும் தேர்வு செய்கிறான்.

தானே சிந்தித்து செயல்படும் சமந்தாவின் அருகாமை தியோடருக்கு இதமாக அமைகிறது. பெரும்பாலான பொழுதை சமந்தாவிடமே கழிக்கிறான்.  நல்ல ஆலோசனைகளையும்,  அவனுடைய சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறி அவனை குதூகளிக்க வைக்கிறது மேலும்  தியோடருக்கு தெரியாமலே அவன் எழுதிய கடிதங்களின் தொகுப்பை புத்தகமாக போட உதவுகிறது. ஒரு தருணத்தில் சமந்தா தியோடரை காதலிப்பதாக கூறுகிறது. தியோடரும் சமந்தாவும் கற்பனையாக ஒரு வாழ்கையை வாழ ஆரம்பிகிறார்கள்.

கருத்தரிக்க முடியாத பெண்களுக்கு வாடகைத் தாய் இருப்பார்களே அது போல, உடல் இல்லாத தனக்கு ஒரு வாடகை உடம்பை தேர்வு செய்து தன் உணர்வுகளைப் பகிர்ந்து தியோடரிடம் உடலுறவு கொள்ள ஆசைப்படும் சமந்தா ஒரு பெண்ணின் துனையை நாடுகிறது, வலைதளம் போன்ற ஒரு அமைப்பில் இயங்குவதால் இதை சாத்தியமாகுகிறது சமந்தா. இசபெல்லா என்ற பெண்ணின் விருப்பத்தோடு தன் உணர்வுகளை அவளுள் புகுத்தி அவருடன் உடலுறவு கொள்ள செய்கிறது. ஆனால் தியோடருக்கு இசபெல்லாவை சமந்தாவாக என்ன இயலவில்லை இதில் அவர்களுக்கிடையில் சில கருத்துவேறுபாடு வருகிறது . இப்படி போய்க்கொண்டிருக்கும் போது தியோடருக்கு சமந்தா மற்ற பலருடனும் தன்னிடம் பழகுவது போல பழகுகிறாள் என்று தெரியவருகிறது. ஒரு கட்டத்தில் சமந்தா மனிதர்களின் எண்ணங்கள் உணர்வுகள் தங்களைப் போன்ற ஆபரேடிங் சிஸ்டங்களுக்கு  ஈடு கொடுக்க முடியவில்லை ஆதலால் நாங்கள் உங்களை விட்டுப் போகிறோம் என்று கூறி தியோடரை விட்டு பிரிகிறது.

உண்மையில் இது ஒரு நவீன விஞ்யான கதையாக இருந்த போதும் ஒரு இயந்திரம் அதுவும் ஸ்பீல்பெர்க் படமான ஆர்டிபிசியல்  இன்டெலிஜென்சில் உள்ளது போல மனித உருவ ரோபாக்களாகக் கூட இல்லாமல் வெறும் கணினித் திரையையும், கணினியின் குரலையும் வைத்து உணர்வு பூர்வமாக ஒரு பெண்ணை பார்வையாளரான நமக்கு உணர வைக்க முயல்கிறது கதை.

விந்தையாக இருந்தாலும் நம்மில் பலர் கனவுகளிலேயே வாழ்க்கை நடத்தும்போது இது ஒன்றும் நடக்க முடியாத ஒன்று என்று கூருவதற்க்கில்லை. மனதோடுப் பேசி வாழும் மனிதனுக்கு பதில் இயந்திரத்தோடு பேசி வாழ்வது போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது

கிலேடியேட்டரில் வில்லனாக நடித்து நமக்கு ஏற்கனவே பரிட்சயமான  ஜாக்கின் பீனிக்ஸ் மட்டுமே பெரும்பாலும் திரையை ஆக்ரமிக்கிறார், அவ்வப்போது அவரை சுற்றி சிலர் (ஆமி ஆதம்ஸ் உட்பட) வந்து போகின்றனர் படத்தில் தியோடர், சமந்தாவுடன் டேட்டிங் போகும் காட்சி கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தாலும் நல்ல ரசனையான காதல் காட்சியாகவும் இருக்கிறது.

nominados-oscar-2014

சிறந்தத் திரைப்படம் (Best Picture)

சிறந்த இசை (Best Achievement in Music-Original Score)

சிறந்த பாடல் (Best Achievement in Music-Original Song)

சிறந்த கலை (Best Achievement in Production Design)

சிறந்த திரைக்கதை (Best  Writing in Original Screenplay)  என்று 5 பரிந்துரைகளில் உள்ள இப்படம் எல்லாப் பிரிவுகளிலும் கடுமையான போட்டியைச் சந்திக்கும் என்றே நினைக்கிறேன்.

bad-grandpa

ஆஸ்கரில் சிறந்த முக மற்றும் சிகை அலங்காரத்திற்கானப் பிரிவில், பரிந்துரையில் உள்ள இப்படத்தில்  ஜானி நாக்ஸ்வில் மோசமான 86 வயது தாத்தாவாகவும், ஜாக்சன் நிக்கல் அவருடைய 8 வயது பேரனாகவும் நடித்திருக்கின்றனர். முன்னர் வந்த ஜேக்ஆஸ் படங்களைப் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும் இது காட்சியில் தோன்றும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அவர்கள் அறியாமல் தத்ரூபமாக கொடுக்கப்படும் உண்மையான ரீயாக்சன்களை படப்பதிவு செய்யும் காண்டிட் கேமரா வகையான படப்பதிவு மூலம் தொகுக்கப்பட்டிருக்கும் திரைப்படமென்று.

இர்விங் என்ற 86 வயது முதியவர், தனது மனைவியின் ஈமச்சடங்கு நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போது அவரது மகள் மூலம் அவரது 8 வயது பேரனுக்கு தற்காலிக காப்பாளர் ஆகிறார். இர்விங்கின் மகளின் வேண்டுகோளின்படி பேரன் பில்லியை அவனது தந்தை சக் என்பவரிடம் ஒப்படைக்க நெப்ராஸ்காவிலிருந்து நார்த் காரலினாவிற்கு அழைத்துச் செல்லும் வழியில் நடைபெறும் சம்பவங்களின் கோர்வையே பேட் க்ரான்ட்பாவின் கதை.

klnoxville

முதியவராக வரும் ஜானி நாக்ஸ்வில், பில்லியாக வரும் ஜாக்சன் நிக்கோலும் அசத்தி இருக்கிறார்கள், நீங்கள் அடல்ட் ஜோக் வகை படங்களை ரசிப்பவர்களாக இருந்தால் படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இல்லையெனில் தயவுசெய்து இந்தப் படத்தை தவிர்ப்பது நல்லது.

முகம் சுளிக்கும் வகையில் சில காட்சிகளில் அருவெருப்பாகவே திரைக்கதை அமைந்திருக்கிறது, முதியவர் ஸ்ட்ரிப் டான்சராக கிளப் ஒன்றில் ஆட்டம் போடுவது அருவெருப்பின் உச்சகட்டம். முதியவரின் காட்சிகளைத் தவிர்த்து சிறுவனின் காட்சியமைப்பு சிரிப்பை வரவழைக்க தவறவில்லை உதாரணத்திற்கு சிருமியாக வேடமிட்டு ஆடும் காட்சியிலும், சாலையில் போவோர் வருவோரை நீங்கள் என்னை சுவீகரித்து மகனாக ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்கும் காட்சிகளையும் சொல்லலாம்.

இப்படத்தை ஆஸ்கரின் பரிந்துரைப்பட்டியலில் சேர்த்திருப்பது ஆஸ்கரின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கக் கூடியது என்பது சில சினிமா விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. ஆனாலும் ஆஸ்கரை பொறுத்தவரையில் முக மற்றும் சிகை அலங்காரத்திற்கானப் பிரிவில் இப்படம் விருது வென்றால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை, நாக்ஸ்வில்லிர்க்கு அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கிறது மேக்கப். மற்றபடி  டாலஸ் பையர்ஸ் கிளப்பில் நடித்த மேத்யூ மெக்கானகேயின் மேக்கப் நாக்ஸ்வில்லின் மேக்கப்பிற்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும். 

OSCAR 2014 – 12 இயர்ஸ் எ ஸ்லேவ் ( 12 YEARS A SLAVE )

Posted: பிப்ரவரி 11, 2014 in ஆஸ்கார் 2014
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

12-years-a-slave

1853ல் சாலமன் நார்த்தப் என்ற சுதந்திர கருப்பின அமெரிக்கரை கடத்தி அவரை அடிமையாக விற்றபிறகு அவருக்கு நிகழ்ந்த கொடுமைகளில் இருந்து மீண்டு வருவது தான் 12 இயர்ஸ் எ ஸ்லேவ்ஸ். இது நார்த்தப்பிற்கு  உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.

நியூயார்க்கில் வசிக்கும் சாலமன் நார்த்தப் ஒரு சுதந்திர கருப்பின அமெரிக்கர், திறமையான வயலின் இசை வித்தகரான நார்த்தப்பை நயவஞ்சகமாக பேசி 2 வார இசை நிகழ்ச்சிக்காக இருவர் அழைத்துச்சென்று குடிக்க வைத்து தன்னிலை மறந்த நிலையில் அவரை அடிமையாக விற்று விடுகின்றனர். கடுமையான அடி உதை சித்திரவதைக்கு பிறகு அவரின் பெயரை பிளாட் என்று மாற்றி நியூ ஓர்லியன்ஸ் நகரத்தில் தச்சு வேலை செய்வதற்காக விற்கப்படுகிறான், தன் கடுமையான உழைப்பின் மூலம் அவருக்கு பிடித்த வயலின் ஒன்றை பரிசாகப் பெரும் அளவிற்கு எஜமானரின் நன்மதிப்பை பெறுகிறார் நார்த்தப். அங்கு அவரின் மேலதிகாரியுடன் நிகழும் ஒரு பிரச்சினையினால் அங்கிருந்து பருத்திக்காடு வைத்திருக்கும் ஒருவருக்கு அடிமையாகிறான். ஒவ்வொரு அடிமையும் குறைந்தபட்சம் 200 பவுண்டு பருத்தியை பரிக்கவேன்டும், இல்லையெனில் கசையடி சித்திரவதை தான். அங்கு பேட்சி என்ற தினமும் 500  பவுண்டு பருத்தியை பறிக்குமளவிற்கு கடுமையான உழைப்பாளியான மற்றொரு அடிமையை சந்திக்கிறான். பேட்சியை அவரது எஜமானன் ஆசை நாயகியாக வைத்திருப்பதையறிந்து அவரது மனைவி அவளை துன்புருத்துகிறாள். இதனால் பல தொல்லைகளுக்கு ஆளாக நேரிடுகிறது பேட்சிக்கு, கடுமையான தருணங்களில் நார்த்தப், பேட்சிக்கு துணையாக இருக்கிறார். இப்படியாக அடிமை வாழ்க்கையில் 12  வருடங்களை கடந்த நிலையில் ஒரு கன்னடிய தச்சரின் உதவியால் நியூயார்க்கில் உள்ள சாலமன் நார்த்தப்பின் நண்பர் கடிதம் மூலம் வரவழைக்கப்பட்டு சுதந்திர மனிதனாவதே கதை.

ஆண்டுக்கு ஆண்டு பலதரப்பட்ட கறுப்பின அடிமைகளின் கதைகளை பார்திருப்பதால் சற்று சலிப்பு ஏற்பட்டாலும் ஆஸ்கரின் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இப்படம், நல்ல திரைக்கதையுடன், விறுவிறுப்பாக, உணர்ச்சியைத் தூண்டக்கூடியதாக அமைந்திருக்கிறது.

Bradpit

பிராட் பிட், மற்றும் இயக்குனர் ஸ்டீவ் மெக்யூனைச் சேர்த்து 7 தயாரிப்பாளர்கள் கொண்ட இப்படம் சிறந்த தயாரிப்புகான விருதுப் பரிந்துரையில் உள்ளது. தயாரிப்புடன் நார்த்தப்பை காப்பாற்ற உதவும் கன்னடிய தச்சராக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர் பிராட்பிட். பிராட்பிட்டுக்கு ஆஸ்கரில் இது 5வது பரிந்துரை, இதுவரை ஒரு முறை கூட இவருக்கு வெற்றி கிட்டவில்லை என்பது பரிதாபகரமானது.

steve-mcqueen

தயாரிப்பைச் சேர்த்து இயக்குனருக்காகவும் இப்படத்தின் மூலம் ஸ்டீவ் மெக்யூன் பரிந்துரைக்கப்பட்டிருகிறார்.

ejiofer

2012 படம் மூலம் நமக்கு நல்ல பரிட்சயமான இப்படத்தின் கதாநாயகன் ச்சீவெட்டல் எஜியோபர் இப்படத்தின் மூலம் தனது ஆஸ்கர் பயணத்தை தொடர்ந்திருக்கிறார். க்ரிஸ்ட்டியன் பேல் மற்றும் மேத்யூ மெக்காணகே இவருக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள் என நினைக்கிறன்.

fassbender

எஜியோபர் போல துணைக்கதாநாயகனாக வரும் மைக்கேல் பாஸ்பென்டேருக்கும் இது முதல் பரிந்துரை. தி வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட் படத்தில் நடித்த ஜோனா ஹில் மற்றும் டாலஸ் பையர் க்ளப்பில் நடித்திருக்கும் ஜேரெட் லேட்டோவையும் பார்க்கும்போது இவருக்கு இப்பிரிவில் விருது கிடைப்பது கடினம் தான்.

lupito

துணைக் கதாநாயகியாக வரும் லூபிடோ நியாங்கோவிற்கு விருது வெல்லும் வாய்ப்பு நிறைய இருப்பதாகவே தோன்றுகிறது, இருப்பினும் அமெரிக்கன் ஹஸ்ஷல் படத்தில் தோன்றும் ஜெனிபர் லாரான்சை இவர் சமாளிக்க வேண்டி இருக்கும்.

சிறந்த படம் (Best Picture)

சிறந்த இயக்குனர் (Best Direction)

சிறந்த நடிகர் (Actor in a Leading Role)

சிறந்த துணைக் கதாநாயகன் (Actor in a Supporting Role)

சிறந்த துணைக் கதாநாயகி (Actress in a Supporting Role)

சிறந்த படத்தொகுப்பு (Best Editing)

சிறந்த ஆடை வடிவமைப்பு (Best Costume Design)

சிறந்த கலை (Best Production Design)

சிறந்த தழுவி எழுதிய திரைக்கதை (Writing Adapted Screenplay) என்று 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது 12 இயர்ஸ் எ ஸ்லேவ்.

இந்தத் தலைமுறை அமெரிக்கர்களைப் பொருத்தவரை தம் முன்னோர்கள் கறுப்பினத்தவர்களுக்கு இழைத்த கொடுமைகளை உணர்வுபூர்வமாக அணுகுகிறார்கள். ஆதலால் அடிமை முறையச் சார்ந்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. இந்தப் படமும் வணிகரீதியில் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கிறது, விருதுகளைப் பொறுத்தவரையிலும் இதே நிலை தான். ஆதலால் இந்த வருட ஆஸ்கரில் இப்படமும் சில விருதுகளை வெல்லும் என்று நம்பப்படுகிறது.

ALL-IS-LOST

ஆஸ்கரின் சிறந்த ஒலிப்பதிவு(Best Sound Editing) பிரிவில், வெறும் 32 பக்க அளவிலான திரைக்கதையைக் கொண்டு படமாகப்பட்ட திரைப்படம் ஆல் இஸ் லாஸ்ட்.

படம் ஒரு பாய்மரப்படகின் மாலுமி தனது வாழ்நாளின் இறுதியில் இருப்பதாக என்னி, நான் எவ்வளவோ முயன்றேன் எல்லாம் போய்விட்டது என்று தன் கதையை கூறுவது போல ஆரம்பிக்கிறது. 8 நாட்களுக்கு முன் தொடங்கும் பிளாஷ் பேக்கில், இந்தியப் பெருங்கடலின் சுமத்ராவிலிருந்து 1700 நாட்டிகல் மைல் தொலைவில் கதையின் ஒரே கதாபாத்திரமான நமது பாய்மரப்படகின் மாலுமி, படகின் உள்ளே தண்ணீர் புகுந்த நிலையில் தன் தூக்கத்தில் இருந்து எழுந்திருகிறார். ஏதோ ஒரு கப்பலில் இருந்து விழுந்த ஒரு கொள்கலனின்(container) கூரான ஒரு முனை படகின் பக்கவாட்டில் குத்தி படகை சேதப்படுத்தி இருப்பதை அறிகிறார். தண்ணீர் உள்ளே நுழைந்ததால் தொலைத்தொடர்பு கருவிகள் பழுதுபட்ட நிலையில் படகின் சேதப்படுத்தப்பட்ட இடத்தை அடைத்து தன் பயனத்தைத் தொடர்கிறார் மாலுமி. சில மணிநேர இடைவெளியில் ஒரு பெரும்புயலில் சிக்குகிறார், கொட்டித் தீர்க்கும் மழையில் படகு முழுமையாக பழுதடைந்து மூழ்குகிறது.

மூழ்கும் பாய்மரபடகில் இருந்த அவசரகால உபயோகித்திற்கான  ரப்பர் படகில் ஏரித் தப்பிக்கிறார். மீண்டும் மழை, வெப்பம், சுறா மீன்கள், பசி என்று பலப் பிரச்சினைகளில் இருந்து தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கடலின் நீரோட்டப் போக்கில் பயணிக்கிறார். இடையில் 2 சரக்குக் கப்பல்கள் இவரது கூக்குரலையும், சைகைகளையும் அறியாமல் ரப்பர் படகைத் தாண்டி போகிறது. படத்தின் இறுதியில் மாலுமிக்கு சுமத்ரா கடல் எல்லைக்குள் ஒரு சிறிய மீன்பிடி படகு கண்ணுக்கு தென்படுகிறது, சைகை செய்ய எந்த உபகரணம் இல்லாத காரணத்தினால் தன்னிடம் உள்ள சில காகிதங்களை எரித்து செய்கை செய்கிறார் மாலுமி, தீ பரவி ரப்பர் படகு முழுதும் எரிந்து பாழாகிறது, உயிரை காப்பாற்றிக்கொள்ள கடலில் விழுகுகிறார். உடலின் சக்தி யாவும் இழந்துவிட்ட நிலையில் நீச்சலிடக்கூட தெம்பு இல்லாத நிலையில் ஏறக்குறைய மூழ்கி இறந்து கொண்டிருக்கும் நிலையில் மீன்பிடி படகு, மாலுமியை நெருங்கி அவரைக் காப்பாற்ற அதிலிருந்து ஒருவர் கை கொடுத்து தூக்க முற்படுவதாக கதை முடிகிறது.

ROBERT-REDFORD

லைப் ஆப் பை, டைட்டானிக் போன்ற பல படங்களை கடல்வெளியில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள  போராடும் வகையில் நாம் பார்த்திருந்தாலும் ஆல் இஸ் லாஸ்ட் திரைப்படம் அதிலெல்லாம் இருந்து வேறுபட்டே காணப்படுகிறது. கதாநாயகன் ராபர்ட் ரெட்போர்ட்டின் நடிப்பு படத்திற்கு அழகு சேர்த்து இருக்கிறது. முயற்சி, விடாமுயற்சி, தன்னம்பிகை, சமயோஜித புத்தி, இப்படி பல விசயங்களைப் பற்றிய திரைப்படம் இது . ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம்பெற்ற திரைப்படம் இதற்கு முன் எங்காவது வெளியாகி இருகிறதா என்பது தெரியவில்லை, இருக்காது என்பது எனது அபிப்ராயம். முன்னமே கூறியது போல இப்படம் 32 பக்க அளவிலான திரைக்கதை, படத்தின் வசனங்கள் அதில் 2 பக்கம் கூட இருக்காது என்று நினைக்கிறன்.

இப்படம் க்ராவிட்டி, கேப்டன் பிலிப்ஸ் போன்ற பெரிய படங்களுடன் ஒளிப்பதிவுக்கான(Best Sound Editing) பிரிவில் ஆஸ்கரில் போட்டியில் உள்ளது. விருது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

OSCAR 2014 – டாலஸ் பையர்ஸ் கிளப் ( DALLAS BUYERS CLUB )

Posted: பிப்ரவரி 7, 2014 in ஆஸ்கார் 2014
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

dallas-buyers-club

அமெரிக்க நகரம் டாலசில், 1985ல் கதை ஆரம்பமாகிறது. மின்னியல் நிபுனனான(electrician) கதையின் நாயகன் ரான் வூட்ரூப் கேளிக்கைகளிலும், போதை வஸ்துக்களை உபயோகிப்பதிலும், உடலுறவு கொள்வதிலும் ஆர்வம கொன்டவனாக பொழுதுபோக்கிற்காக காளையை அடக்கும் விளையாட்டில் கலந்து கொள்பவனாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும்போது ஒரு நாள் வேலையில் ஏற்படும் ஒரு சிறு விபத்தின் காரணமாக மருத்துவமனைக்கு செல்ல நேரிடுகிறது. அங்கு அவனுக்கு HIV  தாக்கி இருப்பது தெரியவருகிறது முதலில் இதை நம்ப மறுக்கும் இவன் போகப் போக உண்மையை உணர்கிறான்.

மருத்துவர்கள் 30 நாட்களில் அவன் இறந்து விடுவான் என்று சொல்லி இருக்க, மருந்துகளை தேடி அலைகிறான், ஆனால் அப்போதைக்கு ஆராய்ச்சியில் இருந்த AZT மருந்துகள் விற்பனைக்கு இல்லாத நிலையில் அம்மருந்துகளை பரிசோதித்துக் கொண்டிருக்கும் இடங்களில் இருந்து கள்ளத்தனமாக வாங்கி உபயோகிக்கிறான். தொடர்ந்து அம்மருந்துகள் கிடைக்காத நிலையில் மெக்ஸிகோவிற்கு சென்று டாக்டர் வாஸ் என்பவரை சந்தித்து அவர் மூலம் HIVயின் தாக்குதலின் தீவரத்தில் இருந்து தப்பிக்கவும், உடலின் ப்ரோட்டீன் குறைபடை போக்கவும், உயிர்ச்சத்துக்காகவும் ஒரு கலவையாக மருந்துகளை பெறுகிறான், மேலும் அவர் மூலம் AZT மருந்துகள் HIVயை குறைக்க பயன்படுவதில்லை என அறிகிறான்.

டாக்டர் வாஸ் பரிந்துரைத்த மருந்துகள் அமெரிக்காவின் மருத்துவ கழகமான FDA வால் அங்கீகரிக்கப்படாததால் அம்மருந்துகளை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை, அதனால் மெக்ஸிகோவில் இருந்து தன் உபயோகத்திற்க்கு என்று வூட்ரூப் வாங்கி வந்த மருந்துகளை மற்ற HIV பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து உதவ முடியாத நிலைக்கு ஆளாகிறான். இருப்பினும் மருத்துவமனையில் தனக்கு பரிட்சயமான ரேயான் என்ற திருநங்கை மூலமாக சில HIV நோயாளிகளுக்கு தன்னிடம் உள்ள மருந்துகளை கொஞ்சம் லாபம் வைத்து விற்று அதன் மூலம் மீண்டும் மீண்டும் மருந்துகளை சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு எடுத்து வருகிறான்.

சட்ட ரீதியாக மருந்துகளை விற்கமுடியாததால் டாலஸ் பையர்ஸ் கிளப் என்ற அமைப்பை தோற்றுவித்து உறுப்பினர் கட்டணமாக 400 டாலர்களை வசூலித்து உறுப்பினர்களுக்கு அதன் மூலம் இலவச மருந்துகளை கொடுக்கிறான். டாலஸ் கிளப் என்ற அமைப்பு சட்ட சிக்கல்களையும், வழக்குகளையும் சந்திக்கிறது. முடிவில் 30 நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று அவரை பரிசோதித்த முதல் மருத்துவரின் கூற்றை பொய்யாக்கி 2557 நாட்களுக்கு மேலாக அதாவது 7வருடங்களுக்கும் மேலாக போராடி வாழ்ந்து மற்ற நோயாளிகளின் ஆயுளையும் நீட்டித்த ஒருவனின் கதை தான் டாலஸ் பையர்ஸ் கிளப்.

சிறந்த படம் (Best Picture)

சிறந்த கதாநாயகன் (Best Actor in a Leading Role)

சிறந்த துணைக் கதாநாயகன் (Best Actor in a Supporting Role)

சிறந்த படத்தொகுப்பு (Best Editing)

சிறந்த முக மற்றும் சிகையலங்காரம் (Makeup and Hair Styling)

சிறந்த திரைக்கதை (Writing Original Screenplay) என்று 6 பிரிவுகளில் டாலஸ் பையர்ஸ் கிளப் ஆஸ்கரின் பரிந்துரைகளில் உள்ளது.

matthew-mcconaughey

சிறந்த கதாநாயகன் பிரிவில் ஆஸ்காரின் பரிந்துரையில் உள்ள இப்படத்தின் கதாநாயகன் மேத்யூ மெக்கானி AIDS நோயாளியாக 47 பவுண்டுகளை குறைத்து நடிப்பிலும் அசத்தி, தயாரிப்பிலும் உதவி இருக்கிறார்  மெக்கானி. இவர்  இப்படத்திற்காக GOLDEN GLOBE AWARDSல் சிறந்த நடிகர் விருதை ஏற்கனவே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கரைப் பொறுத்தவரையில் க்ரிஸ்டியன் பேல் மற்றும் டிகாப்ரியோவுடன் பலத்த போட்டி இருப்பினும் இவருக்கு இவ்விருது கிடைப்பதற்கு அதிகபட்ச வாய்ப்பு இருப்பதாகாவே தெரிகிறது.

jared-leto

சிறந்த துணை கதாநாயகன் பிரிவில் ஆஸ்காரின் பரிந்துரையில் உள்ள திருநங்கையாக வரும் ஜெராட் லேட்டோ , தம் உடல் எடையில் 30 பவுண்டுகளைக் குறைத்து உண்மையான AIDS தாக்கிய திருநங்கையாகவே காட்சி அளிக்கிறார். இவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் மூலம் தன் நடிப்புப் பயணத்தை தொடர்ந்து இருக்கிறார். தி வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட் படத்தில் நடித்திருக்கும் ஜோனா ஹில், லேட்டோவிற்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார் என நம்புகிறேன்.

மற்றபடி இப்படம் சிறந்த திரைப்பபடம் பிரிவில் அமெரிக்கன் ஹஸ்ஸல் மற்றும் 12 இயர்ஸ் ஆப் ஸ்லேவ் படத்திற்கும் இடையே கடுமையான போட்டியை சந்திக்கும், ஆனாலும் இப்படத்திற்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது.